Thursday, 16 June 2016

தந்தை போட்டிச் சிறுகதை - 51

Rate this posting:
{[['']]}
அப்பாவோடே இருப்பேன்

தூக்கிவாரிப்போட்டது எனக்கு. அப்பாவை அப்படி பார்க்க. வாசலில் கவிழ்ந்து கிடந்தார். என் பைக்கை அவசர அவசரமாக நிறுத்திவிட்டு ஓடிவந்து, தூக்கி அமர்த்தினேன். “டேய் ... உங்கம்மா பண்ண வேலைய பார்த்தியாடா...?” சத்தமாகவே அழுதார், அவர். சிறுபிள்ளைப்போல.

வயதாக ஆக குழந்தைபோல் ஆகிவிடுவார்கள் என்று கேள்விபட்டிருந்த எனக்கு நேரடியாக அதை பார்த்து அனுபவிக்கும்படி ஆக்கிவிட்டிருந்தார், அப்பா. எழுவது வயதில் இப்படி தேம்பி தேம்பி அவர் அழுதது மனசை கரைத்தது. சிறுவயதில் என் கண்ணிலிருந்து ஒரு துளி நீர் கூட வராதபடி பார்த்து பொத்தி பொத்தி வளர்தவராயிற்றே! அப்படியும் மீறி ஓரிரு சமயம் எதிர்பாராதவிதமாக நான் எங்கேனும் அடிப்பட்டு வலி தாங்க முடியாமல் அழுத தருணங்களில் என்னோடு சேர்ந்து கண்ணீர்விட்டவராயிற்றே!  
“ முகிலா ... உங்க அம்மா இப்படி பண்ணிட்டாளேடா... இதுக்கு அவ என் கழுத்த நெறிச்சி கொன்னே போட்டிருக்கலாம்டா...” புலம்பியபடியே என் தோளில் சாய்ந்து அழுதார்.

அம்மா, அப்பாவிற்கு அப்படி பயப்படுவாள். எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது .  அவர் வேலை முடிந்து வீட்டிற்கு வரும்போது, தெருமுனையிலிருந்து அவர் எழுப்பும் சைக்கிள் பெல் சத்தம் கேட்டு அப்படி நடுங்குவாள். படித்துக்கொண்டிருக்கும் வார இதழை தூக்கிப்போட்டுவிட்டு அல்லது கேட்டுக்கொண்டிருக்கும் ரேடியோவை நிறுத்திவிட்டு,  ஓடிவந்து பாடம் சொல்லிகொடுப்பதுபோல் என் அருகில் வந்து அமர்ந்துகொள்வாள். அல்லது அடுப்படிக்கு ஓடிவிடுவாள். அவ்வளவு பயமும் அவர் ரிட்டையர்ட் ஆகி  வீட்டிலேயே இருக்கத்தொடங்கிய நாட்களிலிருந்து குறையத்தொடங்கியது. சின்ன சின்னதாக எதிர்த்துப்பேசத்தொடங்கி, இந்த பத்தாண்டுகளில் அவரையே மிரட்டிப்பேசுமளவுக்கு மாறிப்போயிருந்தாள். இப்போதெல்லாம் தினமும் ஏதேனும் ஒரு வழக்கு, இவர்களுக்குள்.  மத்தியில் மாட்டிக்கொண்டு  நான் யார் பக்கம் பேசினாலும், அதற்கொரு தனி  வழக்கு என் மனைவியிடம் நடக்கும். வயதானால் என்ன... கணவன் மனைவி என்பவர்கள் எந்த வயதானாலும் கருத்து வேற்றுமையோடே காலம் கழிபவர்கள்தானே?

சித்திரை வெய்யிலில் நாற்பது நிமிடம் பைக் பயணம் எனக்கே லேசான மயக்கத்தை ஏற்படுத்தி, “எப்படா வீட்டுக்கு போவோம்... ஏ.சி போட்டு கொஞ்ச நேரம் படுப்போம்னு (கரண்ட் இருக்கவேண்டும் என்பது தனி பிரார்த்தனை) ஒரு உணர்வை எனக்குள் விதைத்திருக்க, வாசலிலேயே அப்பா இப்படி விழுந்து பிரண்டு அழுததைப்பார்த்து தலைசுற்றியது.  

“என்னாச்சிப்பா ?”

“ ஐயையோ... அத எப்டிடா உன்கிட்ட சொல்ல... படுபாவி... சொல்ல சொல்ல கேக்காம.. எறநூறு ரூபா காசுக்கு ஆசைப்பட்டு, என்னையே வித்துட்டாடா.”

எனக்கு எதுவும் சரியாக புரியவில்லை. நேராக அடுப்படியில் வேலையாக இருந்த அம்மாவிடமே வந்து கேட்டேன்.

“ என்னம்மா பண்ண... ஏம்மா அவர இந்த வயசுல இப்படி கஷ்டப்படுத்தரே? என்னத்தமா வித்து தொலைச்சே..?

“ஐயையோ... அவுருதான் புண்ணியமத்த ஒன்னுக்கு இப்படி ஆர்ப்பாட்டம் பண்ணராருணா... நீயும் வந்ததும் வராததுமா குதிக்கறே...  “ அப்பா விஷயத்தில் அவள் காட்டும் வழக்கமான அலட்சியதோடே இப்போதும் பதில் சொன்னாள்.

“ ஒண்ணுமில்லடா. அவரு இப்போ சைக்கிள் ஒட்றாரா? இல்ல.. இல்ல. அது சும்மா தெண்டத்துக்கு எதுக்கு நிக்குதுன்னு நம்ம மாடசாமி வந்தான். அவன்கிட்ட எடைக்கு போட்டுட்டேன். எறநூறு ரூவா கொடுத்தான். அதுக்குபோய் இந்த மனுஷன்... “

அம்மா சொல்லி முடிப்பதற்குள் ... “ ஏம்மா... அவுரோட உயிர்மா அது. அதையா காசுக்கு போட்டுட்ட? எப்டிம்மா உனக்கு மனசு வந்தது..?”

நான் இப்படி கேட்பேன் என்று துளியும் அவள் எதிர்பார்க்கவில்லை.என்னைக்கூட கேட்காமல் கொள்ளாமல் இப்படி பழைய பாத்திரகாரனுக்கு அப்பாவின் அடையாளமான சைக்கிளை போடுவாள் என்று நானும் எதிர்பார்க்கவில்லை. கோடை விடுமுறை என்பதால் குழந்தைகளோடு மனைவி தாய்வீட்டிற்கு சென்றிருந்தாள். இல்லையெனில் அவளாவது இந்த கூத்தைப் பற்றி செல்போனில் தகவல் சொல்லி இருப்பாள். நானும் உடனே தடுத்திருப்பேன்.

நான் பைக்கை எடுத்துக்கொண்டு வேகமாக மாடசாமி குடோன் நோக்கி பயணித்தேன். எப்படியாவது அப்பாவின் சைக்கிளை மீட்டு கொண்டுவந்துவிடவேண்டும் என்கிற  வெறி எனக்குள் பரவியது.

அப்பாவின் சைக்கிள் மிகவும் கம்பீரமானது. பழைய ‘ராலே’ வண்டி. நான் படிக்கிற காலத்தில் அப்பா என்னை அதில்தான் அழைத்துப்போவார். அப்போதெல்லாம் அது அடர்பச்சை நிறமாக இருந்ததாக ஞாபகம். ஆனால் பின்னாளில் அது பெயிண்ட் உரிந்து கருப்பாக மாறிவிட்டிருந்தது. குரங்கு பெடல் போடச்சொல்லி  அதில்தான் எனக்கு அப்பா சைக்கிள் ஓட்ட கற்றுத்தந்தார். அப்பா வீட்டில் இருக்கிறார் என்ற அறிவிப்பு தரும் சாதனமாக பலருக்கு திகழ்ந்திருக்கிறது, அது. இன்றும் , அந்த சைக்கிளை பார்க்கும்போது அப்பாவின் பிம்பம் அதனோடே ஒட்டிக்கொண்டு தெரியும்.

இப்போதும் வெய்யில் சுட்டெரித்தது. ஆனால், எனக்கு அயர்வோ எரிச்சலோ ஏதும் தெரியவில்லை. என்னோடைய தற்போதைய கவலையெல்லாம் மாடசாமி அதை ஊர்பேர் தெரியாத  வேறுயாரிடமாவது கொடுத்துவிட்டிருக்கக்கூடாது. ஒருமுறை என் கதைவந்த புத்தகமொன்றை தவறுதலாக அவனிடம் போட்டுவிட்டு அன்று மாலையே போய் கேட்கும்போது அது வேறு ஒரு மொத்தவியாபாரியிடம் போய்விட்டிருந்தது.

செல்போன் சிணுங்கியது. எடுத்தேன். அப்பா தான் பேசினார்.

“ முகிலா... நீ வீணா அந்த சைக்கிள தேடி அலையாதடா. சாப்டாம கூட இந்த வேவாத வெய்யில்ல உன்ன அலைய வச்சிட்டேன். நீ திரும்பி வந்து சாப்டுட்டு கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு ஆபீஸ் போடா.”

இந்த நிலையிலும் என் பசியைப்பற்றி அவர் கவலைப்பட்டு பேசியது எனக்கு இன்னும் கொஞ்சம் வேகத்தை கூட்டியது. அவர் உயிருக்குயிராய் பாதுகாத்து வைத்திருந்த  சைக்கிளை மீட்டே ஆகவேண்டும் என்று தீர்மானித்தேன்.

மாடசாமி குடோனை அடையும்போது படபடப்பு கூடியது. தூரத்திலிருந்தே என் கண்கள் அப்பாவின் சைக்கிளைத்தேடியது. பழைய இரும்பு குவியல்களும் புத்தகக் குவியல்களுமாய் கிடந்த அந்த குடோனின் ஒரு மூலையில் கிடந்தது அந்த பொக்கிஷம்.

“அண்ணே... என்ன..? சைக்கிளா? நான் அப்போவே நெனச்சேன். அம்மா உன்கிட்ட கலக்காம சைக்கிள எடைக்கு போட்டுடுத்துன்னு. “நான் கேட்கும் முன் மாடசாமி சொன்னான்.

“ சரிண்ணே.. நீங்க போங்க. நான் சாயங்காலம் வீட்டுப்பக்கம் வருவேன் அப்போ கொண்டு வந்து போட்டுடறேன்.”

“இல்ல மாடசாமி. அப்பா இத கண்ணால பார்த்தாதான் மதியான சாப்பாடே சாப்பிடுவார். நான் இத ஆட்டோல வச்சி இப்போவே ஏத்திட்டு போறேன். “
மாடசாமியிடம் நான் ஐநூறு ருபாய் நோட்டை கொடுத்தேன். அவன் கொடுக்கவந்த மீதியைகூட வேண்டாமென்று சொல்லிவிட்டு சைக்கிளை ஆட்டோவில் ஏற்றினேன்.

வீட்டில் பொய் அதை இறக்கிவைத்ததும் அப்பா ஓடிவந்து என்னை இறுக்கி கட்டிகொண்டார். “நான் செய்த தவம்டா நீ . முகிலா... இந்த காலத்துல பெத்த .தகப்பனையே பசங்க மதிக்கிறதில்ல. ஆனா நீ என் சைக்கிளுக்கு இவ்ளோ...” அவர் தழுதழுத்தார்.

அப்பாவிற்கு தெரியாது. அவருக்காக மட்டும் நான் இந்த சைக்கிளை தேடிப்பிடித்து கொண்டு வரவில்லை. எனக்காகவும்தான். ஆம். அப்பாவிற்கு பிறகும் நான் அப்பாவோடே இருப்பேன்.