{[['
']]}

தகப்பம் பழகு...
அந்த பார்க்கில் அப்பாவும் அவனும் நடந்துக்கொண்டிருந்தனர். அவனது குழந்தை ஓடி ஓடி விளையாடிவிட்டு அவ்வபோது அவனை வந்து தொட்டு தொட்டு சிரித்துவிட்டு ஓடியது. அங்கு குழுமியிருந்த குழந்தைகளுக்கு இடையில் அந்த குழந்தையும் சென்று விளையாடிக்கொண்டிருந்தது.
இருவரும் அங்கு இருந்த ஒரு ’பெஞ்ச்’ல் அமர்ந்தனர். அவர்கள் இருவரின் கண்களும் விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகள் மேலே இருந்தது. அவனின் கண்கள் கண்ணீரை தேக்கிக்கொண்டிருந்தது. அதை அப்பா கவனித்தார். மீண்டும் குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்த பக்கம் அப்பா திரும்பினார். குழந்தைகளை பார்த்துக்கொண்டே பேச தொடங்கினார்,
‘இந்த குழந்தைகள பாக்குறப்போ என்னடா தோணுது?’ என்றார் அப்பா. அவன் பதில் பேச தொடங்கினான்.
‘என்னப்பா தோணனும்?’ என்றான் இன்னும் குழந்தைகளை பார்த்துக்கொண்டே. அவனை திரும்பி பார்த்துவிட்டு அப்பா ஒரு நமட்டு சிரிப்பு சிரித்தார். அவன் தலையை தட்டிவிட்டு பேசத்தொடங்கினார்,
‘உன் மனசு என்னடா சொல்லுது..?’
’என்னப்பா... குழந்தைங்க விளையாடுறாங்கனு சொல்லுது’
‘அது உன் மூளை சொல்லுறது. உன் ஆழ்மனசுல ஒரு எண்ணம் வருமே அது என்னடா...’
‘அப்படி எதுவும் எனக்கு தோணலபா...’ என்றான் கொஞ்சம் சலிப்போடு.
‘தோணலன்னு தாண்டி, உனக்கு யோசிக்க விருப்பமில்ல. அதான் உண்மை. என் பையன் இப்படி கிடையாது. அவன் யோசிப்பான். அவனுக்கு எதையும் தாண்டி வர்ற தண்மை இருக்கு’ என்று சொல்லிவிட்டு அப்பா குழந்தைகள் பக்கம் திரும்பிக்கொண்டார். அவன் அப்பாவை திரும்பி பார்த்துக்கொண்டிருந்தான் கொஞ்சம் நெகிழ்வாக. மீண்டும் குழந்தைகள் பக்கம் திரும்பிக்கொண்டு சிறிது சிந்திப்பிற்கு பிறகு பேசத்தொடங்குகிறான்.
‘இன்னசன்ஸ். எதுவும் மனசுல இல்லாத, வஞ்சகம், துரோகம் மனசுல பதியாத இன்னசன்ஸ்’ என்று சொல்லிவிட்டு மீண்டும் அப்பா பக்கம் திரும்பினான்.
‘ஆமாம். ஏன் அவங்க அப்படி இருக்காங்க?’
‘ஏனா... அவங்களுக்கு உலகம் இன்னும் தெரியல’ என்றான் அவர்களை ஒரு நோட்டம் விட்டுவிட்டு.
‘இல்ல. இன்னும் இந்த உலகத்தால அவங்க கெட்டு போகல. அவ்வளவு தான்’
‘நான் சொன்னதுக்கும் அதுதானே அர்த்தம்?’
‘இல்ல. உலகத்தை அவங்க தெரிஞ்சுக்கவும். உலகம் அவங்களுக்கு புரிய வைக்கிறதுக்கும் வித்தியாசம் இருக்கு. தெரிஞ்சுக்க நினைக்கிறவங்க விரும்பி போயி கத்துகுறாங்க, புரிய வைக்கிறதுங்குறது சந்தர்ப்பம் சூழ்நிலைய திணுச்சி அவங்க இயல்ப மாத்த வைக்கிறது.’
‘என்னப்பா இப்ப சொல்ல வர்றீங்க’ என்று அவன் சலிப்பாக கேட்கிறான்.
‘ஹா... கண்ணா... அது உனக்கு புரிய வர்றப்போ உன் பொண்ணு உன் பக்கத்துல உட்கார்ந்துகிட்டு சலிப்பா கேட்டுகிட்டு இருப்பா. இப்ப நீ இருக்குற போல’ என்றார் சிரித்துக்கொண்டே. ஆனால் அவனுக்கு சிரிப்பு வரவில்லை. அவன் ஏதோ ஆழ்ந்த சிந்தையிலே இருந்தான்.
ஏதேனும் சாப்பிடலாமா என்று அப்பா கேட்கிறார். அவனும் ஒத்துக்கொண்டதன் விளைவாய் இருவரும் குழந்தையை அங்கேயே விளையாட சொல்லிவிட்டு பார்க்கை விட்டு வெளியே செல்கின்றனர். வெளியில் இருக்கும் ஒரு பானி பூரி கடையில் நிற்கின்றனர். இருவருக்கும் ஒவ்வொரு ப்ளேட் சொல்லிவிட்டு அவர் அவனுக்கு வேறு ஏதேனும் வேண்டுமோ என்று கேள்வியோடு பார்க்கிறார். அவன் இல்லை என்பதாய் தலையை ஆட்ட அவர்கள் இருவரும் அங்கேயே உண்டுவிட்டு மீண்டும் பார்க்கினுள் நுழைகின்றனர்.
‘வயிறு நிறைஞ்சுட்டுதா?’ என்கிறார் அப்பா.
‘அதுக்குள்ளயா? ஒரு பானி பூரி என்னாத்த பத்தும் பா?’ என்கிறான் மகன்.
அப்பா அவனின் பதிலை கேட்டுவிட்டு ஒரு முறை சிரிக்கிறார்.
‘அதுபோல தானே டா வாழ்க்கையும். ஒரு பகுதியில வாழ்க்கை நிரம்பிடாதே!’ என்கிறார்.
‘அப்பா ப்ளீஸ். வேணாம்பா.’
‘இல்லடா. நான் பேசணும். என் பையன் மாறிடுவான். திரும்ப அவனோட இயல்புக்கு வருவான்னு நான் நம்புனேன். ஆனா அது நடக்குற மாதிரியே தெரியல. இப்போ நான் பேசணும்’ என்று அவர் சொல்லும்பொழுது அவன் கண்கள் மீண்டும் நீர் தேக்கம் கொள்கிறது.
‘அப்பா ப்ளீஸ் பா. என்னால நார்மலா இருக்க முடியலபா’ என்கிறான்.
‘ஏன் டா. நான்லாம் இல்லயா?’
‘அப்பா. உங்க இடத்தை யாராலயும் எடுக்க முடியாது. அது போல தான். அவளோட இடத்தை யாராலயும் நிரப்ப முடியாது.’
‘இங்க யாருக்கும் எதுக்கும் நிரந்தரமான இடம் இல்லடா. வாழ்க்கைய நம்மோட இருக்குறவங்களோட அப்படியே சகஜமா வாழ்ந்துட்டு போயிடணும்’
‘அப்பா. நீங்க சொன்னங்களே ஆழ்மனசு. அதுக்கு இதெல்லாம் புரியமாட்டேங்குது பா.’
‘நான் ஆரம்பத்துல சொன்னது தான். நீ தெரிஞ்சுக்க விரும்பல. மனசு தானா புரிஞ்சுக்கணும்னு நினைக்கிற. அது எப்படி டா முடியும்?’ என்றார் கேள்விகுறியோடு.
‘அப்பா. என்னோட சரி பாதி அவ. அவளுக்காக என் உயிரை தருவேன்னு பேசியிருக்கேன். அவகிட்ட காதல் வார்த்தைகள் பேசியிருக்கேன். ஒரு கட்டத்துக்கு மேல அப்பா அம்மாகிட்ட பேச கூச்சப்படுற வார்த்தைகள கூட அவகூட பேசியிருக்கேன். இந்த கொஞ்ச வருசத்துல அவ எனக்கு எல்லாத்துக்கும் மேல ஆகிட்டா பா. அவள இழந்துட்டு என் மனசு தவிக்கிற தவிப்பு உங்களுக்கு தெரியாதுபா’ என்றான் கொஞ்சம் ஆதங்கத்தோடு.
‘நாலு வருசமா? நான் முப்பது வருசத்துக்கு பிறகு என்னோட சரிபாதிய இழந்தேன். அதான் உங்க அம்மா. நான் உருப்புடாதவன், ஊதாரியா திரிஞ்சவன் என்னை கரை சேத்தவ அவ. என் அம்மா போல அவ. அவள இழந்த நான் மீண்டு வரலையா?’
‘உங்க அளவுக்கு எனக்கு பக்குவம் இல்லபா... விடுங்க’ என்றான் இன்னும் ஆத்திரமும் கோபமும் அடக்கமுடியாமல்.
‘ஹா...’ என்று சிரித்துக்கொண்டே அவர் நடந்து சென்று மீண்டும் அந்த பெஞ்சில் அமர்ந்தார். அவனும் பின்னால் சென்று அமர்ந்துக்கொண்டான். அவனது குழந்தை இவர்களிடம் ஓடி வந்தது. நேராக வந்து இவனை பிடித்து,
‘அப்பா... அப்பா... வாங்க விளையாட’ என்று அழைத்தது. அவன் வரவில்லை அவளை சென்று விளையாடும்படி சொன்னான். உடனே அவனது அப்பா எழுந்து தான் வருவதாக சொல்லி அவளோடு இணைந்து விளையாட சென்றார். அவன் தன் அப்பாவும் மகளும் விளையாடுவதை பார்த்துக்கொண்டிருந்தான். இருவர் விளையாடுவதையும் ஆசையாக பார்த்துக்கொண்டு எதட்டுன் ஔரம் ஒரு சிரிப்பு எட்டி பார்க்கிறது. அப்பொழுது அவன் அப்பா அவன் மகளை பிடிக்க ஓடி வருகிறார். அவன் மகள் அவன் பின்னால் வந்து ஒளிந்துக்கொண்டு ‘அப்பா... தாத்தா புடிக்க வர்றார். காப்பாத்துங்க’ என்று குதிக்கிறாள். உடனே அவன் அவளை தன் இருகைகளில் தூக்கிக்கொண்டு பின்னாலும் மின்னாலும் ஓடுகிறான். அவன் அப்பா அவர்களை பிடிக்க முயற்சித்து முடியாமல் அமர்ந்துவிட்டு,
‘ஐ லாஸ்ட்.... நான் தோத்துட்டேன்... என்னால முடியல’ என்கிறார் மூச்சிரைக்க. அவன் அவனது குழந்தையை தன் கைகளில் இருந்து இறக்கி விடுகிறான். இறங்கிய குழந்தை அவன் கன்னத்தில் ‘இச்’சென்று அழுத்தமாக ஒரு முத்தத்தை பதித்து சென்றது. அவன் உள்ளுக்குள் ஏதோ சிலிர்ப்பு ஏற்பட்டு அவன் குழந்தை ஓடி சென்ற திசையையே பார்த்துக்கொண்டிருந்தான். அதற்குள் அவன் அப்பா அவன் அருகில் வந்தார்.
‘ஏதோ மகிழ்ச்சியா இருக்கா?’ என்றார் அவன் தோளில் கை வைத்தப்படி. அவன் கண்கள் ஆனந்தத்தில் இருந்தது. அவரை திரும்பி பார்த்து கன்னத்தில் கை வைத்து ‘ஆம்’ என்பதாய் தலையை ஆட்டினான்.
‘சில நேரங்களில் அலுவலகம் வேலையை தாண்டி, நம் கவலைகள தாண்டி நம்மை மட்டுமே நம்பி இருக்குறவங்களுக்காக கொஞ்சம் அழகான நேரங்கள செலவிட்டு தான் ஆகணும். அப்படி செஞ்சா அவங்க நம்ம வாழ்க்கைய இன்னும் அழகாகிட்டு போயிடுவாங்க. அவ முத்தம் கொடுத்தப்போ எப்படி இருந்துச்சு’
‘ஏதோ சிலிர்ப்பு. என் பொண்ணுன்னு ஒரு ஃபீல். ஒரு பெருமிதம்’ என்றான் நெகிழ்வாக.
‘ஆமா. இத்தனை நாள் அவ உனக்கு ஏதோ முத்தம் கொடுத்திருக்கலாம். ஆனா இந்த முறை ரொம்ப மகிழ்வா, அவளோட மொத்த சந்தோசத்தையும் சேர்த்து உனக்கு முத்தமா கொடுத்திருக்கா. அந்த ஃபீல் சொன்னியே அது என்ன தெரியுமா?’ என்றார்.
அவன் இல்லை என்பதாய் தலையை ஆட்டினான்.
‘தகப்பம். ஆண் உணரும் தாய்மை’ என்றார். அவன் அவனது மகளை ஒருமுறை திரும்பி பார்த்தான். அவனுக்குள் ஒரு பெருமிதம் இருந்தது.
‘நீ ஒரு மகனை கடந்து, ஒரு கணவனை கடந்து ஒரு அப்பனா நிக்கிற. உன்னோட பிற அத்தியாயங்கள் உன் கூடவே வரலாம். ஆனா இப்போதைய அத்தியாயம் நீ ஒரு அப்பா. அந்த உணர்வை உணர ஆரம்பி, உனை சுத்தி உன் மகள பாரு, அவளுக்காக விட்டுகொடு, அவகூட விளையாடு, அவளுக்கு விருப்பமான எல்லாத்தையும் செய். உன் மனைவிய உன் குழந்தைகிட்ட பாப்ப, உன் அம்மாவ உன் குழந்தையா பாப்ப - நான் என் அப்பாவ உன்கிட்ட பாத்த மாதிரி’ என்றார் பாசமாக. அவன் அப்பாவின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தான்.
‘அப்பா... ஒரு முறை உங்க தோள் மேல சாஞ்சுக்கவா?’ என்றான் பவ்வியமாக.
‘கண்டிப்பாடா கண்ணா. இந்த அப்பன் உனக்காக தோள் கொடுக்க ஆரம்பிச்சு பல வருசங்கள் ஆச்சு. ஆனா உனக்கு இப்ப தான் தேவைபடுது போல’ என்றதும் அவன் அவர் தோளில் விழுந்து கண்ணீரை பெருக்கினான்.
அங்கிருந்து நேராக அவன் குழந்தை இவர்களிடத்து ஓடிவந்தது. அவன் அவளை கண்டதும் எழுந்து கண்ணீரை துடைத்துக்கொண்டான். அவள் அழகாக தன் இரு கைகளையும் தன் இடுப்பில் வைத்துக்கொண்டு தன் தாத்தாவை பார்த்து பேசத்தொடங்கினாள்.
‘ஏ தாத்தா. என் அப்பாவ அடிச்சியா என்ன? பிச்சிருவேன். நீ சரியான பேட் டாடி... எங்க அப்பாவ பாத்து எப்படி இருக்கணும்னு கத்துக்கோ’ என்று சொல்லிவிட்டு அவளது தாத்தாவின் கால்களில் ஓங்கி அடித்துவிட்டு ’கொன்னுருவேன்’ என்று விரலை உயர்த்தி காட்டுகிறாள். அவளை பார்த்த அவர், உடனே தன் இரு கைகளையும் கட்டிக்கொண்டு ‘சாரி மேடம்’ என்கிறார். ‘ம்ம்...அந்த பயம்' என்று அவள் அதட்ட அவன் அப்பாவின் காதோரமாக சென்று,
‘அப்பா... இவ அம்மாவே தான் போல... உங்கள இப்படி மிரட்டுறா’ என்று நக்கலடிக்க அப்பா இவனை அடிக்க துரத்துகிறார்.
‘ஏ வா பாப்பா... ஓடிரலாம்’ என்று அவன் அவனது குழந்தையை தூக்கிக்கொண்டு சிரித்துக்கொண்டே ஓடுகிறான். இருவரும் முன்னே மகிழ்வோடு ஓட அவர்களை பார்த்து அப்பா ஆனந்தமாக ஆனந்த கண்ணீரோடு சிரிக்கிறார்.
அங்கு இருவரும் தகப்பம் உணர்கின்றனர்.