Thursday, 9 June 2016

தந்தை போட்டிச் சிறுகதை - 36

Rate this posting:
{[['']]}
ஒரு அப்பாவின் வாழ்க்கை


நான் கடைசியா இந்தியா வந்து ஒரு வருசம் கடந்துருச்சு. இப்போ நான் கிளம்பிட்டேன். என்னோட இந்தியாவுக்கு, என்னோட ஊருக்கு, என் சொந்த மண்ணுக்கு போறேன். அதைவிட சந்தோசம் நான் என் அப்பாவ பாக்க போறேன். நினைக்கிறப்பவே மனசு சில்லுனு இருக்கு. அப்பா…

என் அப்பா ஒரு கூத்து ரசிகர். ஊருல நடக்குற ஒரு நாடகம் கூத்து எதையும் விடமாட்டார். அன்னைக்கு ஊருக்குள்ள சங்கரன் குழுவோட நாடகம் நடந்துச்சு. மகாபாரத கதை. கிருஷ்ணன் அர்ஜூனனுக்கு உபதேசம் சொல்லிகிட்டு இருந்தாரு.

’கத்தும் நீதிகூட்டம் காட்டில்
ஒரு குரங்காட்டம் ஒன்னு ஆடுது நாட்டில்
மழியும் உலகம் ஆட்சி
அதை அழிக்கத்தான் புறப்படும் தர்மத்தின் கோட்டை
கத்தும் கதமறுக்கும் காட்டில்’

’ஆதாகபட்டது வில்லை ஏந்திக்கொண்டு யோசித்து நிற்கும் அர்ஜூனனிடம் கிருஷ்ணன் சொல்கிறான்.’

‘எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது’ என நாடகம் உச்சகட்டத்தில் அக்கால உடையோட நடந்துகிட்டிருந்தப்போ மேடையில ஒருத்தர் இக்கால உடையோட நடந்து வந்து கிருஷ்ணன் காதுல ரகசியம் பேசினாரு. இது என்னடா மகாபாரத்ததுல ஒரு திருப்பம்னு கூட்டமே உத்து பாத்துகிட்டு இருந்தப்போ, கிருஷ்ணர் மக்கள் கூட்டம் இருக்குற பக்கம் பாத்து மேடை முன்னாடி வந்து,

‘எலே யாரும்லே அன்பு… உமக்கு ஆண்பிள்ள பொறந்துருக்காம்… அட உன்ன பிடிக்கமுடியாம அல்லோலபடுதுயா குடும்பம்… அடுத்த வாரம் பூவனூர் கொட்டகையில நாடகம் நடக்குது.. அப்ப வந்து பாத்துக்குவோம்.. இப்ப புறப்படுயா… எலே போனான்னானு பாத்துட்டு நாடகத்த பாருமடி எல்லாம்..’ ன்னு உரக்க சொல்லிபுட்டு திரும்ப அர்ஜூன்ன பக்கம் திரும்பி முகத்துல அமைதிய வர வச்சுட்டு உபதேசம் பண்ண ஆரம்பிச்சுட்டாரு.

கூட்டத்துல இருந்த அன்புக்கு கையும் ஓடல காலும் ஓடல. கண்ணு கலங்கி நிக்கிறாரு. எழுந்து கூட்டத்த பிரிச்சுப்புட்டு ஓடுறாரு. அன்புக்கு அவ்வளவு அன்பு. அன்பு யாரு? என் அப்பா தான். அப்ப பொறந்தது யாரு? அட நான் தான் யா.

நேரா வந்து என்னைய தூக்கி கொஞ்சுபுட்டாரு. என் பாட்டியெல்லாம் வுட்டு வெளாசு வெளாசுன்னு வெளாசிபுடுச்சுல்ல. ஆனா மனுசனுக்கு ஒரு மறுபேச்சும் இல்ல. என்னையே கொஞ்சி முத்தம் கொடுத்துக்கிட்டிருந்தாரு. மீசை வேற பெருசா வச்சுருப்பாரு. குத்துதுல்ல.. சினுங்க ஆரம்பிச்சுட்டேன். அதுக்கு வேற கொஞ்சுனாருயா மனுசன். என்னடா பாட்டியெல்லாம் திட்டறப்போ அப்பா அமைதியா கெடக்காறே ரொம்ப அமைதியான மனுசன் போலன்னு நினச்சா அப்பரம் தான் தெரிஞ்சுது அப்பாருக்கு கோபம் வந்தா எவனும் வீட்டுல இருக்க முடியாதுன்னு. ஆனா என் முன்னால அப்பா என்னைக்கும் கோப பட்டது கிடையாது.

ஒரு நாள் ராத்திரி அப்பா அம்மாகிட்ட பேசிகிட்டிருந்தாரு.

‘ஏங்க… அது ஏன் புள்ள முன்னாடி கோபம் இல்லாம இருக்க தெரியுது. எப்போதுமே அப்படி இருக்க மாட்டீயளா?’ என்றாள் அம்மா கொஞ்சம் ஏக்கத்தோடு.

‘இல்லடி… நான் வளர்ந்த சூழல் அப்படி. சின்ன வயசுல இருந்தே ஆத்தா அப்பனுக்கு அடங்கியே கெடந்துருச்சு. அத பாத்தே வளர்ந்த என் மனசுலயும் ஆண், அது இதுன்னு கர்வம் ஏறிடுச்சு. அது தப்புனு மனசு சொல்லுமடி… ஆனா சின்ன வயசுல உண்டான குணம். மாறதவிக்குது. அதான். என் புள்ள அப்படி இருக்கு கூடாது. அவன் பொண்டாட்டிக்கு நல்ல மருவாத தரணும். அதுக்கு ஏதோ என்னால முடிஞ்ச உரம்டி’ ன்னு அப்பா சொன்னாரு. அப்பா வாழுற வாழ்க்கைக்கும் அவர் மனசுக்கும் சம்பந்தமே இல்லையோன்னு எனக்கு தோணுச்சு.

ஸ்கூல் போறப்பலாம் நம்ம தான் எல்லாத்துலயும் முதல்ல இருந்தோம். அந்த வருசம் தான் அஞ்சாது வகுப்புல இருந்து ஆறாதுக்கு போனேன். ஒண்ணும் வெளங்கள, சேர்க்கை சரியில்ல, விளையாட்டு தனமாகிபோச்சு மார்க் எல்லாத்திலும் கம்மி. நான் வீட்டுக்கு வந்து அப்பா முகத்துல எப்படி விழிக்கனு யோசிச்சு கிடந்தேன். மனுசன் எப்படி கண்டுபுடிச்சாருன்னு தெரியல, வீட்டுக்கு வந்த ஒரு பத்து நிமிசத்துல தோட்டத்துல உக்காந்துகிட்டு கத்துனாரு.
‘ஏன்டி… நம்ம கணக்கு வாத்தியார் பையன்ல டவுன் கான்வன்ட்ல படிக்கிறானே.. அவன் கணக்குல மார்க் முட்டையாம்லடி.. அவனோட ஸ்கூல் வாத்தியார் என்கூட பஸ்ல வந்தாரு… சொல்லிகிட்டே வந்தாரு… அதுக்கு நம்ம கணக்கு வாத்தியார் அவன போட்டு அடி அடின்னு அடிச்சுருக்காரு. இந்த மொற இல்லனா அடுத்த மொற வாங்க போறான். இந்த கணக்கு வாத்தியாருக்கு அறிவே இல்லடி’ ன்னு சொன்னார் அப்பா. ரொம்ப சத்தமாக. அவர் சொல்லி அடுத்த அரை மணி நேரத்துல நானும் என்னோட குறைவான மார்க்க சொன்னேன். அப்பா எதிர்பார்த்தது போல எதுவும் சொல்லல. அடுத்த முறை நல்லா பண்ணனும்னு சொன்னாரு. அப்போ அப்பா வாயில இருந்து வந்த வார்த்தைய வச்சே புடிச்சுபுட்டோம்னு ரொம்ப பெருமையா இருந்துச்சு. ஆனா காலம் கடந்து பெரியவனாகி கணக்கு வாத்தியார்கிட்ட சகஜமா பேசினப்போ தான் தெரிஞ்சுது அவருக்கு கல்யாணமே ஆகலனு.

அப்பாவோட முடி ரொம்ப அழகா இருக்கும். பெல்ஸ் பேண்ட், நல்லா ஃபிட்டான சட்டை போட்டிருப்பாரு. கண்டிப்பா அப்பா சினிமா பக்கம் போயிருந்தா நல்லா பெரிய ஹீரோ ஆகியிருப்பாரு. ஹீரோ போல இருக்காரு என் அப்பா உன்ன போயி கட்டிகிட்டாரேன்னு எங்க அம்மாவ அடிக்கடி வெறுப்பேத்தியிருக்கேன். அப்பலாம் அப்பா அம்மாவ புடிச்சுகிட்டு ‘அவளுக்கு என்னடா… அவ என் மகாராணி’ன்னு சொல்லுவாரு. அம்மாவுக்கு வெட்கம் பிச்சுக்கும். ஒரு அப்பாவா மட்டுமில்ல, ஒரு நல்ல புருசனாவும் இருப்பாரு அப்பா. அவர போல எனக்கு வர்ற மனைவிய காதலிக்கணும்னு எனக்கு நிறையா ஆசையிருந்துச்சு.

என் முதல் காதல். பள்ளி காலத்துல என்கூட படிச்ச பொண்ணு தேன்மொழி. இளையராஜா பாட்டு ஓடினா வீட்டுல அங்க இங்க அசையாம கேட்டுகிட்டே கிடப்பேன். கொட்டாயில சினிமா பாக்குறப்போ ஹீரோ ஹீரோயின்லாம் நானும் தேனாவுமே தெரிவோம். தனியா சிரிச்சுப்பேன். மீசை துளிர்விட்டுச்சு, அப்பாவோட கத்திரி எடுத்து மீசைய அழகு செஞ்சுப்பேன். தண்ணிய தொட்டு தலையில தெளிச்சு தூக்கி வாரி சீவிப்பேன். தேனு அங்கிட்டு இங்கிட்டு போறப்பலாம் முன்னால நின்னு வித்யாச வித்யாசமா போஸ் கொடுப்பேன். ஒரு நாள் அப்பா வந்து வீட்டுல பேசிகிட்டு இருந்தாரு,

‘ஒரு மலையால சினிமா ஒண்ணு பாத்தேன்டி. அதுல என்னமா ஒரு வார்த்தை சொல்லியிருப்பான் தெரியுமா? ஒரு காதல் உனக்குள்ள மலர்ந்துச்சுனா தெருவுல நின்னு அந்த பொண்ணுக்கு சைகை காட்டுறது, அவ முன்னாடி போஸ் கொடுக்குறதுலாம் அவளோட சுயத்த அழிக்கிறதாம். அவள அசிங்கபடுத்துறதாம். நாகரீகமா அவகிட்ட போயி நமக்கான காதல சொல்லணுமாம்.’ அப்பா சொல்லிட்டு அம்மா பக்கமா நகர்ந்து போனாரு நானும் என் காத கிட்ட எடுத்துகிட்டு போனேன் ‘அந்த பொண்ணு விருப்பமில்லனு சொல்லிட்டா உடனே விட்டுறனுமாம். அவன் தான் ஆம்பளனு சொன்னான் பாரு. என்னா டயலாக்ல… அப்படி வாழுறவன் தான்டி மனுசன்’ ன்னு சொல்லி அப்பா ரொம்ப பெருமை பட்டாரு. அடுத்த நாளே நான் தேனுக்கிட்ட என் காதல சொன்னேன். அதுக்கு அடுத்த நாள்ல இருந்து நான் தேன்மொழி பக்கம் திரும்புறது இல்ல. காலம் கடந்துச்சு கல்லூரி சேர்ந்தப்ப தான் தெரிஞ்சுச்சு அப்பாவுக்கு மலையாலத்துல ஒரு வார்த்தையும் புரியாதுன்னு.

கல்லூரியில படிக்க வெளியூர் போனேன். போறதுக்கு முன்ன அப்பா என்ன கூப்பிட்டாரு. அத்தனை வருசத்துல அப்பா எனக்கு நேரடியா எந்த அறிவுறையும் தந்ததில்ல. அன்னைக்கு பேசினாரு,

‘நீ இனி உலகத்த பாக்க போறடா. இத்தன நாள் கூட்டுக்குள்ள இருந்துட்ட. படிப்பு படிப்புனு கட்டிட்டு அழணும்னு அவசியம் இல்ல. நீ பாஸ் ஆகி டிகிரி வாங்கினா மட்டும் போதும். நீ உலகத்த கத்துக்க. பாக்குற எல்லாம் அழகாவும், கேக்குற எல்லாமும் ஆர்வமாவும் தோணுற வயசு. பொண்ணுங்கள ஈர்க்க தோணும், சிகரெட்ட பிடிச்சு ரவண்ட் ரவுண்ட்டா புகை விட தோணும், தண்ணி அடிக்க தோணும், கண்ட கண்ட சினிமா பாக்க தோணும் ஆனா அதையெல்லாம் தாண்டி ரகுன்னு உள்ளுக்குள்ள ஒருத்தன் இருக்கான் அவன என்னைக்கும் அழிச்சிடகூடாது. நீ தான் உன்னோட அடையாளம். உன்னைய தொலைச்சுரக்கூடாது’ ன்னு சொன்னாரு. சொன்னவரு எனக்கு அது புரிஞ்சுச்சா இல்லையானு கவலைபடல திரும்பி நடந்து போயிட்டாரு. அந்த மூணு வருச கல்லூரி வாழ்க்கையில அவர் சொல்ல ஒவ்வொரு விசயத்துக்கும் எனக்கு அர்த்தம் புரிய ஆரம்பிச்சுச்சு. அப்பா தண்ணியோ சிகரெட்டோ பொண்ணோ கூடாதுன்னு சொல்லியிருந்தா கூட எனக்கு அந்த பக்கம் போயிக்க தோணும். ஆனா அவர் அதெல்லாம் தடுக்கல. அத தாண்டி நான்னு இருக்குற அடையாளத்த எனக்கு உணர்த்தினாரு. அந்த மூணு வருசத்துல அவர் சொன்ன மூணுமே என்ன ஈர்த்துச்சு ஆனா அவர் சொன்ன வார்த்தையா இல்ல வேற எதுவான்னு எனக்கு தெரியாது. அது என்ன அது கிட்ட நெருங்கவிடல.

வேலை கிடச்சுச்சு. ரெண்டு வேலை. ஒன்னு சம்பளம் நிறையா வர்ற வேலை, இன்னொன்னு மனசுக்கு புடிச்ச வேலை. எது எடுக்குறதுன்னு எனக்குள்ள ஒரு குழப்பம் இருந்துச்சு. அப்பா இது போல சூழ்நிலையில என்னைக்கும் அவரோட முடிவ சொல்லமாட்டாரு. உன்னோட கிணத்த நீ தான் தாண்டனும்னு சொல்லுவாரு. நான் அன்னைக்கு ஒரே குழப்பத்துல உட்கார்நிருந்தேன். அம்மாவுக்கும் அப்பாவுக்கும் உள்ள ஏதோ வாக்குவாதம் நடந்துச்சு. என்னான்னு கேக்க போனேன். அப்பா பேசிகிட்டிருந்தார்,

‘என்னாடி… நல்லது நல்லதுனு அத்தனை முந்திரையும் கொட்டி கிண்டியிருக்க கேசரிய… அவனுக்கு ஒண்ணு ரெண்டு இருந்தா தானே புடிக்கும். சின்ன வயசுல காஸ்ட்லியான 5 ஸ்டார் சாக்லேட் வாங்கி தர்றேன் அவன் என்னாடானா அவனுக்கு பிடிச்ச பல்லி மிட்டாய் தான் வேணும்னுவான். சின்ன வயசுலயே அவன் அப்படி… கொஞ்சமா போட்டு கிண்டுடி’ ன்னு சொல்லிட்டு சிரிச்சுட்டே வந்து என் தோளுல தட்டிகொடுத்துட்டு போயிடுட்டாரு.

அப்பரம் வாழ்க்கை எனக்கு பிடிச்ச வேலையில அமைஞ்சு ரொம்ப சந்தோசமா போச்சு. வேலை காரணமா இப்போ வெளிநாடு வந்துருக்கேன். கிளம்புறப்போ அப்பாவுக்கு போக சொல்ல விருப்பமே இல்ல, ஆனா என்கிட்ட அவர் சொல்லவே இல்ல. சந்தோசமா அனுப்புற போல அனுப்பி வச்சாரு. நான் வந்துருக்க கூடாதோ, அவர் கூடவே இருந்துருக்கணுமோனு ரொம்ப ஃபீல் பண்ணினேன். போன வாரம் அப்பாவுக்கு ஃபோன் பண்ணினேன், இந்த வாரம் வர்றதா சொன்னேன். தனியாவா இல்ல ஏதாச்சும் பொண்ணும் கூட வருதான்னு கேட்டாரு. ரெண்டு பேரும் வாய் விட்டு சிரிச்சோம். நீங்க தான் பாத்து கல்யாணம் பண்ணி வைக்கணும்பான்னு சொன்னேன்.

‘காலம் முழுக்க இப்படியே வேணாலும் இரு, ஆனா என்ன மட்டும் தேட சொல்லாத. உன் பொண்டாட்டிய உன்னாலயே கண்டுபுடிக்க முடியலனா நான் எப்படி டா கண்டுபிடிப்பேன். அப்பரம் உன் அப்பனுக்கு உன் அம்மா வாச்ச மாதிரி உனக்கும் எவனா மாட்டிப்பா… பரவாலயா’ என்றார் சிரிப்போடு. அம்மா அப்பாவை பக்கத்துல இருந்து செல்லமா அடிச்சுருப்பாங்க. அப்பா அம்மாவ அப்படி தான் பாசமா பாத்துகிட்டாரு.

நான் இப்ப போறேன். ஏர்போர்ட் வாசல்ல அவர் ஏதோ வெளிநாடு போயிட்டு வந்த போல கோட் சூட்டோட பந்தாவா நிப்பாரு பாருங்க என் அப்பா.

ஃப்ளைட் சென்னை வந்துருச்சு. இறங்கி நடந்து வந்துட்டு இருக்கேன். தூரத்துல அப்பா நிக்கிறாரு, அம்மாவோட கை புடிச்சுட்டு. நினச்ச போலவே கோட் சூட் தான். சென்னையில அடிக்கிற வெயிலுக்கு. அப்பாவோட குசும்பே குசும்பு தான். நான் இப்ப ஒரு வருச ஆசையெல்லாம் என் அப்பாகிட்ட கொட்டணும். லேப்டாப்ப மூடிக்கிறேன். பை.