Thursday, 16 June 2016

தந்தை போட்டிச் சிறுகதை - 49

Rate this posting:
{[['']]}
தந்தை
                                                               

அப்பாவின் கன்னத்தில் அறைந்து நெஞ்சில் கை வைத்து உந்தித் தள்ள அவர் சோபாவில் சரிந்த போதுசங்கரனுக்கு முதலில் உறுத்தியது அவரின் முதுமை. தோள்பட்டையில் இருந்து புஜம் இறங்கும் இடம் எல்லாம் வெறும்  எலும்பாய் துருத்திக் கொண்டிருந்தது. கோபத்தில் இன்னும் இரண்டு அறை வைக்க நினைத்தவனை தடுத்து நிறுத்தியது அவரின் மெலிந்த கைகளே ஒழிய பின்னால் கேட்கும் அம்மாவின் அலறல் அல்ல.வயோதிகமும் உள்ளே போன பிராந்தியும் ஒன்றாய் அழுத்த அப்படியே சோபாவில் கண்ணயர்ந்து விட்டார். அவிசாரி முண்டே என்று வாய் மாத்திரம் முனகிக் கொண்டிருந்தது. இப்போது விழுந்த அறை கூட அந்த வார்த்தைக்காகத் தான். 

"என்னத்தையோ சொல்லிட்டு போறாரு. நீ எதுக்கு கோபப்பட்டுகிட்டு.இந்த பாவம் எல்லாம் உனக்கு வேணாண்டா" என்று 

அம்மா புடவை தலைப்பால் கண்ணீர் துடைத்து மூக்கையும் சீந்தியபடிமாவு கெட்டியாகிப்போய் இழுபட்டுக் கொண்டிருந்த கிரைண்டரில் நீர் தெளிக்க அது இன்னும் வேகமாய் சுற்ற ஆரம்பித்தது. பொழுதானால் வரும் குறு வண்டுகள் குழல் விளக்கில் மோதுகிற ஒலி கேட்கும் அளவிற்கு நிசப்தமாய் இருந்தது வீடு. வீதியில் கிணுகிணுத்த மணியோசைக்கு எட்டி பார்க்கலாந்தர் விளக்கும்மூடிய மரப்பெட்டியுமாய்ட்ரைசைக்கிளில் ஹுக்கும் சந்த் குல்பி ஐஸ் விற்றுக் கொண்டிருந்தான். பதினைந்து நிமிடத்திற்கு முன்பிருந்த கலவரம் இப்போது இல்லை. அப்பாவின் மெல்லிய குறட்டை ஒலி மின் விசிறியின் ஓசையுடன் கலந்து ஹாலெங்கும் பரவிக்கொண்டிருந்தது, கூடவே பிராந்தி நெடியும்.. கால்கள் கீழே சரிந்திருக்க சோபாவில் கிடந்தவரை  நேராக படுக்க வைத்து தலைக்கு தலையணை  வைத்தான்.இன்னும் கூட உடலில் பதட்டம் மிச்சமிருந்தது. பின்னங்கழுத்திலும் காது மடல்களிலும் சூடாய் வெப்பம் உணர்ந்தான். 
 
அறைந்த போது அவர் கன்னத்தில் இருந்த தாடியின் குறு குறுப்பை உள்ளங்கைகளில் உணர முடிந்தது. கடைசியாய் அப்பாவை எப்போது தொட்டுப் பார்த்து ஸ்பரிசித்தோம் என்று யோசித்துப் பார்த்தான். நியாபகம் வரவில்லை. சங்கரன் அப்பாப் பிள்ளை இல்லைஅவர் கரம் கோர்த்து கடைதெருவிற்கு சென்றதில்லை. அவர் மேல் கால் போட்டுத் தூங்கியதில்லை. இருசக்கர வாகனத்தில் அவரை பின்புறமாய் அணைத்துக் கொண்டு காற்றை கிழித்தபடி பயணித்ததில்லை. இன்னும் கொடுமைஅவரை கடைசியாய் எப்போது  அப்பா என்று அழைத்தோம் என்பதே நினைவில்லை. மௌன கீதங்களில் வரும் டாடி டாடி பாடலைக் கேட்டுவிட்டு சௌந்தரி அக்காதான் அவரை முதலில் டாடி என்று அழைத்தாளாம். அம்மா சொல்லக் கேட்டிருக்கிறான்.
 
 
அநேகமாய் பள்ளி இறுதிக்குப்  பிறகு அப்பாவுடனான அவனது சம்பாஷனைகள் எல்லாம் தொடக்கமும் முடிவும் இல்லாதத் துண்டுத் துண்டு வார்த்தைகளில் தான். "சாப்பிட கூப்டாங்க", "பீஸ் கட்டனும்" இத்யாதி. அவனுடைய வியப்பெல்லாம் சௌந்தரி அக்கா மாத்திரம் எப்படி அப்பாவிடம் அதே பிணைப்போடு இருக்கிறாள். இத்தனைக்கும் அவள் திருமணத்திற்கு கூட பெரிதாக ஒன்றும் செய்து விடவில்லை. செலவெல்லாம் அவளின்  சேமிப்பில் பாதியும்சங்கரனின் நான்காண்டு கால சேமிப்பின் மொத்தமும் சேர்த்து தான் சமாளிக்க முடிந்தது. "படிக்க வச்சாரு இல்லஅது போதும் .. வேற எதுவும் நான் எதிர்பாக்கல". அப்பாவைக் குறை சொல்லும் போதெல்லாம் சௌந்தரி சொல்லும் சமாதானம்.
 
அப்பாவுமே கூட தன் சுபாவத்திற்கு உட்பட்ட ஒரு சிறிய கரிசனத்தை அவளிடம் காட்டவே செய்தார். அதில்  முக்கியமானது அம்மாவை நோக்கிய காது கூசும் வசைச் சொற்கள்அவை பெரும்பாலும் சௌந்தரி இருக்கும் போது இறைபடாது. அம்மாவை அடிக்க பாய்கிற தருணங்களில் சங்கரன் குறுக்கே புகுந்தால் புல்லுக்கு பாய்கிற நீராய் அவனுக்கும் ஒன்றிரண்டு விழும். அதுவே சௌந்தரி லேசாய் கமருகிற  குரலில் "டாடி ... வேணாம் ப்ளீஸ்" என்றால்,மெதுவாய் பின் வாங்கிலுங்கியை இறக்கி விட்டு எல்லாரையும் ஒரு முறைப்பு முறைத்து விட்டு படுக்கை அறை போய் கதவு சாத்தி கொள்வார். இப்போது அவளும் திருமணமாகி போய்விட யாருக்கும் அடங்கமறுத்து ஆடிகொண்டிருந்தார். சங்கரன் யோசித்ததுண்டுஎன்ன தான் குறை இந்த கிழவருக்கு.
 
மூன்று வேலை சோற்றுக்கு உத்தரவாதம் அளித்த நகராட்சி அலுவலக குமாஸ்தா வேலை. சொத்தைக் கறிகாய்களை வாங்கிப் போட்டால் கூட எந்த புகாரும் இல்லாமல் வக்கணையாய் ஆக்கிப் போடும் மனைவி. பெரிதாய் எந்த செலவும் வைக்காமல் படித்துவிட்டு அரசுப் பள்ளி ஆசிரியையாய்  சௌந்தரியும் ஐ.டி. துறையில் சங்கரனும். அப்பா ஓய்வு பெற்று இன்றோடு எட்டு மாதம் ஆகிறது. பணிக் காலத்தில் கொஞ்சம் பொறுப்பாக இருந்திருந்தால் இந்நேரம் ஒரு வீடே கட்டி இருக்கலாம். அது கூட பரவாயில்லைஇப்போது இருக்கும் நிலைக்கே அமைதியாய் வாழ்ந்துவிட்டு போகலாம். எது உறுத்துகிறது இந்த மனிதரை ?
 
 அடிக்க போனது கொஞ்சம் அதிக பட்ச செயலோ ??. குற்ற உணர்வு ஒரு சிறிய பாம்பாய் உருவெடுத்து பூதாகரமாய் வளர்ந்து அவன் முன் நாக்கை நாக்கை நீட்டி பழிப்புக் காட்டி கொண்டிருந்தது. சங்கரன் அத்தனை வேகமானவன் அல்ல. வரிசையில் காத்திருக்கையில் யாரும் இடைபுகுந்துஅவசரம் என்றால் அனுமதிப்பவன். முன் பதிவு செய்த ஜன்னலோர இருக்கையை புதுமணத் தம்பதிகள் சேர்ந்து உட்காரக் கொடுத்துவிட்டு எந்த சுணக்கமும் இல்லாமல் இடம் மாற்றி அமர்பவன். திருப்பத்தில் ஒலி எழுப்பாமல் எதிரே வரும் இருசக்கர ஓட்டியை எந்த சலனமும் இல்லாமல் கடப்பவன். மொத்தத்தில் அம்மாவின்மேம்படுத்தப்பட்ட மறுபதிப்பு தான். ஆனால் எத்தனை நாள் தான் வெறும் ஜடமாய் வேடிக்கை பார்ப்பது.
 
        அம்மாவை பார்த்து அந்த தகாத சொல் வீசப்படும் போதெல்லாம் அவனுக்குள் கோபம் ஒரு நெருப்புப் பந்தாய் சுருளும். பல்கடித்து அடக்கிக் கொள்வான். அன்றைக்கு சண்டை வலுக்கவே எல்லாம் எல்லை மீறி விட்டது. எங்கேனும் கவனத்தை திசை திருப்ப நினைத்தவன் தொலைகாட்சியை ஓட விட்டான். ரிமோட்டில் ஒன்றில் இருந்து தொண்ணூறு வரை சேனல்கள் தாவி மீண்டும் கடைசியில் இருந்து முதலுக்கு திரும்பினான். பாடல் காட்சிகள் வந்தால் சுத்தமாய் ஒலியே இல்லாமல் பார்த்தான். எந்த இசையும் இல்லாமல் வெறுமென நடிப்பவர்களின் முக பாவம் மட்டும் பார்க்க வேடிக்கையாக இருந்தது. அவன் செய்கை அந்த சூழலுக்கு அபத்தமாய் பட்டாலும் அது வேண்டியதாகவும் இருந்தது. தற்செயலாய் மணி பார்க்க பதினொன்றே முக்கால். அம்மா எப்போது மாவரைத்துஎப்போது சாப்பிட்டு உறங்கப் போனாள் என்று தெரியவில்லை. வழக்கமாய் ஒன்பது மணிக்குள் இரண்டு மூன்று தடவையேனும் சாப்பிடக் கூப்பிட்டு விடுவாள். இன்று அவளுக்குமே கூட ஒன்றும் தோன்றவில்லை. தன் பொருட்டுத் தகப்பனுக்கும் பிள்ளைக்குமான கைகலப்பில் அவளும் கொஞ்சம் அதிர்ந்து விட்டாளோ என்னவோ.
 
சங்கரன் தொலைகாட்சியை அணைத்தான். சமையலறை சென்று தட்டில் சோறு போட்டு குழம்பூற்றி  பிசைந்து, நின்றவாரே நான்கு வாய் அவசர அவசரமாக உண்டான். கை கழுவி சொம்பில் நீர் குடித்து மீண்டும் ஹாலுக்கு வரஅப்பா வாய் பிளந்த நிலையில் உறங்கி கொண்டிருந்தார்.கொஞ்சம் நேரம் முன்பு வரை வீட்டில் அவ்வளவு பெரிய கலவரம் செய்தது இவர் தானா. மனிதர்கள் அடிப்படையில் நல்லவர்கள் தானோ ?? என்கிற சந்தேகம் அவர்கள் ஆழ்ந்து தூங்கும் போது எழத்தான் செய்கிறது. மெதுவாய் அவர் கீழ் தாடையை பிடித்து அவருடைய வாயை மூட முயற்சி செய்தான் அது மீண்டும் திறந்து கொண்டது.மேற்கொண்டு முயற்சிக்கவில்லை. வாசல் கதவை திறந்து வெளியே வந்து கேட்டில் சாய்ந்தவாறு தெருவை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். காம்பௌண்ட் சுவரோரமாய் பெருச்சாளி ஒன்று நகர்ந்து எங்கோ போய்க் கொண்டிருந்தது. மெலிதாய் காற்று வீசும் ஓசையை தவிர வேறு அரவம் இல்லாத பன்னிரண்டு மணி இரவு. காவல் துறையின் இரவு நேர ரோந்து வண்டி சைரன் ஒலியுடன் தெருவை கடந்து சென்றது. அந்த இரவு நேரத்திலும் ஒன்றிரண்டு வீடுகளில் வெளிச்சப் பொட்டாய் விளக்கு எரிந்து கொண்டிருந்தது.
 
மளிகைக் கடை சேர்மத் துரை தெரு திரும்பி வந்து கொண்டிருந்தார். கடையின் கணக்கு முடித்து வீடு திரும்ப அவருக்கும் இந்நேரம் ஆகிவிடும். "இன்னும் தூங்கலையா ??" என்று பதிலுக்கு கூட காத்திராமல் விசாரித்து விட்டு கடந்து போய் விட்டார். மாலையில் இருந்த படபடப்பு எல்லாம் அடங்கி மனசு இப்போது இலகுவாக இருந்தது. நல்லது தகப்பனேநம்முடைய சண்டை இன்னுமொரு புதிய உயரத்தை எட்டியிருக்கிறது. இது இத்தோடு முடியவில்லை,நாளை காலை நீ போதை தெளிந்து எழும்போது மீண்டும் தொடர்வேன். குடிப்பது உன் சொந்த சௌகரியம், அதற்கு விலை நிச்சயமாய் ஒரு குடும்பப் பெண்மணியின் நிம்மதியும், சுய கௌரவமும் அல்ல. ஏதோ முடிவு செய்தவனாய் உறங்கச் சென்றான்
 
காலையில் மிக்ஸியின் அலறலில் விழிப்பு தட்ட கண் விழித்த போது மணி ஏழரை. மெதுவாய் பல் விளக்கி  சமையலறை செல்ல அம்மா ஏற்கனவே போட்டிருந்த தேநீரை சுட வைத்துக் கொடுத்தாள். அப்பா இன்னும் தூங்கிகொண்டு தான் இருந்தார். எட்டு மணி வாக்கில் எழுந்து சோபாவில் அமர்ந்தபடியே எங்கோ வெறித்துப் பார்த்தபடி யோசித்துக் கொண்டிருந்தவர், சுதாரித்தவராய் எழுந்து குளியலறை சென்று பல் விளக்கிகுளித்துமுடித்துஇஸ்த்திரி போட்ட பேன்ட் சடை அணிந்து கொண்டு தலை சீவி கொண்டிருந்தார். இது வழக்கமாய் கடைபிடிக்கும் உத்தி தான். முதல் நாள் இரவு எப்போது தகராறு நடந்தாலும்,அடுத்த நாள் காலை யாரிடமும் பேசாமல் வெளியே கிளம்பிவிடுவார். தன்னை யாரும் கேள்வி கேட்பதை தவிர்க்க அவர் பின்பற்றும் முறை. அன்றைக்கும் அப்படி கிளம்பியவரை 

அதுக்குள்ள எங்க கிளம்பியாச்சி” என்று 

சங்கரன் வாசலிலேயே வழி மறித்தான்.  அவனைத் தாண்டி கிளம்ப எத்தனித்தவரை 

இருன்னு சொல்றேன் இல்ல” என்று  கொஞ்சம் அழுத்தமாய் தடுக்க.

பள பளத்த கண்களுடன்

"அப்பனை கை நீட்டி அடிச்சிட்டா நீங்க எல்லாம் பெரிய புடுங்கிங்களாடா ?? 
என்றவாறு அவனை விலக்கி மீண்டும் கடந்து போனார், தொண்டைக்குள் எதையோ அடக்கிக்கொண்டு.

"நீ மாத்திரம் தண்ணியப் போட்டுட்டு வந்து அம்மாவைப் பாத்து  அவிசாரி முண்டைன்னு பேசறது ரொம்ப யோக்கியமான காரியமா ??"

கேட்டை திறந்து வெளியே போக இருந்தவர் திரும்பி அவனை பார்த்து சொன்னார்.

"இல்லதான் … எங்க அம்மாளைப் பாத்து சொல்ல முடியாமப் போச்சே …"