Tuesday, 31 May 2016

தந்தை போட்டிச் சிறுகதை - 25

Rate this posting:
{[['']]}
எப்போ  வருவீங்கப்பா.....

இளமாறன் கத்தார் ஏர்வேஸ் விமானத்தில் அமர்ந்திருந்தான். அவனது  மனம் சிறிது நேரத்திற்கு முன்பு மகள் தன்னை போகக் கூடாது என்று நெஞ்சில் சாய்ந்து அழுததை  எண்ணிக் கொண்டிருந்தது.

முதன்முதலாக சொந்தமண்ணைப் பிரிந்தபோது எழாத வலி, தாய், தந்தையை பிரிந்தபோது எழாத வலி, கட்டிய மனைவியை திருமணம் முடிந்து இரு மாதங்களிலேயே பிரிந்து சென்றபோது எழாத வலி, இன்று மகள் கதறியழுததும் நெஞ்சமே வெடித்துவிடும் அளவிற்கு வலித்தது.

அந்த வேதனையை மறக்க விமானத்திற்குள் வந்து கொண்டிருந்தவர்களை பார்க்கத் தொடங்கினான். ஒவ்வொரு முகங்களும் ஒவ்வொரு விதமான உணர்வுகளை தாங்கி இருந்தது.
இளமாறனின் அருகில் ஒருவர் அமர்ந்தார். வயதானவராகத் இருந்தார். அவர் இளமாறனைப் பார்த்து சிநேகிதமாக சிரித்தார். அவர் முகத்திலும் குடும்பத்தை விட்டு பிரிந்து போகும் சோர்வு தெரிந்தது.

தன் மனதிலுள்ள சோகத்தை மறைக்க கண்மூடி இருக்கையில் சாய்ந்தான். அவன் காதுகளில் மகள் கேட்ட வார்த்தையே சுற்றிச்சுற்றி வந்தது. ‘மறுபடியும் எப்போ வருவீங்கப்பா?’
மகள் பிறந்துவிட்டாள் என்றறிந்தபோது அந்த பிஞ்சு ஸ்பரிசத்தை உணரமுடியாமல் முதன்முதலாக வெளிநாட்டில் வேலை செய்வதற்காக மனம் வருந்தியது.

அடுத்து மகள் தவழ்ந்தது, அடியெடுத்து வைத்தது, பேசக்கற்றுக் கொண்டது என்று அவளின் ஒவ்வொரு செயலையும் கண்டுகளிக்க முடியாமல், அனைத்தையுமே கனவில் மட்டுமே கண்டபோது மனம் ஏங்கித் தவித்தது.

அந்த பிஞ்சை நெஞ்சில் போட்டுக் கொண்டு பல கதை பேச மனம் ஆசை பலவிருந்தாலும்  நடைமுறையில் சாத்தியமில்லாமல் போனபோது தன் மீதே கோவம் எழுந்தது.

‘பேசாமல் வேலையை உதறிவிட்டு சென்று விடலாமா’என்றெண்ணினான் . ஆனால், என் மகளுக்கு நான் அருகில் இல்லையென்றாலும் அவளுக்கு அனைத்துமே கிடைக்க வேண்டும். அதற்கு நான் இங்கிருப்பதுதான் நல்லது என்றெண்ணி தன்னை சமாதானப்படுத்திக் கொண்டான்.

இரண்டு வருடங்கள் கழித்து மகளை பார்க்கப் போகும் ஆர்வத்தில் அவளுக்காகத் தேடித்தேடி விளையாட்டுச் சாமான்களும், சட்டைகளும் வாங்கியபோது நோபல் பரிசு வென்றவனை போன்று மனம் குதியாட்டம் போட்டது.

ஏர்போர்ட்டில் மனைவியின் கைகளில் தனது தேவதையை சந்தித்த அந்த நிமிடம், வாழ்வின் பொன்னான நிமிடங்கள். தன்னிடம் வராமல் அந்நியனாக தன்னை பார்த்தவளை கண்டு, மனம் சுனங்கியவனை மனைவியின் ஆறுதல் வார்த்தைகள் சமாதானமடைய செய்யவில்லை.

வீட்டிற்கு சென்ற பின்னரும் மறைந்திருந்து பார்ப்பதும், எட்டியே நிற்பதுமாக இருந்த மகளின் உருவத்தை கண்களில் நிறைத்துக் கொண்டிருந்தான். மாலைநேரம் சிறிது தள்ளி அமர்ந்து விளையாடிக் கொண்டிருந்தவள் மெல்ல எழுந்து மடியில் அமர்ந்து முகம் பார்த்தாள். அப்படியே கைகளில் அள்ளிக் கொண்டான்.
அந்த நிமிடங்களை இப்போது நினைத்தாலும் உடல் சிலிர்த்தது. அந்த நினைவுடனே கண்ணத் திறந்தவனது எதிரில் பக்கத்து சீட்டு பெரியவரின் முகம் தெரிந்தது.

“என்ன தம்பி இப்போத்தான்  முதன்முறையா குடும்பத்தை விட்டு வெளிநாட்டுக்குப் போறீங்களா?”

அவர் தன்னிடம் திடீரென்று கேள்விகேட்டதும் சற்றுத் தடுமாறி... “இல்ல, என் பொண்ணு ரொம்ப அழுதா...போவாதீங்கன்னு. அதுதான் மனசு கேட்கல” என்றான்.

“அப்படித்தான் இருக்கும் தம்பி...ஆம்பளபயலுங்க கண்டுக்க மாட்டானுங்க...நீ போயிட்டு வரும்போது காரு பொம்மை வாங்கிட்டு வா, ட்ரெயினு பொம்மை வாங்கிட்டுவான்னு சொல்லுவான்னுவ. ஆனா, இந்த பொம்பளபுள்ளைங்கதான் போவாதீங்கன்னு அழுது வைக்கும்” என்றார்.

அவர் சொன்னதை கேட்டுத் தலையாட்டியவன் மனதில் மகளின் கண்ணீர் நிறைந்த கண்களே வந்து போனது. பக்கத்து சீட்டு பெரியவரோ அவன் தான் பேசுவதை கேட்கிறானா இல்லையா என்றெல்லாம் பார்க்காமல் பேசிக் கொண்டிருந்தார்.

“நான் வெளிநாட்டுக்கு வேலைக்கு போயி முப்பது வருஷம் ஆச்சு. ஓரளவு எல்லாத்தையும் கரையேத்தியாச்சு. ரெண்டு வருஷத்துக்கு ஒருக்கா ஊருக்கு போகும்போது புள்ளைய கூப்பிட்டு அப்படி செய்யாதடான்னு ஏதாவது சொன்னோம்ன்னு வையுங்க, நீ லீவ்வுக்கு வந்துருக்க...வந்தமா ரெஸ்ட் எடுத்தமா, போனமான்னு இருன்றான்.அவ்வளவுதான் நமக்கு அங்கே ஒட்டுதல்.”

 “உங்களுக்கு எத்தனை பசங்க சார்?”

“மூணு . ரெண்டு பையன் ஒரு பொண்ணு. பெரியவன் பேங்க்ல வேலை பார்க்கிறான். கல்யாணம் பண்ணி அவனுக்கு ஒரு குழந்தை இருக்கு.பெண்ணையும் கட்டிக் கொடுத்தாச்சு. சின்னவன் தான் சுத்திகிட்டு இருக்கான். அவனுக்கு ஒருவழி பண்ணிட்டா, முடிச்சுகிட்டு இங்கேயே வந்துடுவேன்.”

நான் பத்து வருஷமாத்தான் கல்ப்ல இருக்கேன்.கல்யாணத்துக்கு முன்னாடி இருந்தப்ப ஒன்னும் தெரியல. ஆனா, பொண்ணு பிறந்தப் பிறகு என்னால அவளை விட்டுட்டு இருக்க முடியல” என்றான் இளமாறன்.

குடும்பத்துக்காக நம்ம சந்தோஷத்தை அடமானம் வச்சாத்தான் நம்ம பிள்ளைகள் நல்லா இருக்கும் தம்பி ” என்றவர் பெருமூச்சுடன் இருக்கையில் சாய்ந்து கண்களை மூடிக் கொண்டார்.

இளமாறனுக்கு மகள் தன்னிடம் பேசியவை ஞாபகத்தில் வந்தது. அவளிடம் “உனக்கு என்ன வேணுமோ கேளுடா செல்லம்” என்று கேட்டதும், அவள் கூறியவைகளை கேட்டு மனம் நெகிழுந்து போனது.

“நான் ஹோம்வொர்க் முடிச்சிட்டு அப்பா எப்போ வருவாங்கன்னு காத்துகிட்டு இருக்கணும். அப்புறம் லீவ் நாளில் பீச்சுக்கு போகணும். நான் உங்க கையை பிடிச்சுகிட்டு அலையில நிக்கணும். வீட்டில டிவி பாக்கும்போது உங்க மேல சாஞ்சுகிட்டே பார்க்கணும். தூங்கும்போது உங்க மேல காலை போட்டுக்கிட்டு தூங்கனும். எனக்கு இதுதான்ப்பா வேணும். எப்பவும் நீங்க எங்க கூடவே இருக்கணும்.”

ஒரு தகப்பனுக்கு இதைவிட வேறு என்ன வேண்டும். அடுத்த முறை கட்டாயம் காண்ட்ராக்ட்டை முடித்துக் கொண்டு ஊர் திரும்பிவிட வேண்டுமென்று முடிவெடுத்துக் கொண்டான். அதிலும் ஏர்போர்ட்டில் அழுத கண்களுடன் “ எப்போ வருவீங்கப்பா” என்று கேட்டது மேலும் அவன் முடிவைத் திடப்படுதியது.

தோஹா விமானநிலையத்தில் இறங்கி வெளியில் வந்து தனக்காக காத்திருந்த வண்டியில் ஏறிய பின், லேசாக தலைவலிப்பதைப் போல் தோன்றியது.

“எங்கேயாவது ஒரு ஒரு ஹோட்டலில் நிறுத்துங்க சுப்பையா. காப்பி குடிச்சிட்டு போய்டலாம்.”

“ சரி சார்.”

அரைமணி நேரப் பயணத்திற்கு பின் வழியிலிருந்த ஒரு ரெஸ்டாரண்டில் நிறுத்தினார் சுப்பையா.

“நீங்களும் வாங்க.”

“இல்ல சார். நான் குடிச்சிட்டுதான் வந்தேன்.நீங்க போயிட்டு வாங்க.”

உள்ளே சென்று அமர்ந்தவன் காப்பிக்கு ஆர்டர் கொடுத்து, மனைவிக்கு வந்து இறங்கியதை தெரியப்படுத்திவிட்டு அமர்ந்தான். போனிலிருந்த மகளின் படத்தை பார்த்தவனின் மனம் நிறைவாக உணர்ந்தது.

அப்போது பயங்கர சப்தத்துடன் ஏதோ வெடித்தது. திடீரென்று ஹோட்டல் முழுவதும் கரும் இருளும் புகை நாற்றமும் வரத் தொடங்கியது. மீண்டும் பெருத்த சப்தத்துடன் வெடிக்க இளமாரனை நோக்கி நெருப்புத் துண்டமாக சிலிண்டரின் ஒரு பகுதி அவன் மேல் விழுந்தது.

உட்கார்ந்திருந்த இடத்திலிருந்த தூக்கி வீசப்பட்டான். கையிலிருந்த போன் எங்கோ போய் விழுந்தது. ஒருபகுதி உடல் பற்றி எரிய ஆரம்பித்தது.

தன் உயிர்ப் பறவை கூட்டைவிட்டுப் பறக்கிறது என்பதை உணர்ந்தவனது கன்னங்களில் கண்ணீர் கோடாக இறங்கியது. அவனது காதுகளில் மகளின் குரல் “ எப்போ வருவீங்கப்பா”.