Friday, 6 May 2016

தந்தை போட்டிச் சிறுகதை - 7

Rate this posting:
{[['']]}
குலசாமி

பெண் குழந்தைகளின் பாசத்தில் அம்மாக்களைவிட அதிகமாகத் திளைப்பவர்கள் அப்பாக்கள்தான்... அதேபோல் அப்பாக்களின் அன்பில் சிறகடிப்பவர்கள் பெண் குழந்தைகள்தான். இது காலங்காலமாக தொட்டுத் தொடரும் ஒரு பாசப் பாரம்பரியம். பொதுவாக அம்மா மீது இருக்கும் பற்றுதல் அப்பா மீது இருப்பதில்லை என்று சொல்வதுண்டு.  ஆண் குழந்தைககள் அப்பாவை தூர வைத்துப் பார்க்கப் பழகிவிடுகிறார்கள்... ஆனால் பெண் குழந்தைகள் அப்படி அல்ல... அப்பா மீது அலாதி பாசம் வைத்திருப்பார்கள். அம்மாக்கள் தங்கள் பாசத்தை எந்த ஒரு எதிர்பார்ப்புமின்றி வெளிக்காட்டிக் கொள்வார்கள். அது கறந்த பால் போல் சுத்தமானது... கலப்படம் இல்லாதது.    

அதேபோல்தான் அப்பாக்களின் பாசமும்... அது தாய்ப்பாலைப் போன்றது... அது எளிதில் கிடைத்துவிடாது... அப்பாக்களும் எதையும் எதிர்பார்ப்பதில்லைதான்... ஆனாலும் பாசத்தை அவ்வளவு சீக்கிரத்தில் வெளிக்காட்டமாட்டார்கள்.  அப்பாக்களுக்கு தங்களின் மகன்கள் இளவரசர்களாய்த் தெரிந்தாலும் இளவரசிகளான மகள்களைத்தான் ரொம்ப பிடிக்கும். அதனால்தான் பெண் பிள்ளைகள் கடைசி வரை அப்பாக்களுடன் ஒட்டிக் கொள்கிறார்கள். வீட்டு ஆண்களிடம் சொல்ல முடியாத சில விஷயங்களை அம்மாவிடம் சொன்னாலும் ஒட்டுதல் என்னவோ அப்பாவிடம்தான்.  பெண் பிள்ளைகள் அப்பாவோடு  விரிசல்பட்டு நின்றாலும் என்றாவது ஒருநாள் விம்மி உடைந்து கண்ணீராய் வெளியேறிவிடும். இப்பல்லாம் நாப்கின் வேணுமின்னு அப்பாக்கிட்ட சொல்ற அளவுக்கு பொண்ணுகளையும். பொண்ணுகளுக்கு நாப்கின் மட்டுமின்றி உள்ளாடைகளையும் வாங்கிக் கொடுக்கிற அப்பாக்களையும் அதிகம் பார்க்க முடியுது... இது ஒரு நல்ல வளர்ச்சியின் அறிகுறிதான். யார்டா இது...? என்னடா அப்பா புராணம் பாடுதேன்னு நினைக்கிறீங்களா?

நான் புவனா... அரசுப் பள்ளியில் தலைமை ஆசிரியை.
மூன்று இளவரசர்களோடு பிறந்த ஒரே இளவரசி... இளவரசர்கள் எல்லாம் ஒரு கட்டத்தில் அப்பாவிடம் பேசுவதைத் தவிர்க்க ஆரம்பித்துவிடுவார்கள் என்பதை நாம் அறிவோம்... நம் குடும்பங்களிலும் அதை அனுபவிக்கிறோம்... அனுபவித்திருப்போம்... அதுதான் எங்கள் குடும்பத்திலும் நடந்தது. எனக்கு மேலே மூத்தவர்கள் இருவரும் பத்தாவது தாண்டும் போது அப்பாவின் கேள்விகளுக்கு ம்... ஆமா... சரி... என்ற வார்த்தைகளை பதிலாக்க கற்றுக் கொண்டு விட்டார்கள். அவர்கள் அம்மா செல்லம்... எது வேண்டுமென்றாலும் அம்மாவை நச்சரித்து... அவளின் முந்தானைக்குள் ஒளிந்து அப்பாவிடம் இருந்து பெற்றுக் கொள்வார்கள். அப்பாவிடம் தம்பி மட்டும் கொஞ்சம் ஒட்டுதலாய் இருந்தான். கல்லூரி சென்ற பிறகே அவன்ம்.. சரிக்குள் புகுந்து கொண்டான். அதெல்லாம் அந்தக்காலம்... இப்பல்லாம் அப்பாக்களோடு பசங்க ரொம்ப பிரண்ட்லியா இருக்காங்க... தண்ணி அடிச்சாலும் அளவோட வச்சிக்கனு சொல்ற அப்பாக்களை இன்னிக்கு பெரும்பாலான குடும்பத்துல பாக்கமுடியுதுன்னு நீங்க நினைக்கலாம்... ஏன் எங்கிட்ட சண்டைக்கும் வரலாம்... சினிமாவுல காட்டுற அப்பாக்கள் மாதிரி எங்கயோ ஒண்ணு ரெண்டு அப்பாக்களும் மகன்களும் இருக்கலாம்...   ஆனாலும் இன்னும் பல வீடுகள்ல அப்பா மகன் உறவுங்கிறது இந்தியா பாகிஸ்தான் மாதிரித்தான்.... சரி விடுங்க... நான் சொல்றது நாப்பது வருசத்துக்கு முன்னாடி இருந்த அப்பா மகன்கள் உறவு பற்றி... அப்பல்லாம் இப்படித்தான்...  மகன்கள் எல்லாம் மீசை முளைத்ததும் தனி ஒருவன் ஆகிவிடுவார்கள்.

எங்க அப்பா வேலுச்சாமி... எனக்கு அவருதான் குலசாமி... எப்பவும் நான் அப்பா செல்லம்... அம்மா என்ன சொன்னாலும்... என்ன செய்தாலும்... அப்பாவிடம் சொல்லும் முதல் ஆள் நாந்தான். உங்களுக்காகவே ஒரு டேப்ரெக்கார்டரை பெத்து வச்சிருங்க என அம்மா அடிக்கடி அப்பாவிடம் சொல்லிச் சிரிப்பாள். சின்ன வயசுல அப்பா தோள்ல குதிரை ஏறி உக்காந்துப்பேன்... நானும்ன்னு நச்சரிக்கிற தம்பியை விடவேமாட்டேன்... யார் சொன்னாலும் கேக்கமாட்டேன்... அப்பாதான் புவிச்செல்லம்... தம்பி பாவம்தானே... ஆளுக்கு ஒரு தோள்பட்டையில் உக்காந்துக்கங்கன்னு சொல்லவும் அரை மனசோடு ஒத்துப்பேன்... ஒண்ணாவது படிக்கும் போது அப்பாதான் குளிப்பாட்டணும்... ஸ்கூல்ல கொண்டு போய் விடணும்ன்னு அடம் பிடிப்பேனாம்... வானத்தைப் பார்த்துக் கொண்டு படுத்தபடி  அப்பா எனக்கு நிறையக் கதைகள் சொல்லியிருக்கார்... விண்மீன்களைக் காட்டி ஒவ்வொன்னும் ஒரு கதை சொல்வாரு... மூணாவது போகும் வரை எனக்கு அப்பா மேல படுத்தாத்தான் தூக்கம் வரும். ராத்திரியில் எந்திரிச்சி அப்பான்னு அழுதுகிட்டு அவரைத் தேடிப் பிடிச்சி தூங்கியிருக்கேன்.

அம்மாவும் அப்பாவும் ஆதர்ஷ தம்பதிகள்ன்னு சொல்வாங்களே... அப்படிப்பட்ட தம்பதிகள்... ரெண்டு பேருக்குள்ளயும் இப்ப தொலைக்காட்சிகள்ல சொல்றாங்களே கெமிஸ்ட்ரி அது நல்லாவே ஒத்துப்போகும்... அப்பாவோ அம்மாவைக் கேட்காம எதையும் செய்யமாட்டாரு...  அதேமாதிரி அம்மா  ஒரு சேலை வாங்குறதா இருந்தாக்கூட அப்பாக்கிட்ட கேட்டுட்டுத்தான் வாங்கும்... அவருக்கிட்ட கேக்காம வாங்கினால் திட்டமாட்டாருன்னு தெரியும்... இருந்தாலும் அந்த மனுசனுக்கு நாம குடுக்கிற மரியாதை இது... அவரு எதைச் செய்தாலும் எனக்கிட்ட கேக்கிறாருல்ல... அப்புறம் நா அவருக்கிட்ட கேட்கிறதுல என்ன தப்புங்கிறேன்னு பக்கத்து வீட்டு பார்வதி பெரியம்மாக்கிட்ட அம்மா அடிக்கடி சொல்றதை நான் கேட்டிருக்கிறேன்..

இதெல்லாம் நான் அஞ்சாவது போகும் வரைதான்... அதுக்கு அப்புறம் எல்லாம் மாறிடுச்சு... எல்லாம்ன்னா... அப்பாவுக்கும் அம்மாவுக்கும் இடையில் ஏதோ ஒரு புதிய பிரச்சினை... தினமும் சண்டை... சண்டை... அப்பா கத்துவாரு... அம்மாவும் கத்தும்... சில நாட்களில் அம்மாவுக்கு அடி.. உதை... எல்லாம் கிடைக்கும். அப்பல்லாம் அம்மா கன்னத்தை தடவிக்கிட்டே எங்ககிட்ட வந்து படுத்துக்கும்... ராத்திரி நான் எப்ப முழிச்சாலும் அம்மா விசும்புக்கிட்டு இருக்கும்... அம்மாவைப் பாக்கவே பாவமாயிருக்கும்... அம்மா அழாதே... அழாதேன்னு சொல்லிக் கட்டிப்பிடிச்சிப்பேன்... எனக்கும் அழுகை வந்திரும்... நாலைப் பெத்துட்டேனே... நடுத்தெருவுலயா விட்டுட்டுப் போகமுடியும்ன்னு புலம்பியபடி முந்தானையால அம்மா என் கண்ணைத் துடைச்சு மாரோட சேத்துக்கட்டிக்கும்... அப்பாவை எதித்துக் கேள்வி கேட்கணுமின்னு மனசுக்குள்ள கோபம் கோபமா வரும்... ஆனா காலையில அப்பா முகத்தைப் பார்த்ததும் கோபமெல்லாம் போயிரும். செல்லக்குட்டியின்னு அவர் கூப்பிட்டதும் அம்மா எனக்கு செல்லாக்காசாயிரும்... ஒரு சிலநாள் அப்பாட்ட ஏம்ப்பா... என்னாச்சுப்பா... அம்மாவை அடிக்காதீங்கப்பா பாவம்ப்பான்னு சொன்னா... டேய் இது சாதாரணச் சண்டைடா... அப்பா ரொம்ப டென்சனா வந்தேனா அதான்... அதெல்லாம் உனக்கு  புரியாதுடா...  நீ படிக்கிறதை மட்டும் பாருன்னு சொல்லி மழுப்பிடுவார். எங்களுக்கு ஒண்ணும் புரியாதுதான்... நாங்க நாலு பேரும் என்ன நடக்குதுன்னு கண்டுபிடிக்க முடியாம தவிச்சாலும் அம்மாவும் அப்பாவும் மட்டுமில்லாம தாத்தா பாட்டிக்கும் ஏதோ தெரிஞ்சிருந்தும்  எங்ககிட்ட எதையும் சொல்லவே இல்லை... நாளாக நாளாக அப்பா தினமும் வீட்டுக்கு  வர்றது நின்னுபோச்சு... வாரத்துல ரெண்டு மூணு நாள் வரவே மாட்டாரு... ஏம்ப்பா வரலைன்னு கேட்டா ஆபீஸ்ல வேலைடான்னு சொல்லி, அதுக்கு மேல ஒண்ணும் பேசாம கட்டில்ல படுத்துக்குவாரு... அவங்களுக்குள்ள கொஞ்சம் கொஞ்சமா பேச்சு வார்த்தை நின்னுபோச்சு... ரெண்டு பேருக்கும் நாந்தான் கேள்வி கேட்டு பதில் வாங்கிக் கொடுக்கிற ஆளாகிப் போனேன்.

அப்பாதான் எனக்கு சாமியின்னு இருந்தவளை அந்த சாமியை வேணான்னு தூக்கிப் போட வச்ச சம்பவம் நடந்தப்போ நான் ஒன்பதாவது படிச்சிக்கிட்டு இருந்தேன்.... அப்பல்லாம் ஸ்கூல்ல சினிமாவுக்கு கூட்டிப் போவாங்க... எங்க பள்ளிக்கூடத்துல இருந்து பக்கத்து டவுனுக்கு காந்தி படம் பாக்க கூட்டிக்கிட்டுப் போனாங்க... சினிமா பாத்துட்டு திரும்பும் போது ஒரு கடையில அப்பா நின்னாரு... அட அப்பா இங்க என்ன பண்றாங்கன்னு நினைச்சப்போ... அவருக்கு பக்கத்துல... அவரோட சிரிச்சுப் பேசிக்கிட்டு நின்னவங்களைப் பார்த்ததும் அப்படியே ஷாக் ஆயிட்டேன்... ஏன்னா அவங்க எங்களோட பேச்சுவார்த்தை இல்லாத எங்க சித்தி... அவங்களைப் பார்த்த்தும் அப்பாவைப் பார்க்காதது போலவே வந்துட்டேன்... ஆனா மனசுக்குள்ள அப்பாவும் சித்தியும் சிரிச்சிப் பேசிக்கிட்டு இருக்காங்களே ஏன்? காதலிச்சி கல்யாணம் பண்ணிக்கிட்டு போனதால யாரும் பேசுறதில்லையின்னும் சித்தப்பா ஒரு ஆக்சிடெண்டுல செத்ததுக்கு அப்புறமும் யாரும் அவங்களை சேத்துக்க விரும்பலைன்னும் அம்மா சொல்லியிருக்கே... சுத்தமா அத்துப்போன உறவுல்ல அது... அப்புறம் எப்படி அப்பா அவங்க கூட... இந்த சித்தியாலதான் ஆதர்ஷ தம்பதிகளோட வாழ்க்கை பாலைவனமாயிடுச்சா..? இவங்களாலதான் அவங்களோட கெமிஸ்ட்ரியில குளறுபடி வந்துச்சா..? அப்படின்னு மனசுக்குள்ள ஏதேதோ கேள்விகள் எழுந்து என்னைத் தின்னுக்கிட்டு இருந்துச்சு.

வீட்டுக்கு வந்ததும் வராததுமா அம்மாக்கிட்ட  அப்பாகூட நாம பேசாத சித்தி சிரிச்சிப் பேசிக்கிட்டு இருந்ததை நான் பார்த்தேன்... அவங்கதான் உங்க சண்டைக்கு காரணமான்னு கேட்டேன். நீ சின்னப்பொண்ணு அதெல்லாம் உனக்கு தேவையில்லாத விஷயம்ன்னு சொல்லி மழுப்பினாங்க... எதும்மா தேவையில்லாத விஷயம்... இந்நேரம் அண்ணனுங்க பார்த்திருந்தா அங்கயே பிரச்சினை ஆக்கியிருப்பானுங்க.... ஆனா அவரு ஏதோ தப்புப் பண்றாருன்னு என் மனசு சொன்னாலும் உங்ககிட்ட கேட்டுக்கலாம்ன்னுதான் வந்தேன்... அப்படியே அவருக்கிட்ட நான் கேட்டாலும் எப்பவும் போல எதாச்சும் ஒரு பதிலைச் சொல்லி என்னை ஏமாத்திடுவார்...  இத்தனை வருசமா நம்மளை அப்படித்தானே ஏமாத்திக்கிட்டு இருக்காரு... இங்க பாரும்மா நானும் ஒன்பதாவது படிக்கிறேம்மா...  மெச்சூர்ட் ஆன பொண்ணுதான்... என்னாலயும் ஓரளவுக்கு எது நல்லது கெட்டதுன்னு பிரிச்சிப் பார்க்கத் தெரியும்... அப்பாவுக்கும் உங்களுக்கும் பிரச்சினை வரக்காரணம் இதுதான்னு தெரியுது.... என்ன நடந்துச்சுன்னு சொல்ரியா... இல்லே நானே அவங்ககிட்ட கேட்டு தெரிஞ்சிக்கவான்னு மிரட்டலாய்க் கேட்டேன்.

அதற்கு பலன் இருந்தது... அம்மா மெதுவாகப் பேச ஆரம்பித்தாள்... சித்தியோட காதல்... ஆக்ஸிடெண்டுல சித்தப்பா இறந்தது... குழந்தையில்லாத கதையெல்லாம் மறுபடி சொன்னா.. யாருமில்லாத அனாதையா நின்னவளுக்கு எங்க எல்லாரோட எதிர்ப்பையும் மீறி உங்கப்பாதான் உதவி செய்தார். உதவப் போனவரை உரிமை ஆக்கிக்கிட்டா... இதுல அவளை மட்டும் குத்தம் சொல்லமுடியாது... உங்கப்பாவுக்கும் சபலம்... இதையெல்லாம் நான் உங்கிட்ட பேசக்கூடாதும்மா... புரிஞ்சிக்கிற வயசு உனக்கிருந்தாலும் அதைச் சொல்ற மனசு எனக்கில்லைம்மா... என்று நிறுத்தினாள். நான் மீண்டும் வற்புறுத்திக் கேட்கவும் அவரு தப்புப்பண்றாருன்னு தெரிஞ்சி கேட்டதாலதான் எங்களுக்குள்ள சண்டை... அடி... உதை... இது வீட்ல பெரியவங்களுக்கும் தெரிஞ்சி அதனால நிறைய பிரச்சினைகள்... ஆனா அதெல்லாம் உங்களுக்கு தெரியக்கூடாது... நீங்க படிச்சி பெரிய ஆட்களா வரணுமின்னு எல்லாருமே நினைச்சோம்... அதனால உங்களுக்குத் தெரியாம மறைச்சிட்டோம். உங்கப்பாவும் அவளை வெளியூர்லதான் வச்சிருந்தார் இப்பத்தான் பக்கத்து டவுன்ல கூட்டியாந்து வச்சிருக்கார். சொந்த பந்தத்துக்கு எல்லாம் தெரியும்... தெரிஞ்சி ஒரு பிரயோசனமும் இல்லை... யார் பேசினாலும் நான் ஒண்ணும் எவளையோ கூட்டியாந்து வச்சிக்கலை... சொந்த மச்சினிச்சியைத்தான் கட்டி வச்சிருக்கேன்... ஊருல உலகத்துல நடக்காதது மாதிரி பேசுறீங்கன்னு வாயை அடைச்சிருவாரு. இதனாலேயே சொந்தங்கள் அவர்கிட்ட பேசுறதில்லை அப்படின்னு சொல்லிட்டு அழுதாங்க.

அவங்க அழுகை ஓயட்டும்ன்னு காத்திருந்தேன்... மறுபடியும் அவங்களே தொடர்ந்தாங்க... உங்க சித்திக்கு ரெண்டு பசங்க இருக்கானுங்களாம்... வீராயி அக்கா பாத்துச்சாம்... அச்சு அசலா நம்ம மூத்தவன் மாதிரி இருக்கானுங்களாம்... இங்கபாரு இதை யார்க்கிட்டயும் சொல்லாதே... வீணாவுல மனசுக்குள்ள போட்டு வதைச்சிக்காதே... நல்லாப்படி... வெறியோட படி... நீங்க எல்லாரும் நாளைக்கு நல்ல வேலையில இருக்கதைப் பாத்தாலே போதும்... எனக்கு வேற எதுவும் வேண்டான்னு அம்மா முந்தானையில மூக்கைச் சிந்திக்கிட்டு அடுப்படிக்குள்ள பொயிட்டா.

சித்திகளோட அம்மா நிக்கிற போட்டோ வீட்ல இருக்கு... இந்தச் சித்தி அம்மா மாதிரியே இருப்பாங்க... அதான் அம்மா வாழ்க்கையையும் பங்கு போட்டுக்கிட்டாங்க போல... எனக்கு அழுகையா வந்திச்சி... சித்தி எப்படி இப்படி... ரொம்ப யோசிச்சேன்... சில இடங்கள்ல நடக்கத்தானே செய்யுது...  என்னோட பிரண்ட் வளர்மதியோட அப்பா அக்கா தங்கச்சி ரெண்டு பேரையும் கட்டிக்கிட்டவருதான்... ரெண்டு பேரும் மனசு ஒத்து ஒண்ணா வாழ்றாங்க... அது கௌரவமாத் தெரியுது... ஆனா இது..? அப்பாவோட சித்தி சிரிச்சிப்பேசி வாழுறா... அம்மாவோ நாலு வருசமா... பேசாம... சிரிப்பை மறந்துல்ல வாழ்றா... எல்லாத்தையும் மனசுக்குள்ள புதைச்சிக்கிட்டு எங்களுக்காக தன்னையே அழிச்சிக்கிட்டாளேன்னு தவிச்சேன்... 'சை... கேடு கெட்ட அப்பா' அப்படின்னு எனக்குள்ள இருந்து வார்த்தை வந்து விழுந்துச்சு... அந்த வார்த்தையோட என்னோட குலசாமி  மனசுக்குள்ள குலை சாஞ்சிருச்சு... அழுதேன்... அழுதேன்... அன்னைக்கு முழுவதும் அழுதேன். கூடப்பொறந்தவனுங்க என்னன்னு கேட்டப்போ ஒண்ணுமில்லேன்னு சொல்லிட்டேன். அப்படி ஒரு அழுகையை அதுக்கப்புறம் நான் அழுகவே இல்லை.

அடுத்தநாள் அப்பா வீட்டுக்கு வந்தாரு... செல்லக்குட்டி இந்தாங்கன்னு எங்கிட்ட திண்பண்டப் பையை நீட்டினாரு... அப்பான்னு கத்தி ஓடும் நான் ஒண்ணுமே சொல்லலை... அவரை பாக்க விரும்பாம கிச்சனுக்குள்ள பொயிட்டேன்... போடி போய் வாங்கு அப்படின்னு அம்மா சொன்னுச்சு... நான் மறுக்க... இங்க பாரு... நீ எதுவும் தெரிஞ்ச மாதிரி காட்டிக்காதே... இந்த வீட்ல அவருக்கு ஒரே ஆறுதல் நீதான்... நீயும் பேசலைன்னா அவரு இங்க வராமலே போயிருவா... அந்த மனுசனோட வாழத்தான் முடியாமப் போச்சு... அப்பப்ப பாக்கிற இந்த வாழ்க்கையாச்சும் எனக்கு கடைசி வரைக்கும் வேணும்டி... நீ பேசலைன்னா அவரு செத்துருவாருடி... போன்னு அம்மா சொன்னதும் போய் வாங்கினேன்... ஆனாலும் நேற்றுவரை நான் கொண்டாடிய அப்பாவை இப்ப என் மனசு கொண்டாட மறுத்துருச்சு.... அதிகம் பேசலை... ஏன்டா என்னாச்சுன்னு கேட்டாரு... ம்... தலைவலின்னு சொல்லி நகர்ந்தேன்... வா அப்பா மருந்து தேய்ச்சு விடுறேன்னு பாசத்தோட கை பிடிச்சி இழுத்தார்... எனக்கு பாசக்கார அப்பா தெரியலை... அம்மாவை... எங்களை... மோசம் பண்ணின அப்பாதான் தெரிந்தார்... வேண்டாம் மாத்திரை போட்டுட்டேன்னு சொல்லிட்டு அறைக்குள் போய் படுத்துக் கொண்டேன்.

நாட்கள் வாரங்களாகி... வாரங்கள் மாதங்களாகி... மாதங்கள் வருடங்களாக பயணிக்க அப்பாவோட பேசுறது குறைஞ்சிருச்சு... ஆனா அவரு எங்களுக்கு எந்தக் குறையும் வைக்கலை. அண்ணன் ரெண்டு பேரும் வக்கிலாயிட்டாங்க... என்னையும் ஆசிரியை ஆக்கிட்டாரு... தம்பியும் ஒரு வங்கியில நல்ல பதவியில இருக்கான். எல்லாருக்கும் நல்ல இடத்தில் கல்யாணம் பண்ணி வச்சாரு... அண்ணன்கள் இருவரும் டவுன்ல போயி செட்டிலாயிட்டாங்க... தம்பியும் தமிழ்நாடெல்லாம் சுத்தி வந்துக்கிட்டு இருந்தான்... அம்மாவும் அப்பாவுந்தான் பழைய வீட்டில் இருந்தாங்க... எங்க கல்யாணத்துக்குப் பிறகு அவங்க ரெண்டு பேரும் கொஞ்சம் கொஞ்சம் பேசிக்க ஆரம்பிச்சிருந்தாங்க...  எதுக்கு அவரோட பேசுறேன்னு சத்தம் போட்டதும்  இந்த வீட்டுக்குள்ள நான் மட்டுந்தான் கிடக்கேன்... எப்பவாச்சும் வர்ற மனுசனுக்கு சமைச்சிப் போடுறேன்... போட்டுட்டுப் போற துணிகளை துவைச்சிப் போடுறேன்... அவரு பண்ணினது தப்பா இருந்தாலும் இனி என்னத்தைடி கொண்டு போகப் போறோம்... நான் பேசலைன்னா அவரு வர்றது சுத்தமாக் குறைஞ்சிரும்... அப்புறம் நான் எதுக்கு நடைபிணமா வீட்டுக்குள்ள... இன்னும் கொஞ்சநாள்தானே எதுக்கு அந்த மனுசனை வதைக்கணும்.. அவருக்கு முன்னால பூவும் பொட்டோட மகராசியா போயிச் சேந்தாப் போதும் அப்படின்னு சொன்னுச்சு... இந்தப் பொம்பளைங்க எப்பவுமே இப்படித்தான்... அவங்க எடுக்கிற முடிவு எப்பவுமே சரியின்னு நினைப்பாங்க.... அதனால அம்மாக்கிட்ட நான் எதுவும் சொல்லலை... அதோட முடிவு சரியின்னுதான் தோணுச்சு... அப்பா போன் பண்ணினாலும் நான் ரொம்பப் பேச மாட்டேன்... அவரோட பேத்திக்கிட்ட கொடுத்துருவேன்.

அன்னைக்கு ஸ்கூல்ல இருந்து வந்ததும் அம்மா எனக்கு போன் பண்ணி உங்க சித்தி வந்திருந்தா... உங்கிட்ட பேசணும்ன்னு சொன்னா... இந்த வாரம் வாறியான்னு கேட்டதும் உனக்கென்ன பைத்தியமா...? அவளை எதுக்கு வீட்டுக்குள்ள விட்டே...? அவளோட எல்லாம் என்னால பேச முடியாதுன்னு கத்தினேன். ஏய் இப்படியே வாழ்ந்து என்னத்தை சாதிக்கப் போறோம்... அவ பண்ணுனது தப்புத்தான்... அதுக்காக... கடைசி வரை அவளை அப்படியே விட்டுட்டுப் போகணுமா என்ன... நாப்பது வருசமா உங்கப்பா கூட குடும்பம் நடத்திக்கிட்டு இருக்கா... அந்த வயசு... குடும்ப வாழ்க்கையை ஒரு வருசத்துல இழந்தவ... சபலப்பட்டுட்டா... அது தப்புன்னு எடுத்துச் சொல்ற நிலையில இருந்த உங்கப்பாவும் அதை ஏத்துக்கிட்டுத்தானே ரெட்டை வாழ்க்கை வாழ்ந்தாரு... அப்படிப் பார்த்தா இவரு மேலயும்தானே தப்பிருக்கு... இருந்து இவரை ஏத்துக்கலையா... இன்னும் சமைச்சிப் போட்டுக்கிட்டுத்தானே இருக்கேன்...  அதே மாதிரித்தான் அவளும்ன்னு எனக்கு கிளாஸ் எடுத்தா... உன்னை மாதிரி மனநிலை எனக்கு இல்லைம்மா... அவகிட்ட எனக்கு பேசப்பிடிக்கலை... எங்கம்மாவை ஒவ்வொரு ராத்திரியும் அழ வச்சவ அவ.... நீ வேணுமின்னா உன் தங்கச்சியை கூட்டி வச்சிக்க... எனக்கு அவ வேண்டாம்ன்னு சொல்லி போனை வச்சிட்டேன். அதன் பின் அம்மா சிலமுறை முயற்சித்தாள்... நாளைக்கு உம்புருஷன் செத்தா அவ நம்ம வீட்ல வந்து உக்காந்துக்கிறதுக்காக பேச நினைக்கிறா... எனக்கு விருப்பமில்லைன்னு சொல்லிட்டேன். பெரியண்ணனுக்கிட்ட அம்மா பேசப் போயி திட்டு வாங்கியிருக்கு... அது அண்ணன் சொல்லி எனக்குத் தெரிய வந்தது.

அந்தச் செய்தி வந்தபோது மனசு நொறுங்கினாலும் நம்பினவளை கழுத்தறுத்தவர்தானேன்னு நினைக்கத் தோன்றியது. ஊருக்கு வந்து சேர்ந்தபோது அண்ணன்களும் தம்பியும் வந்திருந்தார்கள்.  எனக்கு வீட்டிற்குள் கிடத்தப்பட்ட அப்பாவைப் பார்க்கும் போது பொங்கி அழத் தோணவில்லை... ஆனாலும் கண்ணீர் வடிந்து கொண்டிருந்தது. என் மகள் கத்தியதை பார்த்தவர்கள் மனசுக்குள் மகக்காரி கதறலையேன்னு நினைச்சிருப்பாங்க... எங்க அம்மாதான் கத்தினாள்... அவளோட பூவும் பொட்டு போயிருச்சே... கணவன்னு ஒரு சொந்தம் இதுவரைக்கும் வாழ்க்கையில சுகத்தைக் கொடுக்கலைன்னாலும் அவளோட பூவும் பொட்டுக்கும் காவலா இருந்ததே.... இனி அவளுக்குன்னு யார் இருக்கா...? அவ அழறது ஞாயந்தானே... புல்லானாலும் புருஷன் ஆச்சே... என்று என்னைச் சமாதானம் பண்ணிக் கொண்டாலும் என்ன சுகத்தைக் கொடுத்தார் அந்த மனிதர்...  தன் மனைவிக்கு துரோகம் இழைத்து இன்னொரு குடும்பம் வைத்திருந்தவர்தானே... இவள் எதற்காக இப்படி அரற்றுகிறாள் என கோபமும் எனக்குள் பொங்கத்தான் செய்தது. அந்தச் சூழல் கருதி எதுவும் பேசாமல் அம்மாவை அணைத்துக் கொண்டு அவளுக்கு அருகே அமர்ந்தேன்.

சித்தி  மகன்களோடு வந்தாள்... அவ இங்க வரக்கூடாதுன்னு அண்ணன்கள் தடுத்தார்கள்... எங்கக்கா வாழ்வை நாசமாக்கிய பாவி அவ... இங்க எதுக்கு வர்றான்னு எங்க மாமாவும் சத்தம் போட்டார். ஊர் பெரியவர்கள் அவளும் மனைவிதானே... அவளுக்கும் உரிமை இருக்குல்லன்னு சொல்லி சமாதானப்படுத்த, செய்தது தவறென்றாலும் அம்மாவைப் போல்தானே அவளும்... நாப்பது வருசமா அவருக்கு சந்தோஷத்தைக் கொடுத்தவதானே அவ... செத்துப்போன புருஷனைப் பாக்க முடியாம... வாழ்க்கை பூராம் நொந்து சாகணுமா என்ன... நாமதானே இன்னா செய்தாரை ஒறுத்தல் அப்படின்னு பாடம் நடத்துறோம்... அது பாடமா மட்டுமே இருக்கணுமா என்ன... அவ இங்க இருக்கதால யாருக்கு என்ன பிரச்சினை... அவளோட பேச முடியாதுன்னு சொன்னவளும் நாந்தான்... இப்ப அவ இருக்கட்டுமே... விடுங்கன்னு அண்ணனுங்ககிட்டயும் மாமாக்கிட்டயும் அவளுக்காக பேசியவளும் நாந்தான்... மனித மனம் விசித்திரமானதுதானே...

எல்லாம் முடிந்தது... அப்பா மண்ணுக்குள்ளே போயி இன்னைக்கு அஞ்சு நாளாச்சு... சித்தி பசங்க அப்பவே பொயிட்டானுங்க... சித்தி மட்டும் இருந்தா... அவ எங்கிட்ட பேச வந்தப்போ எல்லாம் நான் விலகிப் போய்க்கிட்டு இருந்தேன்... நான் மட்டுமில்ல உடன்பிறப்புக்களும்தான்... அவளுக்கு அங்கிருந்த ஒத்த உறவு அம்மா மட்டும்தான்.  பழைய நினைவுகள் கண்ணீராய் இறங்க தூணில் சாய்ந்து அமர்ந்திருந்த என்னருகில் வந்தமர்ந்த அம்மா மெல்ல அப்பாவைப் பற்றி பேச ஆரம்பித்தாள். உங்கப்பா சாகுற அன்னைக்கு முதல்நாள் ராத்திரி எங்கிட்ட நான் உனக்கு துரோகம் பண்ணிட்டேன்னு அழுதார்... எம் மக என்னைய இன்னும் தப்பாவே புரிஞ்சி வச்சிருக்கா... தப்பாவே என்ன நான் தப்புத்தானே பண்ணினேன்... அவகிட்ட மன்னிப்பு கேக்கணும்ன்னு புலம்பினாரு... அவ உங்க மக... அவ கோபம் நியாந்தானே... மன்னிப்பெல்லாம் வேண்டாம்... அவ ஒருநாள் உங்களைப் புரிஞ்சிப்பான்னு சொன்னேன்.  அன்னைக்கு ராத்திரியெல்லாம் தூக்கம் வராம புரண்டு புரண்டு படுத்தாருன்னு கண் கலங்கினாள்... அதான் பொயிட்டாருல்ல... இனி எதுக்கு அவர் புராணம் பாடுறேன்னு கத்த, சித்தி ஓடி வந்து அம்மாவை அணைத்துக் கொண்டாள்.

கொஞ்ச நேரம் அமைதி காத்த அம்மா மீண்டும் பேச ஆரம்பித்தாள்... அவள் வேதனையை எங்கிட்ட பேசுறது மூலமா தீர்த்துக்கப் பாக்குறாள்ன்னு தெரிந்ததும் பேசாமல் அமர்ந்திருந்தேன். மத்தியானம் நெஞ்சுவலிக்கிற மாதிரி இருக்குதுன்னு சொன்னாரு.... சுடுதண்ணி எடுத்துக்கிட்டு வாறேன்... உன்னைய கூப்பிடுவாரே செல்லக்குட்டியின்னு அதைச் சொல்லி செல்லக்குட்டி... அம்மாவிடம் விசும்பல்... குரல் கம்மியது... செல்லக்குட்டி அப்பா தப்புப்பண்ணிட்டேன்டா... என்னைய மன்னிச்சிடுடான்னு.... சத்தமா சொன்னாரு... அப்புறம் பேசவே இல்லை... கடைசியா பேசுனது அதுதான்... அவரோட பார்வை நிலைச்சிருந்த இடம்...  உத்திரத்துக்கு கீழே மாட்டியிருக்கிற நீ குப்புற படுத்திருக்கிற போட்டோ மேல.... அதற்கு மேல் பேச முடியாமல் அம்மா உடைந்தாள். அம்மா... அழாதேன்னு அவளை ஆறுதல் படுத்திய எனக்கு கண்ணீர் முட்ட ஆரம்பித்தது.

அப்பாவைக் கிடத்தியிருந்த திண்ணை பக்கம் சுவரோரம் பார்த்தேன்... போட்டோவில் காலையில் போட்ட மாலைக்குள் அப்பா சிரித்துக் கொண்டிருந்தார்... அருகே காமாட்சி விளக்கு எரிந்து கொண்டிருந்தது.... என்னோட குல தெய்வம்... மனசுக்குள்ள என்னையே வச்சிக்கிட்டு இருந்த எங்குலசாமி போட்டோவுக்குள்ள சிரிக்குதேன்னு நினைச்சப்போ என்னை அறியாமல் 'ஏம்ப்பா இப்படிப் பண்ணுனீங்க... எங்க பாசத்தைக் கொலை பண்ணிட்டீங்களேப்பா' என்று சத்தமாக்க கத்தினேன்... எனக்குள் உடைந்தேன்... அம்மா என்னை அணைத்துக் கொள்ள, அடைத்து வைத்திருந்த பாசம் உடைந்துக் கொண்டு பெருங்குரலாய் வெளியேறியது.

-முற்றும்-