Tuesday, 7 June 2016

தந்தை போட்டிச் சிறுகதை - 34

Rate this posting:
{[['']]}
அப்பா என்றொரு மனிதர்

அப்பாவின் நாக்கு வெளியே துருத்திக்கொண்டு வந்தது. கழுத்தை சுற்றிய துண்டை இன்னும் கொஞ்சம் இறுக்கினேன். சாவு சாவு என்று பெருங்குரலெடுத்து அலறினேன். அப்பாவின் கண்களிலிருந்து கண்ணீர் தாரை ஒழுகியது. சிரித்துக்கொண்டே அப்பாவின் சாவை ரசித்தேன். யெஸ், இப்படித்தான் அப்பாவைக் கொல்ல வேண்டும். சிரித்துக்கொண்டே கொல்ல வேண்டும். ஆனால் அப்பாவைக் கொல்ல என்னால் முடியுமா? உருண்டு திரண்ட கைகளையும் அகன்ற மார்பையும் உள்ள அப்பாவைக் கொல்ல முடியுமா என்னால்? நான் என் அப்பாவின் மகனா? இப்படி மெல்லியவனாய். என்னை ஒற்றைக்கையாலே தள்ளிவிடுவாரே அப்பா. இல்லை மனவெறி பெரியது. அப்பாவை கொல்ல முடியும். அவரின் மொத்த உடல் பலத்தையும் என் வெறி வீழ்த்தும்.
அம்மா செய்து தரும் முந்திரிக்கொத்தின் நினைவு வந்தது. அம்மாவும் அப்பாவும் அவ்வளவு அன்யோன்யம். அம்மாவின் சிறு தலைவலியைக்கூட பொறுக்கமாட்டார் அப்பா. அப்பாவிற்கு கால்வலி என்றால்கூட அம்மாவிற்கு மனசு வலிக்க ஆரம்பித்துவிடும். முந்திரிக்கொத்தின் பிரியத்தில் அம்மாவை முந்திரிக்கொத்தென்றே சில வேளைகளில் அழைப்பார் அப்பா. அடியே என் முந்திரிக்கொத்தே என்றால் அம்மாவிற்கு அவ்வளவு வெட்கம். இனிப்பை உண்ணும்போது வருகிற ஆனந்தம் அப்போது அப்பாவின் கண்களில் தெரியும்.
அப்பாவிற்கும் எனக்குமான தகவல் தொடர்பாளராக அம்மாதான் பெரும்பாலான வேளைகளில் இருப்பாள். அப்பா என்னை எப்போதும் அடித்ததில்லை என்றால்கூட அப்பாவிற்கும் எனக்கும் பேச்சு என்பது குறைவுதான். அம்மாவிடம் பேசுவதுபோல அப்பாவிடம் பேச முடியவில்லை. இதன் பின்னிருக்கும் நுண் உணர்வை கண்டறிதலில் பெரும்பாலும் தோற்றுப்போயிருக்கிறேன். கண்டிப்பாக அது பயம் அல்ல, மரியாதை என்று வேண்டுமானால் சொல்லலாம். ஈடிபஸ் காம்ப்ளக்ஸ் என்று சொல்ல எந்த மகனால் முடியும்? அம்மாவை இரவில் கட்டிப்பிடித்துக்கொண்டு தூங்குவேன். அப்பா கால் மேலே பட்டால்கூட நகர்ந்து விடுவேன்.
அம்மா பாட்டி வீட்டிற்கு சென்றபொழுதுதான் ஒருநாள் அப்பாவுடன் ஊர் திருவிழா போனேன்.
"என்ன தம்பி, கரகாட்டம் தெரியலியா?"
"ஆமாப்பா"
என்னை தோள்மேல் தூக்கி வைத்துக்கொண்டார். அன்றைக்கு அப்பாவை ரொம்ப பிடித்துப்போனது. பஞ்சுமிட்டாய் சாப்பிட்டேன். ஜவ்வுமிட்டாயை வாட்ச் ஆக்கி கையில் கட்டிக்கொண்டேன். பால் ஐஸ் சாப்பிட்டேன். ஆனால் இரவானால் அம்மாவைக் கட்டிக் கொள்வேன்.
அப்பாவை மீண்டும் பதினாறு வயதுக்கு மேல் அதிகம் பிடிக்காமல் போனது. அதற்கு காரணங்கள் என்று ஒன்றும் சொல்வதற்கில்லை. உண்மையில் அம்மா, அப்பா இருவரில் ஒருவரைத்தான் அதிகம் நேசிக்க முடியும். அந்த இடத்தில் எனக்கு அம்மா இருந்தாள். ஒரு ஆண் இன்னொரு ஆணை சகித்துக்கொள்வது கடினமான காரியம்தான். பெண்கள் எப்போதும் வீட்டிலேயே இருத்தி வைக்கப்பட்டதால் அவள் அறிந்துகொள்வதெல்லாம் சமையலறை சுற்றியும், சொந்தக்காரர் பிரச்சனையாயும் இருந்தன. அதனால் அம்மா எனக்கு பிடித்தவளானாள்.ஆனால் ஆண் சமூகபிரச்சனையை அறிபவனாய் இருந்தான் அன்றும் இன்றும். அப்பாவின் கொள்கையும் கோட்பாடுகளும் எனக்கு சுத்தமாய் பிடிக்கவில்லை. திருநீறு வச்சுக்கோ என்றார் அப்பா. பிறந்தநாளுக்கே கருப்புதான் அணிவேன் என்பேன் நான். அப்பறம் எப்படி ஒட்டும் உறவு? அப்பாவுடன் பேச்சு என்பதே அறவே இல்லாமல் போயிருந்தது.
"அம்மா, அப்பாகிட்ட சொல்லு, நான் சென்னை போயி இன்ஜினியரிங் படிக்கிறேன்"
"என்ன கண்ணா, அம்மாவ விட்டுட்டு அவ்வளவு தூரம் போகணுமா?"
பொறியியல் சேர்ந்த இரண்டாவது வருடத்தில் அம்மா எங்களைவிட்டுப் போய்விட்டாள். இரண்டு முறை முன்னரே அம்மாவிற்கு மாரடைப்பு வந்தும் யாரும் என்னிடம் சொல்லவேயில்லை. அப்பா கதறி அழுவார் என எதிர்பார்த்தேன். முன்னரே முடிவை அறிந்திருந்தபடியால் மௌனியாகி  இருந்தார். அம்மாவின் முகம் அன்று மலர்ந்த தாமரைபோல் இருந்தது. இனிமேல் யாருக்காக வாழவேண்டும் என்றே எனக்கு புரியவில்லை. இருபது நாட்களுக்குப்பிறகு அப்பா என்னிடம் பத்து இலட்ச ரூபாயைக் கொடுத்தார்.
"தம்பி , சில புண்ணியஸ்தலங்களைப் பார்க்கணும்னு நினைக்கிறேன். நாடோடியா கொஞ்சநாள். பணத்த வெச்சுக்கோ. வீட்ட உங்க மாமா பாத்துக்குவார். மனசு நிம்மதி அடைஞ்சதும் நான் உன்னக் கூப்பிடறேன்". அப்பா என் பதிலுக்கு காத்திருக்காமல் நடக்க ஆரம்பித்தார். யாருமற்றவனாய் சென்னை திரும்பினேன்.
கல்லூரியின் மூன்றாம் ஆண்டில் மகிழினி எனக்கு அறிமுகமானாள்.அவளின் பெண்ணியவாத கருத்துகளால் கல்லூரியில் பிரபலமாக ஆரம்பித்திருந்தாள். பெண் ஏன் அடிமையானாளை படித்துவிட்டு புரட்சி செய்ய புறப்பட்டவள் அவள். ஆனால் எல்லா பெண்ணியவாதிகளையும்போல ஆண்களைப் புறக்கணிப்பவள் அல்ல. ஆணும் பெண்ணும் ஒரே தராசில் வைக்கப்பட வேண்டுமென்ற எண்ணமுடையவள். அவளின் புரட்சிகர கருத்துகளுக்கு பேஸ்புக்கில் லைக் இட்டு, கமெண்ட் இட்டு, கல்லூரியில் பார்த்து பேசி ஆறு மாதங்களுக்கு உள்ளாக நெருங்கிய நண்பர்களாகிவிட்டோம்.
"ஆண்மைனு ஒண்ணு இருக்கறவரைக்கும் பெண்மை தலை தூக்க வாய்ப்பில்லைனு பெரியார் சொல்றாரு. குழந்தை பெத்துகறதாலதான் பெண் அடிமையாகிப்போறாள். குழந்தை பெத்துக்ககூட பெண்கள் மறுக்கணும்னு பெரியார் சொல்றாரு"
"என்ன முட்டாள்தனமா இருக்கு. அப்பறம் எப்படி அடுத்த தலைமுறை உருவாகும்"
" பெரியாருடைய பெரும் சமூக கோபம்தாண்டா இப்படி வெளிப்படுது. உண்மையில இத ஒரு பொது சமூகத்துக்கு சொன்னாருனு எடுத்துக்கறதவிட பெண்ணியத்தை முன்னிறுத்துற சில பேராவது முயற்சி செஞ்சு பாக்க சொல்லிருக்கலாம், இல்லியா"
"நீ கூட அப்படித்தானோ"
"பெரியாரைப் படிக்கிறவள்தான் நான் ,இருந்தாலும் ஆண்மையே இல்லாம போயிடுனும்னு நினைக்கல. ஆண்மையோடு பெண்மையும் சேர்ந்தியகங்கணும்னு நினைக்கறேன் .பாரதி சொன்ன மாதிரி ஆணுக்கிங்கே பெண் சரி நிகர் சமானம்னு வரணும்னு நினைக்கறவ நான்"
பெண்ணியத்தின் பெயரால் இன்றைக்கு ஆணுக்கு பல இடங்களில் பாதுகாப்பில்லாமல் போய்விடுதல் போலன்றி ஒரு தெளிவான பார்வை மகிழினிக்கு இருந்தது. பிராமணன் ஒரு காலத்தில் எல்லாரையும் ஒடுக்கிக் கொண்டிருந்தான் இன்றைக்கு பிராமணனை எல்லாரும் அடக்கிக் கொண்டு இருக்கிறார்கள். பெண்ணியமும் அப்படி சில இடங்களிலாவது ஆகி விட வாய்ப்புண்டு  என்பதால் சொல்கிறேன். மகிழினி என் உயிரின், உடலின் ஒரு பகுதியாய் ஆக ஆரம்பித்திருந்தாள். எல்லா வாழ்வியல் நிலைகளையும் எங்கள் உரையாடல்கள் உரசி சென்றன. சில வேளைகளில் அவள் சிந்தனைகளில் என்னைவிட பலமடங்கு உயர்ந்து நின்றாள். ஆனாலும் காதலை சொல்வதற்கான தருணங்களையே தராமல் அவள் பேசிக்கொண்டிருந்தாள்.
கல்லூரியை முடித்து அதிபிரபலமில்லாத மென்பொருள் நிறுவனமொன்றில் வேலையில் சேர்ந்தேன். அப்பா திரும்ப வந்திருந்தார். ஊரிலுள்ள வீட்டை மாமாவையே பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு அப்பா என்னுடன் சென்னையிலேயே தங்கிக்கொண்டார். அப்பா சமையலிலிருந்து எல்லா வீட்டுப்பொறுப்புகளையும் பார்த்துக்கொண்டார். மகிழினி தன் எழுத்துத் திறமையால் பத்திரிக்கை ஒன்றில் வேலை செய்து கொண்டிருந்தாள். எனக்கான அன்பு தரும் ஒரே ஜீவனாய் அவளும் அப்பாவும் மட்டுமே இருந்தார்கள். வார விடுமுறைகளில் தவறாமல் சந்தித்து உரையாடுவோம். அவளை அப்பாவிடம் அழைத்துசென்று அறிமுகப்படுத்த வேண்டுமென முடிவு செய்தேன்.
"நான் உங்க அப்பாவை வேற மாதிரி கற்பனை பண்ணிருந்தேன்"
"வேற மாதிரினா?"
"உன்னை மாதிரி இருப்பாருனு. ஆனா அவரு நல்ல உயரத்தில் , விரிந்த மார்போட, அவரோட ஒரு அம்சமும் உனக்கு கிடைக்கலபோலயே"
எனக்கு பயங்கரமான கோபம் வந்தது. உன் அப்பனுக்குத்தான் நீ பொறந்தியா என மறைமுகமாக அவள் கேட்பதைக்கூட புரிந்துகொள்ள முடியாதவன் அல்ல நான். அப்பாவை அவளுக்கு அறிமுகம் செய்து வைத்தது அவ்வளவு பெரிய தவறாகமென்று எனக்குத் தெரியவில்லை. பெரும்பாலும் அவள் பேச்சில் அப்பாவே இருந்தார். அந்தப்பேச்சின் தீவிரம் எவ்வளவு என்பது ஒருநாள் அலுவலகத்திலிருந்து கொஞ்சம் சீக்கிரமாக திரும்பியபோது தெரிந்தது. அவளும் அப்பாவும் கட்டி அணைத்துக் கொண்டு நின்று கொண்டிருந்தார்கள். அப்பா என்னைப் பார்த்ததும் நகர்ந்துகொண்டார். நின்றுகொண்டிருக்கும் தரை பிளந்து அந்தப்பெரும் பிளவில் தலை மட்டும் மாட்டிக்கொண்டு வெளியேயும் வராமல் உள்ளேயும் போகாமல் தத்தளிப்பதுபோல் இருந்தது. ஏன் அப்பா இப்படி செய்தீர்கள்? எனக்கிருந்த ஒருத்தியையும் ஏன் தட்டிப்பறித்துக் கொண்டீர்கள்? உங்களை கொல்ல வேண்டும் அப்பா. அப்பொழுதுதான் அவள் எனக்குக் கிடைப்பாள். சீய்ய் அவள் எதற்கு? அவளையும் கொல்ல வேண்டும். என் தலை முழுவதும் அறைகளாகி ஒவ்வொரு அறையிலும் அவளும் அப்பாவும் உட்கார்ந்து சிரித்துக்கொண்டிருந்தார்கள். நான்கு நாட்களாக அலுவலகம் போகவில்லை.
"என்னாச்சு தம்பி?"
அப்பாவை பார்க்க அவ்வளவு வெறுப்பாக இருந்தது.
"அம்மா போனப்ப போன காமம் வெளிய வந்திருச்சு தம்பி. அந்தப் பொண்ணுதான் கேட்டா ஒரு தடவை கட்டிப்பிடிச்சுங்கோங்கண்ணு. ஒரு நொடியில நடந்ததுக்கு வாழ்க்கை முழுக்க தண்டிச்சிடாத தம்பி"
நான் ஒன்றும் பேசாமல் இருந்தேன்.
"அவளை நீ காதலிச்சியா தம்பி"
ஒரு பரிகாசப் புன்னகையை அப்பாவை நோக்கி உதிர்த்தேன்.
மறுநாள் மகிழினி ஃபோன் செய்தாள். பதினைந்து முறை மிஸ்ட் கால் ஆனபிறகு அழைப்பை எடுத்தேன்.
"உங்கிட்ட ஒண்ணு சொல்ணும்"
வேண்டாவெறுப்பாக ம் சொன்னேன்.
"உங்க அப்பாவை நான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்"
"பைத்தியம் பிடிச்சிருச்சா உனக்கு"
" காதலுக்கு காரணங்கள் சொல்ல முடியுமா? ஏதோ ஒரு நொடியில என் மனசுல அவர் வந்துட்டார். எங்க வீட்ல சொல்லிட்டேன். அப்பா என்னைப் புரிஞ்சுகிட்டார்."
" ஓ இதுதான் பெரியாரிஸமோ? ஒத்த வயதினர் செய்துகொள்வதற்குதான் திருமணம்னு உங்க பெரியாரே சொல்லிருக்கறாரே"
"அத அவராலயே நிறைவேற்ற முடியலையே கடைசியில. அந்த மாதிரிதான் இதுவும்"
" ஹேட் யூ" என்று சொல்லி அலைபேசியை வைத்தேன்.
அடுத்த நாள் வீட்டிற்கு வந்து அப்பாவுடன் பேசிக்கொண்டிருந்தாள். அழுதுகொண்டே வீட்டை விட்டு வெளியேறினாள். பெண்ணியவாதிகள் அழுவார்களா என நினைத்துக்கொண்டேன். பெரியார் பெண்ணின் காதலைப் பற்றி என்ன சொல்லியிருக்கிறார் எனத் தெரியவில்லை. ஆனால் பெண்ணியவாதங்கள் காதலின்முன் தோற்றுதான் போகின்றன. மகிழினி தோற்றுப்போன மாதிரி. எவ்வளவோ படித்து அறிவுஜீவி என்று திரிந்து, உணர்வு சார்ந்து பிரச்சனை வருகிறபொழுது எல்லா அறிவுஜீவித்தனங்களும், கொள்கைகளும், கோட்பாடுகளும் அழிந்து போகிற மாதிரி. அப்பா அவள் எண்ணத்தை மறுத்துவிட்டாரா? இல்லையேல் ஏன் அழப்போகிறாள்?அப்பா என்ன சொன்னார்? அப்பாவிடம் கேட்க வேண்டாம். அப்பாவின் அறைக்கு சென்றேன். அப்பா உறங்கிக்கொண்டிருந்தார். அப்பாவின் அருகில் உட்கார்ந்து அவர் முகத்தை உற்றுப்பார்த்தேன். அது கவலையோ,மகிழ்ச்சியோ ஏதுமின்றி சாந்தமாய் இருந்தது. அப்பா என்னைப்போலவே ஒரு மனிதர். மகிழினி என்னைப்போலவே ஒரு மனித உயிர். இவர்களின் காதலைப் பிரித்துவிடுகிற தேவைதான் எனக்கு என்ன? நான் அவளை காதலித்தேன் என்கிற ஒற்றைக் காரணத்திற்காகவா? இரண்டு பக்கமும் தோன்றி இணைவதல்லவா காதல். அப்பாவும் மகிழினியும் கட்டிக்கொண்டார்களே அப்படி. நாம் நேசித்தவர்களுக்கு அவர்கள் நேசித்தவற்றை அடைய உதவுவதுதானே பெருங்காதல். மகிழினி நீ அப்பாவை திருமணம் செய்துகொள். நான் சம்மதம் வாங்கித் தருகிறேன். அலைபேசியை எடுத்து மகிழினியை அழைக்க தொடுதிரையில் தொட்டேன். அவள் எடுக்கவில்லை. எங்கே போய்விட்டாய் மகிழினி? மீண்டும் மீண்டும் அழைத்தேன்.  அப்பாவின் அருகில் படுத்து அப்பாவைக் கட்டிப்பிடித்துக்கொண்டேன். அப்பாவின் உடல் சூடாக இருந்தது. அந்த சூட்டில் கொஞ்சம் கொஞ்சமாக உருகிக் கொண்டிருந்தேன். அறை முழுவதும் உருகிய உயிர் வாசனை அடித்துக்கொண்டிருந்தது.