Sunday, 22 May 2016

தந்தை போட்டிச் சிறுகதை - 20

Rate this posting:
{[['']]}


செக்டார் 19


வலது காலை முன்னால் மடித்துத் தூக்கிக் குதிகாலைப் பார்த்தேன். கருப்பு அப்பியிருந்தது. அவ்வளவும் அழுக்கு. புழுதி. வர்ஷாவிடம் சொன்னால் திட்டுவாள். “ஒரு மெய்ட் வெச்சிக்கோன்னு சொன்னா கேக்கறியாப்பா நீ?”

அது என்னவோ ஊரிலிருந்த போதும் சரி, இங்கேயும் சரி. வேலைக்காரியோ வேலைக்காரனோ வைத்துக் கொள்ள மனசுக்கு ஒப்பியதே இல்லை. ஊரிலிருந்த வரை இந்தப் பிரச்னை பெரிதாகத் தெரிந்ததில்லை. இங்கே தான்.

பெரும்பாலும் இரண்டு நாட்களுக்கொரு முறை பெருக்கித் துடைத்து விடுவேன். இந்த முறை சளி ஜுரத்தால் ஓரிரு நாட்கள் அதிகமாகி விட்டது. இந்த ஊர் தான் குப்பைக்கும் புழுதிக்கும் பேர் போனதாயிற்றே. அதனால் தூசு நிரம்பிக் கிடக்கிறது வீடு முழுக்க.
ஆயாசமாக இருந்தாலும் உடம்பை சிலிர்த்துக் கொண்டு பெருக்கித் துடைக்க ஆரம்பித்தேன். அது ஆயிற்று ஒரு மணி நேரம். 

வேண்டாமென்று சொன்னாலும் கம்பெனியால் வலியத் திணிக்கப்பட்ட மூன்று படுக்கையறை வீடு. பெரும் பதவி வரும் போது கூடவே வரும் இது போன்ற கொஞ்சமும் எதிர்பாராத உடனுறைச் சிக்கல்கள்.

சனி ஞாயிறுகளை இந்த ஊரில் கடத்துவது தான் என் ஆகப் பெரும் சிக்கலாக இருக்கிறது. அல்ல. இருந்தது. இப்போது பழகி விட்டிருக்கிறது.எப்படியோ பொழுதை ஓட்டி விடுகிறேன். ஞாயிறுகளின் இரவுகளில் வர்ஷாவுடன் ஸ்கைப்புவது மிகப் பெரிய வடிகால்.

ஒவ்வொரு முறையும், கேட்டுச் சலித்திருந்தாலும் சலிப்பை உதறி விட்டு அதே விஷயத்தைத் திரும்பச் சொல்வாள் வர்ஷா. பேசாம பெங்களூர் வந்திடேம்பா. அப்படி நீ இப்ப வேலை பாத்து என்ன ஆகப் போவுது? நான் இங்க தனியா நீ அங்க தனியா. எதுக்குப்பா” என்பாள். இந்தக் கேள்விக்கு எனக்கே பதில் தெரியாது. அவளுக்கென்ன சொல்ல? அறியாமையைப் புன்னகையால் மறைத்து விடுவேன்.

சத்யா போன சமயத்தில் உணர்ச்சிவசப்பட்டு எடுத்த முடிவா இது என்பதில் எனக்கே இன்னும் குழப்பங்கள் இருந்தன. இடமாற்றம் மனசை மாற்றூம் என்பார்கள். ஆனால் அதனுடன் தனிமை வரக் கூடாது என்பதை யாரும் சொல்லவில்லை.

காலையில் எட்டரைக்கு அலுவலகம் கிளம்பினால் போதும். ஐந்தரை மணிக்கு மேல் தூக்கம் பிடிப்பதில்லை. நடக்கப் பழகிக் கொண்டிருக்கிறேன். வெயில் காலமெனில் பிரச்னையில்லை. குளிர் காலமெனில் அதுவும் சிரமம். உடம்பு ஒப்புக் கொள்வதில்லை இந்த ஊர்க் குளிரை.

வந்த புதிதில் நடக்கிறேன் பேர்வழியென்று நான்கைந்து முறைகள் வழிகளைத் தவற விட்டு விட்டு, அட்ரஸைச் சொல்லி டாக்ஸி பிடித்து வீடு வந்து சேர்ந்திருக்கிறேன். இப்போது பழகி விட்டது. எந்த செக்டாரில் புகுந்தால் எந்தச் சந்து, எந்த வீதியில் நுழைந்து எந்த செக்டாருக்குள் கொண்டு விடும் என்பது வரை தெரிந்து விட்டிருக்கிறது.

ஊரில் இருக்கும் போது பாக்கங்களையும் வாக்கங்களையும் புரங்களையுமே பார்த்துப் புழங்கிப் பழகி விட்டு, இங்கே வந்தவுடன் எண்களால் மட்டுமே குறிக்கப் பெறும் ஏரியாக்களை உள்வாங்கிக் கொள்ள மிகுந்த சிரமமாயிருந்தது.

எல்லாப் பகுதிகளையும் எண்கள் குறிப்பிட்டு அழைப்பது ஒரு விதமான இயந்திரத் தனத்தை, உயிரோட்டமில்லாத் தனத்தைத் தந்து விடுவதாகத் தோன்றியபடியே இருந்தது. இப்போதும் இருக்கிறது.
இது தொழில் நகரம். பெயரே அதுதான். அதைத் தான் சுருக்கி ஊர் பெயர் மாதிரி நொய்டா என்று வைத்துக் கொண்டு தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொண்டு இருக்கிறார்கள் ஜனங்கள். வந்த புதிதில் வெகு நாட்களுக்குக் கார் ஓட்டாமலே இருந்தேன். இந்த ஊரில் யாரும் சிக்னல்களை மதிப்பதில்லை.

காரோட்டுவதற்கு பயமாக இருந்தது என்று கூட சொல்லலாம். ஒரு கட்டத்துக்கு மேல் தினமும் அலுவலகக் காரை வரச் சொல்லி அதில் பயணிப்பது சில பேருக்கு சங்கடத்தை உண்டு பண்ணுகிறது என்று தெரிந்ததும் வர்ஷாவிடம் சொல்லி சென்னை வீட்டிலிருக்கும் காரைக் கொண்டு வந்து விட்டேன். வந்து இங்கே தங்கி இருந்த இரண்டு நாட்களும் வர்ஷா ஒரு நூறு முறைகளாவது சொல்லியிருப்பாள்.”எப்படிப்பா இங்க இருக்கே? உன் கேரக்டருக்கு இந்த ஊர் கொஞ்சம் கூட செட் ஆகலப்பா. பர்ஸ்ட் ஆப் ஆல் இது ஊரே இல்லப்பா.” என்றெல்லாம் புலம்பி விட்டு வழக்கமான சங்கதியில் வந்து முடிப்பாள். “ பேசாம பெங்களூர் வந்துரு”.

திங்கட்கிழமை காலை வந்தாலே அலுவலகம் செல்பவர்களுக்கு ஒரு வித மந்தத்தனமும் சலிப்பும் வந்து விடும். எனக்கு திங்கட் கிழமை காலை தான் ஆசுவாசம். என்ன செய்வது என்று யோசிக்கத் தேவையில்லாத அளவு வேலை இருக்கும். காரை கேட்டுக்கு வெளியே நகர்த்தும் போது செக்யூரிட்டி சல்யூட் வைத்தான். ப்ளாஸ்டிக் தனம். ஆச்சரியமாக இருந்தது. ஊரின் இயந்திரத் தன்மை தான் மனிதர்களையும் மாற்றி விடுகிறது போலும்.

அபார்ட்மென்டிலிருந்து அலுவலகம் செல்லும் வழியில் மருந்துக்குக் கூட பச்சை கிடையாது. நாளாவட்டத்தில் உயரமான கட்டிடங்களை மேலும் மேலும் மேலும் பார்த்துப் பார்த்துச் சலித்து விட்டிருந்தது. இதனாலேயே ஒன்பதாவது மாடியிலிருந்தாலும் சில சமயங்கள் லிப்ட் உபயோகிக்காமல் படிகளேரி விடுவேன். என்னை விநோத ஜந்துவைப் போல் பார்க்கிறவர்களைப் பற்றிக் கவலைப் படாமல்.

வீடு இருந்தது செக்டார் 19ல். இந்த செக்டார் 19 கிட்டத் தட்ட தில்லியின் எல்லை முனை. அலுவலகம் செக்டார் 65ல். சுமார் முக்கால் மணி நேரப் பயணம். ட்ராபிக் அதிகமாக இருந்தால் ஒரு மணி நேரம். வேடிக்கை பார்க்க ஏதுமில்லாததால் பெரும்பாலும் கைகளும் கால்களும் அனிச்சை செயல் போல் வண்டியைச் செலுத்திக் கொண்டிருக்கும். அவைகளும் கூட இந்த ஊரின் எதிர்பாராத விபத்தேற்படுத்தும் வண்டியோட்டிகளின் சிக்னலை மதிக்காத சுபாவத்துக்குப் பழகி விட்டிருந்தன. காதுகளும் மனசும் ஏதேனும் பாட்டில் அமிழ்ந்திருக்கும்.  அதையும் மீறிக் கிடைக்கும் மௌனத் தருணங்களில் பெரும்பாலும் நினைவுகள் சத்யாவைச் சுற்றியும் வர்ஷாவைச் சுற்றியுமே இருக்கும்.

வர்ஷாவை நினைக்கும் போதெல்லாம் எனக்கு ஆச்சரியம் தான். என்னைப் போல் குழப்பவாதிக்கு, சாமானியத்தில் முடிவெடுக்கத் திணறுபவனுக்கு, இவ்வளவு தீர்க்கமான, திடமான ஒரு பெண். சத்யா போல அப்படியே. சொல்லப் போனால் அவள் ஒரே தீர்மானமாக, “அப்பா, மரியாதையாக நீ வேலையை ரிசைன் பண்ணி விட்டு பெங்களூர் வந்து சேரத் தான் வேண்டும். யு ஹாவ் நோ அதர் ஆப்ஷன்” என்று அடித்துக் கண்டித்துப் பேசினால் பெட்டியக் கட்டிக் கொண்டு கிளம்பி விடக் கூடும் நான்.

ஏனோ இந்த விஷயத்தில் மட்டும் வர்ஷா என்னை கெஞ்சுவதோடு நிறுத்திக் கொள்கிறாள்.என்னுடைய முடிவிது என்பதால் என் பிரைவசியை மதிப்பதற்காகக் கூட இருக்கலாம்.
------------
கண்களைத் திறக்கவே முடியவில்லை. இருமலான இருமல். போன முறை வந்து விட்டு ரெண்டு நாட்கள் இருந்து விட்டு லேசுபாசாகப் படுத்தி விட்டுப் போய் விட்டது. அலுவலகத்தில் இந்த சங்கல்ப்பின் தொல்லை தாங்க முடியாமல் அவனுடன் ஓட்டலுக்குச் சென்று உணவருந்தியது தப்பாகப் போய் விட்டது. ஏதோ ஆசையில் ஐஸ்கிரீம் எடுத்துச் சாப்பிட்டு விட்டேன். பிடித்துக் கொண்டது. மூச்சு விட்டாலே கர் புரென்று சத்தம்.

மனிதனின் ஆகப் பெரும் துயரத் தருணங்கள் தனிமையிலிருக்கையில் உடல் முடியாமல் போவதாகத் தான் இருக்கும். எழுந்து கஞ்சி வைத்துக் கூடக் குடிக்க முடியவில்லை. கண்களை மூடிக் கிடந்தேன்.
உறக்கமும் விழிப்புமற்ற ஒரு மாதிரியான மயக்க நிலை. காதுகளில் சத்யாவின் இருமல் ஒலித்தபடியே இருந்தது. சட்டென்று பதறிக் கண் விழித்தேன். வியர்த்திருந்தது. அருகில் பார்த்தேன்,. சத்யா படுத்திருந்தாள். நெஞ்சுக் கூடு ஏறி இறங்கவே இல்லையே? மூச்சு விடுகிறாற் போலவே தெரியவில்லையே? சத்யா.. சத்யா என்று அவளைப் பிடித்து உலுக்கினேன்.

மீண்டும் பதறிக் கண் விழித்தேன். என்ன மாதிரி பிரம்மை இது? முதன் முறையக தனிமை சற்றே அதீதப் பயம் தந்தது. இடது கையில் தோள் பட்டையினருகே ஏற்பட்டிருந்த வலி வேறு ஏதேதோ யோசனைகளைக் கொடுத்தபடியிருந்தது.

பிரம்மாண்டமான அந்த வீடு முழுக்க நிறைந்திருந்த அமைதி காதுக்குள் பேரிரைச்சலை உண்டு செய்வதாக இருந்தது.நான் இறந்து விட்டேனோ என்ற சந்தேகம் கூட வந்தது.

 காய்ச்சல் குறைந்து சமனத்துக்கு வரும் போது அந்த முடிவை எடுத்திருந்தேன். உடம்பு சரியில்லாததை வர்ஷாவிடம் சொல்லவில்லை. ப்ளைட்டைப் பிடித்து உடனே வந்து நின்றாலும் நின்று விடுவாள். அவளை அலைக்கழிக்கக் கூடாது. முடிவை மட்டும் சொல்வோம்.”வர்ஷா... நான் உன்னோடயே வந்துடலாம்னு இருக்கேன்.”
அந்த ஞாயிறு நான் அழைக்குமுன் வர்ஷாவே ஸ்கைப்பில் வந்து விட்டாள். வழக்கமான விசாரிப்புகள். பின் சொன்னேன். “வர்ஷா.. ஐ வாண்ட் டு டெல் யு சம்திங்”

“நான் கூடப்பா. உன் கிட்ட ஒண்ணு சொல்லணும். இல்ல கேக்கணும்”

“சரி. அப்ப நீ சொல்லுடா”

“இல்லப்பா நீயே சொல்லு. நான் அப்புறம் சொல்றேன்”

“லேடீஸ் பர்ஸ்ட் டா”

“ஐய. மொக்க போடாதப்பா., சரி லெட் மீ ஓபன் இட் பர்ஸ்ட். ரொம்ப நாளா எதிர்பார்த்துட்டு இருந்தது. அதாம்பா உங்கிட்ட கூட அடிக்கடி சொல்வேனே. என்னோட ட்ரீம் ப்ர்ரஜெக்டுன்னு. அது கிடைச்சிருக்குப்பா இப்போ. ஒண்ணரை வருஷம் ஆஸ்திரேலியா அசைண்மென்ட்பா. “ என்று சொல்லி நிறுத்தியவள், ஒரு சில நொடிகள் என் கண்ணையே பார்த்தாள். “ போய்ட்டு வரட்டுமாப்பா... நீ மேனேஜ் பண்ணிப்பியா” என்றாள். குரலில் கெஞ்சல் இருந்தது.

சில நொடிகள் தாமதித்தேன். “பின் முகத்தில் வரவழைத்துக் கொண்ட புன்னகையுடன்” போய்ட்டு வாடா. இதுக்கு கேக்கணுமா. ஐ விஷ் யு ஆல் த பெஸ்ட்” என்றேன்.

எதிர்பார்த்திருந்த பதில் கிடைத்ததும் வர்ஷா சந்தோஷத்தில் குதித்தாள்.கம்பியூட்டர் திரையில் முத்தம் கொடுத்தாள். சிரித்துக் கொண்டே” ஒரு நிமிஷம் லைன்ல இருடா. அப்பா தோ வந்துடறேன்” என்று சொல்லி விட்டு எழுந்து அடுத்த அறைக்குச் சென்றேன். 

அவ்வளவு நேரம் சிரமப்பட்டு அடக்கி வைத்திருந்த இருமலை இருமித் தீர்த்தேன். பாட்டிலை எடுத்துத் தண்ணீரை ஒரு மடக்கு குடித்து விட்டு மீண்டும் லேப்-டாப் முன் சென்று அமர்ந்தேன்.

புன்னகையுடன் “ம்ம் அப்புறம் சொல்லுடா. எப்போ கிளம்பற மாதிரி ப்ளான்?” என்று என் உரையாடலை மீண்டும் துவங்கினேன்.