Sunday, 22 May 2016

தந்தை போட்டிச் சிறுகதை - 14

Rate this posting:
{[['']]}
அப்பாவிற்கு ஒரு கடிதம்
அன்புள்ள அப்பாவிற்கு,

பேச நினைத்ததை எல்லாம் உங்கள் தோள் மீது கை போட்டு பேசும் உரிமையுடன் இருந்தவன், கடிதம் மூலம் தொடர்பு கொள்ளும் நிலை வரும் என்பதை காலம் தீர்மானித்திருக்கிறது. காலம் துன்பத்தை மட்டுமில்ல, சிற்சில இயல்பான சந்தோஷத்தையும் மாற்றிவிடுகிறது .


கடிதம் எழுதியே பழக்கமில்லாதவன், இன்று எழுதியதற்கு காரணம் “ ரோலக்ஸ் வாட்ச்”. உங்கள் பாசத்தைப் போல் உலகில் நகலே இல்லாத ரோலக்ஸ் வாட்ச்.


சுவிட்சர்லாந்தில் இருந்து வந்திருந்த சுந்தரிடம் உங்களுக்காக வாட்ச் வாங்கிட்டு வரச் சொல்லியருத்தேன். அதைத் தருவதற்காக இன்னைக்கு வீட்டிற்கு வந்திருந்தான்.


யாழினி பிரசவத்திற்கு அவங்கம்மா வீட்டிற்குப் போயிருக்கிறதால், நானும் உங்க பேரனும் மட்டும்தான் இருந்தோம் (ஆமாம் இப்ப யாழினி வீட்டில் கூட எங்க காதல் திருமணத்தை த்துகிட்டாங்க. ஆனால் இன்னும் மாமனார் பழைய பக்கத்து வீட்டு மாமாவாக மாறலை ).


சுந்தர் வாட்சைக் கொடுக்கும் போது இரண்டு பார்சல் இருந்தது. 'இன்னொன்னு எதற்கு?' என்று கேட்டப்பஉங்களுக்கு அவன் சார்பாக ன்னுன்னு  சொல்லிச் சிரிக்கிறான்.


இன்னமும் என் நண்பர்கள் உங்களை இப்போதும் மறக்காமல் இருப்பது பெருமையாக ருந்ததுமுன்னாடியும் இருந்தது. ஆனால் இது குறித்து நடுவில் சில காலம் பொறாமைப்பட்டு இருக்கேன் என்பது உங்களுக்குத் தெரியுமா??.


அதுவரைக்கும் பெயருக்கு முன்னாடி போட்டுகிட்டு இருந்த இனிஷியலை, பெயருக்குப் பின்னாடி போட ஆரம்பித்தது அப்போதுதான்.  பெற்றோர் சொல்லும் எல்லா விஷயத்தையும் எதிர்க்கத் தோன்றும் பால்ய வயதில் எடுத்த குழப்பமான முடிவுகளில் எதுவும் ஒன்று.


 வாட்ச்சைப் பார்த்து உங்க பேரன் கேட்டான்.


 “ நீங்க தான் வாட்ச் கட்ட மாட்டிங்களே! அப்பறம் எதுக்கு வாங்கினிங்க ??”


“ இது எங்கப்பாவுக்காக.”


அவனுக்குப் புரியவில்லை. அவனைப் பொறுத்தவரை அப்பா தான் மகனுக்கு வாங்கித் தரனும். மகன் எதுக்கு அப்பாவுக்கு தரனும் என்று உங்களைப் போலவே நினைக்கிறான். மரபணு சில நேரங்களில் நம் கண்ணுக்குத் தெரியாமல் அதன் வேலையைச் செய்து விடுகிறது.


அதுவும் இதுவரை வீட்டிற்கு வராத, நேரில் பார்க்காம போட்டோவில் மட்டும் பார்த்தவருக்கு எதுக்கு வாட்ச் அப்படின்னு அவனுக்குப் புரியலை .


பல நேரங்களில் அவன் கேள்விக்கு பதில் சொல்ல முடிவதில்லை அல்லது எனக்கு பதில் சொல்லத் தெரியவில்லை. அவன் செய்கைகள் பல நேரங்களில் பார்க்கும் போது முறுக்கு மீசையில்லாத உங்களைப் பார்க்கி மாதிரியே இருக்குஇதையே தான் இன்னைக்கு சுந்தரும் சொன்னான். மீசையில்லா எங்கள் மேவாயைத் தடவியபடி ரெண்டு பேரும் சிரிச்சோம் .


ஞாபகம் இருக்கா , முதல் தடவை புதுசா முளைச்ச பூனை முடியை சலூனில் ஒதுக்கிட்டு வந்த அன்னைக்கு,

“மீசை உனக்கு வயசானதை மட்டும் காட்டலை, எனக்கும் வயசானதைக்காட்டுது, உங்கப்பானுக்கு இன்னும் வயசாகலை” என்றபடி வீட்டிற்குள் துரத்தித்துரத்தி பூனை முடியை மழிச்ச அன்னைக்கு சுந்தரும் நம்ம வீட்டில் தான் இருந்தான் .

பத்தாண்டு கழித்துச் சந்திக்கும் நண்பனிடம் பேச நிறைய விஷயம் இருக்கும், அதுவும் வாய் மூடாமல் பேசும் பழக்கம் இருந்த நான் நிறைய பேசுவேன் என்று சுந்தர் எதிர்பார்த்திருப்பான் போல, அளந்து பேசி, பெரும்பான்மையான கேள்விக்கு தலையசைப்பில் பதில் சொன்னது அவனுக்கு வித்தியாசமாக இருந்திருக்கும் போல.


பேச்சின் நடுவில் சுந்தர் தான் சிசிலி போயிருந்தப்ப எடுத்த போட்டோவைக்காட்டினான் , சூரிய அஸ்தமான கதிர்கள் சிசிலி வீதியில் இருக்கும் பழமையான வீடுகளில் அழகான பரவியிருந்தது .ஆம் காட்பாதர் கதையைப் படித்தவுடன், மைக்கேல் நடந்த வீதியில் அமர்ந்தபடி ஒருமுறையாவது திரும்பவும் காட்பாதர் கதையைப் படிக்க வேண்டும் என்று நாம் பேசிய அதே சிசிலி வீதி .


ஆனால் ஏனோ இப்போது அது என்னை ஈர்க்கவில்லை. இதை கவனித்த சுந்தருக்கு நான் இப்போது பாடல்களையும் விரும்பி கேட்பதில்லை என்பது அதிர்ச்சி.

கல்லூரி காலத்தில் கூட எத்தனையோ முறை உங்கள் மடியில் தலை வைத்து, அம்மா கால் அமர்த்த  நீங்கள் பாடியதைக் கேட்டபடி தூங்கிய கதையை அவனும் தான் கேட்டுயிருக்கான். கம்பீரமான ஆண் குரலிலும் இப்படி பெண் குரலின் மென்மையில் பாட முடியுமா என்று எத்தனை தடவை வியந்து போய் கேட்டுயிருக்குறோம். தேர்வுக்கு ராத்திரி முழுக்க படிக்கும் காலத்தில் தூக்கம் வராமிருக்க அம்மாவை காப்பி போட்டு வரச் சொல்லி , அது வரும் வரைக்கும் உங்கள் மடியில் படுத்து உங்களைப் பாடச் சொல்லி, அது தரும் சுகத்தில் காப்பி வருவதற்குள் எத்தனையோ தடவை தூங்கியிருக்கேன்.

அப்போழுதெல்லாம் அவன் பலமுறை சொல்லியிருக்கான். “நீயும் உங்கப்பாவையும் எந்த ஒளிவுமறையும் இல்லாம நண்பர்கள் மாதிரி பழகறதைப்பார்க்கிறப்ப பொறமையாக இருக்குடா. கண்டிப்பாக நானும் என் குழந்தைய உங்கப்பா மாதிரி வளர்க்கனும்.”


அவன் மட்டுமா ,சொந்தகாரங்க, உங்க நண்பர்கள் இதை நாம ஒன்னாயிருக்கப்ப சொல்லியிருக்கங்க , நான் உங்ககிட்ட மறைச்ச ஒரே விஷயம் யாழினிய காதலிச்சத மட்டும் தான், அந்த வயசுக்கே உரிய குறுகுறுப்பா இல்லை அவங்கப்பாவும் நீங்களும் நண்பர்கள் என்பதாலா என்று இதுவரைக்கும் எனக்குப்புரியவில்லை .


யாழினி கூட கல்யாணத்திற்குப் பிறகு “ உன்னைக் காதலிச்சதுக்கு காரணம் நீ மட்டுமில்ல , பெண் குழந்தையில்லாத  உங்கப்பாம்மா, என்னை சொந்த பொண்ணு மாதிரி பார்த்துப்பாங்க என்ற நம்பிக்கையும் தான்” என்று சொல்லியிருக்காள்.


அந்த நம்பிக்கையை ஏன் சுக்குநூறா உடைச்சிங்க ???


சுந்தர் கிளம்பும் வரை நீண்ட நாள் கழித்து நண்பனைப் பார்த்த சந்தோஷத்தை விட என்கிட்ட இருந்த மாற்றத்தை நம்ப முடியாத ஒருவித அதிர்ச்சியோட தான் இருந்தான். என்னோட இந்த மாற்றத்தை அவனால் ஒத்துக் கொள்ள முடியலை.


“பத்து வருஷத்தில் ஏன்டா இவ்வளவு மாறிட்ட ??” கேட்டபடி இருந்தான் .


எந்தவித தப்பும் செய்யாதவனுக்கு இப்படி ஒரு ஏமாற்றத்தைத் தருவது தப்புனு தெரிஞ்சிது.


நீங்களும் இப்படி ஒரு ஏமாற்றத்தைத் தானே எனக்குத் தந்திங்க?

எனக்கும் இது புரியவில்லை, புரியவைக்க வேண்டிய நீங்களும் அருகில் இல்லை ,ஒருவேளை பிள்ளைய சுதந்திரமாக வளர்த்திருக்கோம், அவனுக்கு எல்லாம் புரியும் என்று நினைத்து விட்டீர்களா ?? நான் உங்களைச் சார்ந்தே இருக்க விரும்பினேன் என்று ஏன் உங்களுக்குப் புரியவில்லை ??


எப்போதும் உங்கள் கூரை கீழ் வாழ விரும்பினவனுக்கு , திடீர்னு அந்தக் கூரை விலகினால் ஏற்படும் வழி ஏன் புரியவில்லை .


சுந்தர் சொன்னான். “ நடந்ததை எதுவும் மாத்த முடியாது, மாற்றமே மாற்றமில்லதாது அதை புரிஞ்சிகோ, எது மத்தவங்களை உன்னை நோக்கி ஈர்த்ததோ , அதை விட்டுடாதே  ”

“ பேசாம் நாம வளர்ந்திடாம ,குழந்தையா அப்பாம்மா மடியில் விளையாடிகிட்டே இருந்திருக்கலாம்” என்றபடி உங்க பேரன் தலைய கோதிவிட்டு கிளம்பிச்சென்றான்.

கிளம்பிய பத்து நிமடத்தில் செல்ஃபோனில் அழைத்தான்,

“அப்பா உன் கூடவே இருந்திருக்கலாம், நீயும் உன் சுயத்தை இழக்கமால் இருந்திருப்பே!” வேறு எதுவும் பேசமால் தொடர்பைத் துண்டித்தான்.

ஆமாம் நீங்க என் கூடவே இருந்திருக்கலாம். என் வாழ்வில் பல மாற்றம் நடந்திருக்கலாம்.


சிசிலி வீதிகளில் கை கோர்த்து நடக்க விட்டாலும், வந்தியதேவன் போன பழையாறு -குடந்தை - நாகை வீதிகளில் போயிருக்கலாம்.


ரோலக்ஸ் வாட்ச் இல்லாவிட்டாலும் ஒரு சட்டை வாங்கித் தந்திருக்கலாம்,


யாழினி அப்பாவே உங்களோடு சேர்ந்து எங்கள் கல்யாணத்தை நடத்தியிருக்கலாம்.


கடைசி செமஸ்டர் பீஸ் கட்டிய ரசீதை உங்களிடம் காட்டியவன். முதல் மாச சம்பளத்தைத் தந்திருக்கலாம் .


பாதி பாட்டு பாடிக்கிட்டு இருக்கும் போது, நோயின் தாக்கத்தால் மூச்சு வாங்க, அதற்கு மேல் பாட முடியாமல் குரல் உடைந்து அழுததைப் பார்க்காமல் இருந்திருந்தால் இன்னும் பாட்டை ரசிக்கும் மனது இருந்திருக்கலாம் .


அவையத்து முந்தி இருப்பச் செயல்.” நிறுத்திய உங்களை “என்னோற்றான் கொல்எனும் சொல் “ என கேட்கச் செய்திருக்கலாம்.இது எல்லாத்தையும் விட நான் உண்மையான மகிழ்ச்சியோட இருந்திருக்கலாம்.


நீங்கள் இன்னும் கொஞ்சம் காலம் எங்களோடு இருந்திருக்கலாம்.


இப்படிக்கு,
கொள்ளி மட்டும் வைத்த மகன் .