Thursday 16 June 2016

தந்தை போட்டிச் சிறுகதை - 39

Rate this posting:
{[['']]}
தேசத்தந்தை - வீ..

அயர்ந்த தூக்கத்தில் புரண்டு படுக்க, மெத்தை அதன் வடிவத்தை வீரனுக்கு ஏற்றவாறு மாற்றியது. அவரின் கை மெத்தையின் மறுபக்கத்தை தழுவ, அவர் உடல் உஷ்ணத்திற்கு ஏற்றவாறு மெத்தையில் வெப்பநிலை மாறியது. தூக்கம் சற்றே கலைந்தவாறு கண் திறக்க, வெளிச்சம் அவர் கண்ணை கூசியது. கண்களை கசக்கி கட்டிலில் இருந்து அவர் எழுந்து பார்த்தார். அந்த அறை அவருக்கு புதிதாக தெரிந்தது. அந்த அறை முழுவதும் தன் பார்வையை செலுத்தினார். 21 அடிக்கு 21, நல்ல விசாலமான அறை. எந்த ஒரு படமோ, ஆணியோ, ஏன் ஜன்னல் கூட இல்லை. மின் விளக்கு இல்லையென்றாலும், அறையில் வெளிச்சத்திற்கு பஞ்சமில்லை. விட்டத்தில் மின்விசிறி இல்லை, ஆனாலும் அவருக்கு வியர்க்கவில்லை. அவர் சுவர்களால் சூழப்பட்டிருந்தார். அவரது கண்கள் அறையை படமெடுத்து மூளைக்கு அனுப்பிய போதும் மூளையால் அறையை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அந்த அறை ஒரு வரைபடம் போலவே தெரிந்தது அவருக்கு.

அறையின் நான்கு மூலையில், இரண்டை கதவு ஆக்கிரமித்திருந்தது. இன்னொரு மூலையில் (கட்டிலுக்கு வலதுபுறம்) சுவரில் பதித்த மரத்தாலான பீரோ இருக்க, நான்கவது மூலையில் கப்போர்டு (அடுக்கு பலகை) இருந்தது. அந்த அறை அவருக்கு பயம் கலந்த ஐயத்தை பரிசளித்தது. எங்கு இருக்கிறேன், என்ற கேள்வி அவர் மனதில் ஐந்தாவது இடத்தில் இருந்தது.

சுவரை தொட்டுப்பார்த்தார், 5.33 என்று நீல வண்ணம் ஒளிரியது. அவர் கையை சுவரில் இருந்து எடுத்ததும் 5 விநாடிக்கு நேரம் ஒளிரிந்து பின் மறைந்தது.

நான் யார்?
என் பேரைத் தவிர வேறு எதுவும் எனக்கு ஞாபகம் இல்லாதது ஏன்?
இங்கு எப்படி வந்தேன்?
இந்த சுவரில் எப்படி நேரம் ஒளிர்ந்தது?

என்ற கேள்விகளுக்கு பதில் தெரியவில்லை என்றாலும் அவரே அவரிடம் கேட்டுக்கொண்டே இருந்தார். வெளியே போகலாம் என்று வேகமாக கதவை நெருங்க, கதவு தானாக திறந்தது. அவர் கண்ணில் தெரிந்தோ, கழிவறை. அதுவும் விசாலமாக சன்ன சதுரமாய் அமைந்திருந்தது. இது கழிவறை என்றால், எதிர் திசையில் இருப்பது வாசற்கதவாகத்தான் இருக்கும் என்று எதிர் திசையில் இருக்கும் கதவை நோக்கி ஓடியவர், கதவு தானாக திறந்தவுடன் குழப்பத்தின் உச்சத்தில் கீழே விழுந்தார். அவர் கண்கள் இமைக்க மறந்தன. உதடுகள் நடுங்கத்துவங்கின. உள்ளிருந்து வெளியே செல்வதற்கு வழி இல்லையென்றால், உள்ளே எப்படி வந்தேன்? என்ற கேள்வி அவரை பயமுறுத்தியது. எழுந்து நின்று சமையலறை கதவை மூடினார்.


அவருக்கு என்ன நடக்கிறது என்று புரியவில்லை. சிறிது நேரம் கட்டிலில் அமர்ந்து கடைசியாக என்ன ஞாபகம் இருக்கிறது என யோசித்தார். திடீரென்று அவர் கவனத்தை தொட்டு பார்த்தது அந்த நுண்ணிய சப்தம். அமைதியாக கூர்ந்து கேட்டார். எந்த சப்தமும் கேட்கவில்லை. அந்த சப்தம், கட்டிலுக்கு அடியில் ஏதோ ஒன்று நகர்ந்தது போல் இருந்தது. குனிந்து பார்த்தார், ஓரத்தில் ஒரு சாக்குமூட்டை இருந்தது. வேகமாக ஓடிவந்து பார்த்தார். அது சாக்கு மூட்டை அல்ல. ஒரு சிறுவன் குப்புற படுத்திருந்தான். பார்பதற்கு 8லிருந்து 10 வயது தான் இருக்கும். சிவப்பு நிறத்தில் சட்டையும், கால் சட்டையும் அணிந்திருந்தான்.

வீரன் அவனை திருப்ப அவன் கண்விழித்தான். கண் வரை நீளமுள்ள கருமையான முடி, பெரிய கண்கள் அதில் கருப்பு நிற ஜேம்ஸ் மிட்டாய் போல விழி, லாலிபாப் மிட்டாயை ஒட்டி வைத்தார் போல மூக்கு, ஜவ்வு மிட்டாய் போல உதடு, தேங்காய் பன் போல உப்பி போன கன்னம் - தின்பண்டங்களால் செய்யப்பட்ட பொம்மை போல இருந்தான், நாமு. அவனை கண்டதும், வீரன் மகனே என்று அவனை அள்ளி அணைத்துக்கொண்டார்.

“உனக்கு ஒன்னும் ஆகலயே ?”

“இல்ல டாடி”, என்று சுற்றி பார்த்துவிட்டு, “நாம எங்க டாடி இருக்கோம்?” வினவினான் நாமு.

“தெரியலப்பா. இந்த ரூம்ல நம்ம மாட்டிகிட்டோம். இங்க இருந்து வெளிய போக வழியில்ல. இங்க எப்டி வந்தோம்னு.  உனக்கு எதும் ஞாபகம் இருக்குதா?”

“என்ன டாடி சொல்றீங்க. எனக்கும் எதுவும் ஞாபகம் இல்ல. ஆனா இந்த ப்லேஸ்ல இதுக்கு முன்னாடி இருந்த மாதிரியே இருக்கு. வேற எதும் மைன்ட்ல இல்ல.” பதபதைத்தான் நாமு.

திடீரென்று அறையின் வெப்பநிலை கூடியது. அறை முழுவதும் சூரிய ஒளி பரவியது.

“மகனே வெளிச்சம் எங்க இருந்து வருது?” என்றார் வீரன்.

“டாடி, ரூம்ல ஒபென்னிங் எதுவும் இல்ல”, அப்பறம் எங்க இருந்து வெளிச்சம் வருது....  ஷாடோ… “டாடி ஷாடோ எங்க விழுகுதுன்னு பாருங்க.”

“மகனே, கட்டில்ல தான் நிழல் விழுது”

நாமு கட்டிலுக்கு எதிர் திசையிலுள்ள சுவரை தொட, நேரம் 5.50 என்று ஒளிர்ந்தது. அவனும், சுவர் முழுவதும் அழுத்திப் பார்த்தான். சில இடங்களில் குத்தியும் பார்த்தான். அதன்மூலம், சுவரின் வலிமையை உறுதி செய்யமுடிந்ததே தவிர, வேறு எதும் தெரியவில்லை. சன் எமிட்ஸ் 44% விசிபிள் லைட், எலெக்ட்ரிக் லைட் எமிட்ஸ் 10%. ஷாடோ டென்சிட்டி, லைட் ப்ரைட்நெஸ் பாத்தா, இது சன்லைட் தான். இத சுவர ட்ரான்சுலன்ஷி மெடீரியல்லால பண்ணிருக்காங்க. “வாங்க டாடி, நமக்கு யூஸ்ஃபுல்லா எதும் கெடைக்குதான்னு பாப்போம்.”

தெனமும் சூரிய நமஸ்காரம் பண்றது ரொம்ப நல்லதாம்பா. நம்மளோட எலும்பு, தோளுக்கு தேவபடுற வைட்டமின் D சூரிய ஒளில தான் கெடைக்குமாம்பா. நாளைல இருந்து நாம கண்டிப்பா சூரிய நமஸ்காரம் பண்றோம்னு தோட்டத்துல வேல பாத்துட்டு இருந்த தன் அப்பாவிடம் சொன்னது வீரனுக்கு ஞாபகம்வந்தது. நான் செஞ்ச ஒவ்வொன்னையும் எல்லார்டையும்  சொல்லி ரொம்ப சந்தோசப்படுவார் என்னோட அப்பா. ஆனா, இப்போ என் பையனோட அறிவ நான் யார்கிட்ட சொல்லி சந்தோசப்படுவேன். இங்க தான் யாருமே இல்லையே. என்று மனதிற்க்குள்  நினைத்து ஏங்கினார் வீரன்.

“காநி, ப்ராசஸ் லெவல் நார்மல் தான?”

“யஸ், சார்”

“க்லிட்சிங் ப்ராப்ளம், மெமரி இஷ்யூ?“

“நோ சார், எவ்ரிதிங் பெர்ஃபெக்ட் அஸ் வீ எக்ஸ்பெக்டட்”

“நியூரான், பினல் க்ளாண்ட் ஆக்சன்ஸ்ஸ மானிட்டர் பண்ணு”

கப்போர்டை திறந்தான் நாமு. அதனுள் மகாபாரத புத்தகமும், கூர்மையான கத்தியும் இருந்தது. இரண்டையும் மெத்தையில் போட்டுவிட்டு வேறு ஏதாவது கிடைக்குமா என்று துலாவிப்பார்த்தான் நாமு.

கத்தியை தொட்டவுடன், முகத்தில் ரெத்தக்கறையுடன் கத்தியால் எதிரியின் நெஞ்சை துளைத்தது. துப்பாக்கி ஏந்திய ஆட்களில் ஒருவராக  வெறியுடன் சண்டையிட்டது ஞாபகம் வந்தது வீரனுக்கு. அப்படினா, நான் ஒரு இராணுவ வீரனா !!! என்று மனதில் குழப்பத்துடன் நின்றார் வீரன்.

சமையலறையில் ஏதாவது கிடைக்குமா என்று இருவரும் அதனை நோக்கி செல்லும் போது, புத்தகம் கீழே விழுந்ததைப்போல் ஒரு சப்தம். அதிர்ந்து போய் இருவரும் திரும்பி பார்த்தனர்.

“சத்தம் கேட்டுச்சா மகனே”

“ஆமாப்பா, பீரோல இருந்து வந்துச்சு.” நாமு வேகமாக பீரோ கதவை திறக்க முயலும் போது, “இரு, இரு” என்று கூறி, கத்தியை தேடி எடுத்துக்கொண்டு, “இப்போ தொற” என்றார் வீரன்.

நாமு கதவை திறக்க, எந்த ஒரு அபாயத்திற்கும் தயாராக வீரன் நிற்க, இரண்டு உருவம் இவர்களின் காலடியில் விழுந்தது. விழுந்த அதிர்ச்சியில் தூக்கத்தில் இருந்து எழுந்தனர். அந்த இருவரும் வீரன் கையில் கத்தியை கண்டதும் பயத்தில் உறைந்து நின்றனர். ஒருவனுக்கு 25 வயது இருக்கும். ஒல்லியான தேகம். முகத்தில் மீசை இல்லை. தீர்க்கமான பார்வை கண்ணில். அவன் நிற்ப்பதை பார்த்தால், வலுவிழந்து நடக்க முடியாமல் இருப்பவனை போல் இருந்தான்.

“யார் நீ?” என்றார் வீரன்.

“நான் சன்ருஷ், இது என் பையன் சக்ருன். எங்கள ஏன் கொல்ல பாக்குறீங்க, நீங்க யாரு?”

கத்தியை தாழ்த்தியவாறு, “உங்களுக்கு இங்க எப்டி வந்தோம்னு ஞாபகம் இருக்கா?” என்றார்.

“இல்ல. எனக்கு எதுவுமே ஞாபகம் இல்ல.” “எனக்கும் தான்பா”  என்றான் சக்ருன்.

            சிறிது நேரம் நால்வர் உரையாடியும், யாருக்கும் எதுவும் நினைவிற்கு வரவில்லை.சமையலறையில் தங்கள் மூச்சுக்காற்றை உலாவவிட்டனர் அவர்கள். ஆனால், நால்வரும் என்பது உண்மையல்ல. ஒரு திண்டு இருந்ததே தவிர, அந்த சமையலறையை வெற்றிடம் என்றே சொல்லலாம். திண்டின் ஒரு மூலையில் தண்ணி கேனும், மற்றொரு மூலையில் ஃப்ரிட்ஜும் இருந்தது.

ஒரு இண்டக்ஷன் ஸ்டவ், டவா,  ஒரே ஒரு தட்டு. அனைத்தும் பார்பதற்கு புதிதாக இருந்தாலும், எதுவும் வெளிச்சத்தில் பளபளக்கவில்லை என்பதே உண்மை. 2 பவர் சாக்கெட், ஒன்றில் இண்டக்ஷன் ஸ்டவ்வும், இன்னொன்றில் ஃப்ரிட்ஜ்ஜும் தொடர்பில் இருந்தது. ஃப்ரிட்ஜ் நிறைய உணவு இருக்கும் என்று திறந்த நாமு மட்டுமல்ல, மற்ற இருவரும் ஏமாந்துதான் போனார்கள். உள்ளே அரைக்கிலோ சாக்லேட் பாக்கெட் 10, அரைலிட்டர் பால் பாக்கெட் 10. அவ்வளவு தான்.

            அதை பார்த்ததும், வீரன் நிலைமையை கணகட்சிதமாக புரிந்துகொண்டார். சித்தரவதை பண்ணணும்னா, சோறு தண்ணி இல்லாம, கட்டிபோட்ருக்கலாம். எவ்வளவோ கொடுமபடுத்திருக்கலாம். அப்டி ஏதும் நடக்கல. ஏன் இப்டி பண்ணனும். சன்ருஷ பாத்தா ஆர்மி ஆபிசர் மாதிரி தெரியல. அப்டினா நம்மள யாரோ பரிசோதனை செய்கிறார்கள். எப்படி பாத்தாலும் 6 ல இருந்து 8 நாள் தான் தண்ணி பத்தும். இந்த ஒரு வார நடவடிக்கைய  கவனிச்சு என்ன பண்ண போறாங்க? நாம அவங்க நெனைக்குற மாதிரி பண்ணகூடாது என்று அவரது மூளை அறிவுரை கூறியது.

            “நாமு, இது எதோ ட்ராப் மாதிரி தெரியுது. நான் பவர் சாக்கெட்ட ஷார்ட் சர்கியுட் பண்ணி, இந்த எடத்த தீ புடிக்க வைக்குறேன். நாம, டாய்லெட்ல இருப்போம். அப்டி தான் நாம இங்க இருந்து வெளிய போக முடியும்.” என்றான் வீரன்.
           
            “நோ டாடி, அது ரிஸ்க். நாமலே நெருப்புல மாட்டிகிவோம். நாம இங்க இருந்து என்ன நடக்குதுன்னு பாப்போம்” எதிர்வாதம் பொழிந்தான் நாமு.

            “நாம இங்கயே இருந்தா, உயிர் பொழைக்குற வாய்ப்பு 0.1% தான். வீரன் சொல்றமாதிரி பண்ணுனா 5% உயிர் பொழைக்க வாய்ப்பு இருக்கு.” என்று வீரன் கூறுவதை ஆமோதித்தான் சன்ருஷ்.

            “நான் இதுக்கு ஒத்துக்கமாட்டேன், அது தற்கொலைக்கு சமம்” என்று  ஃப்ரிட்ஜ்ஜை கட்டி அணைத்துக்கொண்டான் நாமு.

            “சரி, சரி. 2, 3 நாள் பாப்போம். அப்பறம் என்ன பண்ணலாம்னு முடிவு பண்ணுவோம்” என்று வீரனின் உதடு மட்டுமே மொழிந்தது.
           
            மானிட்டர் பண்ண  பவர் கனெக்சன் வேணும். பவர கட் பண்ணிட்டா, நம்ம என்ன பண்றோம்னு தெரியாது. ஆனா அதுவே நமக்கு ஆபத்தாகவும் முடியும். இங்கயே இருந்தாலும் ஆபத்து தான். பவர கட் பண்ணா, கண்டிப்பா நம்மள மானிட்டர் பண்றவங்க பேசுவாங்க. அவங்க எதுக்கு இதெல்லாம் பண்றாங்கன்னு தெரிஞ்சுக்கலாம்  என்று அவர் மூளை அவரை  நச்சரித்தது.

            சார், வீ ஹேவ் எ த்ரெட். வீரன் பவர கட் பண்ணனும்னு நெனைக்குறான்.” என்று பதறினான் காநி.

“டோன்ட் வொரி. வீ  ஹேவ் எ பேக்-அப் காநி”

நாமு ஃப்ரிட்ஜ்ஜில் இருந்து சாக்லேட்டை எடுக்க முற்பட்ட போது, “வேணாம் நாமு, நாம அத சாப்ட வேணாம். அதுல என்ன கலந்துருக்குன்னு நமக்கு தெரியாது. ரொம்ப பசிச்சா உன் சட்டைல இருக்குற பட்டன பிச்சு வாயுல போட்டு சப்பிட்டே இரு. முழுங்கிராத.”அதட்டினான் வீரன்.

“நீங்க என்ன கொல்லபாக்குறீங்க. நாம எப்டியோ இதுக்குள்ள வந்துட்டோம். தப்பிக்குற வரைக்கும் நாம சாப்ட்டாகனும்”என்று நாமு பல்லைக்கடித்துக்கொண்டே, சன்ருஷ், சக்ருன்னுக்கு மட்டும் சாக்லேட்டை நீட்டி, வீரன் மேல் உள்ள கோவத்தை வெளிப்படுத்தினான்.    

நாமு, சக்ருன் சாக்லேட்டை சுவைத்தனர். சன்ருஷ் சாக்லேட்டை வாங்க மறுத்தது, வீரனுக்கு மட்டுமல்ல, மற்ற இருவருக்கும் சந்தேகத்தை தூண்டியது.

“ஏன் சாப்டல” என்று கேட்டுக்கொண்டே சன்ருஷ்ஷை சுவரோடு ஒட்டி, “நீ யார்னு சொல்லு, இல்லேனா” என்று கழுத்தை நெரித்தார் வீரன். அவர் கைகளை அவன் கழுத்தில் இருந்து சரட்டென்று எடுத்தார். அவர் குரல் நடுங்கியது. இதயம் துடிப்பை மறந்தது. “நீ யாரு? நீ மனிஷன் இல்ல.” என்று அதிர்ந்தார் வீரன்.

“பேக்-அப் ப்ளான் எக்ஸிக்யூட்டிங்.” என்று இயந்திர குரல் சன்ருஷ்ஷில் இருந்து ஒலிக்க, “நான் ஒரு ரோபோ” என்று கூறியது சன்ருஷ்.

“எதுக்காக எங்கள இந்த ரூம்ல அடச்சு வச்சுருக்க, உனக்கு என்ன வேணும்?”

“எனக்கு தெரியாது. என்னோட நேம், நான் ஒரு ரோபோ இது மட்டும் தான் என்னோட மெமரி ல இருக்கு.”

“உன்னோட பையன், சக்ருன். அவனும் ரோபோவா?”

“அவன் ரோபோ இல்லன்றது மட்டும் தான் என்னால உறுதியா சொல்ல முடியும்.  அவன் என் பையன்னு என்னோட ப்ரோடோடைப்ல இருக்கு.”

“அதுக்கு என்ன அர்த்தம்?”

“என்னோட டாஸ்க் சக்ருன்ன பையனா பாத்துகிறது தான்.” என்று சன்ருஷ் விளக்கிகொண்டிருக்கும்போது, தலை சுற்றி கீழே விழுந்தான், நாமு.

அவனை மெத்தை மேல் வைத்து, தண்ணீர் பிடிக்க விரைந்த வீரனை தடுத்து, “இது சாதாரண மயக்கம் தான், கொஞ்ச நேரம் தூங்கினா போதும்” என்று தன் கரகர ஒலியில் இரைந்தது சன்ருஷ்.

இந்த ரோபோ சொல்றத நம்ப முடியல, நம்மக்கு வேற வழியும் இல்ல. நல்லா இருந்த பையன், திடீர்னு மயக்கம் போட்டு விழுந்துட்டான். என்ன காரணம், ஒரு வேல சாக்லேட்னால தான் காரணமா என்று இம்முறை தவறாக யூகித்தது அவரது மூளை.

சிறுது நேரம் யாரும் எதுவும் பேசவில்லை. அமைதியை கடைபிடித்தனர். யாருக்கும் தெரியாதவண்ணம், சாக்லேட்டை கட்டிலுக்கடியில் போட்டார் வீரன்.
மயக்கத்தில் இருந்து எழுந்த நாமு, பசிக்கிறக்கத்தால் சாக்லேட்டை தேடினான். கிடைக்கவில்லை என்றதும், கையில் கத்தியை ஏந்திக்கொண்டு வீரனைநோக்கி வந்தான்.

என்கிட்ட முன்னாடியே ஒரு வார்த்த கேக்கமாட்டீங்களா? அப்டி என்ன அவசரம். ஏற்கனவே இப்டி தான் ஏல சீட்டு போடுறேன்னு காச கரியாக்குநீங்க, இப்போ, பட்டாவே இல்லாத பொறம்போக்கு நெலத்த வாங்கி ஏமாந்துடீங்க. உங்களுக்கு அறிவு இருக்கா? சோறு தான சாப்புடுறீங்க என்று தன் தந்தையை திட்டியது வீரனின் நினைவிற்கு வர, கண்ணின் ஓரத்தில் ஒரு சொட்டு கண்ணீருடன் , “வா, வந்து குத்து மகனே” ஆதங்கத்துடன் கூறினார்.

“எனக்கு பசிக்குது, சாக்லேட் வேணும்.” கத்தினான் நாமு.

“சாக்லேட் சாப்ட்டனால தான் உனக்கு மயக்கம் வந்தது” மறுமொழிந்தார் வீரன்.

அவனுக்கும் ஐயம் எழ, “சக்ருன்னு ஒன்னும் ஆகல, அவன் மனுஷன்தானானு இப்போ கண்டுபுடிக்குறேன்.” என்று கத்தியை சக்ருனை நோக்கி ஓங்கினான்.

சன்ருஷ், சக்ருனை பிடித்து இழுக்க, வீரன் குறுக்கே பாயும்போது, வீரனின் இதயத்தை கத்தி பதம் பார்த்தது. கத்தியை வெளியே இழுத்து, ரத்தைக்கையுடன் நாமுவின் கன்னத்தை தழுவினார் வீரன். “போர்க்களத்துல எதிரியோட கையால, நெஞ்சுல குத்துவாங்கிருந்தா ஒரு சிறந்த குடிமகனா செத்துருப்பேன். ஆனா என்னோட பையன் கையால சாகப்போற நான், ஒரு அப்பனா மட்டும் இல்ல, ஒரு சராசரி மனுசனா நான் தோத்துட்டேன்.” வேதனையின் உச்சத்தில் குமுறினார்.

“நீங்க தோக்கல வீரன். இந்த நாட்டோட ஒட்டுமொத்த மக்களையும் காப்பாத்திடீங்க.” என்று அசரீரி ஒலிக்க, சுவர் மறைய ஆரம்பித்தது. பாதி மூடிய கண்களால் இருவர் நடந்து வரும் நிழலை பார்த்து மயங்கினார் வீரன்.

“1900-களில் வாழ்ந்த ஒரு இராணுவ வீரனான, வீரனோட டி.என்.ஏ. நினி(ஆர்கியாலஜிஸ்ட்) மூலம் கிடைத்தது. அதன் மூலம் க்ளோனிங் உருவாக்கி, அவர் ஞாபகத்தை அழித்து, நாமு அவரது பையன் என்ற எண்ணத்தை அவரது மூளையில் விதைத்தோம். ரோபோக்களால் வளர்க்கப்பட்ட,  தற்கால குழந்தைகளில் ஒருவர், நாமுவின் எண்ணத்திலும் வீரனை தந்தையாக விதைத்தோம்.  தற்கால குழந்தைகளின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண நாங்கள் நடத்திய ஆய்வு வெற்றியில் முடிந்தது.
வீரனின் க்ளோனிங் மூலம் உளவியல் சிந்தனை, தியாகம், பாதுகாக்கும் குணம் பதிவு செய்யப்பட்டு, கூடிய விரைவில் ரோபோக்களின் நியூரல் ஸ்கீமா மாற்றி அமைக்கப்படும்” ஸ்டேட்மெண்ட் எழுதிக்கோ காநி. நாளைக்கு ஒப்படைக்கணும். நான் போய் வீரன காப்பாத்துறேன்.

8 வருடங்களுக்கு பிறகு…
            “அப்பா, அப்பா இவர் யாருப்பா?” என்று 5 வயது சிறுவன் ரோபோவிடம் கேட்க,  “இவர் தான் தேசத்தந்தை, அவர பத்தி சிலைக்கு கீழ கல்வெட்டுல இருக்கு மகனே, நீயே படி” என்று கரகரத்தது ரோபோ.

                                            தேசத்தந்தை - வீரன்
தோற்றம்: 1872                                                                                                        மறைவு:  1936

2100 லிருந்து ரோபோக்கள் தான் குழந்தைகளுக்கு தந்தையாக இருந்து வருகிறது. 3 தலைமுறைகளுக்கு பின், ரோபோக்களால் மட்டுமே வளர்க்கப்பட்ட குழந்தையின் குணங்களில் அதீத மாற்றம் (தான் நினைத்தது நடக்கவில்லையென்றால் ஆத்திரம், தன் உயிருக்கே பிரச்சனை என்றாலும் அக்கறை கொள்ளாமல் இருப்பது, பாசமின்மை) என்று ஒவ்வொரு குழந்தையும் பாதிக்கபட்டிருந்தது. சமுதாயத்தின் அடிப்படையையே ஆட்டிபடைத்த இந்த பிரச்சனைக்கு தீர்வு கொண்டு வர, 1880 களில் வாழ்ந்த வீரனின் குணாதிசியங்கள் தற்போது ரோபோக்களுக்கு மேம்படுத்தப்பட்டிருக்கிறது.

தன் மகனை மட்டும் அல்ல, ஒவ்வொரு குடிமகனையும் பாதுகாக்கும் எந்த ஒரு உயிரும் தேசத்தந்தை தான்.

“அப்படினா, ஆர்மி மேன் எல்லாருமே, நம்மள பாதுகாக்குறாங்க. அவங்க எல்லாருமே தேசத்தந்தையாபா” என்று தன் தந்தையாகிய ரோபோவிடம் கேட்டான் அந்த சிறுவன்.

“சரியா சொன்ன மகனே.” என்று இரைந்தது ரோபோ.