Thursday, 16 June 2016

தந்தை போட்டிச் சிறுகதை - 41

Rate this posting:
{[['']]}
எழுதுகிறேன் ஒரு கடிதம்

17.7.2015
                                                     
சென்னை
அன்புள்ள அப்பாவுக்கு,           
நான் இங்கு நலம்... நீங்கள் அங்கு நலமா? என்கிற தேய்வழக்கான கேள்வியுடன் இக்கடிதத்தைத் தொடங்குவதில் எனக்கு விருப்பம் இல்லை. எப்படியாயினும் இந்த வாழ்க்கைதான் எனக்கானது எனும்போது இதன் இனிப்பு/கசப்பு குறித்து கேள்வியெழுப்புவதும் அதற்கென அங்கலாய்த்துக் கொள்வதும் அர்த்தமற்றதே. திருவல்லிக்கேணி, நல்லதம்பி தெருவில் இருக்கும் கோகுல் மேன்சனில், 109ம் இலக்கமிட்ட அறையில்தான் நான் தங்கியிருக்கிறேன். இருவர் பகிர்ந்து கொள்ளும் அறை இது. சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டு வரும் வில்சன் என்பவர் என்னோடு இந்த அறையை பகிர்ந்து கொண்டிருக்கிறார். அவருக்கென ஒதுக்கப்பட்டிருக்கும் அலமாரியில் தமிழ் இலக்கிய/இலக்கண நூல்கள் நிறைந்திருக்கின்றன. வாய்ப்பு தேடியது போக எஞ்சியிருக்கும் பல மணி நேரங்களை  அப்புத்தகங்கள் என்னிடமிருந்து எடுத்துக் கொள்கின்றன. அவ்வப்போது வில்சனிடம் சம்பிரதாயமாகச் சில வார்த்தைகள் பேசுவதோடு நிறுத்திக் கொள்கிறேன். மற்றபடி இங்கு யாருடனும் அவ்வளவாகப் பேசிக் கொள்வதில்லை. வாழ வேண்டும் என்கிற கட்டாயத்துக்காக வாழ்ந்து கொண்டிருப்பவர்களைப் போலவே இவர்கள் எனக்குத் தெரிகிறார்கள். சென்னைக்கு வந்த இந்த ஒரு மாத காலத்தில் பத்துக்கும் மேற்பட்ட திரைப்பட அலுவலகங்களுக்குச் சென்று எனது சுய விவரத்தைக் கொடுத்து விட்டு வந்திருக்கிறேன். ‘‘டைரக்டர்கிட்ட கொடுக்குறேன்... தேவைப்பட்டா கூப்பிடுவார்’’ என்கிற வாடிக்கையான பதில்தான் வந்தடைகிறது. இருக்கட்டும், கதவு திறக்கப்படும் வரையிலும் தட்டிக்கொண்டே இருக்க வேண்டும் என்பதை கற்றுணர்ந்தவர்களால் மட்டுமே இங்கு நிலைத்திருக்க முடியும். நான் அந்தத் தீர்மானத்துடந்தான் இந்த வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கிறேன்.

நீங்களும் அம்மாவும் நலமாகத்தான் இருப்பீர்கள் என்று நான் உளமாற நம்புகிறேன். நான் வீட்டை விட்டு வெளியேறிய போது நீங்கள் ஏதும் சொல்லவில்லை. அப்போது நீங்கள் காத்த மௌனம் என்னை பல கேள்விகளுக்குள் கொண்டு சென்றது. ஆனால் பாவம், அம்மா அழுததைத்தான் என்னால் தாங்கிக்கொள்ளவே இயலவில்லைஇருந்தும் அப்போதைய சூழல் அது குறித்தெல்லாம் யோசிக்க விடாமல் என்னை இப்பெருநகருக்கு இழுத்துக் கொண்டு வந்துவிட்டதுஅப்படியான ஒரு சூழலை உருவாக்கியதே நீங்கள்தான் அப்பா. நாம் யாரை ஆழமாக நேசிக்கிறோமோ அவர்கள் மீது ஏற்படும் வெறுப்பு இன்னும் ஆழமானதாக இருக்கும். இந்த 26 ஆண்டுகளில் நான் அளவுக்கதிகமாக நேசித்ததும், வெறுத்ததும் உங்களைத்தான் அப்பா.
நீங்கள் பிறந்த வீட்டின் பூஜையறையில் ஒரு துளை இன்னும் இருக்கிறது. அந்தத் துளையில் வேஸ்ட் நெகடிவ்களை வைத்து லென்ஸ் மூலம் அதனுள் சூரிய ஒளியைப் பாய்ச்சி உள்ளே இருந்த வெள்ளைச்சுவற்றில் படம் காண்பித்தாக பாட்டி என்னிடம் சொல்லியிருக்கிறார். அந்த வீட்டின் படுக்கையறையில் விநாயகர் படம் வரைந்திருப்பீர்கள். வீட்டுக் கதவின் இருபுறங்களிலும் ரஷ்ய அதிபர் ஸ்டாலின் படத்தினை வரைந்து வைத்திருப்பீர்கள். உங்களின் பதின்ம வயதில் அதை நீங்கள் வரைந்ததாக பாட்டி கூறிய போது உங்களை எண்ணித் திளைத்தேன். நீங்கள் நாடகங்களை இயக்கியதாக அம்மா என்னிடம் சொல்லியிருக்கிறார். ‘ஓர் குடிசையின் ஓரம்எனும் நாடகம் குறித்து அம்மா சிலாகித்துச் சொன்னதை என்னால் என்றைக்கும் மறக்க முடியாது. கணவனின் குடியின் காரணமாக சின்னாபின்னமாகிப்போகும் குடும்பத்தின் கதை அது. நம் வீட்டில் நீல நிறத்திலான இரும்புப் பெட்டி ஒன்று கட்டிலுக்கடியில் இருக்கும். அதனை அம்மா என்றைக்கும் பொருட்படுத்தியதே இல்லை. ஆர்வக்கோளாறில் நான் அதனைத் திறந்து பார்த்தேன். என்னவென்று சொல்ல, அக்கணம் உங்களை கட்டியணைத்து முத்தமிட வேண்டும் போலிருந்தது எனக்கு. ஒரு கோப்பு முழுக்கவும் நீங்கள் பேச்சு மற்றும் கவிதைப்போட்டிகளில் வெற்றி பெற்ற சான்றிதழ்கள். ஐம்பதுக்கும் மேற்பட்ட புத்தகங்கள். அவற்றில் பலவும் சினிமா தொடர்புடையவை. ‘வாங்க சினிமாவைப் பற்றிப் பேசலாம்என்கிற பாக்கியராஜின் புத்தகம் உட்பட பலவற்றையும் தேடிச் சேகரித்திருக்கும் உங்களது ஆர்வம் என்னை வியப்புக்குள்ளாக்கியது. எலியின் கொரிப்புக்கு ஆளான மஞ்சள் நிறமேறிய ஒரு நோட்டும் உள் இருந்தது. எடுத்து அதன் பக்கங்களைப் புரட்டினேன். நீங்கள் எடுக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பில் எழுதப்பட்ட ஒரு படத்தின் திரைக்கதை வசனம் இத்தனை காலம் இந்தப் பெட்டிக்குள் படுத்துறங்கியது எதனால்? என்கிற கேள்வி அப்போதுதான் எழுந்தது.
என் இயல்பிலேயே சினிமா மீது எனக்குப் பெரும் ஆர்வம் இருந்ததை நீங்கள் அறிவீர்கள். இருந்தும் நான் படம் பார்க்கச் செல்வதற்கு நீங்கள் அனுமதி வழங்கியதே இல்லை. உங்களுக்குத் தெரியாமல் நான் பள்ளி வேளைகளில் கோபிச்செட்டிப்பாளையம் சென்று படம் பார்த்து வந்திருக்கிறேன். கிட்டத்தட்ட திருடனின் மன நிலைக்கு ஒத்து ஒரு பயத்துடந்தான் நான் படங்களைப் பார்த்தேன். ஆனால் ஏன் உங்களுக்கு சினிமாவின் மீது இப்படியொரு கசப்பு? என்று எனக்குத் தெரியவில்லை. என் பள்ளிப்படிப்பு முடிந்ததும் ஈரோட்டில் என்னை மெக்கானிக்கல் என்ஞ்சினியரிங் படிப்புக்குச் சேர்த்தீர்கள். ஹாஸ்டலில் தங்காமல் நண்பர்களுடன் அறையெடுத்து தங்கியதில் நான் ஒரு சுதந்திரத்தைப் பெற்றேன். அக்காலகட்டத்தில்தான் நான் நிறைய திரைப்படங்களைப் பார்த்தேன். அத்திரைப்படங்கள் குறித்து நண்பர்களிடம் விவாதித்தேன். எனது அறைத்தோழர்களில் ஒருவரான நிர்மல் மூலம்தான் எனக்கு வேற்று மொழித் திரைப்படங்கள் அறிமுகமாகின. அன்றைய நாட்களில் எனக்குள் ஏற்பட்ட பார்வையும் புரிதலும் மெக்கானிக்கல் படிப்பிலிருந்து என்னை அந்நியப்படுத்தின. வகுத்து வைக்கப்பட்ட ஒரு கட்டமைப்புக்குள் இருந்து பணியாற்றுவதை சகித்துக்கொள்ளவியலாதவனானேன். என் மனம் முழுமைக்கும் இருந்தது சினிமா மட்டுமே.
எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு நான் மெக்கானிக்கல் என்ஞினியரிங் படிப்பை முடித்தேனென்றால் அது உங்களுக்காகத்தான். உங்களின் விருப்பப்படியே பெங்களூரில் ஓராண்டு காலம் படித்த படிப்புக்கான வேலையை செய்தேன். இயந்திரத்தனமான அந்த வேலை எனக்கு அயற்சியை ஏற்படுத்தியது. என் எண்ணம் முழுமையும் சினிமாவே நிறைந்திருந்தது. இது எனக்கான களம் அல்ல என்பதை நான் எனக்கே சொல்லிக் கொண்டேன். இதன் இறுதிக்கட்டமாக அந்த வேலையை விட்டுவிட்டு ஊருக்கு வந்த போதுதான் இது நிகழ்ந்தது.
திரைத்துறைக்குச் செல்ல வேண்டும் என்பதை கடுமையாக மறுதலித்த நீங்கள் வேலையை விடுத்ததற்காக என்னைத் திட்டினீர்கள். இருந்தும் நான் எனது முடிவில் உறுதியாக நின்றேன். நமக்குள் வாக்குவாதம் முற்றிப்போன நிலையில் என்னுள் இருந்து நானே எதிர்பார்த்திராத வார்த்தைகள் வெளியேறின. உங்களால் திரைத் துறையில் சாதிக்க முடியாமல் போனால் என்னாலும் முடியாதா? என்று ஒரு கேள்வியைத் தொடுத்தேன். நீங்கள் அதற்குப் பிறகு ஏதும் பேசவில்லை. நிச்சயமாய் அப்படி வெளிப்படையாகக் கேட்டு விட்டதன் காரணமாக நான் சங்கடத்துக்கு ஆளானேன். இருந்தும் அந்தக் கேள்வி நியாயம் எனவே படுகிறது.    

பிரதான ஓவியராக திங்களூர் முழுவதிலும் நீங்கள் பரிச்சயப்பட்டிருந்தீர்கள். நான் படித்த பள்ளி முதற்கொண்டு பல இடங்களில் நீங்கள் தீட்டிய ஓவியங்கள், எழுதிய எழுத்துக்களுக்குக் கீழேஜோதி ஆர்ட்ஸ்’  என்று எழுதியிருப்பீர்கள். சக மாணவர்களிடம்எங்கப்பா பேரைப் பார்த்தியாஎன்று அதனைக் காண்பித்துப் பெருமைப்பட்டுக் கொண்ட கணங்களை இப்போது நினைத்தாலும் சிலிர்க்கிறது. திங்களூரில் என்னைப் பார்க்கும் எவரும்நீ ஜோதிமணி பையனா?” என்றே வினவுவார்கள். ஆம் என்று நான் சொன்ன பிறகுமுகத்துல ஜாடை தெரியுதுஎன்று சொல்வார்கள். உடனே மனக்கண் முன் உங்களை நிறுத்திப் பார்ப்பேன். முக ஜாடையில் மட்டுமல்லாமல் சகலத்திலும் உங்களின் நகலாய் வாழ ஆசை கொண்ட நாட்கள் அவை. நீங்கள் சுயம்பாய் உருவாகி வந்தவர். சங்கு ஊதி, சேவண்டி அடித்து பெருமாளை வழிபடும் சமூகத்தில் பிறந்த நீங்களோ அதற்கு முற்றிலும் மாறாக பெரியாரையும், கார்ல் மார்க்ஸையும் படித்து வளர்ந்தீர்கள். எனது அம்மாவாகிப்போன கலையரசியை காதலித்துத் திருமணம் புரிந்து கொண்டீர்கள். இதன் காரணமாக உங்களது குடும்பத்தின் ஒட்டுமொத்த எதிர்ப்பையும் சம்பாதிக்க நேரிட்டது. அதன் பிறகு நாங்களே உங்களது உலகமாகிப் போனோம். சொந்த பந்தங்களோடு எந்த வித ஒட்டுதலும் இல்லாமல்தான் வாழ்ந்தீர்கள்.

நீங்கள் அயராத உழைப்பாளி, எந்நேரமும் உங்களை பெயிண்ட், பிரஷுடன்தான் பார்க்க முடியும். சரியாகப் படிக்காமல் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெறுகிற போதெல்லாம் ‘’உங்கொப்பன் கொளுத்துற வெயில்ல சாரத்துல ஏறி நின்னு வேலை செஞ்சு உன்னைய உன்னையப் படிக்க வெக்குறான்.. நீ பொறுப்பில்லாம திரியுறஎன்று சொல்லிவிட்டுத்தான் வாத்தியார் பிரம்பை விளாசுவார். அன்றைய நாட்கள் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. திங்களூரில் நீங்கள்தான் முழு நேர ஓவியர் என்பதால் ஆர்டர்கள் வந்து குவிந்து கிடக்கும். ஒவ்வொருவரும் தத்தம் தனது வேலையைச் சீக்கிரம் முடித்துக் கொடுக்கும்படி உங்களிடம் மன்றாடிக் கொண்டிருப்பார்கள். எத்தனை ஆர்டர்கள் வந்தாலும் சலைக்கவே மாட்டாமல் உழைத்தீர்கள். எல்லாமும் எங்களுக்குத்தான் என்பது எனக்குத் தெரியும் அப்பா.

வறுமை என்னும் வார்த்தையையே அறிந்திராதபடி குடும்பத்தை நகர்த்துமளவுக்குப்  பணப்புழக்காட்டம் இருந்தது அந்நாட்களில்.  ஆனால் அன்று போலவே என்றைக்கும் அது தொடர்ந்திருக்கும் என இருந்து விட்டீர்களோ என்னவோ? பணத்தைச் சேமித்து நிலபுலன்கள் வாங்க வேண்டும் என்கிற எண்ணம் உங்களிடம் இருந்ததே இல்லை. காலம் என்றைக்கும் நமக்கானதாகவே இருந்து விடாது. ’காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்ற பழமொழி வெறுமனே சொல்லப்பட்டதல்ல. டிஜிட்டல் ப்ளக்ஸ் தொழில்நுட்பம் காலூன்றி எல்லாப்புறமும் பரவலாக வளரத் தொடங்கியது. இந்த அவசர உலகில் யாரும் உங்களிடம் எழுதச் சொல்லி கொடுத்து விட்டு வாரக்கணக்கில் காத்திருக்கத் தயாரில்லை. கொடுத்த மாத்திரத்தில் வேலையை முடித்துக் கொடுக்கிற இயந்திரத்தின் வருகைக்குப் பின் தூரிகையைக் கையாளும் ஓவியனின் வாழ்க்கை குறித்தெல்லாம் இங்கு யாரும் அக்கறை கொள்ளவில்லை. டிஜிட்டல் ஃப்ளக்ஸ் தனது வருகையை அழுத்தமாகப் பதிவு செய்த பின்னர் உங்களது தூரிகைகள் கட்டாயத்தின் பேரில் மௌனித்து விட்டன.
வாழ்வாதாரமே நொறுங்கிப் போகும் நிலையில் அது தரும் வலி என்பது அபரிதமானதுதான். அந்த அடியின் வலியில்தான் உங்களுக்குள் வாழ்க்கை குறித்தும், எதிர்காலம் குறித்தும் அச்சம் தோன்றியிருக்கக்கூடும். அந்த இருளுக்குள் புதைந்த உங்களுக்கு இன்னமும் விடியும் என்கிற நம்பிக்கை வரவே இல்லை அப்பா. நம் வட்டாரப் பழமொழி ஒன்றுசாகப்போற நேரத்துல சங்கரா... சங்கரான்னு கத்தி என்ன புண்ணியம்இது உங்களுக்குப் பொருந்திப் போகும். காலம் நம் பக்கம் இருந்த போதெல்லாம் விட்டு விட்டு, கைதவறிப் போன பின் கதறி என்ன பயன்?

நீங்கள் திரைப்பட இயக்குனராகும் முயற்சியில் மட்டுமல்ல, அடிப்படை வாழ்க்கையிலுமே கூடத் தோற்றுப்போய் விட்டீர்கள் அப்பா. தோல்வியடைந்த உங்களின் மனநிலை என்னையும் தோற்றாங்கோலியாகவே பார்க்கிறது. ஆகவேதான் எனது திரைத்துறை ஆர்வத்தை நீங்கள் எதிர்த்தீர்கள். எழுவோம் என்கிற நம்பிக்கை மட்டுமே நம்மை அனுதினமும் உறக்கம் கொள்ள வைக்கிறது. எந்த நம்பிக்கையில் உங்களது குடும்பத்தாரின் எதிர்ப்பையும் மீறி என் அம்மாவைக் கரம் பற்றினீர்களோ அந்த நம்பிக்கை உங்களிடத்தில் இப்போது எங்கே போனது?

என் வாழ்வில் நான் மறக்க வேண்டும் என்று நினைக்கக் கூடிய கசப்பான நாட்கள் உண்டு. ஜன்னித் தொந்தரவுக்கு ஆளாகி அவதிக்குள்ளான நாட்கள்தான் அது. என்னை விட என் பிரச்சனையைப் பற்றி உங்களுக்குத்தான் தெரியும் . ஏனென்றால் ஜன்னி வரும்போது நான் சுய நினைவிலேயே இருக்க மாட்டேன். ஆறு வயதில் நிகழ்ந்த விபத்தில் தலையில் பட்ட அடி, வீரப்ப வாத்தியாரின் குண்டாந்தடியின் பலத்த அடி, வகுப்பறைத் தூணில் மோதிச் சிந்திய ரத்தம் என தலையில் கணக்கில்லாத அடிகள். அதன் விளைவோ என்னவோ என் பதினேழாவது வயதில் முதன் முறையாக எனக்கு ஜன்னி வந்தது. எனக்கு எதுவுமே நினைவில் இல்லை எழுந்து பார்த்த போது சாப்பாடு குழம்பு எல்லாம் சிதறிக்கிடந்ததைப் பார்த்தும் உங்களது முகத்தில் தெரிந்த பதற்றத்தைப் பார்த்தும்தான் எனக்கு ஏதோ ஆகியிருக்கிறது என்பதை உணர முடிந்தது.
என்னைக் காட்டிலும் இப்பிரச்னையின் காரணமாக பதற்றத்துக்குள்ளானது நீங்கள்தான். புகழேந்தி மருத்துவரின் மருந்துகள், சண்முகம் மருத்துவரின் அக்கு பஞ்சர் வைத்தியம், பெரியசாமி அவர்களின் ஹோமியோபதி என எதுவுமே எனக்கு துணை நிற்கவில்லை. மாதத்திற்கு இரு முறையேனும் ஜன்னி வந்து கொண்டிருந்தது. கண்கள் பொறிகட்டும்போதே உணர்ந்து கொள்வேன் அப்படியே கீழே படுத்து விடுவேன் பிறகு கால் மணி நேரம் கழித்து எழுவேன் என்ன நடந்தது? எங்கு இருக்கிறோம்? யாரோடு பேசிக்கொண்டிருக்கிறோம்? என்பதில் சற்றே தடுமாற்றம் இருக்கும். அக்கனத்தில் வேற்று கிரகத்தில் இருந்து பூமிப்பந்துக்கு பிரவேசித்திருக்கும் அந்நியனைப் போல்தான் பூமியுடன் எந்த ஒட்டுதலும் இல்லாமல் இருப்பேன். எல்லாம் தெளிந்த பிறகு ஜன்னி என்னும் சொல்லைக் கேட்டாலே எனக்கு குலை நடுங்கும். இது மனம் சம்மந்தப்பட்ட பிரச்சனையாகவும் இருந்தது.
இதை ஏன் இப்போது சொல்கிறேன் என்றால் அந்நாட்களில் நீங்கள் என் மீது அளவு கடந்த பாசத்தைக் கொட்டினீர்களே தவிர்த்து சமயோசிதமாக செயல்படவில்லை அப்பா. அந்தப் பேய் என்னை மிரட்டும்போதெல்லாம் அஞ்சி நடுங்கிய என்னை அரவணைத்து, ஆறுதல் கூறி, அந்தப் பேயை விரட்டியடிக்கும் தைரியத்தை எனக்கு அளித்திருக்க வேண்டிய நீங்கள், அந்தப் பேயைக்காட்டிலும் கொடுமையாக என்னை பயமுறுத்தினீர்கள். ஜன்னி கூட எனக்குப் பெரியதாகத் தோன்றவில்லை, தொட்டதற்கெல்லாம் ஜன்னி வந்து விடுமோ என்ற உங்களின் பரிதவிப்பு பாசமாக இருந்தாலும் அது என் மேல் எனக்கே வெறுப்பை உண்டாக்கியது. அப்போது உங்கள் மீது அளவுக்கதிக கோபம் இருந்தது. வாழ்க்கையில் எல்லாவற்றிற்கும் ஒரு தீர்வு இருக்கும் என்பது உங்களுக்குத் தெரியாததல்ல, ஆனால் நீங்களே ஏன் அந்நாட்களில் அப்படி நடந்து கொண்டீர்கள் என்பது எனக்குத் தெரியவில்லை. பெங்களூர் நிமான்ஸ் மருத்துவமனையில் எழுதிக் கொடுத்த டெக்ரிடால் என்ற ஒற்றை மாத்திரை இருண்ட நாட்களிலிருந்து என்னை மீண்டும் வெளிச்சத்திற்கு கூட்டி வந்தது.

எல்லாவற்றிலிருந்தும் மீள்வதற்கான வாய்ப்பு இந்த உலகத்தில் இருக்கவே செய்கிறது அப்பா. ஆனால் எல்லாவற்றிலும் உங்களுக்கு அவ நம்பிக்கையே எஞ்சியிருக்கிறது. ஆக நீங்கள் எவற்றையும் பரிசீலனைக்குட்படுத்துவதே இல்லை. இவை எல்லாம்தான் நம் இருவருக்குமான முரணாக அன்று வெடித்தது. என் வழியைப் பார்த்துக் கொள்ள எனக்குத் தெரியும் என்று என்னைச் சொல்ல வைத்ததும் அந்த முரண்பாடுதான். ஜன்னித் தொந்தரவிலிருந்து ஒற்றை மாத்திரை என்னை மீட்டெடுத்தது போல் எனது எதிர்காலத்தை எனது கருத்தாக்கம் மிகுந்த சிந்தனையும் அதன் காரணமாக உருவாகும் நம்பிக்கையும் வளமாய் உருவாக்கும் என நம்புகிறேன். உங்களது அவ நம்பிக்கை இதை மறுத்தாலும் ஆச்சரியம் ஒன்றுமல்ல
                                                         இப்படிக்கு
                                                                 கதிரேசன்

                                               
                                                22.7.2015
                                               
திங்களூர்
அன்பு மகனுக்கு,
தோற்றுப்போன உனது அப்பா எழுதிக் கொள்வது. உனது கடிதம் கிடைக்கப் பெற்றதும் மகிழ்வுக்குள்ளானேன். இக்கால சூழலிலும் எழுத்தின் வாயிலாக தனது கோபத்தை/விமர்சனத்தை எழுப்பிய மகனை நினைத்து இந்த தகப்பன் மகிழ்வதைத் தவிர வேறு என்ன செய்வது. முதன்முறை படித்த போது என் மீது நீ முன் வைத்த குற்றச்சாட்டுகள் என்னை காயப்படுத்தின. தோற்றுப்போனவன், அவநம்பிக்கைவாதி என்று பெற்ற மகனிடமிருந்து அவப்பெயர் வாங்கிக் கொண்ட தகப்பனாகி விட்டேன் என்று என் மீதே எனக்கே வெறுப்பு வந்தது. இதுவரையிலான எனது வாழ்க்கையில் எத்தனையோவற்றைக் கடந்து சென்றதைப் போல உனது கடிதத்தையும் கடந்து சென்று விட முடியும்தான். இருந்தும் இப்போது உனக்கு அளிக்கும் விளக்கங்கள் என்னை நியாயப்படுத்திக் கொள்வதற்காக அல்ல. எனது வாழ்க்கை என்னால் மட்டுமே வாழப்பட்டதல்ல. என்பதை நீ புரிந்து கொள்ள வேண்டும். என்றைக்கு உன் அம்மாவை வேட்டைக்காரன்கோவிலில் தாலி கட்டி மனைவியாக்கிக் கொண்டேனோ அன்றைக்கே எனக்கு மட்டுமானதாக இருந்த ஒரு வாழ்க்கை முடிவெய்தியது. நீ பிறப்பதற்கு முன்னான எங்களுக்குள்ளான வாழ்க்கை பற்றி உனக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எங்கள் காதலுக்கு எனது குடும்பத்தாரிடமிருந்து வந்த பலத்த எதிர்ப்பு காரணமாகத்தான் நாங்கள் அவசரகதியில் திருமணம் செய்து கொள்ள வேண்டிய சூழல் வந்தது. மணமுடித்ததும் கொளப்பலூரில் தன்ராஜ் என்பவரது வீட்டில்தான் வாடகைக்குக் குடிபுகுந்தோம். வாடகை மற்றும் அன்றாடத்தேவைகளுக்கு என்ன செய்வது என்று தெரியாத இக்கட்டான நிலை அது. ஒரு ரூபாய்க்கு நீலம் வாங்கி அந்த நீலத்தில் கடைகளுக்கு விளம்பரம் எழுதி அதற்கென ஐந்து ரூபாய் பெறுவேன். இப்படியாகத்தான் எங்களது ஆரம்ப கால வாழ்க்கை இருந்தது. ஆர்வத்துக்கென வரையத் தொடங்கிய எனக்கு அதுவே தொழிலாகிப் போனது. ஓராண்டு காலம் வாழ்க்கையை எப்படியெப்படியோ நகர்த்திக் கொண்டிருந்தபோதுதான் நீ பிறந்தாய். எங்கள் இருவரின் வாழ்வுக்கான ஒரு அர்த்தம் பிறந்ததாகவே நாங்கள் நினைத்துக் கொண்டோம். அன்றிலிருந்துதான் எல்லாமும் நடந்தது. திங்களூருக்கே குடிபெயர்ந்து, வாடகைக்குக் கடை பிடித்துத் தொழில் செய்தேன். எனது தொழிலில் நான் காட்டிய நேர்மையைப் பற்றி நான் சொல்லித்தான் உனக்குத் தெரிய வேண்டும் என்பதல்ல. பணத்துக்குப் பஞ்சமில்லாத தொழிலாக அதை நடத்திக்கொண்டு சென்றவன் நான். மகிழ்ச்சிகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்த வாழ்க்கையை அன்றைக்கு வாழ்ந்ததில் எனக்கு இப்போதும் திருப்தி இருக்கிறது. ஆனால் நீ சொன்னது போல காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ளாமல் விட்டு விட்டேன்.
ஆம் தவறுகள் என்பது யதார்த்தம்தான். அந்த யதாத்தம்தானே மனித வாழ்வு்?

எனது நாடகங்களுக்குக் கிடைத்த வரவேற்பை நீ அறிந்திருக்க மாட்டாய். அன்றைக்குப் பலரும் எனக்களித்த நம்பிக்கையே எனது திரைத்துறை முயற்சிக்கான உந்துதலாய் இருந்தது. மண வாழ்க்கை எனும் ஒரு கட்டமைப்புக்குள் நுழைந்து விட்ட பிற்பாடு எனது வாழ்க்கை எனக்கு மட்டுமான வாழ்க்கையாக இல்லையே? நீ பிறந்து ஆறாவது மாதத்தில் கடும் வயிற்றுப்போக்கு காரணமாய் உன்னை கோபிச்செட்டிப்பாளையம் அரசு மருத்துவமனையில் சேர்த்திருந்தோம். அன்றைக்கெல்லாம் அந்த சூழலை எப்படி எதிர்கொள்வதென்றே எனக்குத் தெரியவில்லை. உன் முகத்தில் சிரிப்பே இல்லை. சோர்ந்து போய்க் கிடந்த உன்னை என்னால் பார்க்கவே முடியவில்லை. அங்கிருந்த செவிலிகள் யாருக்கும் நீ பிழைப்பாய் என்கிற நம்பிக்கையே இல்லை. எப்படியும் நீ செத்து விடுவாய் என்றுதான் அவர்கள் பேசிக்கொண்டார்கள். உன் அம்மாதான் அழுது அரற்றியபடி கொளப்பலூரில் இருக்கும் சித்த வைத்தியர் சண்முகத்திடம் உன்னைத் தூக்கிக் கொண்டு ஓடினாள். ஆறு வேளைக்கு அவர் கொடுத்து மாத்திரைகள்தான் உன்னை உயிர்ப்பித்தன.
உனக்குப் பிறகு சுகன்யா பிறந்தாள். உங்களை வளர்த்து ஆளாக்குவதைத் தவிர எனக்கு வேறு ஒன்றும் தோன்றவில்லை கதிரேசா. அதனால்தான் எனது திரைக்கதை ஏடு அந்த இரும்புப் பெட்டிக்குள்ளேயே முடங்கிப் போனது.

ஜன்னித் தொந்தரவுக்கு நீ ஆளாகியிருந்த நாட்களைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தாய். அன்றைக்கு எனது செயல் உன்னை பயமுறுத்தியதாக வருந்தியிருந்தாய். என்னை மன்னித்துக் கொள். உனது உணர்வுகளை நான் அறிந்திருக்கவில்லை. அப்போது உனது கை, கால்கள் வெட்டி வெட்டி இழுப்பதைப் பார்க்கும்போது எனக்குள் ஏற்படுகிற பரிதவிப்பை வார்த்தைகளால் நான் விவரிக்க இயலாது. நீ சொன்னது போலவே அன்றைக்கு நான் சமயோசிதமாக செயல்பட்டேனா என்றெல்லாம் எனக்குத் தெரியவில்லை. ஒரு சராசரித் தகப்பனாக நடந்து கொண்டேன்.
நீ வீட்டை விட்டு வெளியேறும்போது நான் காத்த மௌனம் உன்னுள் பல கேள்விகளை எழுப்பியதாகக் குறிப்பிட்டிருந்தாய். உன் அத்தனை கேள்விகளுக்கும் நான் தரும் ஒரே பதில் உனது வாழ்க்கையை பார்த்துக் கொள்ள உனக்குத் தெரியும் என்று நீ சொன்ன பதில்தான் என்னை மௌனம் கொள்ள வைத்தது. தன் குஞ்சின் சிறகுகள் பறத்தலுக்கான தகுதியை எட்டும் வரையிலும்தான் தாய்ப்பறவை அதனை அரவணைக்கும். அந்தக் கட்டத்துக்கு மேல் அந்தக் குஞ்சு பறக்க எத்தனிக்கவில்லையென்றால் மென்மையான அதனது கூட்டில் முட்களை வைத்து விடும். அதன் பிறகும் அந்தக் குஞ்சு பறக்க மறுத்ததென்றால் தாய்ப்பறவை அதனைத் தன் தோள் மேல் ஏற்றிக்கொண்டு உச்சிவானுக்குச் சென்று அதன் பிடியைத் தளர்த்தி விட்டு விடும். நீ பறக்க எத்தனித்த குஞ்சாகி விட்ட போது உன்னைத் தடுக்க நான் யார்? என்கிற கேள்விதான் என்னை மௌனிக்க வைத்தது.
உன் சிறகுகள் உனக்கான வானத்தைத் தேர்ந்தெடுத்துக் கொண்டன. எனது அரவணைப்பு இனி உனக்குத் தேவையில்லை. என்னை நோக்கி எதிர்க்கேள்வி எழுப்புகிற அளவுக்கேனும் உன்னை ஆளாக்கியிருக்கிறேன் என்கிற விதத்தில் ஒரு தகப்பனாகவேனும் நான் ஜெயித்து விட்டேன் என மகிழ்ச்சி கொள்கிறேன். என் மீது நீ எழுப்பிய கேள்விகளை உன் மகன் உன் மீது எழுப்ப இடம் தராதேதோற்றுப்போன உனது அப்பனையும் முன் மாதிரியாகக் கொள்இது போல் வாழக்கூடாது என்பதற்காக
வாழ்க நீ எம்மான்
                        இப்படிக்கு

                        உன் தோற்றுப்போன தகப்பன்