Monday, 30 May 2016

தந்தை போட்டிச் சிறுகதை - 24

Rate this posting:
{[['']]}
தந்தைக்கு - ம.. த.. 

மூன்று விளக்குகளில் மஞ்சள் நிறம் மட்டும் விட்டு விட்டு எரிந்துகொண்டிருந்தது. இருள் சூழ்ந்திருக்க, சாலையோர விளக்கின் மஞ்சள் சுடரொளியில் கொசுக்கள் களியாட்டமிட்டுக்கொண்டிருந்தன. பயமுறுத்தும் இருட்டும், நிசப்தமும் அந்த இடம் முழுக்க  பரவியிருந்தது. நிசப்தத்தை பகிரங்கமாக துளைத்து அதனுள் ஊடுருவி சென்றது விபத்தின் சப்தம். தூக்கம் கலைந்தவராய், அமைதியாக எழுந்து நின்றார் தந்தை. அவரது காலடியில் ஒரு ஐந்நூறு ரூபாய் காகிதம் காற்றில் துடிக்க, ஒரு நிமிடம் அதை உற்று பார்த்தார். துடிக்கும் பணத்தை, இதயத்திற்கு அருகே வைத்து, தன் கையால் இறுக்கிப்புடிக்க எண்ணினார். ஆனால், ஒரு கதறல் சப்தம் அவரது எண்ணத்தை மாற்றி, அவரை ஓட வைத்தது. ஒரு கார், தலைகீழாக கவிழ்ந்து கிடக்க அதனுள்ளே மூன்று பேர் கதறிக்கொண்டிருந்தார்கள்.
----
2 நாட்களுக்கு முன்பு,                         [48 மணி நேரம்]
    “தோரணம் கட்டியாச்சு, நம்ம மகளுக்கு புடிச்ச ப்ளாக் ஃபாரஸ்ட் ஐஸ் கிரீம் கேக் தயார். பக்கத்துவீட்டுக்காரங்க, நண்பர்கள்ல வந்துட்டு இருக்காங்க. இன்னைக்கு நம்ம மகளோட பிறந்தநாள் விழாவ ரொம்ப சிறப்பா கொண்டாடனும்.” 

தந்தை பேசுவதை கேட்டு சிரித்தாள் அவரது மனைவி. அவளது சிரிப்பை உணர்ந்தவராய் அவளருகே சென்று, அவள் நெற்றியில் முத்தமிட்டு “நீயும், மகளும் தாண்டி என் உலகமே” என்றார்.

தந்தையின் தொலைபேசி அலற,

“ஹலோ”…
“வந்துடீங்களா?”...
“இதோ வந்துட்டேன்”...

    “எல்லாரும் ஒவ்வொருத்தவங்களா வர ஆரம்பிக்கிறாங்க. நான் போய் பலூன் கட்றேன்” என்றார் தந்தை.

தந்தையோட குழந்தைத்தனத்தை பார்த்து நெகிழ்ந்துபோனாள் அவரது மனைவி. அத்தருணத்தில் தந்தை அவ்வளவு அழகாக தெரிந்தார். அவரை முதன்முதலில் பார்த்தது போல் இருந்தது அவரது மனைவிக்கு. “எல்லாமே தயாரா இருக்குதா” என்றார் தந்தை மனைவியிடம். 

மகள் உள்ளே நுழைந்தவுடன், 

“ஹாப்பி பர்த்டே” 

“அப்பா...”

“அப்பாகிட்ட வாமா, என் செல்லம்...”

தோரணம், கேக்கை பார்த்து, ஆச்சர்யத்தின் உச்சத்தில், தந்தையை கட்டி அணைக்க ஓட்டம் எடுத்தாள் மகள்.

மகளை தழுவ, மண்டியிட்டு, கைகளை விரித்து காத்திருந்தார் தந்தை. அனால், மகள் எவ்வளவு வேகமாக ஓடி வந்தாலும், அவளால் தந்தையை நெருங்கமுடியவில்லை. நின்ற இடத்திலேயே ஓடிக்கொண்டிருந்தாள்.  அதை அறிந்து அவள், “அப்ப்பா” என்று கத்த, பதறிப்போய் தூக்கத்தில் இருந்து எழுந்தார் தந்தை.

    அவரது நிலைமையை அவருக்கு படம் போட்டு கனவாக காட்டியது அவரது மூளை. பல இரவுகளைப்போல் அன்றும் அவர் தூங்கவேயில்லை. மகளை பற்றிய கவலை அவரை விடியல் வரை வாட்டியெடுத்தது.

“இந்த சூவ தச்சு தாங்க"

“குடுங்க சார்”, இந்த சூவே 500 ரூபா தான் இருக்கும், என்று மனதிற்குள் நினைத்துகொண்டு, சூ அடில பிஞ்சுருக்கு, சுத்தி தைக்கணும், 50 ரூபா ஆகும் சார்.

“30 ரூபா வாங்கிக்கோங்க"

உனக்கு இந்த சூவ தூக்கி போடவும் மனசு இல்ல, எனக்கு 50 ரூபா குடுக்கவும் மனசு இல்ல என மனதிற்குள் நினைத்துகொண்டு, சிரித்தார் தந்தை.

நான் ஏமாறல, வெலைய கொறச்சுட்டேன் என்று மனதிற்குள் நினைத்துகொண்டு, சிரித்தான் சூ தைக்க வந்தவன்.

    சூவை தைத்து முடித்து, அவனிடமிருந்து 30 ரூபாயை பெற்றுக்கொண்டார் தந்தை. அதே சமயம், ராமச்சந்திரனும், செல்லம்மாவும், வழக்கம் போல தங்களது மூன்று வயது பையனையும் (செல்வம்), தந்தையின் மகளையும் அழைத்துவந்தார்கள். மகளை கண்டதும், கண் கலங்கி மகளை இறுக்கி அணைத்தார் தந்தை. அவளது முகத்திற்கு தொடர்ந்து முத்தங்களை பரிசளித்தார்.
    
    “நீ செல்வத்தோட இரு, அப்பா போய் சாப்ட ஏதாவது வாங்கிட்டு வர்றேன்” என்று சொல்லிவிட்டு போய், அப்பமும், டீயும் வாங்கி வந்து,தன் மகளுக்கும், செல்வத்திற்கும் குடுத்தார். இருவரும் காலையில் கஞ்சி குடித்திருந்தாலும், டீ வேண்டாமென்று சொல்லவில்லை.
    
    மதிய வேளையும் வந்தது. மகளுக்கு பசிக்கும் என்று மூளை அவருக்கு சமிக்ஜை செய்தது. மகளிடம் கடையை பார்க்க சொல்லிவிட்டு கோவிலுக்கு சென்று வரும் போது, கையில் சாப்பாடு வாங்கி வந்து மகளுக்கும், செல்வத்திற்கும் ஊட்டிவிட்டார் தந்தை. 

“நீயும் சாப்டு பா?” 

நான் ஏற்கனவே சாப்டு தான்மா உனக்கு வாங்கிட்டு வந்துருக்கேன். ஆ சொல்லு", என்று வழக்கம் போல மகளை சமாளித்தார் தந்தை. அவர் ஏற்கனவே சாப்பிட்டது உண்மை தான்.

    மாலை வேளையில் மகளுக்காக மருந்தெண்ணெயை வாங்கி வந்து மகளின் காலில் தேய்த்தார் தந்தை.

“செல்வம் எங்கம்மா?” 

அவங்க அப்பா அம்மா வந்து கூட்டிட்டு போய்ட்டாங்கபா. புத்தகத்துல நான் ஒன்னு படிச்சேன் அத சொல்லவா?”

“சொல்லுமா"

“கல்யாணம் ஆகாத ஒரு ஜோடிக்கு பொறந்த ஒரு பையன, ஒரு அப்பா அம்மா தத்தெடுத்து வளத்தாங்க. சின்ன வயசுல இருந்தே அவனுக்கு கஷ்டம். நண்பர்களோட வீட்டு முற்றத்துல தான் தூங்குவான். அவன் சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவான் தெரியுமாபா? காலியான பாட்டில எடைக்கு போட்டு, பன், ரொட்டி வாங்கி சாப்டுவான். ஞாயித்து கெழமனா 7 மைல்நடந்து போய் கிருஷ்ணன் கோவில்ல அன்னதானம் சாப்டுவான். அவனுக்கு தெரிஞ்சது எல்லா, வித விதமா அழகா எழுதுறது மட்டும் தான். அவன் ஃப்ரண்டும், அவனும் சேந்து ஒரு டிவைஸ் தயாரிச்சாங்க. இவன் அந்த டிவைஸ்ல இவனோட எழுத்துக்கு உயிர் குடுத்தான். இப்போ அந்த டிவைஸ் தான் உலகத்துலேயே ரொம்ப அழகான டிசைன் உள்ள டிவைஸ். அவன் புதுசா ஏதும் பண்ணல, அவனுக்கு தெரிஞ்சத அவன் பணமாக்கினான்.”

மகள் வலியை மறந்து, கூறியதை பொறுமையாக கவனித்துக்கொண்டிருந்தார் தந்தை.
    பின் அவரே,“வலிக்குதாமா?” என்றார்.
    
    “இல்லப்பா ………… அப்பா….....…. இந்தாங்கபா உங்களுக்கு புடிச்ச குழி பனியாரம்”
    
    சற்று கோபத்துடன், “காசு ஏது?”
    
    “நீங்க கோவிலுக்கு போனப்ப, ஒரு செருப்பு தச்சேன், அதான்.”
    
    “எத்தன தடவ சொல்லிருக்கேன். இந்த பாழாப்போன வேல என்னோட முடியட்டும். நூலகத்துல இருந்து நான் புக் எடுத்துட்டு வர்றேன். நீ படிக்குற வேலைய மட்டும் பாரு. இனிமேல் நீ குத்தூசி மேல கை வைக்க கூடாது இது என் மேல சத்தியம்" என்று மகளை அதட்டியது தந்தையின் குரல்.

    “நான் ஏதாவது ஒரு அனாதை ஆசிரமத்துல போய் சேந்துரவா? கால் போன என்ன வச்சு நீ ரொம்ப கஷ்டப்படுறபா. அம்மா கூடவே நானும் அந்த விபத்துல செத்துபோய் இருக்கணும். நான் ஒன்னும் சின்ன பொண்ணு இல்லப்பா, நீங்க கஷ்டபடுறது தெரியாம இருக்க. மத்தியானம் மணி அண்ணா பெருமாள் கோவிலுக்கு சவாரி வந்துருக்காரு, அங்க உன்ன பாத்தாரு. ஏன்பா? பிச்சகாரங்களுக்கு போடுற அன்னதானத்துல ஒரு ஆளா உக்காந்து சாப்டுருக்க. செருப்பு தைக்குறது ஒன்னும் கேவலம் இல்லப்பா. நீ சுயதொழில் பண்ற ஒரு முதலாளி. எனக்கு ரொம்ப மனசு கஷ்டமா இருக்குப்பா” என்று ஆதங்கத்தை கொட்டினாள்.
    
    தந்தைக்கு தூக்கிவாரி போட்டது. மகளின் வார்த்தை ஒவ்வொன்றும் அவர் மனதை தைத்தது. கண்ணில் நீர் பெருகி, விழியை விட்டு வழிந்து கன்னம் நோக்கி வர, கண்ணீரின் மேல் முத்தமிட்டாள் மகள். ”இன்மேல் என்னோட அப்பா உழச்சு மட்டும் தான் சாப்டுவார். இலவசமா வர்ற எதையும் வாங்க மாட்டார்.  நீ உழைக்காமல் வரும் எதுவும் நமக்கு  வேண்டாம். சரியாப்பா“ என்று தன் பிஞ்சு கையால் தந்தையின் முகத்தை ஏந்தி தலையை ஆட்டினாள் மகள்.

“சரிம்மா, இனிமேல் அப்டி பண்ணமாட்டேன். நேரமாச்சு. செல்வம் வீட்டுக்கு போலாமா”, என்று அவளை தன் தோளில் தூக்கிக்கொண்டு ராமச்சந்திரன் வீட்டில் விட்டுவிட்டு வந்தார். 

மகளின் ஒவ்வொரு வார்த்தையும் அவரது காதில் கேட்டுக்கொண்டே இருந்தது. அவள் சொன்ன கதையும் காரணமில்லாமல் சொல்லவில்லை என்று புரிந்தது தந்தைக்கு. தன் மகளிடம் இருந்து இப்படி ஒரு பேச்சை எதிர்பாக்கவில்லை, அவளை சின்ன பொண்ணு என்று நினைத்தது தவறு என்பதை  தந்தைக்கு உணர்த்தியது அவளது பேச்சு. இவள் மனசுக்குள்ள இப்படி எல்லாம் நினைப்பு இருக்கிறதா! என்று மனதிற்குள் குமிறினார். அவள் பேசியதை நினைத்துக்கொண்டே தன் பிளாட்பாரம் கடைக்குள் படுத்தார் தந்தை. கன்னத்தை அறைந்து அவரை எழுப்பியது சூரியஒளி. வழக்கம் போல கட்டண குளியலறையில் குளித்துவிட்டு வெளியே வரும்போது, ராமச்சந்திரன் மூச்சிறைக்க ஓடி வந்து, “உன்னோட பொண்ணு பெரிய மனுசி  ஆய்ட்டாயா” என்றார் தந்தையிடம். 

    அவர் சொன்ன விஷயம் அவரை உறையவைத்தது. இப்படி ஒரு நிலை வரும் என்பதை தந்தை அறிவார். அனால் இத்தருணத்தில் வரும் என்று அவர் எதிர்பாக்கவில்லை. அழுவதா, சிரிப்பதா என்று தெரியாமல் பரிதவித்தார். அவரையும் மீறி அவர் கண்ணில் ஆனந்த கண்ணீர் பெருக்கெடுத்தது. மகளை காண ஓட்டம் எடுத்தார். முதன் முதலில் மகளை கையில் ஏந்திய தருணம். அவள் பரிசத்தை தழுவியது. தவழ்ந்தது, நடக்க பழகியது, சைக்கிள் ஓட்ட கற்றது. அவரும், அவர் மனைவியும் மகளின் வளர்ச்சியை பார்த்து பூரித்தது என ஒவ்வொரு தருணமும் அவர் கண்முன்னே விரிந்தது. ஒவ்வொரு தருணமும் அவர் ஓட்டத்தை அதிகப்படுத்த, கல் தடுக்கி கீழே விழும் போது, கண் விழித்தார் தந்தை. அவர் நெஞ்சம் படபடத்தது. அவர் கவலையை பயம் கொன்று தின்றது. இரவு முழுவதும் யோசித்துக்கொண்டே இருந்தார்.

    காலை ஆனதும், மணி வந்தான். “ஏன்யா உனக்கு இந்த வேலை. பேசாம நீயும் நம்ம ராமச்சந்திரனோட கட்டட வேலைக்கு போகலாம்ல.”

    தந்தை எதுவுமே பேசவில்லை. அமைதியாக யோசித்துக்கொண்டே இருந்தார். 

    “பையன்னா பரவாயில்ல. பொண்ணு. இன்னொருதவங்க வீட்ல படுக்கவச்சா நல்லவா இருக்கு. 3 வயசு பையன கட்டட வேலைக்கு போகும் போது கூட்டிட்டு போகமுடியதுன்னு, ராமச்சந்திரன் அவன் பையன உன்கிட்ட விட்டுட்டு போறான். அதுக்காக உன் பொண்ண அவங்க வீட்ல தூங்க வைக்குற. இதெல்லாம் எத்தன நாளைக்கு?”

    “எங்க நாட்ல எனக்கும் சொத்துபத்துல இருந்தது. போர்ல நடந்த குண்டு வெடிப்புல என் பொண்டாட்டி செத்துட்டா, மகளுக்கு கால் போச்சு. அகதியா இங்க வந்து, இப்போ செருப்பு தச்சு பொழச்சுகிட்டு இருக்கேன்.” என்று தந்தை கண்கலங்கும் போது, மகள் வருவதை பார்த்தார்.

“அப்பா எனக்கு ஜெட்டிஸ்பர் முகவரி - ன்ற புத்தகம் வேணும்பா. படிக்கணும்.” என்றாள், நேற்று எதுவும் நடக்காததைப்போல்.

    “சரிம்மா, ஒரு பேப்பர் ல புத்தகத்தோட பேர் எழுதித்தா, நான் போய் எடுத்துட்டு வர்றேன்” என்று சொல்லிவிட்டு சென்றார். நூலக பொறுப்பாசிரியர் உதவியுடன் மகள் கேட்ட “ஜெட்டிஸ்பர் முகவரி” புத்தகத்தை பெற்றுக்கொண்டு, மனதில் ஒரு புது நம்பிக்கையுடன் சூ, செருப்பு விற்கும் சிறு வியாபாரிகள் சந்தைக்கு நடை போட்டார். 
    
    “ஐயா, நான் சிக்னல்ல செருப்பு தக்கிறேன். உங்க கடைல ஏதும் வேல இருக்கா?” என்று கடை முதலாளியிடம் கேட்டார் தந்தை.
    
    “இல்ல, இல்ல. போ. காலங்காத்தால வந்துட்டாங்க”

    அடுத்த கடையில், “ஐயா, நான் சிக்னல்ல செருப்பு தக்கிறேன்…..”
    
    “இது ஒன்னும் சூ கம்பெனி இல்ல. வாங்கி விக்குற கடை. இங்க வந்து வேல கேக்குற?” என்றார் அந்த கடை முதலாளி.

    “அதான்யா நானும் சொல்றேன். கம்மியான விலைக்கு வாங்கத்தான், மக்கள் இந்த சந்தைக்கு வர்றாங்க. ஆனா சூ 2, 3 மாசத்துலயே பிஞ்சுறுதுன்னு என்னமாதிரி ஆள்கிட்ட வர்றாங்க. நான் என்ன சொல்றேன்னா. நான் சூவ சுத்தி அழகா, மெஷின் தைக்கிற மாதிரி கையால தையல் போட்டு தர்றேன். எனக்கு ஏதாவது சம்பளம் போட்டுதாங்க

    அந்த முதலாளி இவர மேலயும் கீழயும் பாத்தாரு. கைல ஜெட்டிஸ்பர் முகவரி புத்தகம். கேக்குறது செருப்பு தைக்குற வேலை. “வேலையெல்லாம் இல்லை, நீங்க போங்க” என்று அவர் சொல்வதற்கு அவரது தயக்கமே காரணமாக இருந்தது.

அவர் அந்த சந்தையில் ஏறக்குறைய பாதி கடைல கேட்டுபாத்தார். இல்லை என்ற வார்த்தையே அவருக்கு பதிலாக கிடைத்தது. மதியம், மகளுக்கு தன் கையால சாப்பாடு ஊட்டி விடும் போது, நடந்தத சொன்னாரு. 

    “நான் ஒரு கத சொல்லவாப்பா” என்றாள்.
    
    சிரித்துக்கொண்டே, “சொல்லு செல்லம்” என்றார் தந்தை.
    
    "ஒரு விவசாயி தன்னோட தோட்டத்துல எப்பயும் செடி, கொடிகளை தான் பயிரிடுவான். மரந்தோட்டம் வைக்கலாம்னு விதை வாங்கிட்டு வந்து பயிரிட்டான். தினமும் தண்ணீர் பாய்ச்சினான். ஒரு மாதம் ஆனது, எந்த ஒரு மரமும் முளைக்கவில்லை. விதை சரியில்லை என்று நினைத்தான். 6 மாதம் ஆனது. எந்த வளர்ச்சியும் இல்லை. ஆனால் அவன் மனதில் ஒரு நம்பிக்கை. என்ன ஆனாலும் சரி தண்ணீர் பாய்ச்சுவோம் என்று உறுதி எடுத்துக்கொண்டான். ஒரு வருடம் ஆனது. எந்த வளர்ச்சியும் இல்லை. ஆனால் அவன் தண்ணீர் பாய்ச்சுவதை மட்டும் நிறுத்தவே இல்லை. இரண்டு வருடம் ஆனது, எந்த வளர்ச்சியும் இல்லை. அந்த கிராமத்து ஆட்கள் எல்லாரும் அவனை கேலி செய்ய ஆரம்பித்தனர். ஆனால், அவன் எதையும் பொருட்படுத்தவில்லை. 3 வருடம் முடிந்த நிலையில், தரையில் இருந்து எதுவுமேயில்லை. தண்ணீரை மட்டும் பாய்ச்சிக்கொண்டே இருந்தான். 4 வது வருடமும் ஆனது. எந்த முன்னேற்றமும் இல்லை. 5 வது வருட ஆரம்பத்தில் சிறு செடி முளைக்க ஆரம்பித்தது. அடுத்த ஆறே வாரத்தில்(1.5 மாதம்) மரம் 90 அடி வளர்ந்தது.  தோட்டத்தை தாண்டி இருக்கும் மலை எவர் கண்ணுக்கும் தெரியவில்லை.  அந்த அளவிற்கு அந்த தோட்டம் முழுவதும் மூங்கில் மரங்கள். முழுமையாக 4 வருடம் (1460 நாட்கள்) எந்தவொரு வளர்ச்சியையும் கண்ணால் பார்க்காமல் நம்பிக்கை வைத்து தண்ணீர் பாய்ச்சினான் அந்த விவசாயி"என்று கூறி முடித்தாள் மகள். 
    
    மகள் எதற்காக இதைக்கூறினாள் என்பதை உணர முடிந்தது தந்தையால். தந்தைக்கு தெளிவு பிறக்க, "நாளைக்கு மிச்சமுள்ள எல்லா கடைலயும் கேக்குறேன்." என்றார்.
    
    "அப்டி ஒத்துவரலேனா, புது சூ, செருப்பு என்கிட்ட தச்சா, 2 வருஷம் பிய்யாதுன்னு ஒரு பலகைல எழுதிதர்றேன். சந்தைக்கு நடுவுல கடைய போட்ருவோம்பா."" என்றாள் மகள்.
    
    "நீ சொன்னா சரியா தான் இ்ருக்கும் செல்லம், நேரமாச்சு செல்வம் வீட்டுக்கு போலாம்" என்று அவளை விட்டுட்டு வந்தார் தந்தை.

இப்பொழுது…

    கண்ணாடி கீறல்களுடன், மூன்று கறை வேஷ்டி மனிதர்களின் முனகல் சத்தம் தந்தையின் காதை எட்டியது. மூவரையும் பத்திரமாக கவிழ்ந்து கிடந்த காரில் இருந்து வெளியே இழுத்தார் தந்தை. தேர்தல் சமயம், கறை வேஷ்டி மனிதர்கள், எதற்காக அவர்கள் வந்தார்கள் என்பதை ஆணித்தரமாக உணரமுடிந்தது தந்தையால். எதுவுமே பேசாமல் நடை போட ஆரம்பித்தார். சிதறிய பணத்தை வலி நடுக்கத்துடன் மூவரும் எடுத்துக்கொண்டிருக்க, அந்த துயரமான விபத்து அவர் கண்முன்னே விரிந்தது. அவன் கண்கள் துடிக்க, நடுங்கிய கைகளுடன் பணத்தை தாங்கி புடித்து, ஒரு கட்டு பணத்தை தந்தையிடம் நீட்டினான் ஒரு அரசியல்வாதி. இரண்டு வினாடி தந்தை கண் மூட, பிஞ்சு கை கன்னத்தை தாங்கி பிடித்து, “நீ உழைக்காமல் வரும் எதுவும் நமக்கு  வேண்டாம்” என்று தன் மகள் கூறியது நினைவிற்கு வந்தது அவருக்கு


தந்தைக்கு - மகள் தந்தை