Wednesday 18 May 2016

தந்தை போட்டிச் சிறுகதை - 12

Rate this posting:
{[['']]}
ஏனென்றால் தந்தைப் பாசம்தான்..

பஞ்சாயத்து பேச என்றால் பத்துபேர் வருவார்கள். ஆனால் உண்மையான அக்கறையுடன் ஒரு முடிவெடுக்க யாருக்கும் பொழுதில்லை. நல்ல முடிவு எடுப்பாங்கனு நாலுபேர்கிட்ட போய் நிக்குறதுக்கு பதிலா நாமளே கலந்து பேசி ஒரு முடிவு எடுக்கலாம். ஆனா யார்கூட? அவங்ககூடவா? மறுபடியும் அவங்க முகத்துல முழிக்கத்தான் வேணுமா? வேற வழி.. பொண்ணப் பெத்துட்டமே..

இவரத்தான் காதலிக்குறேனு ஒரு பையன கூட்டிகிட்டு வந்து அஞ்சலி சொன்னப்போ பெத்த மகள் தன் இஷ்டத்துக்கு ஒரு முடிவு எடுத்துட்டாளேன்னு கோபம் வரல.. சாப்பிட்ட சாக்லட்ல இருந்து கட்டிபிடிச்சு தூங்கின கரடிபொம்ம வரைக்கும் அவ விரும்பினத மட்டும்தான் அவளுக்கும் வாங்கிக்கொடுத்தேன். எந்த ஒரு இடத்துலயும் என்னோட தனிப்பட்ட ஆசைகள அவமேல திணிச்சதே இல்ல. என் பொண்ணு அவளோட வாழ்க்கைய முழுமையா அவளோட விருப்பப்படிதான் வாழணும்னு நினைச்சேன். அதுனால சேகருக்கு அஞ்சலிய கல்யாணம் பண்ணிவச்சேன். எப்படி அம்மா இல்லாத அஞ்சலிய நான் தனியா இருந்து வளர்த்தேனோ அதமாதிரி அப்பா இல்லாத சேகர அவனோட அம்மா தனியா வளர்த்து சமூகம் மதிக்குற ஒரு பெரியமனுஷன் ஆக்கினாங்க. சேகர் நல்ல பையன்தான். பொறுப்பானவன். அதனாலதான் இந்த சின்ன வயசுல பல உயரங்களுக்கு போகமுடிஞ்சுது. அஞ்சலியயும் அவன் உயிருக்கு உயிரா காதலிச்சான். கல்யாணத்துக்கு அப்புறம் அவங்க எவ்ளோ சந்தோசமான ஜோடியா இருந்தாங்கனு பாத்து பூரிப்படைஞ்சேன். நானும் சரி சேகரும் சரி வசதில ஒருத்தருக்கு ஒருத்தர் குறைஞ்சவங்க இல்ல. அப்பிடியே அவன் கேட்டிருந்தாலும் என் மொத்த சொத்தயும் எழுதி வச்சிருப்பேன். எல்லாமே என் பொண்ணுக்குதானே.. ஆனா அவன் ஒரு ரூபாகூட வாங்கல. தன் சொந்த சம்பாத்தியத்துல பொண்டாட்டிய காப்பத்தணும்னு அஞ்சலிய கல்யாணம் பண்ணான். என் மனசுலயும் நல்ல இடத்த பிடிச்சான். ஆனா அதெல்லாம் நேத்து வரைக்கும்தான்.

ஒரு அப்பன் தன் பொண்ண உயிருக்கு மேலா கண்ணுக்குள்ள பொத்தி வச்சு வளப்பான். அவன் ராஜாவா இல்லாட்டியும் மகள ஒரு இளவரசி மாதிரி பாத்துப்பான். அப்பிடி ஒரு ஓவியம் வரையுறமாதிரி கவனமா அழகா வளத்தெடுக்குற பொண்ணு கல்யாணம் ஆகி புருஷனோட போனபிறகு தன்னை மறந்துட்டு கட்டிகிட்டவனே உலகம்னு வாழணும்னுதான் ஆசப்படுவான். ஏன்னா எந்த ஒரு ஆணுக்குமே தன் மனைவி அவ அப்பாவோட தன்னை கம்பேர் பண்றது பிடிக்காது. அது ஏன்னா எல்லா பொண்ணுங்களுமே அப்பா எப்பிடி பாத்துகிட்டாரோ அதே மாதிரி புருஷனும் பாத்துக்கணும்னு நினைப்பாங்க ஆனா அது எல்லா ஆண்களாலயுமே செஞ்சுமுடிக்க முடியுறதில்ல. ஆனா என் பொண்ணு கிட்டத்தட்ட என்னை மறக்குற அளவு கல்யாண வாழ்க்கைல சந்தோசமாயிருந்தா. எனக்கும் அதான் வேணும். அவளுக்கு உண்டான மகிழ்ச்சி நிரந்தரமாயிருக்கணும்.. இதான் என்னோட அன்றாட பிரார்த்தனை. ஆனா அந்த பிரார்த்தனை ஜெயிக்கல. கண்ட கனவெல்லாம் பாதில கலைஞ்சு போச்சு. என் பொண்ணோட சந்தோசம், நிம்மதி எல்லாம் அழிஞ்சுபோய் அப்பானு கத்தி அழுதுகிட்டு என் வீட்டவந்தா.. கல்யாணம் முடிஞ்சு ஒரு பொண்ணு அழுதுகிட்டு வீட்டவிட்டு போகலாம்.. ஆனா அழுதுகிட்டு வீட்டுக்கு வந்தா பெத்தவனுக்கு எப்பிடி இருக்கும்?

நித்யா.. யார் அந்த நித்யா? ஏன் என் பொண்ணு வாழ்க்கைல வந்தா? ஒவ்வொரு விசயமும் கேக்க கேக்க பைத்தியமே பிடிச்சுடும்போல இருந்திச்சு. நித்யா சேகரோட முதல் மனைவியாம். சொல்லாம கொல்லாம ஓடிப்போனவளாம். இப்போ திரும்பி வந்து தன்னோட மனைவி ஸ்தானத்திற்காக போராடுறாளாம். அவ யாரோ எவளோ எனக்கு தெரியாது. இவன் இருக்கான்ல..என் மாப்பிள்ள.. தனக்கு ஏக்கனவே கல்யாணம் ஆனத முன்னாடியே சொல்லிருக்கணும் இல்லயா? அவனோட அம்மா இருக்காங்கலே இந்த பெரிய மனுஷி.. இவங்க பெரியவங்கதானே..இப்பிடி என் பையனுக்கு ஏக்கனவே கல்யாணம் ஆகி அந்த பொண்ணு ஓடிப்போய்ட்டானு ஒரு வார்த்தை சொல்லிருக்கலாமே. நான் ஒரு முட்டாள். பொண்ணு ஆசப்பட்டா பையனும் நல்ல இடம்னு வேற எதயும் விசாரிக்காம கல்யாணத்த பண்ணி வச்சிட்டேன். இப்ப அழுது அழுது சாகுறது என் பொண்ணுதானே.. நான் நினைச்சா இப்பகூட போலிஸ கூப்பிட்டு அவனையும் அவன் அம்மாவையும் உள்ள தள்ளமுடியும். ஆனா என் பக்கத்து ஆட்களும் சரி அவங்க பக்கத்து ஆட்களும் சரி அந்த நித்யா பொண்ணோட சமாதானமா பேசி ஏதாவது செட்டில்மென்ட் பண்ணி கதைய காதோட காதா முடிக்க சொல்றாங்க. அடப்பாவிங்களா.. ஒருத்தன் என் பொண்ண ஏமாத்தி கல்யாணம் பண்ணி குற்ற உணர்ச்சியே இல்லாம இத்தன நாள் குடும்பம் நடத்தியிருக்கான். அவனுக்கு தண்டனை கொடுக்குறத பத்தி எவனும் பேசல. தன்னோட மனைவி ஸ்தானதுக்காக ஒருத்தி போராடுறா..அவ வாய எப்பிடி மூடுறதுனு மட்டும் திட்டம் போடுறீங்க.. எவன் தடுத்தாலும் அவங்கள உண்டு இல்லனு பண்ணியிருப்பேன். ஆனா என் பொண்ணு அழுதுகிட்டே சொன்னா அவன இன்னும் காதலிக்குறேன்பானு.. நான் என்ன பண்ண? வாழுற வாழ்க்கைக்கு அர்த்தம் தந்த பொண்ணு முக்கியமா இல்ல இந்த கௌரவமும் கோபமும் முக்கியமா? மனசுக்கு கொஞ்சம்கூட ஒட்டாம ஒரு நடைபிணமா அந்த நித்யாகிட்ட சமாதானம் பேச நானே போனேன்.

பிடிக்காத ஒரு கல்யாணம்தான் நான் சேகரை கட்டிக்கிட்டது. என் வாழ்க்கைய நானே சொந்தக்கால்ல வாழணும்னு ஆசப்பட்டுதான் அவரவிட்டு பிரிஞ்சு போனேன். ஆனா இந்த உலகம் என்னை நிம்மதியா வாழவிடல. எங்க போனாலும் ஏதாவது ஒரு கறுப்பு உருவம் என்னை தொடர்ந்துகிட்டே இருந்திச்சு. அதுக்கு பணம், தனியா இருக்குற பொண்ணுங்குற வாய்ப்பு, ஓடிப்போனவன்ற பேரு இப்பிடி பல பேர் இருக்கு. கடைசியா தற்கொலை பண்ண தைரியம் இல்லாம தாலிகட்டினவர்கிட்டயே திரும்பிடலாம்னுதான் வந்தேன். அவர் இன்னொரு கல்யாணம் பண்ணிட்டார்னு எனக்கு தெரியாது. தெரிஞ்சிருந்தா வந்திருக்கமாட்டேன். பொண்ணா பொறந்ததே பாவம் சார். யார் இங்க பொண்ண மதிக்குறாங்க.. நான் சுமையா இருக்கேனு என் பெத்தவங்க எவனோ ஒருத்தன் தலைல என்னை கட்டிவச்சாங்க. அவனுக்கு எனக்கு பிடிச்ச சாப்பாடுகூட என்னனு தெரியாது. தெரிஞ்சிக்க விரும்பல. அப்பேற்பட்டவனோட வாழபிடிக்காம வெளில போனா வாழாவெட்டின்னு சொன்னாங்க. புருஷனையே தாண்டி வந்தவ எங்க வேணா வருவான்னு சொல்லி கூப்பிட்டாங்க. பயமா இருந்திச்சு. இப்ப எனக்கொரு அடைக்கலம் வேணும். ஆனா நான் சேகர தப்பு சொல்ல. எங்களுக்குள்ள காதல் இல்ல. அவர் எங்க காதல பார்த்தாரோ அவள கட்டிகிட்டாரு சந்தோசம். நான் போறேன். ஆனா இப்பகூட நான் காசுக்காகத்தான் திரும்பி வந்தேன் காசு கொடுத்தா திரும்பி போயிடுவானு எல்லாரும் நினைக்குறாங்க. அதான் என்னால தாங்கமுடியல.

எப்பேற்பட்ட பொண்ணு இவ.. இவ்வளவு விசயத்துலயும் இவ பண்ண தப்பு என்ன? பிடிக்காத ஒருத்தனோட காலம் முழுக்க பல்ல கடிச்சிகிட்டு இருக்கா தன் கால்ல நிக்கப் போனது தப்பா? பொண்ணுங்க இப்பிடித்தான் இருக்கணும்னு தாங்களே ஒரு வட்டம் போட்டுவச்சு அதுல இருந்து பொண்ணுங்கள தாங்களே வெளில தள்ளிவிட்டு அவ வட்டத்தை தாண்டிட்டானு அவள தூற்றுகின்ற இந்த சமூகம் தன் முகத்துல தானே காறி உமிழட்டும். என் பொண்ணு அவ புருஷனோட வாழுட்டும். எனக்கு இப்ப இன்னொரு பொண்ணு கிடைச்சிருக்கா. அவ வாழ்க்கை நல்லா அமைக்க அப்பா நான் இருக்கேன்.