Thursday 12 May 2016

தந்தை போட்டிச் சிறுகதை - 9

Rate this posting:
{[['']]}
அப்பாவின் நிழல்

ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கியிருந்த நேரத்தில் தனது தோளை யாரோ ஒருவர் தொடுவதை உணர்ந்த பிறகுதான் சுய நினைவிற்கு வந்தான் சரவணன். யாரைப் பற்றிய சிந்தனையில் இருந்தானோ அவர்தான் தன் அருகிலும் நிற்பதைக் கண்டு சட்டென எழுந்து நின்றான். 
     வேலுச்சாமி மென்மையாய் ஒரு புன்னகையை உதிர்த்துவிட்டு அவனுக்கு ஒரு டம்ளர் டீயைக் கொடுத்தார். தானும் ஒரு டம்ளர் டீயை எடுத்துக் கொண்டு அருகில் இருந்த மணல் மேட்டிற்குப்போய் அமர்ந்து கொண்டார். 

     ஆவி பறக்கும் டீயை மெதுவாய் உறிஞ்சிக் கொண்டே அவரைப் பார்த்தான். இவன் தன்னையே கவனித்துக் கொண்டு இருக்கிறான் என்பதை அறிந்தவர், மீண்டும் ஒரு புன்னகையைத் தவழவிட்டார். அந்தச் சிரிப்பில், எதற்காக தன்னையே பார்வை மாறாமல் பார்க்கிறாய் தம்பி என்றதொரு கேள்வி மறைந்திருந்தது. அப்படி, பார்வையால் அவர்  விசாரித்த தோரணை அவனை சங்கடப் படுத்தியது. பார்வையைத் தாழ்த்திக் கொண்டு ஒன்றும் இல்லை என்பதைபோல தலையாட்டிவிட்டு டீயைக் குடிக்க ஆரம்பித்தான்.
     இப்படி அடிக்கடி நம்மையறியாமல் அவரைப் பார்ப்பதும் கவனிப்பதும் தொடர்ந்து கொண்டே போவதால் அவர் தன் மனதில் எதையாவது தவறுதலாய் நினைத்து விடப் போகிறாரோ என்ற ஒரு பதற்றமும் தோன்றியது. இத்தனை நாட்கள் தன் சொந்த உறவினர் போல் இங்கு வலம் வந்து கொண்டிருந்தவர் தன்னை விட்டு விலகிச் சென்றுவிடுவாரோ என்ற கவலையுடனும் சிந்தனையுடனும் இருந்தவனுக்கு தற்போது இந்தப் பதற்றமும் சேர்ந்து அவனைத் தடுமாற வைத்தது. மீண்டும் அவரைப் பார்க்காமல் இருக்கும் வகையில் அங்கிருந்து எழுந்து வேறுபக்கமாய் நடந்து சென்றான்.

     வேலுச்சாமி இங்கு வந்து இரண்டு ஆண்டுகள் ஓடிவிட்ட நிலையில் இப்போது திடீரென்று தனது சொந்த ஊருக்குக் கிளம்ப வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். முன்னோர்களின் சொத்துப் பரிவர்த்தனைக்கு ஒரு கையெழுத்து வாங்க வேண்டும் என்ற காரணத்திற்காக அவரின் அண்ணன் மகன் வேலுச்சாமியைத் தேடி வந்திருக்கிறான். சரவணனால் இந்த எதிர்பாராத விஷயத்தை கிரகித்துக் கொள்ளமுடியவில்லை. 

     வந்திருப்பவனின் வயற்காடடில் வெகு காலம் உழைத்தவர்தான் வேலுச்சாமி. மருகளின் சொற்களை சகித்துக் கொள்ள முடியாமல் வெளியேறி., எங்கெங்கோ அலைந்து திரிந்து கடைசியாக இந்த ஊரில் இருக்கும் சோலைமலையின் வீட்டிற்கு வந்து சேர்ந்தார். அதன்பிறகு சரவணன் நடத்திக் கொண்டிருக்கும்  கடையில் ஐக்கியமாகிவிட்டார். 
     ஊருக்குக் கிளம்பவேண்டிய சூழ் நிலையில் தயாராகி இருந்தவரின் மனதில் எந்தவித சலனமும் தென்படவில்லை. அமைதியாகவே இருந்தார். சரவணன் அடைந்த பதற்றத்தையும் வருத்தத்தையும் அறிந்து கொண்டாரா அல்லது அதை வெளிக்காட்டாமல் இருக்கிறாரா என்பது எதுவும் சரவணனுக்குப் புரியவில்லை. டீயைக் குடித்துவிட்டு எழுந்து வந்தவர் சரவணனின் கையில் இருந்த டம்ளரையும் வாங்கிக் கொண்டு அதைக் கழுவி வைக்கப் போனார்.

     ஊருக்குப் போனால் திரும்பவும் இங்கு வருவேன் என்பதையோ அல்லது ஊரிலேயே அண்ணன் மகனுடன் தங்கி விடுவேன் என்பதையோ சொல்ல முடியாத விரக்தியில் இருக்கிறார் என்பதை மட்டும் அவர் எதையும் பேசாமல் இருப்பதன் மூலம் கொஞ்சம் அறிந்து கொள்ள முடிந்தது. தானே மறந்துவிட்ட சொத்திற்காக தன்னைத் தேடி வந்திருக்கிறான். அதன் பயனை அவன் குடும்பமாவது அனுபவிக்கட்டும் என்பதற்காகவாவது போயாக வேண்டிய இக்காட்டான நிலையில்தான் நான் இருக்கிறேன் என்பதையும் அவர் பார்வை சொல்லாமல் சொல்வதையும் புரிந்துகொள்ள முடிந்தது.

     சரவணன் மட்டுமல்லாது இங்கு வேலை செய்யும் ஆட்களும் வருத்ததுடன் இருந்தனர். வேலுச்சாமியை அழைத்துப் போக வந்திருப்பவன் இங்கிருக்கும் ட்ரைவரிடம் சொன்ன வார்த்தைதான் இங்கு நிலவும் வருத்தங்களுக்குக் காரணம். ’எனது பெரியப்பா விருப்பப்பட்டால் எங்களுடனேயே தங்கிக் கொள்ளலாம். நான் ஆரம்பித்திருக்கும் பால்பண்ணையை அவர் கவனித்துக் கொள்ளலாம்’ என்று அவன் சொல்லி இருந்தான். 

     சிறு தடுமாற்றத்துடன் வீடடிற்குச் சென்ற சரவணன் அப்படியே படுத்துவிட்டான். அவரைப்பற்றிய சிந்தனைகள் அவன் மனதில் ஓட ஆரம்பித்தது.

         சரவணனின் கட்டுமானப் பொருட்கள் விற்பனையகத்தில் உள்ளே இருந்து கவனிக்க நம்பிக்கையான ஒரு நல்ல ஆளைத் தேடிக் கொண்டு இருந்த சமயத்தில்தான் வேலுச்சாமி இங்கு வந்தார். சரவணனின் வீட்டிற்குக் கொஞ்சம் தொலைவில் உள்ள ஒரு தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து நடத்திக் கொண்டு இருக்கும் சோலைமலை என்பவரின் உறவினர்தான் இந்த வேலுச்சாமி. சோலைமலை வீட்டிற்கு விருந்தாளியாக வந்தவர் பிறகு தனது சொந்த ஊருக்குத் திரும்பவில்லை. வேலுச்சாமிக்கும் குடும்பம் என்று ஒன்றும் இல்லாத காரணத்தினால் ஊருக்குத் திரும்ப வேண்டும் என்ற அவசரமும் அவசியமும் இல்லாமல் போனது. அவரின் நிலைமையினை மனதிற்கொண்ட சோலைமலையும் அவரையும் தன்னகத்தே வைத்துக் கொண்டார். வேலுச்சாமியும் சிறுசிறு வேலைகளைக் கவனித்துக் கொண்டும் சோலைமலைக்கு விவசாயத்தில் உதவிக் கொண்டும் இருந்தார். 

     ஒரு நாள் சோலைமலையின் வீட்டு வேலைக்காக கொஞ்சம் மணலும் ஜல்லியும் வாங்கிவர சரவணனின் குடோனிற்கு வந்தார். தொலைவில் வரும்போதே வேலுச்சாமியைக் கவனித்தவனுக்கு உடலில் ஒரு சிலிர்ப்பு ஏற்பட்டது. அவரின் உருவமும் அவரின் நடையும் அவனை ஒரு உலுக்கு உலுக்கிவிட்டது. அவர் இன்னும் சற்றுப் பக்கம் வர வர உட்கார்ந்திருந்தவன் தன்னையறியாமலே எழுந்து நின்று அவரைக் கவனிக்க ஆரம்பித்தான்.    

     ”தம்பி நீங்கதான் ஓனரா?” என்று கேட்டார். 

     “ஆமாம். உங்களுக்கு என்ன வேணும்? என்றான் சரவணன்

     “சோலைமலை வீட்டிற்கு மணலும் ஜல்லியும் வேணும். வாங்கிட்டு வரச் சொன்னார்”

     ”எத்தனை சட்டி மணல், எத்தனை சட்டி ஜல்லி வேண்டும். வாங்க போட்டுத்தர்றேன்”

     அவரிடம் சொல்லிக் கொண்டே மணல் குவிக்கப்பட்ட இடத்திற்கு அழைத்துக் கொண்டு போனான். வேண்டிய அளவு மணலையும் ஜல்லியையும் அவர் கொண்டு வந்திருந்த சாக்குகளில் அளந்து போட்டுவிட்டு  தொகையினை ஒரு சீட்டில் எழுதிக் கொடுத்துவிட்டான். தன்னிடம் உள்ள ஆட்களை அந்த வேலைக்கு அனுப்பி வைக்காமல் தானே முன்சென்று அவருக்குப் பொருட்களை எடுத்துக் கொடுத்தான். அந்த அளவிற்கு ஏதோ ஒரு புத்தூணர்வு அவன் மனதில் இருந்தது. அங்கிருக்கும் பணியாட்களும் அதைக் கவனிக்காமல் இல்லை. அவர் போனபின் அவரின் பின்னாலயே அவனின் மனதும் போனது. அவரைப் பார்த்தவுடன் தனக்கு மிகவும் பரிச்சயம் ஆனவர் போன்றதொரு மன நிலை உருவானது.  
                                  
அவருக்கு ஏதொ ஒரு வகையில் தான் கடன்பட்டவன் போலவும் உணர்ந்தான். மெலிந்த, உயரமான உடல்வாகும், நீளவாக்கில் ஒடுக்கமான முகமமும் கொண்ட யாரைப் பார்த்தாலும் அவர் தனது தந்தையைப்போலவே  நினைத்துப் பார்க்கும் பழக்கம் வேர்விட்டிருந்த காலத்தில் இதுவரை யாரென்றே அறிந்திடாத இந்த வேலுச்சாமியப் பார்த்ததும் மிகப்பெரிய ஒரு சலனத்தை உருவாக்கி விட்டது.
                            
     சிமெண்ட் செங்கல் பைப் என்று ஏதொ ஒரு பொருளை அவ்வப்போது வாங்க வந்து கொண்டிருந்த வேலுச்சாமி மிக நெருக்கமாகப் பழக அரம்பித்து விட்டார். வேலை இல்லாத நேரத்தில் சவரணனின் கடையில் வந்து பொழுது போக்கிற்காகப் பேசிக் கொண்டிருந்தவர் அப்படியே பொருட்கள் வாங்க வருபவர்களுக்கு தானும் சேர்ந்து உதவி செய்ய ஆரம்பித்தார். இப்படிப் போய்க் கொண்டு இருந்த நேரத்தில் சரவணனே நினைத்துப் பார்க்காத ஒரு விஷயத்தை சோலைமலை முன்வைத்தார். அதாவது., வேலுச்சாமியை இந்தக் கடையிலேயே வேலைக்குச் சேர்த்துக் கொள்ள வேண்டியதுதானே என்பதுதான் அது. வேடிக்கைக்காகத்தான் சோலைமலை சொல்லியிருப்பாரோ என்னவோ ஆனால்., சரவணனுக்கு இது ஒரு உருப்படியான யோசனையாகவே தென்பட்டது. தனக்கும் உதவிக்கு ஆள் இல்லாத குறையைப் போக்க இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளவும் நினைத்தான். சோலைமலையிடம் அவர் இங்கேயே இருக்கட்டுமே., எனக்கு ஒன்றும் ஆட்சேபனை இல்லை என்றும் சொல்லிவிட்டான். அங்கே இங்கே என்று அலைந்து கொண்டிருப்பதற்கு இதுவும் நல்ல வேலைதான் என்று வேலுச்சாமியும் முடிவெடுத்துவிட., வேலை இங்கே அவருக்கு நிரந்தரமானது.     

     நாட்கள் ஓட ஓட அவரைக் கண்காணிப்பதில் தீவிரமானான் சரவணன். அவர் எழுந்தால் நடந்தால் நின்றால் வேலை செய்தால்., இப்படி எந்தச் சிறு சம்பவம் ஆயினும் வேலுச்சாமியை நோட்டமிட ஆரம்பித்தான்.  அந்த அளவிற்கு தான் வேலைக்குச் சேர்ந்த இந்தச் சில நாட்களுக்குள்ளாகவே சரவணன் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தார் வேலுச்சாமி. இது என்ன தாக்கம் என்று வேலுச்சாமி உணர வாய்ப்பே இல்லை. சரவணன் தன் மீது மிகப்பெரிய நம்பிக்கையை வைத்திருக்கிறான் என்பதை மட்டும் அவர் அறிந்திருந்தார். வேலைக்குச் சேர்த்துவிட்ட சோலைமலைக்கும் நல்ல பெயரை வாங்கித்தர வேண்டும் என்று மனதார உழைக்க ஆரம்பித்தார். 

     யார் வந்து கடனாகப் பொருட்கள் கேட்டாலும் தன் முதலாளி சரவணன் அனுமதி இல்லாமலே கொடுக்கும் அளவிற்கு அவருக்கு அங்கே இடம் இருந்தது. வேலைக்குச் சேர்ந்த சில நாட்களுக்குள்ளாகவே அவரின் உலகமே இந்தக் குடோன்தான் என்றளவிற்குச் சொந்தமாகிவிட்டது. அவர் சரவணன் மீது வைத்த நம்பிக்கையும் அவன் தொழிலை கண்ணும் கருத்துமாக கவனிக்கும் பாங்கும் சரவணனை இன்னும் நெகிழச் செய்துவிட அவரைத் தன் உறவினர் போலவே இல்லை இல்லை தனது தந்தையைப் போலவே பாவிக்க ஆரம்பித்தான்.

      சரவணன் தந்தை சாமியப்பன் தன் குடும்பத்தை விட்டுச் சென்று பல வருடங்கள் ஆகிவிட்டது. வெளி உலகம் என்னவென்றே தெரியாத அவர் இப்போது எந்த உலகத்தில் இருக்கிறார் என்பதும் புரியவில்லை. குடும்பத்தார் மீது மட்டுல்லாமல் அக்கம் பக்கத்து கிராமங்கள் முழுவதற்கும் அன்பைப் பொழியும் மனிதராக இருந்தார். எந்த வம்பு தும்பிற்கும் போக மாட்டார். தான் வாழ்ந்த காலத்தில் ஒரு நாள் கூட சர்ச்சையில் சிக்கியது இல்லை. சிறு உயிரையும் நேசித்தவர். அதனால்தான் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரையும் தனது அன்பால் கட்டிப்போட முடிந்திருந்தது சாமியப்பனால்.  சுய நலமற்ற மனிதராக அவர் இந்தக் கிராமத்தைச் சுற்றிலும் வலம் வந்து கொண்டிருந்தார். ஒவ்வொருவர் மனதிலும் சாமியப்பனுக்கு நிச்சயம் ஒரு இடம் இருந்தது. 

   ஆனால் அவர் மனதிற்குள்ளும் கவலைகள் இல்லாமல் இல்லை. நீண்ட காலமாகவே நோய் வாய்ப்பட்டிருந்த சரவணனின் அம்மாவைப்பற்றியும் எந்தத் தோழிலும் கைவராத நிலையில் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்த தன்னைப்பற்றியும் கவலைப்பட்டுக் கொண்டே இருந்தார். தனது குடும்பம் நல்ல நிலையில் இல்லையே என்ற வருத்தத்தை ஊரில் உள்ள எல்லோருடனும் பகிர்ந்து கொள்வார். எதையும் மனதில் இருத்தி வைத்துக் கொள்ளும் பழக்கம் இல்லை அவருக்கு. 

      எதற்கும் ஒரு தீர்வும் நிம்மதியும் கிடக்கவில்லையே என்ற கவலையில் தனது தந்தை ஆட்பட்டுக் கொண்டிருந்தார் என்பதை சரவணன் அறிந்திருந்தான். அவருக்கு எப்படித் தைரியம் கொடுக்க முடியும் என்பதை சரவணனால் அனுமானிக்க முடியவில்லை. தனது இயலாமையும் வயதில் சிறியவன் என்ற காரணமும் அவரிடத்தில் நெருங்க முடியாத இடைவெளியை ஏற்படுத்திவிட்டிருந்தது. அவரின் மன அழுத்தத்தை எப்படியாவது போக்க வேண்டும் என்றும்., அதற்கு, தனக்கு நல்ல தொழில் ஒன்று ஒட்டி வரவேண்டும் என்றும் எல்லாக் கடவுள்களையும் வேண்டிக் கொண்டிருந்தான். 

      அப்படிப்பட்ட ஒரு நாள், வீட்டிற்குக் காய்கறி வாங்கிவருவதற்காக நகரத்திற்குச் சென்றவர் வீடு திரும்பவே இல்லை. எல்லாக் கிராமத்திற்கும் தகவல் தீயாய் பரவியது. அதை விசாரிக்க கூட்டம் கூட்டமாய் வீட்டிற்கு வந்தார்கள். சிலர் அந்தப் பேருந்தில் பார்த்தேன் இந்த பேருந்து நிறுத்தத்தில் பார்த்தேன் என்றார்கள். இன்னும் ஒரு சிலர் நான் போன பேருந்தில்தான் அவரும் இருந்தார். ஆனால் பேசமுடியவில்லை என்றார்கள். நாட்கள் உருண்டோடியது. பல காலம் எந்தத் தகவலும் இல்லை. திடீரென்று ஒருவர் வந்து ஒரு மடத்தில் பார்த்தேன் என்று சொன்னார். அங்கு சென்று பார்த்தபோது அப்படி யாரும் இல்லை என்று தெரிந்தது. இன்னும் சில மாதம் கழித்து ஒரு தகவல் வந்தது கோயிலில் பார்த்ததாக. அந்த இடத்திற்குச் சென்று பார்த்த பிறகு அதுவும் பொய்த்துப்போனது. அதன்பிறகு அவர் கனவாகவே மாறிப்போனார். 

     எங்கு போயிருப்பார் எப்படிப் போயிருப்பார் என்ன செய்து கொண்டிருப்பார் என்ற சிந்தனைகள் இரவும் பகலும் ஆட்டி வைக்க ஆரம்பிதது. சாப்பாட்டிற்கு என்ன செய்கிறார். எங்கு படுக்கிறார். எவ்வளவு புளுக்கமாக இருந்தாலும் போர்வை இல்லாமல் தூங்க மாட்டார். மேலே போட்டுக்கொள்ள ஒரு துண்டாவது இருக்குமா என்ற தவிப்புகள் இடைவிடாத அலைகளாய் அடித்து சரவணனை சின்னாபின்னமாக்கிக் கொண்டிருந்தது. 

     தன்னோடு அவர் இருந்தவரையிலும் இல்லாத அன்பும் பாசமும், அவர் இல்லாத நிலையில் பெருகிப் பாய ஆரம்பித்தது. தன் குடும்பத்துடன் இருக்கும் வரையிலும் அவரைப் பற்றிய எந்தச் சிந்தனைக்கும் ஆட்படாதவன் இப்போது அவரின் நினைவுகளுடனே நேரத்தை கடத்திக் கொண்டிருந்தான். எப்போதும் கண்முன்னே நடமாடிக் கொண்டும் எல்லோருடனும் அன்பைப் பொழிந்து கொண்டும் இருந்தவரைப் பிரிந்து சூன்ய உலகில் வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டதை உணர்ந்து தவியாய் தவித்தான்.

     ஒல்லியான உருவத்தையும் நீளமான முகத்தையும் அதிராத மென்மையான நடையினையும் ஆர்ப்பாட்டம் இல்லாத அமைதியான பேச்சினையும் கொண்டவர்களைப் பார்த்த போதெல்லாம் அவர்களைத் தனது தந்தையெனவே நினைத்தான். போகும் வரும் இடத்திலும் தனது தந்தையைத் தேட ஆரம்பித்தவனுக்கு ஏக்கங்களுக்கும் தோல்விகளுமே பிரதிபலனாய் கிடைத்தது. என்றாவது ஒரு நாள் தனது தந்தை குடும்பத்துடன் இணைந்து விடுவார் என்ற நம்பிக்கையுடன் காலத்தை ஓட்டிக் கொண்டிருந்தான். தன்னிடம் நாடி வரும் அப்படிப்பட்ட அடையாளம் கொண்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கான உதவிகளைச் செய்தான். கடைக்கு வரும் பெரியவர்களுக்கும் வயோதிகர்களுக்கும் வலியப்போய் டீயும் பண்ணும் வாங்கிக் கொடுத்தான். அவர்களுடன் மனம் விட்டுப் பேசினான். அதில் ஒரு சந்தோஷமும் நிம்மதியும் கிடைப்பதாய் உணர்ந்தான்.

     இந்த இடைப்பட்ட காலத்தில், ஊர் வளர்ந்து கொண்டிருந்த சூழ்நிலையை மனதில் வைத்து கட்டிடக் கட்டுமானப் பொருட்களுக்குத் தேவை அதிகரிக்கும் என்பதை அறிந்த சரவணன் சிறிய அளவில் மணல் ஜல்லி செங்கல் என்று இறக்கி வைத்து வியாபாரம் செய்ய ஆரம்பித்தான். ஓரளவிற்கு அது கை கொடுக்கவே, மெயின் ரோட்டில் உள்ள ஒரு காலி இடத்தை குத்தகைக்கு எடுத்து தொழிலை விரிவு படுத்தினான். நாளடைவில் சரக்குகளை ஏற்றிச் செல்வதற்கு இரண்டு வாகனங்களையும் வாங்கினான். உதவிக்கு சில ஆட்களையும் சேர்த்துக் கொண்டான்.  இப்போது தனது தந்தை இருந்திருந்தால் எவ்வளவு மகிழ்ச்சி அடைந்திருப்பார் என்று கற்பனை செய்து பார்த்தான். அவரை இந்தக் கல்லாப் பெட்டியில் அமர்த்தி அழகு பார்த்துக் கொண்டான். 

      இந்தக் கனவெல்லாம் ஒரு நாள் சாத்தியாமகும் என்று ஏங்கித் தவிக்க ஆரம்பித்தவனை காலமும் நேரமும் கண்டு கொள்ளவே இல்லை. ஏக்கமும் விரக்தியுமே மிஞ்சியது. இந்தக் கால கட்டத்தில்தான் வேலுச்சாமி இங்கு வந்து சேர்ந்தார். அவர் வந்து சேர்ந்த சில நாட்களிலேயே சரவணனின் மனதில் இடம் பிடித்து விட்டார். வேலுச்சாமியும் இழுத்துப் போட்டுக் கொண்டு வேலைகளைச் செய்ய ஆரம்பித்தார். டிரைவர்களையும்  உதவியாளர்களையும் அன்புடன் நடத்தி அவர்களையும் தன் வசப்படுத்திக் கொண்டார். அதனால் அவர்களும் சரவணனின் தொழிலுக்கு பெரிய ஆதரவாக இருந்து உழைக்க ஆரம்பித்தார்கள். கடையில் சரவணன் இருந்தால்கூட வேலுச்சாமியிடம்தான் தங்களின் தேவைகளை வாடிக்கையாளர்கள் சொல்ல ஆரம்பித்தார்கள். அந்த அளவிற்கு வேலுச்சாமியின் உழைப்பு இருந்தது. இப்போது பெரிய பெரிய கட்டிடங்களுக்கு மொத்தமாக கட்டுமானப் பொருட்களை இறக்கும் அளவிற்கு தொழில் வளர்ந்து கொண்டிருந்தது. 

      கிரானைட் கடப்பா இரும்புக் கம்பிகள் என்று மேலும் தொழிலை விரிவு படுத்த நினைத்திருந்ததை நேற்று இரவுதான் வெகு நேரம் வரையிலும் வேலுச்சாமியிடம் பேசிக் கொண்டு இருந்தான் சரவணன். தனது தந்தைக்கு இதையெல்லாம் பார்க்கக் கொடுத்த வைக்கவில்லையென்ற ஆதங்கத்தையும் வெளிப்படுத்தினான். எங்கிருந்தாலும் உனது தந்தையின் ஆசி உனக்கு நிச்சயம் இருக்கும். அப்படி இருப்பதால்தான் இந்த அளவிற்குத் தொழில் வளர்ந்து கொண்டு இருக்கிறது.. உனது தாயும் இப்போது நலத்துடன் இருக்கிறார் என்றெல்லாம் மனம் விட்டு ஆறுதலாய் சொல்லிக் கொண்டு இருந்தார் வேலுச்சாமி. அந்த வார்த்தையும் ஆறுதலும் இன்னும் ஒலித்துக் கொண்டே இருக்கும் வேளையில் இப்படி ஒரு பிரிவைக் கொடுப்பார் என்று அவன் கனவிலும் நினைக்கவில்லை. 

     படுக்கையில் இருந்து எழ முடியாமல் மனம் தளர்ந்திருந்த சரவணனுக்கு திடீரென்று ஒரு சிந்தனை தோன்றியது. நம் தந்தையை நாம் எப்படி எதிர்பார்த்துபடி காத்துக் 
 கிடக்கிறோமோ., அவரின் நினைவுகளுடன் எப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறோமோ அதுபோலத்தானே அவரின் அண்ணன் மகனும் நினைத்திருப்பான். கடந்த காலங்களில்                           மருமகளால் அடைந்த கசப்பான சம்பவங்களை வேலுச்சாமியும் மறந்து அந்தக் குடும்பத்துடன் இணைந்துகொள்ள ஆசைப்பட்டும் இருக்கலாம். வெளியூரில் வசித்தாலும் என்னதான் வசதி வாய்ப்புடன் வாழ்ந்தாலும் சொந்த ஊரின்மீது உள்ள பாசம் கடைசி காலத்தில் எல்லோருக்கும் வரும். அதுபோல வேலுச்சாமிக்கும் நேர்ந்திருக்கலாம்  என்று  நினைத்தான்.  இப்படித் தோன்றிய சிந்தனையால் அலைபாயும் தன் மனதை சாந்தப்படுத்தவும் முயற்சித்துப் பார்த்தான் சரவணன். 

      நேரம் ஆகிக் கொண்டு இருப்பதால் அவரை வழியனுப்பி வைக்கலாம் என்று நினைத்தவன் படுக்கையில் இருந்து எழுந்து முகத்தைக் கழுவினான். வேலுச்சாமிக்குக் கொடுத்து அனுப்ப கொஞ்சம் பணத்தையும் எடுத்துக் கொண்டு குடோனிற்குப் போனான். வேலுச்சாமியும் அவரின் அண்ணன் மகனும் ஆபீஸில் இருந்த பெஞ்சில் அமர்ந்து இருந்தார்கள். சரவணன் வந்ததும் இருவரும் எழுந்து நின்றார்கள். அவர்களை அமரச் சொன்னான். டேபிள்மேல் இருந்த ஒரு நோட்டை எடுத்து அதில் குறித்து வைத்திருந்த பார்ட்டிகளின் கடன் கணக்கை விபரமாய் எடுத்துச் சொன்னார் வேலுச்சாமி. இன்று விற்பனை செய்ததன் மூலம் கிடைத்த தொகையினை எண்ணிக் கொடுத்தார். அதை அப்படியே வாங்கி கல்லாப்பெட்டியில் போட்டான் சரவணன். 

      கொஞ்சம் தைரியத்தை இழந்தால் எல்லோர் முன்னிலையிலும் அழுது விடுவான் போலிருக்கவே ஆபீசில் இருந்து எழுந்தவன் செங்கல் அடுக்கி வைக்கப்பட்டிருந்த இடத்திற்குப் பக்கமாய் நடந்தான். ஊருக்குச் செல்பவர் அங்கேயே தங்கி விடுவாரா அல்லது வேலையை முடித்துவிட்டுத் திரும்பவும் இங்கு வருவாரா என்பது எதுவும் உறுதியாய் தெரியவில்லை. அவரிடத்தில் இது எதையும் கேட்கவும் முடியவில்லை. கேட்டால் என்ன பதில் சொல்லப் போகிறார் என்றும் தெரியவில்லை. வேலுச்சாமியின் அண்ணன் மகன் சொன்ன வார்த்தைகள் நினைவிற்கு வரவே அவரின் நிலைப்பாட்டைப் பற்றி கேட்பதற்கும் வழியில்லாமல் போனது. முடிந்தவரையிலும் அவர் திரும்ப வரவேண்டும் என்பதே அவனின் முழு விருப்பமானதாக இருந்தது. எவ்வளவு நேரம் அங்கேயே நின்று கொண்டிருந்தான் என்பது தெரியவில்லை. வேலுச்சாமிதான் இப்பொதும் சரவணனின் முன்பாக வந்து நின்று கொண்டு இருந்தார். 
     தான் கிளம்பலாமா என்பது அவரின் பார்வையாக இருந்தது. போய்வாருங்கள் என்று சொல்ல இயலாததாய் அவனது மௌனம் அவனை அமைதிப்படுத்தியது. மீண்டும் ஆபீஸ் நோக்கி நடந்தான். தன் பாக்கெட்டில் வைத்திருந்த பணத்தை எடுத்து அவரிடம் நீட்டினான்.

      “இதில் பத்தாயிரம் இருக்கு. கைச்செலவுக்கு வச்சுக்குங்க. ஊருக்குப் போய்ட்டு போன் பண்ணுங்க. எதா இருந்தாலும் எங்கிட்டச் சொல்லுங்க. நீங்க வரமுடியாத சூழ்நிலைன்னா நான் அவ்வப்போது வந்து பார்த்துட்டு வர்றேன்” என்றான். 

     சொல்லி முடிப்பதற்குள் அவன் நா தழுதழுத்தது.

     பணத்தை கையில் வாங்கியவர் எண்ணியெண்ணிப் பார்த்தார். சில நிமிடங்கள் கையிலேயே வைத்திருந்தார். ஆழ்ந்த பெருமூச்சு ஒன்றை விட்டவர் சட்டென சரவணனின் கைகளைப் பிடித்தார். அவன் என்ன ஏதென யோசிப்பதற்குள் அந்தப் பணத்தை அப்படியே அவன் கைகளில் திணித்தார்.
                                 
     “தம்பி உங்க மனசுக்குள்ள என்ன இருந்துதுன்னு எனக்குத் தெரியும். நீங்க சொல்லாட்டியும் அது எனக்குப் புரியும். சுருக்கமா சொல்லப் போனா உங்க குடும்பத்துல ஒருத்தனாவே என்ன வச்சிருந்தீங்க. ஒரு தகப்பனா இருந்து செய்ய வேண்டிய கடமைகள் எதையும் செய்யும் பாக்கியம் எனக்கும் இதுவரை இல்லாம இருந்தது. பந்தம் பாசம் எல்லாத்தையும் இங்கே வந்துதான் அறிஞ்சிக்கிடேன். மத்தவங்களுக்கு மரியாத கொடுக்கிற பண்பையும் உங்ககிட்டத்தான் பார்த்து தெரிஞ்சிக்கிட்டேன். அதையெல்லாம் ஒவ்வொரு  நிமிஷமும் நெனச்சுத்தான் பார்த்திட்டு இருக்கேன்.”

      ஒரு நிமிடம் பேச முடியாமல் தடுமாறி நின்றவர் சிறு இடைவெளிவிட்டு மீண்டும் தொடர்ந்தார்.

     “அத்தோட., நீங்க வாரர வாரம் கொடுத்த சம்பளப் பணம் அப்படியே சோலைமலைகிட்ட இருக்கு. இப்போ நீங்க கொடுக்கும் இந்தப் பணமும் இங்கேயே இருக்கட்டும். என்னைக்காவது ஒரு நாளைக்கு எனக்கு அது உதவும். நான் வாரன் தம்பி….”

     சொல்லி முடித்தவர் தனது துணிப் பையை எடுத்துக் கொண்டு சட்டெனக் கிளம்பினார். தன் கண்களில் இருந்து கண்ணீர் வெளியேறுவதை மற்றவர்கள் பார்த்துவிடக் கூடாதென்பதற்காக குடோனை விட்டு வேகவேகமாக நடந்தார்.  

     சிறிது தூரம் நடந்த வேலுச்சாமி திரும்பி வந்தார். மூடியிருந்த முன்வாசல் கேட் ஒன்றை நன்றாகத் திறந்து வைத்துவிட்டுச் சென்றார். அவர் சொல்லாமல் சொல்லும் அதன் அர்த்தம், ’எனக்காக இந்த வாசல் எப்போதும் திறந்தே இருக்கட்டும்’ என்பதாக இருக்கும் என்று நம்பிக்கை கொண்டான் சரவணன்.