Sunday, 22 May 2016

தந்தை போட்டிச் சிறுகதை - 18

Rate this posting:
{[['']]}

ரெட்ரோ

மணி பார்த்தேன். எட்டாகி விட்டிருந்தது. கிளம்ப வேண்டும். இப்போதெல்லாம் தாமதமானாலும் அம்மா ஏதும் கேட்பதில்லை. மிஞ்சிப் போனால் வீட்டுக்குச் சாப்பிட வருகிறேனா இல்லையா என்று கேட்பதோடு சரி. அப்பா அதுவும் கிடையாது. 

அப்பா பேசாமலிருப்பதற்குப் பெரிதாய் ஏதும் காரணங்களில்லை. இப்போதென்றில்லை. எப்போதுமே அப்பா பெரிதாய் பாசம் பாராட்டியதில்லை. கொஞ்சம் ஒதுங்கியே இருக்கும் டைப்.

அம்மாவுக்குக் கோபம். என் மீது. என் தனிப்பட்ட சுதந்திரங்களின் மீது நான் வைத்திருக்கும் பிடிவாதம் மீது. அன்பைக் காட்டுகிறேன் பேர்வழி என்று என் மீது தன் யோசனைகளைத் திணிப்பதற்கு நான் தெரிவித்த எதிர்ப்பினால் வந்த கோபம். தயாளுடன் நான் பழகுவதால் வந்த கோபமாகக் கூட இருக்கலாம்.”அம்பது வயசு ஆளோட உனக்கு என்ன பழக்க வழக்கம் வேண்டிக் கிடக்கு?” முதலில் பயங்கர எதிர்ப்பு தயாளுடன் நான் பழக. பிறகும் நான் அசைந்து கொடுக்காததால் கோபம். அதற்காக இத்தனை வருடங்களாகவா கோபம் இருக்கும்?

தயாள் என்றவுடன் ஞாபகம் வருகிறது. அவனைப் பார்த்து மூன்று நாட்களாகி விட்டது. போகும் வழியில் தயாளைப் பார்த்து விட்டுப் போவது என்று முடிவு செய்து கொண்டேன். தாமதமாகி விட்டதே? அதனாலென்ன? கேட்பதற்குத் தான் ஆளில்லையே?” என்று கேள்வியும் நானே பதிலும் நானேவாய் சிரித்துக் கொண்டேன்.

வெளியில் வந்து வண்டியை எடுத்தேன். காற்றில் குளிர் கலந்திருந்தது. நிதானமாய் வண்டியைச் செலுத்தினேன். தயாளைப் பற்றிய நினைவுகள் மெல்லச் சூழ்ந்தன. நான் மட்டுமல்ல.தயாளின் வீட்டில் பெரும்பான்மை நேரங்களில் இளைஞர்களைக் காணலாம். எல்லாருக்கும் ஏதோ ஒரு வகையில் தயாள் ரோல் மாடலாய் இருப்பதால். என் மீது மட்டும் தயாளுக்கு சற்றே அதிகப்படி பிரியம். அல்லது அவன் நடவடிக்கைகளைக் கொண்டு நானாக அப்படி நினைத்துக் கொண்டிருந்தேன்.

தயாளின் வீடு வந்திருந்தது. வண்டியை நிறுத்தி விட்டு இறங்கி உள்ளே நடந்தேன்.கதவை நெருங்கியதும் மெல்லத் தழுவிக் கொண்டது அந்த மணம். எப்போதும் தயாளின் வீட்டிலிருக்கும் அந்த மணம். மனம் என்ன சங்கடத்திலிருந்தாலும் இதமாக வருடிக் கொடுக்கும் மணம்.

வாசலிலேயே நின்று அந்த மணத்தை முழுவதுமாக உள்வாங்கி விட்டு, உள்ளே நுழைந்தேன். உள்ளே நுழைந்தவுடன் அடுத்த மணம் நாசியைத் தாக்கியது. கச்சிதமாகத் தயாரிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் திடமான தேநீரின் மணம். தயாள் இப்படித் தான். எப்போதும் ஆச்சரியம். வண்டியில் வரும் போது தான் நினைத்தேன். ஒரு தேநீர் குடித்தால் நன்றாக இருக்குமென்று. எப்படித் தான் தெரிந்தது இவனுக்கு ? அதுவும் சரியாக நான் வரும் நேரம்?

சம்பிரதாய வரவேற்புகள், முகமன்கள், துவக்கங்கள் ஏதுமற்றவை எனக்கும் தயாளுக்குமான உரையாடல்கள். திடீரெனத் துவங்கும். திடீரென முற்றுப் பெறும். சமயத்தில் சேர்ந்தாற் போல் ஒரு வாரம் கூடப் பேசாமலிருப்போம். ஒரு வார இடைவெளிக்குப் பிறகு சந்திக்க நேரும் போது ஏதும் நடவாதது போல் விட்ட இடத்திலிருந்தே தொடர்வோம்.

ஹால் மின்விசிறியை ஓட விட்டு சோபாவில் சரிந்து கண்களை மூடிக் கொண்டேன். சமையலறையிலிருந்து வந்து கொண்டிருந்த தேநீர் மணம் அருகே சமீபிப்பதை உணர முடிந்தது. மெல்லக் கண்களைத் திறப்பதற்கும் தயாள் தேநீர்க் கோப்பையை டீபாயின் மேல் வைத்து விட்டு எதிர் சோபாவில் அமர்வதற்கும் சரியாயிருந்தது.

தேநீர்க் கோப்பையைக் கையில் எடுத்தவள் தயாளின் முகத்தைப் பார்த்துக் கொண்டே தேநீரை உறிஞ்சினேன். சட்டென்று , “ எதுக்காக தயாள் எனக்காக நீ இவ்வளவும் பண்ற?” என்றேன். கண்ணாடியைக் கழற்றி டீ ஷர்ட்டில் துடைத்துக் கொண்டிருந்த தயாள் மேலும் சில விநாடிகள் அதைச் செய்து கண்ணாடியை மாட்டியபடியே என்னைப் பார்த்து, “ என்ன பண்ணேன்?” என்றான்.

அந்தக் கேள்விக்கு உடனடியாக என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. சிறிய இடைவெளிக்குப் பின், “ எனக்கு இப்போ வந்திருக்கற நிதானம், எந்த விஷயத்தையும் நான் பாக்கற விதம், என்னோட ரசனைகள், எண்ணங்கள், எல்லாமே..... எல்லாமே உன்னால மாறியிருக்கு தயாள். அது ஏன்?” என்றேன்.

எதிர்பார்த்தபடியே ஒரு புன்னகை பதிலாக வந்தது தயாளிடமிருந்து. “என்ன சொல்ற?” என்றான்.

“இப்ப பாரேன். ஐ வாஸ் ஜஸ்ட் திங்கிங் அபவுட் அ டீ. இங்க வந்தா நீ டீயோட ரெடியா இருக்க. இதெல்லாம் எப்படி? வேவ் லெங்க்த் மட்டுமா? எதுக்காக எனக்கு நீ இதேல்லாம் பண்ணனும்?” என்றேன்.

மீண்டும் கொஞ்சம் சத்தமாகவே சிரித்த தயாள், “டீ ஆறிடப் போகுது. குடி. “ என்றவாறு தன் டீயை உறிஞ்சத் தொடங்கினான்.

முதலில் நான் தயாளை அவன் இவன் என அழைப்பதே சரியா என்று தெரியவில்லை. பழகி விட்டது என்ற போதிலும், தயாள் அதைக் கண்டு கொள்வதில்லை என்ற போதிலும்.வயதுக்கு மரியாதை கொடுக்க வேண்டுமே என்று மனசின் ஏதோ ஒரு மூலையில் தோன்றினாலும் இப்படி அழைப்பதே மனசுக்கு உவப்பானதாக இருக்கிறது.

முதன் முதலில் தயாளை சந்தித்த தினம் நன்றாக ஞாபகம் இருக்கிறது. கல்லூரி அட்மிஷனுக்காகப் போயிருந்த போது, தன் பழைய அபார்ட்மென்டின் வாட்ச்மேன் மகனை அழைத்து வந்திருந்தான் கல்லூரி அட்மிஷனுக்காக. ஆனால் அதன் பின்னர், இந்த நட்பு எப்படி இவ்வளவு நெருக்கமும், ஆழமும் அர்த்தமும் கொண்டதாக மாறியது என்பது புரியவில்லை.

கல்லூரியில் சேர்ந்தது முதல், என்னுடைய ரசனைகள், பார்வைகள், கருத்துக்கள், எதையும் அணுகும் விதம் என எல்லாவற்றையுமே தயாள் மாற்றிப் போட்டிருப்பதை உணரவே இப்போது தான் எனக்குப் பக்குவம் வந்திருக்கிறது.

அடிக்கடி நினைத்துப் பார்ப்பதுண்டு. தயாள் இல்லாமலிருந்தால் நான் இப்போது எப்படி இருந்திருப்பேன் என்று . வாழ்க்கையை நடத்தும் போக்கில் பெரிதாய் ஏதும் வித்தியாசங்கள் இருந்திராது. அது பாட்டுக்கு ஏற்கனவே போட்டு வைக்கப்பட்ட பாதையில் போய்க் கொண்டிருந்திருக்கும். ஆயின் வாழ்க்கையை வாழும், அனுபவிக்கும் நொடிகள் நிச்சயம் தலைகீழாய் மாறியிருக்கும். அது மட்டும் நிச்சயம். வாழ்க்கையை நடத்துவதற்கும் வாழ்வதற்கும் ஏகப்பட்ட வித்தியாசங்கள் உண்டே! 

டீ முடிந்து விட்டிருந்தது. தயாளைப் பார்த்துக் கொண்டே இருந்தவள், சட்டெனறு கேட்டேன் “தயாள், இது ஒரு வேளை லவ்வா இருக்குமோ?” என்றேன்.

திடுக்கிட்ட தயாள், “என்ன சொன்ன? கம் அகைன்” என்றான்.

“போயா. திரும்பல்லாம் சொல்ல முடியாது. யு லாஸ்ட் இட்” என்றேன்.

சிரித்துக் கொண்டான். பின் “ சரத்துக்கு என்ன பதில் சொல்லப் போற?” ஹி சீம்ஸ் டு பி ய ரியலி நைஸ் கை” என்றான்.

“என்ன சொல்லணும்?” என்றேன்.

“உனக்கு என்ன தோணுதோ சொல்லு. பட் ஒரே ஒரு சின்ன விஷயம். டோண்ட் கீப் ஹிம் வெயிட்டிங். ரொம்பக் காக்க வெக்காத. அது தப்பு. நீ வேணாம்னு சொன்னாலும் அவன் உன்ன திரும்ப வந்து தொந்தரவு செய்வான்னெல்லாம் எனக்கு தோணல. அவனப் பார்த்து பேசின வரைக்கும் எனக்கு அப்படிப்பட்ட பையனாத் தெரியல” என்றான்.

பெருமூச்சு விட்டவள், “ ஹ்ம்ம்... அதே தான் நானும் யோசிச்சேன். கமிங் சண்டே அப்பா அம்மா ரெண்டு பேருமே வீட்டுல இல்ல. வீட்டுக்கு வர சொல்லிருக்கேன் அவன. பேசிப் பாக்கறேன்” என்றவள், “ சரி....நீ எப்பய்யா வீட்டுக்கு வரப் போற? ஐ நோ. நீ என்ன சொல்லப் போறன்னு எனக்குத் தெரியும். இத்தன வருஷமா கேட்டு சலிச்சுட்டேன். இருந்தாலும் கேக்கறேன். எப்ப வர்ற?” என்றேன்.

புன்னகைத்த தயாள், “வரேன். வரேன். “ என்றான்.இந்தப் பதிலைக் கேட்டுச் சலித்து விட்டது. “ போடா. போர் நீ. நான் கிளம்பறேன்” என்றபடி கிளம்பி விட்டேன்.

வீட்டுக்குள் நுழைந்து செருப்பைக் கழட்டும் போதே கவனித்தேன். அம்மா அப்பா ரெண்டு பேரும் இன்னும் தூங்கவில்லை. அவர்களது வழக்கமான தூங்கும் நேரம் தாண்டி விட்டிருந்தது. அப்பா கம்பியூட்டரில் அமர்ந்து சீட்டுக் கட்டு விளையாடிக் கொண்டிருந்தார். அம்மா சமையலறையில் இருந்தாள். அம்மா சமையலறை வேலைகளை எப்போதும் சீக்கிரம் முடித்து விடுவாள்.இன்றென்ன?

யோசிக்கும் போதே வெளியே வந்தவள், “ எங்க போயிட்டு வரே?” என்றாள். இத்தனை நாட்களாகக் கேட்காதவள் இப்போது மீண்டும் ஆரம்பிக்கிறாள். “தயாள் வீட்டுக்கு” என்றேன்.

அம்மா அப்படிக் கத்துவாள் என்று எதிர்பார்க்கவே இல்லை. “எத்தனை தடவை சொல்லிருக்கேன் அங்க போக வேண்டாம்னு. உனக்கு அறிவில்லையா?” என்று கடும் ஆங்காரத்துடன் கத்தினாள். அம்மா அதிருப்தி தெரிவிப்பது எதிர்பார்த்தது தானென்றாலும் இவ்வளவு வன்மத்தை, இந்தத் தொனியை எதிர்பார்க்கவில்லை என்பதால் சற்றே திடுக்கிட்டேன். 

அம்மாவுக்கு விளக்கம் சொல்ல முற்படும் போது தான் அப்பாவிடமிருந்து வெளிப்பட்டது ஆயுளுக்கும் அருவருக்க வைக்கும் வார்த்தைகள். “ போயும் போயும் அவ்வளவு வயசானவனையா தேடிப் போவ?” என்று என்னைத் திரும்பிப் பார்க்காமல் கம்ப்யூட்டர் திரையைப் பார்த்தபடி சாவதானமாய்த் துளிக் கூடக் கூசாமல் சொன்னார்.

உடல் முழுக்கப் புழுக்கள் நெளிவது போலிருந்தது. அப்பாவின் வியர்வை வீச்சம் அறை முழுவதும் பொங்கிப் பெருகி வழிவது போல் பிரம்மையேற்பட்டது. அந்த இடத்தில் நிற்கப் பிடிக்கவில்லை. அம்மா முகத்தைப் பார்த்தேன். அம்மாவும் அதிர்ந்து வியர்த்து தான் போயிருந்தாள். அதை விடவும் அதிர்ச்சியாக இருந்தது, அம்மா அப்பாவை அந்த வார்த்தைக்காக ஒரு சிறு மறுப்புக் கேள்வி கூடக் கேட்காதது.

அம்மா வியர்த்து வழிந்து கொண்டிருந்தாள். ஏன் இப்படி பயப்படுகிறாள்? தன் பெண்ணை ஒருவன், அவன் தகப்பனாகவே இருந்தாலும் இப்படி ஒரு வார்த்தை சொல்லியிருக்கிறான். அதைக் கேட்டுக் கொண்டும் இன்னும் நிற்கிறாளே? சட்டென்று என்ன செய்வது என்று புரியாத நிலையில் அறைக்குள் புகுந்து கதவைச் சாத்திக் கொண்டேன்.

இரண்டு நாட்களாகியும் இன்னமும் உடம்பில் அதிர்ச்சி மிச்சமிருந்தது. ஏன் நான் அப்பாவை எதிர்த்துப் பேசவில்லை என்று எனக்கே புரியவில்லை. இந்த வீட்டில் இருப்பது முள் மேல் இருப்பது போல் இருக்கிறது. இருந்தும் உணர்ச்சி வசப் பட்டு முடிவெடுக்கவில்லை. சீக்கிரம் போய் விட வேண்டும்.அது மட்டும் மனசில் ஒலித்துக் கொண்டே இருந்தது. ஏனோ தயாளிடம் இந்த விஷயம் பேசத் தோன்றவில்லை. நெருடலாய் இருந்தது. அவனைப் பார்க்கப் போவதையும் தவிர்த்தேன்.

சட்டென்று சரத் ஞாபகம் வந்தது. அவனை வேறு வீட்டுக்கு வரச் சொல்லியிருந்தோமே?இருக்கிற நிலையில் அவனை வேறு சந்திக்க வேண்டுமா? வர வேண்டாமென்று சொல்லி விடுவோம். இல்லை. வரட்டும். அவனிடம் பேசினால் கொஞ்சம் ஆறுதலாய் இருக்கும். என்னென்னவோ குருட்டு யோசனைகள். கடைசியில் எதுவும் சொல்லாமலே விட்டு விட்டேன். வரட்டும். பார்ப்போம். 

சாப்பிட்டாயா தூங்கினாயா எதுவும் கேட்கவில்லை அம்மா இரண்டு நாட்களாக. அந்த சம்பவத்தின் பின் அப்பாவும் எதுவும் பேசவில்லை. அவருடன் ஒரே வீட்டில் இருக்கிறோம் என்பதே துணியில் படிந்த கறையைக் கழுவாதிருப்பது போல் உணர்வைத் தந்தபடியே இருந்தது.

வாரக் கடைசியில் கிளம்பிப் போய் விட்டார்கள். சோர்ந்து போய் அமர்ந்திருந்த நேரத்தில் தான் சரத் வந்து சேர்ந்தான். டல்லாக இருப்பதைப் பார்த்து என்னை சமனப்படுத்த ஏதேதோ முயற்சித்தான். பாவம். 

“உன் சின்ன வயசு போட்டோஸ்லாம் இருக்கா? பாக்கலாமா?”

“நானே பார்த்ததில்லைடா அதெல்லாம்”

“ ஏன்?”

“அதென்னவோ. அம்மா எப்பவோ ட்ரங்க் பெட்டில இருக்கறதா சொன்ன ஞாபகம். ஆனா ஏனோ பாக்கணும்னு தோணவே இல்ல.”

“இப்ப பாக்கலாமே? நானும் கூட இருக்கேனே. எடுத்துட்டு வாயேன்”

“போடா. வேற வேலை இல்ல. யாரு பொட்டியை எல்லாம் இறக்கிகிட்டு”

“நான் இறக்கி தரேன். ப்ளீஸ்”

“சரி சரி. நானே போய் எடுத்துட்டு வரேன். படுத்தல்டா நீ”

மேலே ஏறிப் பெட்டியை எடுத்துக் கீழே இறக்கும் முன் சரியாய் மூடாத பெட்டி சரிந்தது. உள்ளே உதிரியாக வைத்திருந்த போட்டோக்கள் சில சிதறின. அதில் ஒரு போட்டோவில் அம்மா அப்பாவுடன் நான் நின்றிருந்தேன். தூசி பறக்க, ஓரிரண்டு தும்மல்களைப் போட்டு விட்டு அந்தப் போட்டோவை எடுத்து தூசு தட்டினேன். அம்மாவின் அருகே கை பிடித்துக் கொண்டு நான். இரண்டு வயசு இருக்குமா? பக்கத்தில்.... பக்கத்தில்.. அப்பா.... அப்பா....ஆனால் இது..... மேலும் சில போட்டோக்கள். எல்லாவற்றிலும் அப்பாவாய்...ஏன்? ஏன்?

வண்டியை நிறுத்தி விட்டு உள்ளே நுழையும் போதே தேநீர் மணம். ரசிக்கும் மனநிலையில் நானில்லை. எதிரே தயாள். தேநீர்க் கோப்பையை முகத்துக்கு நேரே நீட்டினான். அத்தனை நேரம் இருந்த பரபரப்பும் பதற்றமும் எப்படி மட்டுப்பட்டதென்றே தெரியவில்லை. தேநீர்க் கோப்பையை வாங்கிக் கொண்டு சோபாவில் பொத்தென அமர்ந்தேன்.

எதிர் சோபாவில் தயாள். அவனையே பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்தவன், கண்களாலேயே என்ன? என்பது போல் பார்த்தான். “ ஏன் தயாள்?”

“என்ன ஏன்?”

“ஏன் இத்தன வருஷமா என் கிட்ட சொல்லல நீ தான்னு?”

ஒரு நொடி. ஒரே நொடி தயாளின் முகம் மாறியது. பின் மீண்டும் அதே பழைய பழகிய புன்னகை. “ டீ ஆறிடப் போவுது. ஹேவ் இட்” என்றபடி தன் தேநீரை உறிஞ்சத் துவங்கினான்.

சில நொடிகள் அவனையே பார்த்துக் கொண்டிருந்தேன். பின் மெல்லக் கோப்பையிலிருந்த தேநீரை உறிஞ்சத் துவங்கினேன்.