Friday, 6 May 2016

தந்தை போட்டிச் சிறுகதை - 6

Rate this posting:
{[['']]}
"பரசுராமின் குவாட்டர் பாட்டில்"

அது ஒரு காடு. அக்காட்டில் பருந்துகளும், ஆந்தைக் கூட்டமும் ஒருசேர அந்த நள்ளிரவில், ஒரு திருமண விழா ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. அந்த விழாவினைச் சிறப்பிக்க பல்வேறு இடங்களிலிருந்தும், மாநிலங்களிலிருந்து, பரதேசத்திலிருந்தும் சிற்றெறும்பு முதல் பெரிய டைனோசர் வரை, இவ்விழாவிற்கு அழைப்பு விடப்பட்டிருந்தது.

இது ஒரு காதல் திருமணம்; அதுவும் கலப்புத் திருமணமென்பதால், இத்திருமணத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவே ஒரு கூட்டம் அப்பகுதியை முற்றுகையிட்டது. மற்றொரு புறம் திருமணத்தை ஆதரிக்கவே ஒரு கூட்டம் தங்களுடைய கோஷத்தை எழுப்பிய வண்ணமிருந்தது. இவ்விழாவிற்கு முக்கியத் தலைமைப் பொறுப்பை ஏற்க சிங்கராஜா காரிலிருந்து கூட்டத்தைக் கிழித்துக் கொண்டு வருவதைப் பார்த்து, அவரை கெளரவிக்கும் வகையில் பிரத்தேக சிவப்புக் கம்பளம் போடப்பட்டது. அதில், சிங்கராஜா வீர நடைபோட்டபடி மணமக்களை நெருங்குகிறார். அவரின் துணைவியோ, விதவிதமான வண்ணங்கள் அப்பிய சீலையை உடுத்திக்கொண்டு, அதற்கு எடுப்பானத் தங்க நகைகளை அணிந்து, சிங்கராஜாவுடன் கைக்கோர்த்து வருவதைக் கண்ட மற்றவர்கள் சிலையாகி போனார்கள்.

மணமக்களாக, மணமேடையில் வீற்றிருக்கும் மண்புழுவிற்கும், பூராணுக்கும் வாழ்த்துக்களை பரிசுகள் மூலம் சிங்கராஜா தெரிவித்ததையடுத்து, தானும் பரிசு தர வேண்டுமென்ற முனைப்புடன் அவர்களின் கன்னங்களில் முத்தமிட்ட ராணியைப் பார்த்து உறும்பினார் சிங்கராஜா. இதைக் கண்ட மற்றவர்களும் அப்படியே மணமக்களை வாழ்த்தவே, மண்புழுவிற்கு கோபம் கொந்தளித்து, தன்னுடைய இணையை அழைத்துக்கொண்டு வேறொரு இடத்திற்குப் புலம்பெயர்ந்தது.

காலை மலர்ந்தது. மணமக்களை வாழ்த்த வந்தவர்கள் அவரவர்களின் இருப்பிடத்திற்கு திரும்பிக் கொண்டிருந்தனர். ஆனால், தம்பதிகளின் நெருங்கிய உறவினர்கள் மட்டும் மதிய உணவினை முடித்துவிட்டுப் போக எண்ணியிருந்தனர். இதற்கிடையில், மணமக்களுக்கு வழங்கிய பல்வேறு பரிசு பொருட்களும், வாழ்த்துக் கடிதங்களும், பண முடிப்புகளும் அவைகளுக்கேயான பைகளில் ரொப்பிய வண்ணமிருந்தன. அவற்றை ஒவ்வொன்றாக மணமக்கள் பிரித்துப் பார்த்துக் கொண்டிருந்தனர். தன்னுடைய மனைவியின் சொல்லைத் தட்டாத மண்புழு, முதலில் சிங்கராஜா கொடுத்த பரிசினைப் பிரித்தது. அதில், ஒரு கடிதம் இருந்தது. அக்கடிதத்தில்...!? 

"அப்படி என்ன இருக்கும். ரெண்டுபேரும் காலம் முழுக்க சந்தோஷமா இருக்கணும். ஒருத்தர் ஒருத்தர் விட்டுக் கொடுத்து போகணும். வாழ்க்கைய சிக்கனமா வாழணும். எப்போதும் மற்றவர் முன் தன் மனைவியை மட்டம் தட்டக் கூடாது. புருஷன் வேலைக்கு போகலைனா பொண்டாட்டிய வேலைக்கு அனுப்பி கஷ்ட்டப் படுத்தக்கூடாது”. 

“குடி” குடியைக் கெடுக்கும். அதனால், குடித்துவிட்டு அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடம் சண்டை வாங்க கூடாது. குடி போதையில் தன் மனைவியையும், பிள்ளைங்களையும் அடிக்கக் கூடாது. தகாத வார்த்தைகளால் பிறர் மனம் புண்படும்படி பேசக் கூடாது. இதுபோல அக்கடிதத்தில் இருக்குமா?” என்று தோட்டத்தின் குழாய்க்கடியில் போட்டு வைத்திருந்த, பத்துப் பாத்திரங்களைக் கழுவியவாறே வேல்விழி முணறுவதைக் கேட்ட சுந்தருக்கு, என்னமோ போல இருந்தது.

“இன்னக்கி கத இதோட போதும். இருட்டிடுச்சி. உங்க அம்மா தேடபோறாங்க. இப்பவே பாரு சதுர்வேதிக்கு தூக்கம் சொக்குது. கூடவே கொசு கடி வேற.. ஸோ நாளைக்கு நைட்டு வாங்க மிச்சத்த சொல்றேனு” ஆர்வமுடன் கதைக் கேட்டுக் கொண்டிருந்தவர்களைப் பார்த்தான். பசங்களுக்கு கதை முழுவதும் கேட்கவில்லை என்கிற குறை அவர்களின் முகத்தில் தெரிந்ததை உணர்ந்தவன், தனது பேகினுள் வைத்திருந்த மிட்டாயிகளை தினேஷுக்கும், சுலேச்சனாவுக்கும், ஸ்வாதிக்கும், சதுர்வேதிக்கும், ஆளுக்கொரு மிட்டாயிகளைக் கொடுத்து, அவரவர்களின் வீட்டிற்கு அனுப்பி வைத்தான் சுந்தர்.


2

“ஏம்மா இப்படி உயிர வாங்கற. எப்ப பாத்தாலும் பொலம்பிகிட்டே இருக்க? கத நல்லா போயிட்டு இருந்துச்சு. குறுக்கல வந்து கெடுத்துட்ட. உனக்கு என்ன தெரியும்? அந்த அண்ண கத எப்படி சூப்பரா சொல்றாரு பாத்தியா? நீ இதுவரைக்கும் இதுபோல டிஃப்ரண்டா எதாவது சொல்லிருக்கியா? வேல்விழி நாயி… சொல்லுடினு” தினேஷ் வார்த்தைகளால் பொறிந்து தள்ள,

“ஆமா.. அண்ண சொல்றது கரைட்டுதான். நீ மொணறினது எங்களுக்கு கேட்டுச்சி. அதனால தான் சுந்தர் அண்ணா கத இதோட போதும்னு சொல்லிட்டாரு” குறுக்கிட்டாள் சுலோச்சனா.

“போடி.. இனிமே எங்ககிட்ட பேசாதனு” குரலெழுப்பிபடி தன் அம்மாவான வேல்விழியை அடிக்க ஓடினான் தினேஷ்.

“ஆய்.. ஆய்.. தொடப்ப கட்ட பிஞ்சிடும் ரெண்டுபேருக்கும். இப்ப நா என்ன பண்ணிட்டன். எதுக்கு இப்படி என்ன அடிக்க வர. நம்ம குடும்ப கூத்த நினைச்சி பொலம்பிகிட்டு இருக்கிறன். கஷ்டத்த நெனச்சி பொலம்பரத்துக்கூட எனக்கு இந்த வீட்டுல உரிமையில்லையா?”

“அடி செருப்பால.. தம்பிக்கு கை ரொம்ப தான் நீளுது. தெனமும் துண்றதுக்கு புண்டம் செய்ஞ்சி போடறனே என்ன சொல்லனும். அடுத்த வேள சோத்துக்கு என்ன பண்றதுன்னு தெரியாம முழுச்சிகிட்டு இருக்கன். அந்த ஆள நம்பி உன்ன பிரைவேட் ஸ்கூல்ல சேத்தது தப்பா போச்சி. இப்ப அதுக்கு பணம் கட்ட முடியாம ஒரு வட்டி, ரெண்டு வட்டி, மூணு வட்டினு கடனுக்கு பணம் வாங்கி, வட்டியும் கட்ட முடியாம,அசலையும் கட்ட முடியாம அவஸ்த பட்டுகிட்டு இருக்கன். நீ என்னானா பெத்த தாயினு பாக்காம என்ன அடிக்க வர..?”

“இந்த ரோஷத்த படிப்புல காட்டலாம்ல…” என்று வேல்விழி கடுகடுத்தக் குரலில் பேசியதைக் கேட்ட தினேஷ் வாயடைத்துப் போய் நின்றான்.

“பின்ன அவள போல, நீ ஒழுங்கா கவுர்மெண்ட் ஸ்கூல்ல படிச்சி இருந்தா இந்த வென தேவையா எனக்கு? இப்ப யாரு படரது. நான் தான் விதியேனு நெனைச்சிகிட்டு, ஆசிரமத்துக்கும், சொல்தா வீட்டுக்கும் பத்துப் பாத்திரம் தேய்க்கறதும், துணிய துவைக்கறதுமா இருந்து, அங்க குடுக்கறத வச்சி, வீட்டுக்கும், உங்களுக்கும் சொகமா வாயிக்கு வாயி சமைச்சி போட்டு, குடும்பத்த காப்பாத்தறதே எனக்கு பெரிய ரோதனையா இருக்குது. இதுல உங்கப்பன் வேற.. கொஞ்ச இருந்த காசையும் புடிங்கி தண்ணி அடிக்க போயிடுவான். நான் என்ன பண்ணவன்? வயித்த காயப் போட்டிருந்தா தான் என் அருமை உங்களுக்கு புரியும்” என்று தன் மனபாரத்தை பிள்ளைகளிடம் எடுத்துக்கூறினாள் வேல்விழி. பிள்ளைகள் இருவரும் ஏதோ பெரிய குற்றம் செய்து மாட்டிக் கொண்டதுபோல், தலையை கீழே தொங்கப்போட்டனர்.

“அது வெறும் கத தானே? ரொம்ப தான் ஓவரா துள்ரிங்க. நம்ம கதையே இங்க நாறிட்டு இருக்கு. அத பத்தி உங்களுக்கு தெரிதா? இந்த குடும்பத்துக்கு மாடா ஒழைக்கறனே… என் கஷ்ட்டம் யாருக்கு தெரியும்? எனக்குன்னு யாரு இருக்கா?” என்று வேல்விழி அழத் தொடங்கி விட்டாள்.

“உங்க அப்பன நம்பி, என்ன கட்டி வச்சான் எங்க அப்பன். இப்ப அவனுக்கும் சேத்துதான் நான் ஒழைக்க வேண்டியாதா இருக்கு. கல்யாண ஆன பெறகு தான் எங்களுக்கு தெரியும் உங்கப்பன் குடிகாரன்; அதுவும் மொடாக் குடிகாரனு. எங்க அம்மா அப்பவே சொல்லுச்சி.. இவன நம்பாத.. உன்ன நடு ரோட்டுல கொண்டு வந்து விட்டுடுவானு.. அது வாய்சொல்லு, இப்ப அதுதான் எனக்கு நடந்துட்டு இருக்கு”.

“ஏண்டா.. பொட்டப்புள்ள இருக்கும்போது கட்டின பொண்டாட்டிய இப்படி அடிக்கிறியே… நீ ஆம்பளையானு.. எங்கப்பன் கேட்டத்துக்கு, தெருவுல கடந்த செங்கல்ல எடுத்து மண்டைய ஒடைச்சிட்டான் உங்க அப்பன். என் அப்பனு பாக்க வேணாம். கொஞ்சம் மரியாதைக்கு மாமனாருனு பாக்கலாம்ல. அன்னைக்கு கோவத்தோடு போனவன் தான் என் அப்பன். அதுக்கப்பறம் நல்லதுக்கு, கெட்டதுக்கு மட்டும் தலை நீட்டுவாரு உங்க தாத்தா. என்ன பண்றது.. உங்க அப்பனோட நடத்த அப்படி? என் ஆத்தா இருந்தா இப்படி என்ன கண்கலங்க விட்டிருக்குமா? எல்லாம் என் தலையெழுத்து.. இதுல இன்னொரு கதய வேற கேட்குதா உங்களுக்கு. நாளைக்கு இப்படி உங்களுக்கும் நடக்க கூடாதுனுதான், இந்த குடும்பத்துக்காக நாயா ஒழைக்கறன்”.

“வீட்டு ஆம்பளைனா ஒழுங்கா வேலைக்கு போயி குடும்பத்த காப்பாத்தணும். அதுக்கு அந்த ஆளுக்கு வக்கில்ல. சதா நேரமும் குடிச்சிட்டு அக்கம் பக்கத்துல சண்ட வாங்கறதும், என்ன அடிக்கறதும் தான் வேல அந்த ஆளுக்கு. இதுல எனக்குன்னு என்ன சொகம் இருக்கு. சோகம் தான் இருக்கு. இந்த ஆளுக்கு பொண்டாட்டியா வாய்க்கனும்னு இருக்கு. நாளெழுத்து படிச்சிருந்தா நான் ஏன் இங்க வந்து, இந்த ஆளுக்கூட வாக்கப்பட்டு சீரழியனும். இந்த அநியாயம் எங்கையாவது நடக்குமா?” என்று தலையில் கையை வைத்துக்கொண்டு, சுவரோடு சுவராகச் சாய்ந்தவளைப் பார்த்த சுலோச்சனா,

“அழுவாதமா.. அழுவாதமா..” என்று அவளும் அழத் தொடங்கிவிட்டாள். வேல்விழியின் கன்னங்கள் சிவந்து தாடையில் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. அதை தன்னுடைய முந்தானையில் துடைத்தப்படியே வெளியே சென்றுவிட்டாள். பிள்ளைகளும் அவரவர் பாட்டுக்கு வெளியே சென்றுவிட்டனர்.

3

இரவு மணி பத்து. இது வேல்விழியின் கணவன் பரசுராம் வரும் நேரம். வந்தவன் சைக்கிளை வீட்டின் சந்தில் போட்டு விட்டு கதவை தட்டினான்.
“வந்துட்டான் குடிகாரன்.. பொட்டபுள்ளய கண்கலங்க விட்டுட்டு, சாமத்துல வந்து கதவ தட்டுது ஊர் பொறுக்கினு” பக்கத்து வீட்டு கிழவி கதவருகே படுத்துக்கொண்டு புலம்புவதைக் கேட்டவன், வேகமாக கதவைத் தட்டினான்.

“வேல்விழி.. வேல்விழி.. அடியே வேல்விழினு” அக்கம் பக்கம் பார்க்காமல் உரத்த கூச்சல் போட்டான். விழுந்தடித்தப்படி ஓடி வந்து கதவைத் திறந்தாள் சுந்தரின் அம்மா. மொரப்புடன் பார்த்துவிட்டு வீட்டினுள் நுழைந்தவன், தனது கைப் பையிலிருந்து குவாட்டர் பாட்டிலை எடுத்தான். சுற்றும் முற்றும் பார்த்தவன் வீட்டில் யாருமில்லாததை அறிந்து டி.வியை ஆன் செய்துவிட்டு, மதுவை அறுந்தினான். அதற்கு தோதுவான சைடீஷ் இல்லாமல் அவனது நாக்கு வறண்டது. நேற்று மீந்துபோன மீன் குழம்பைத் துழாவினான். போதை தலைக்கு ஏற ஏற, காது கிழிய டி.வியின் வாலியுமையும் அதிகரித்தான். அது அவனது கோபத்தின் உச்சத்தைக் காட்டியது.

டி.வி சீரியலில் மும்முரமாக கலந்துவிட்ட அக்கம் பக்க குடும்பத்தாருக்கு இந்த சத்தம் எவ்விதத்திலும் பாதிப்பதை ஏற்படுத்தவில்லை. ஆனால், சுந்தரத்தின் காதை மட்டும் இந்தச் சத்தம் குடைந்து கொண்டேயிருந்தது.தனது ரூமில் படித்துக் கொண்டிருந்தவன் பாதியிலேயே விறு விறுனு எழுந்து, தீனேஷ் வீட்டிற்கு ஓடினான்.
“டாய்.. பொறுக்கி நாய.. தடியா.. தீணி பண்டாரம்.. டி.வியை நிறுத்து டா. நாளைக்கு எனக்கு எக்ஸாம் இருக்கு..” சுந்தரத்திற்கு கோபம் தலைக்கேற.
“இப்ப நா உள்ள வந்தனா.. உன்ன கட்டி வச்சி தோல உறிச்சிடுவன் பாரு.. நா சொன்ன பேச்ச கேட்கல.. நாளைக்கு உனக்கும், உன் தங்கச்சிக்கும் கத சொல்ல மாட்டேன். தருதல.. இவன பெத்தாங்களா செஞ்சாங்களா..” இப்படி காச்சு மூச்சுனு கதவருகே பொலம்பினான் சுந்தர். உள்ளே இருப்பது தினேஷின் அப்பா என்று தெரியாமல். இன்னும் சத்தம் குறைந்தபாடில்லை. சுந்தரத்தின் அம்மா வந்து இங்கு நடப்பதை அறிந்து, 

“ஏம்பா இங்க நிக்கர. அந்த ஆளு பத்திதான் நமக்கு நல்லா தெரியும்ல. வா போகலாம். அப்பா வந்துட்டாருனா அந்த ஆளு அடங்கிடுவான். நாம இருக்கர வரைக்கும் சண்ட சச்சரவு இல்லாம போயிடனும். இதுலலாம் மூக்க நொழச்சா நமக்கு தான் அசிங்கம். நீ படிச்ச புள்ள. இந்த பொல்லாப்பு உனக்கு எதுக்கு. இன்னும் நாளு நாள்ல டெல்லிக்கு போறவன் நீ. எதுக்கு இந்த ஆளோட சண்டித்தனம். வா சாப்ட போலாம்னு” சுந்தரத்தை அழைத்துக் கொண்டு போய்விட்டாள். அப்போதுதான் உள்ளே இருப்பது தினேஷின் அப்பா பரசுராம் என்று அவனுக்கே தெரிய வந்தது.

எதிர் வீட்டு சீத்தாவிடம் தன்னுடைய சோகக் கதையை அவிழ்த்துவிட்டிருந்த வேல்விழிக்கு, கணவன் பத்தின நினைப்பு வந்தது. வீட்டினுள் நுழைந்தாள். வெளியே சைக்கிள் நின்றிருப்பதைப் பார்த்து பதற்றத்துடன் உள்ளே ஓடினாள். தன் வீட்டின் கதவு உள்ளே தாழ்பாள் போடப் பட்டிருந்ததை அறிந்தவள் கதவை தட்டினாள். 

“என்னங்க.. என்னங்க..” என்று குரல் கொடுத்துப் பார்த்தாள். கதவு திறந்தபாடில்லை. “த்த.. த்தா.. என்ன பண்ற உள்ள. கதவ தெற. உரத்தக்குரல் கொடுத்தப்படி, சாவி நுழைக்கும் பொந்தில் கண்களைப் பதிய வைத்து பார்த்தாள். தன் கணவன் கட்டிலில் மல்லாக்கப் படுத்துக்கொண்டு ஏதோயொரு யோசனையில் இருப்பதைக் கண்டு பதறியவள், மீண்டும் கதவை வேகமாக தட்டினாள். சுயநினைவுக்கு வந்தவன் மெல்ல எழுந்து கதவைத் திறந்தான். வேல்விழியை ஏறெட்டு பார்த்துவிட்டு, அமைதியாகபோய் மீண்டும் கட்டிலில் விழுந்தான். 

வேல்விழிக்கு ஆச்சிரியமாக இருந்தது. டிவி ஆஃப்பாகி இருக்கிறது. மனுஷன் பாட்டுக்கு அமைதியாகக் குடித்துவிட்டு படுத்திருக்கிறான். அவனின் அதட்டலுக்கும், ஆர்பரியத்திற்கும் எந்தவித சலனமுமில்லாமல் வீடு அமைதியாக அவனைப் போலவே இருக்கிறது என்கிற சந்தேகம் அவளை ஆட்கொண்டது.
வேல்விழியின் பிள்ளைகளும் வெளியே விளையாடிவிட்டு வீட்டினுள் நுழைந்தனர். “அப்பா.. அப்பா..” என்று கூக்குரலிட்டப்படி, அப்பாவின் கைப் பையை தினேஷும், சுலோச்சனாவும் துழாவினர். அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. எதிர்ப்பார்த்திருந்த திண்பண்டங்கள் எதுவும் இல்லை என்று அறிந்த தினேஷின் முகம் வாடியது. சுலோச்சனாவோ, அழுது புரண்டு,

“எனக்கு துண்றதுக்கு பொட்லம் வேணும். வாங்கி தானு” ஒட்டாரம் பிக்கத் தொடங்கிவிட்டாள். இதைக் கவனித்த வேல்விழி, அவளைச் சமாதனப்படுத்த, முட்டை ஆம்லெட் போட்டுத் தந்தாள். ஆனால், தினேஷை சமாதனப்படுத்த முடியாமல் அவனிடம் தோற்றுப்போனாள்.

“சாருக்கு தெனமும் எதையாவது வாயில போட்டுக் கொரித்துகிட்டே இருக்கனும். இல்லனா தம்பிக்கு சோறு உள்ள இறங்காது போல” – வட்டி காசு வாங்க வந்த சரசு தினேஷை வெடைக்க, வேல்விழிக்கு முகமெல்லாம் கோபத்தில் வியர்த்தது.
இங்க பாருங்க.. ஏம் புள்ளைய வெடைக்கரமாதிரி பேசர வேலைலாம் வச்சிக்காதீங்க. அது உங்களுக்கு நல்லது இல்ல. இந்தா பணத்த புடி. இதோட உனக்கு நா கட்ட வேண்டிய பாக்கியல்லாம் அடைச்சியாச்சினு..வேல்விழி வார்த்தைகளில் திமிர, சரசு வல வலத்துபோய் எதுவும் பேசாமல் வீட்டிலிருந்து வெளியேறினாள்.

சாப்பிடாமல் வெறித்து வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த தினேஷை கடைக்கு அழைத்துக் கொண்டுபோய் அவன் விரும்பும் “கெஜிரா”, “மல்லாட்ட கேக்”, “பப்ஸ்”, “கார பட்டாணினு” திண்பண்டங்களை வேல்விழி வாங்கி கொடுத்தாள். இதுவே நாளடைவில் தொடர் கதையானது. இந்தப் பழக்கம் அவனது அப்பா பரசுராம் மூலம் உண்டானது. அவன் சரக்கு அடிக்கும்போது சைடீஷ்க்கு “மிக்ச்சர்”, “சிப்ஸ்”, “பக்கோடா”, “காராசு”, “போண்டா”, “பஜ்ஜி”, “பானிபூரி”, “பரோட்டா”, “முட்டை கறி”, “ஃபிஷ் கறி”, “சிக்கன் சிக்ஸிட்டி ஃபை”, “சிக்கன் நூடுல்ஸ்”, “சிக்கன் பிரியாணி” என்று விதவிதமாக வாங்கி வந்து, பிள்ளைங்கள் கண் முன்னே வீட்டிலேயே சாப்பிடுவான். தனக்குப் போக, தன் பிள்ளைகளுக்கும் கொடுப்பான். இதுவே நாளடைவில் பிள்ளைகளுக்கு இத்தகையத் திண்பண்டங்கள்மேல் மோகம் அதிகமானது. அதன் விளைவுதான் இது என்று வேல்விழி மனதினுள் எண்ணிக்கொள்வாள்.

போதையின் உச்சத்தில் இருந்தால், வாங்கி வந்தவற்றை பசங்களுக்கு ஊட்டியும் விடுவான். எங்க சரக்கு கூட ஊத்திக் கொடுத்துவிடுவானோ என்று பதறியடித்துக் கொண்டு ஓடி வருவாள் வேல்விழி. தன் கணவன் குடித்து முடிக்கும் வரை அவனுக்கு பேச்சி தொணைக்கு கம்பெனி கொடுப்பாள். பத்து ஆண்டு முன்பு நடந்தது; அவன் கல்யாணத்தில் நடந்தது; போன வாரம் நடந்தது; நேற்று நடந்தது; இன்று காலை நடந்தது; நாளை நடக்க இருப்பது அனைத்தையும் போதை போகும் வரை, கதை கதையாக வேல்விழியிடம் உளரி கொட்டுவான். அவளும் எல்லாத்துக்கும் ஆமா… சரி… இப்ப என்ன? என்று இடையிடையே பதிலுரை வழங்கியவாறே, சோற்றை பிசைந்து வாயினுள் தள்ளுவாள். பேச்சி வாக்கில் வேல்விழியின் குடும்பத்தை வேண்டுமென்றே பரசுராம் குடிபோதையில் இழுப்பான். அன்று அவனிடம் பத்திரகாளியாக மாறி, நர்த்தனம் ஆடிவிடுவாள் வேல்விழி. அதன் பிறகு அழத் தொடங்கிவிடுவாள்.

வேல்விழி பிள்ளைகளுக்கு சோறிட்டாள். மிச்சம் மீதியிருந்த சோற்றையும் இருக்கும் குழம்பினுள் பிசைந்து சாப்பிட்டு கொண்டிருக்கும்போதே கரண்ட் கட் ஆனது. நிலா வெளிச்சத்தைத் தேடி பசங்களுடன் வேல்விழி தோட்டத்தின் கதவைத் திறந்தாள். அங்கு ஒரு ஈச்சர் போடப்பட்டிருந்தது. அந்த கும்மிருட்டில் யாரோ அங்குமிங்கும் உலாவியபடி இருப்பதைக் கண்டு திடுக்கிட்டாள். அது சுந்தரின் உருவம் என்பதை சுதாரித்துக் கொண்டு,ஒரு கையில் சோத்து தட்டையும், மறு கையில் ஈச்சம் பாயையும் எடுத்து வந்தாள். பாயை இரண்டாக மடித்துப் போட்டு, பிள்ளைகளுக்கு சோறு ஊட்டினாள். கொசுவின் தொல்லை தாளாமல், சுலோச்சனாவை கொசு பேட்டை கொண்டு வருமாறு ஆணையிட்டாள். அவளும் அதற்கு கீழ்படிந்து, வீட்டினுள் போய் தேடிப்பார்த்தாள்.

இருட்டில் ஒன்றும் தெரியவில்லை. சிம்னி விளக்கினுள் திரியைத் திருகி, விளக்கேற்றினாள் சுந்தரின் அம்மா. சுந்தருக்கு கண்ணில் தூக்கமில்லை; அது கரண்ட் போனதால் இல்லை. தற்போது என்ன பூபங்கம் வெடிக்கப்போகிறது; என்ன நடக்கப் போகிறது இந்த வீட்டில் என்று புரிந்தும் புரியாமலும், கொஞ்சம் பயத்துடனும் போடப்பட்ட ஈச்சரில் சாய்ந்தான். மனதிலும், வயிற்றிலும் இரைச்சல் சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது. மல்லாக்காக வானத்தைப் பார்த்தான். அது மிகவும் அமைதியாக இருந்தது. அதற்கு பொட்டு வைத்தார்போல், நிலவு அவனது மனதில் ரம்மியச் சூழலை உண்டாக்கியது.

4

புதுச்சேரிப் பிரதேசம். அப்பிரதேத்தைச் சுற்றி பல சுற்றுலா தலங்கள். பல மாநிலத்தினரும், பல இனத்தாரும், பல மொழியினரும் வசிக்கும் ஓர் சிறிய மாநிலப்பகுதி. அப்பகுதியை ஒட்டிய, முத்தியால்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட, வன்னியர் வீதி, நடுத்தெருவில் உள்ள ஓர் நூறு ஆண்டுகால பழமை வாய்ந்த ஓட்டு வீட்டினுள் சுந்தரும் அவனது குடும்பமும், ஆறாவது முறையாக வாடகைக்கு குடிபோகிறது.

அந்த வீட்டில், மற்றொரு குடும்பம்; அது வேல்விழியின் குடும்பம். சுந்தரின் அப்பா ராமு, வேல்விழி நமக்கு தூரத்து உறவு. அவளது அப்பா எனக்கு அண்ணன் முறை வேண்டும். “அவங்களும் நம்பலவங்க தான்” என்று தனது மனைவியிடம் பேசிக் கொண்டிருப்பதை அவர்களின் பிள்ளைகளான சுந்தரும், அவனது தங்கை சாந்தியும் கேட்டனர்.

பால் காச அழைத்தப்போது தான். சுந்தர் வேல்விழியின் குடும்பத்தைப் பார்த்தான். சாப்பிட்டுக் கொண்டிருந்தவள் எழுந்து, அவனுக்கு தன்னுடைய குடும்பத்தை அறிமுகப் படுத்தினாள்.

வேல்விழி (எ) கனிமொழிக்கு இரண்டு பிள்ளைகள். தினேஷுக்கு 12 வயது; சுலோச்சனாவுக்கு 9 வயது. இருவரில் சுலோச்சனா மட்டும் படிப்பில் சுட்டி. தன்னுடைய அண்ணனை விட்டுக்கொடுக்காத தங்கை. அதனாலேயே,தன்னுடைய அண்ணனை “தினே.. தினேனு” பாசமாகத்தான் கூப்பிடுவாள்.
இவளுக்கு நேரெதிர், அவளது அண்ணன் தினேஷ். வீட்டில் அடங்காத வாலு. படிப்பில் மக்கு. அடிக்கடி இவன் அம்மா ஸ்கூலுக்கு போவதும், வருவதுமாக இருப்பாள். தினமும் ஏதாவது பிரச்சனையைக் கிளப்புவனாக தினேஷ் இருப்பான். தன்னுடன் படிக்கும் பசங்களை அடிப்பதும், நோட், புக்ஸ், பேனா, காசு திருடுவதுமாக இருப்பான். இதனால், அரசு பள்ளியிலிருந்து தனியார் பள்ளிக்கு தினேஷை அடிக்கடி மாற்றுவதுமாக வேல்விழி இருப்பாள். அதனால், அவன் ஒத்த வயதுள்ள பிள்ளைகளோடு படிப்பது இல்லாமல் இருந்து வந்தது.

ஒரு முறை தெருவில் விளையாடிக் கொண்டிருந்த, எதிர் வீட்டு பெண் பிள்ளையிடம் ‘ஐ லவ் யூனு’ சொல்லிட்டான். அந்த பொண்ணு அழுதுகிட்டே அவள் அம்மாவிடம் தெரிவிக்கவே, வீடே ரெண்டானது. அதனால்,யாரும் இவன் வீட்டுக்கு வர மாட்டார்கள்; இவனையும் யாரும் வீட்டில் சேர்க்க மாட்டார்கள். இதனால் பல சமயங்களில் தன் பிள்ளையை நினைத்து மனம் கலங்கி, கூனிக் குறுகிபோவாள் வேல்விழி. அதன் விளைவு வீடு மாற்றலாகி, இப்போது மூன்று மாத காலமாக இந்த வீட்டில் வசித்துக் கொண்டிருக்கிறது வேல்விழியின் குடும்பம்.

வேல்விழி பத்தாவது வரை படித்திருக்கிறாள். ஓரளவு குடும்பத்தைச் சரிக்கட்டி நடத்தி வருகிறாள். இவளது கணவன் பரசுராம் வேல்விழிக்கு இரண்டாம் தாரம். முதல் கணவன் அல்பாய்ஸில் போனதால் வேறு வழியின்றி, தனது அப்பாவின் மூலம் அமைந்த இவனிடம் தாலி கட்டிக்கொண்டாள்.
பரசுராம் கூலித் தொழிலாளி. ஆனால், பெரும்பாலும் கொளுத்து வேலையைதான் செய்வான்; படிக்காதவன். அரசியலில் ஈடுபாடு உடையவன். குடிகாரன். தினமும் குடிப்பான். போதையில் தன்னுடைய மனைவியை கம்பெனி கொடுக்கச் சொல்லி அடிப்பான். ஒருமுறை இதனை தட்டிக் கேட்ட வேல்விழியின் அம்மாவிற்கு ஹட்டாக்காகி, ஒரேடியாகப் படுத்துவிட்டாள். தன் அம்மா கூட இல்லாதது, அவளுக்கு ஒரு கை ஒடிந்ததுபோல் இருந்தது. தன்னுடைய வாழ்க்கை இப்படி நிலை குலைந்து போய்விட்டதே என்று அவள் வேலைப் பார்க்கும் இடங்களில் அடிக்கடி வேல்விழி புலம்புவாள்.

இரு குடும்பமும் ஒன்றானது. வேல்விழியின் பேச்சி துணைக்கு சுந்தரத்தின் அம்மா இருந்தாள்; பேச்சிக்கு மட்டுமல்ல, எல்லா உதவிக்கும் தயக்கமின்றி கேட்டுப் பெறுபவளாக வேல்விழி இருந்தாள். அவளது பிள்ளைகளும் சுந்தரத்தின் வீட்டில் விளையாடுவதும், சாப்பிடுவதும், டி.வி பார்ப்பதுமாக இருப்பார்கள். சுந்தருக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம், இரு பசங்களுக்கு டியூஷன் எடுப்பான். இதைக் கண்ட மற்ற வெளிப் பசங்களும் சுந்தரின் வீட்டினுள் புழங்கும். இப்படியே இரண்டு ஆண்டுகள் ஓடியது.

பலவிதமான கற்பனைக் கதைகளை அவ்வபோது பசங்களுக்கு சுந்தர் சொல்லி வந்தான். அவர்களும் தன்னுடன் படிக்கும் நண்பர்களிடம் சொல்லி பெயர் வாங்கிவிடுவர். சுந்தருக்கு நேரம் கிடைக்கும் போது “கோலி குண்டு”, “கோட்டி புல்லு”, “கேரம் போர்டு”, “சீட்டு கட்டு”, “பேட் பால்” என்பன விளையாடுவதுமாக சுந்தர் தன்னுடைய பொழுதை அப்பசங்களுடன் கழிப்பான்.

தினேஷும், சுலோச்சனாவும் தப்பு பண்ணிட்டு இவனிடம் திட்டும், அடியும் வாங்குவார்கள். அதையெல்லாம் கண்டுகாதவளாக வேல்விழி இருப்பாள். ஒருமுறை, சுந்தரின் அப்பா ராமுவை, “போடா” என்று சொன்னதற்கு தினேஷிற்கு முதுகில் பலத்த பூசை விழுந்தது. இதைத் தொடர்ந்து, அவன் செய்யும் தப்புகளை கண்டித்தவனாக சுந்தர் இருந்து வந்தான். இந்தக் கண்டிப்பு தினேஷின் அப்பா பரசுராமுக்கும் தொடர்ந்தது. ‘குடிப்பது தவறு; அதனால் ஏற்படும் விளைவு குடிப்பவருக்கு மட்டுமல்ல; அவரைச் சார்ந்தவருக்கும் ஏற்படும்’ என்று பலமுறை அறிவுரை கூறுவான். குடிகாரன் பேச்சி; விடிந்தா போச்சினு பரசுராம் இருப்பான். இருப்பினும் வேல்விழி அக்காவை நினைத்துப் பார்த்து ஆசுவாசமடைவான் சுந்தர்.

சுந்தரிடம் மட்டும், தினேஷும் அவனது தங்கை சுலோச்சனாவும் குழைவார்கள். அது பயம் கலந்த குழைதல் என்று போக போக சுந்தரும், வேல்விழியும் புரிந்து கொண்டனர். அதனால் பிள்ளைகள் அடங்கவில்லையென்றால், சுந்தரை கூப்பிட்டு மெரட்டச் சொல்வாள். முதலில் வாய்ப்பேச்சில் இருந்தது. பிறகு சுந்தர் பசங்களை உதைக்கும் அளவிற்கு கொண்டு சென்றுவிட்டாள் வேல்விழி. அதனால், வேல்விழிக்கு ஒரு பக்கம் நிம்மதி இருந்தாலும், மறு பக்கம் உள்ளூர வலித்தது.

வேல்விழியின் தகப்பனாரிடம் பிள்ளைகள் மிகவும் பாசமாக இருப்பார்கள். “வேலு தாத்தா.. வேலு தாத்தா..” என்று பிள்ளைகள் குஷியாகி, அவரிடம் பணத்தைக் கறந்துவிடுவார்கள். வந்தவரும் சும்மா இருக்காமல்,வரும்போதும் போகும்போதும் பேரப் பசங்களிடம் காசு கொடுத்துவிட்டுத்தான் போவார். இதுவே, தீபாவளி, பொங்கல் என்றால், தனி கவனிப்பு பிள்ளைகளிடம் காட்டுவார். பிள்ளைகளும் அதைத்தான் எதிர்ப்பார்க்கும் என்று தன்னைத்தானே சமாதனப்படுத்திக் கொள்வார். இதன் விளைவு வீட்டிற்கு வருபவரிடம் பத்து, இருபது என்று தினேஷ் பணத்தைக் கறக்கப் பார்ப்பான். இந்த இடிபாடுகளில் சிக்குபவள், வேல்விழியாகத்தான் பெரும்பாலும் இருப்பாள்.

சில சமயங்களில் விடியற்காலையிலேயே வேல்விழியின் தகப்பனார் வேலு (எ) வெற்றிவேல், தங்களின் பேரப் பசங்களையும், தன் மகள் வேல்விழியையும் பார்க்க வரும்போது “கரி”, “மீன்”, “கனவா”, “நண்டு” போன்ற அசைவ உணவோடும், தன்னுடைய வீட்டில் காய்த்த “மாங்காய்கள்”, “பலா பழங்கள்”, “முருங்கை”, “வாழைப்பூ” போன்ற சைவ உணவு வகைகளையும் கொண்டு வருவார். இதையெல்லாம் பரசுராமன் ஏதும் கண்டுகொள்வதில்லை.

“தெண்டச்சோறு.. பொண்டாட்டி, புள்ளைங்களுக்கு வாய்க்கு ருசியா எதாவது வாங்கி குடுத்தானா இவன். பேருக்கு தான் ஆம்பள. வீட்டு பொறுப்புலாம் எம் பொண்ணுதான் பாக்குது. அதுக்கு இவன் பொடவ கட்டி திரியலாம் வீட்டுல” என்று வேல்விழியின் தகப்பனார் பரசுராம் காதுபட சொன்னாலும், பரசுராமுக்கு கோபம் வருவதில்லை. இந்தக் கூத்தையெல்லாம், பக்கத்து வீட்டில் இருக்கும் சுந்தரின் அம்மா, அவளது மகள் சாந்திடம் அடிக்கடிப் பேசுவதுண்டு.

6

“அடி.. புண்ட.. தேவடியா பையன்.. யாருகிட்ட வந்து என்ன பேசரான்.. என்று சத்தத்தில் பரசுராம் குரல் கவ்வ.. தனது அப்பாவை கண்ட சுலோச்சனா அரண்டுவிட்டாள். கொசு பேட்டை தேடி வந்தவளுக்கு, இப்போது அம்மாவைத் தேடி தோட்டத்தினுள் ஓடினாள். அந்த சத்தத்தில் சுந்தர் விழித்துவிட்டான். தான் நினைத்தது நடந்துவிட்டது என்று பயந்து தன் வீட்டினுள் ஓடி ஒளியப் பார்த்தான். அதற்கு முன்பாக, அவனது அம்மா அவனை தடுத்தாள். வேல்விழியும் என்னவென்று புரியாதவளாய் தன்னுடைய கணவனை சமாதானப்படுத்த உள் நுழைந்தாள். அதற்குள் கரண்டும் வந்துவிட்டது

முகம் பேயரைந்த படி, உடல் முழுவதும் வியர்வையால் குளித்த படி இருந்த பரசுராம்,

“அந்த கெழ கூதி.. என்ன என்னனு கேக்குது. இந்த பூலு என்னனா என்ன பொறுக்கி.. நாய.. தீணி பண்டாரமுனு கேட்கரான். நா என்ன தெருவுல போற பொறுக்கியா. சாவ அடிச்சுடுவன். யாருனு பாக்கமாட்டன்.வீட்ட கொளுத்திபுடுவன் பாத்துக்க..” என்று குடி போதையில் தள்ளாடியவனை வேல்விழி இழுக்கப்போய் கன்னத்தில் அறை விழுந்தது. இதை கவனித்த சுந்தருக்கு மனம் வலித்தது. தினேஷ் சோத்து தட்டை ஒரு கையில்வைத்துக்கொண்டு, தனது அப்பாவின் லுங்கியை மறு கையால் இழுத்தான். எந்த அசைவுக்கும் மசியாதவன்,

“டெல்லில படிக்கரானாம்.. இந்த பூலுலாம் என்ன கேள்வி கேட்குதுனு.. உன்ன சொல்லனும்டினு, மீண்டும் வேல்விழியை அறைந்தான். அசந்து தூங்கி கொண்டிருந்த சுந்தரின் அப்பா, திடுக்கிட்டு தன் குடும்பத்தை இப்படி மட்டும் மரியாதை இல்லாமல் பேசியவனை அடிக்க ஓடினார். இதைக் கண்ட சுந்தருக்கு உடல் உதறியது. இருவரும் கைகளப்பில் மோதியதும், அக்கம் பக்கத்தினர் அனைவரும் வீட்டினுள் நுழைந்து, சண்டையை விளக்கினர். சிறிது நேரம் அந்த வீடே போர்களமாகக் காணப்பட்டது. சுந்தரின் அம்மாவோ ஒரு மூலையில் அழுந்து கொண்டிருந்தாள். சாந்தி அவளுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தாள்.

இரு குடும்பத்திற்கும் சிறு சிறு சண்டை அவ்வபோது வரும். அது ஒரு நாளோ, ஒரு வாரமோ அடங்கிவிடும். இந்தப் பிரச்சனை ராமுவிற்கு பசு மரத்தாணி போல் மனதில் பந்திந்து விட்டது. தனக்கு முன்பு தலை குனிந்து போனவன், என்னையே தலை குனியும் படி பேசுவான் என்று கனவிலும் நினைக்காத ராமுவிற்கு, அன்றைய பொழுது முதல் கடந்து வந்த மாதங்கள் வரை தூக்கமில்லை. இதற்கிடையில் தனது மனைவி பாத்ரூமில் வழுக்கி ஒரு கை முடமான போதுதான் ஒரு முடிவுக்கு வந்தான். அது வேறு வீடு பார்க்க வேண்டும் என்கிற தீர்க்கமான முடிவு. சுந்தருக்கோ மனதில் ஒருவித குற்றவுணர்வு புகுந்து கொண்டது. மனமில்லாமல் அந்த வீட்டை விட்டு அனைவரும் வெளியேறினர்.

7

வருடங்கள் ஓடின. வேல்விழி குடும்பம் அதே வீட்டில் இருந்தது. பக்கத்து வீட்டில் புதிதாக திருமணமானவர்கள் குடிப்போக ஆயத்தமாக இருந்தனர். அதற்கான வேலைபாடுகள் அவ்வீட்டில் நடந்தேறின. ஸ்கூல் விட்டு வந்த தினேஷ் ஒரு மார்க்கமாக இருந்தான். அவன் கூட படிக்கும் ரஞ்சித் அவனை கைத்தாளபடி அழைத்துக் கொண்டு வீட்டில் விட்டதை, அவனது தங்கை சுலோச்சனா, வேல்விழியிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்.

‘இனிமே ஸ்கூலுக்கு தினேஷை அனுப்ப வேண்டாம். அவனை ஏதாவது ஒரு ஹோம்க்கு அனுப்புங்க. இந்த வயசுலேயே தண்ணி, சிகரெட்டு குடிக்கரான். கிளாஸ் பொண்ணுங்களிடம் சீன் படம் காட்டி, தவறாக நடக்க முயற்சி பண்ணியதால் இவன் பெயரில் இரண்டு பெண்கள் புகார் கொடுத்திருக்கிறார்கள். ஸோ.. உங்க பையனால் எங்க ஸ்கூலுக்கு கெட்டபேரு. தயவு செய்து, உங்க பிள்ளையோட டிசியை வாங்கிட்டு போங்கனு’ ரஞ்சித் கொடுத்துவிட்டு போன அந்த லெட்டரில் இருந்ததை, சுலோச்சனா வேல்விழியிடம் படித்துக்காட்டினாள்.

வேல்விழி மனம் முழுக்க குற்றவுணர்வில் சிறைபிடிக்க. வழக்கம்போல் பரசுராம் குவாட்டர் பாட்டிலை திறந்தபடி வீட்டினுள் அமர்ந்தான். “எனக்கும் கொஞ்சம் ஊத்துய்யானு” வேல்விழி கேட்க, புத்தி தடுமாறி நிமிர்ந்தவன்,என்னவென்று தன் மனைவியை வினவினான். மனம் கருகியது, அவள் முகத்தில் தெளிவாகத் தெரிந்தது. பரசுராம் கேள்விக்கு விடையாக, போல பொலவென்று அவளது கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாக வழிந்து கொண்டிருந்தது.

“என்ன வேல்விழி.. என்னமா.. என்ன ஆச்சினு” பதறியவனை பார்த்தாள் சுலோச்சனா.

“எல்லாம் உன்னால தான் பா.. அண்ணன இனி ஸ்கூலுக்கு வர வேண்டாம்னு டீச்சர் சொல்லிட்டாங்க. அவனும் உன்ன போல குடிகாரனு பேரெடுத்துட்டான். இப்போது உனக்கு சந்தோஷம் தானே..” என்று சுலோச்சனா வெடித்தாள்.

“உனக்கு அடுத்த வாரிசு பொறந்தாச்சினு குமுறிக் குமுறி அழுத வேல்விழியை சமாதனப்படுத்த முயன்றவன் தன் தோல்வியை ஒப்புக்கொண்டு, தன் முன் வைத்திருந்த குவாட்டர் பாட்டிலை எடுத்து குப்பைத் தொட்டியில் போட்டவனுக்கு, தன்னை அறியாமல் தன் மனதில் குப்பை சேர்ந்ததை நினைத்து வருந்தினான்.


(குறிப்பு: தவிர்க்க முடியாதபடி கதை ஓட்டத்தில் அநாகரிகமான சொற்கள் கலக்க வேண்டியதாகி விட்டது. பொறுத்தருள்க) கதையாசிரியர்