Saturday, 30 April 2016

தந்தை போட்டிச் சிறுகதை - 4

Rate this posting:
{[['']]}
தந்தை
ந்தகுமாரனுக்கு சில காலமாகவே குழப்பம் செய்த தவறுகளுக்கு மறு ஜென்மத்தில் தண்டனை கிடைக்கும் என்கின்றார்களே... உண்மையா ? சிலர் இந்த ஜென்மத்திலேயே கிடைத்து விடுகிறது நான் கண்கூடாக பார்த்து இருக்கிறேன் என்று’’ம் சொல்கின்றார்கள் யாராவது நான் உணர்ந்திருக்கிறேன் என்று சொல்லி இருக்கின்றார்களா ? நந்தகுமாரன் தான் உணர்ந்து கொண்டதாக நினைத்து வாழ்கிறான் நிகழ்காலத்தில்... ஆம் உணர்ந்து கொண்டும் இருக்கின்றான் இது மிச்சமுள்ள இவனது கடைசி காலம்வரை தொடருமா ?இவனுக்கு சமூக அவலங்களை கண்டு பொறுக்க முடிவதில்லை இது இவன் விபரமறிந்து உலகையறிந்த நாள்முதல் உள்ளவை. இதை எல்லாம் தடுக்க இவன் தமிழ்த் திரைப்படங்களின் நாயகன் அல்ல ! யதார்த்த மனிதன் இவனுக்கு ஒரு வேதத்தில் சொல்லப்பட்டது இவனது நினைவுகளை மீட்டிச் செல்லும் அது //அநியாயங்களை தட்டிக்கேட்க முடியாதெனில் மனதளவிலாவது வெறுத்து ஒதுங்கு//

ம் இவன் இதைத்தான் கடைப்பிடித்து வருகிறான் இந்தக் கோபங்கள் நாளடைவில் விரிவாகி மனிதர்களுடன் பேசுவதையே நிறுத்தினால் என்ன ? என்ற விபரீத சிந்தனையைக் கொடுத்தது ஒருக்கால் நாம் ஊமையாக பிறந்திருந்தால் ? யாருடனும் பேசாமல்தானே வாழ்ந்திருப்போம் ஆகவே பேசாமல் வாழ்ந்து பார்ப்போமே நம்மால் நினைத்ததை நடத்தி காட்ட முடியும் என்ற நமக்குள் நாம் சோதனையும் செய்ய முடியுமே என்று மனிதர்களுடன் பேசுவதை நிறுத்தினான் அப்படியானால் நாம் யாரிடம் பேசுவது ?நாமே நம்மிடம் ? இப்படிப் பேசிக்கொண்டால் சமூகம் வேறு முத்திரையல்லவா குத்தும் வேண்டாம் அப்படியானால் மன ஆறுதலுக்காக எழுத்துகளோடு பேசிக்கொள்வோம் ஆம் இவன் பேசினான்... பேசினான்.. மணிக்கணக்காய், நாட்கணக்காய், எழுத்துக்களுடன் பேசினான் யாரிடமும் பேசமாட்டான் முதலில் இதை குடும்பத்து நபர்களிடமிருந்து தொடங்கினான் பத்து கேள்விகள் கேட்டார்கள் என்றால் அதில் மிகவும் அவசியமானது என்று கருதி மூன்று பதில்கள் கொடுப்பான் அதுவும் சுருக்கமான பதிலாகத்தான் இருக்கும் இதனால் பலருக்கும் இவனை பிடிக்கவில்லை அதனால் என்ன ? இவனுக்கு இந்த உலக மானிடர்கள் அனைவரையுமே பிடிக்க வில்லையே இதை அப்படியே வெளி நபர்களிடமும் கொண்டு வர ஆரம்பித்தான் பேச்சைக் குறைத்து தலை அசைப்பில் காலம் கடத்தினான் டீக்கடைக்குப் போனால் அமைதியாக தினசரி படிப்பான் சிந்துபாத் கதை முதல் வரிவிளம்பரங்கள் வரை. டீயோ, வடையோ விரல்கள் மூலம் சைகையால் கேட்பான் திரைப்படங்களின் நாயகன் பத்து நபர்களை அடித்து வீழ்த்துவது இவனுக்கு பிடிக்கவில்லை அதைவிட இதற்கு மக்கள் கை தட்டுவது பிடிக்கவில்லை திரைப்படங்கள் பார்ப்பதை நிறுத்தினால் என்ன ? தியேட்டருக்கு போவதை நிறுத்தினான் தேவர் மகன் திரைப்படத்தில் சிவாஜி கணேசன் எப்படி இருப்பாரோ அதைப் போலத்தான் இவனது அப்பா கடைசி காலம்வரை இருந்தார் இன்றும் அந்தப் படத்தின் சுவரொட்டிகள் பார்த்தால் இவனது அப்பாவின் நினைவுகள் வந்து செல்லும் அவரின் உருவத்தையும், மீசையையும் பார்த்தாலே யாருக்கும் நடுக்கம் வரும் ஓங்கி அடிச்சா½ டன் வெயிட் என்று வசனம் பேசுகின்றார்கள் உண்மையிலேயே இவனது அப்பாவின் அடியும் இப்படித்தான் என்று வாங்கியவர்கள் சொல்லக் கேள்வி இவனுக்குத் தெரியாது காரணம் இவனது அப்பா இவனை மட்டும் அடித்ததில்லை சராசரி பிள்ளைகளைவிட இவன்மீது கூடுதல் பாசம் வைத்திருந்தவர் என்பதும் இவனுக்கு நன்றாகவே தெரியும் இவனது நியாயமான கேள்விகளுக்கு பல நேரங்களில் அவரே பதில் சொல்ல முடியாமல் திணறியது உண்டு திடகாத்திரமான மனிதர் அவர் காய்ச்சல் என்று படுத்ததாக சொல்லிக் கேட்டதில்லை அவர் சொல்லிச் சென்ற ஒற்றை வரிகளில் ஆயிரம் அர்த்தங்கள் புதைந்து கிடந்ததை இன்று அனுபவித்து உணர்கின்றான் இவனது சகோதரருக்கு பெண் பார்க்க போன இடத்தில் திடீரென விழுந்தவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு விஷேசமாக கவனிக்கப்பட்டு எட்டு நாட்கள் இருந்தார் அந்த எட்டு நாட்களும் இவனுக்காகத்தான் உயிர் இருந்ததோ என்று அடிக்கடி நினைப்பான் காரணம் ஊட்டி, மைசூர், பெங்களுர், திருப்பதி சுற்றுலா சென்ற இவன் வந்து பார்தவுடன்தான் உயிர் பிரிந்தது. ஆனால் ? இவன் அவரை மதிக்க மாட்டான் காரணம் சராசரி எல்லா மனிதர்களைப் போல இவனது அப்பாவும் சிறிய சிறிய தவறுகள் செய்ததே அன்று அவர் மனதை நோகடித்ததை நினைத்து இன்று இவன் ஆத்மார்த்தமாய் வருந்தி அழும் நிலை அதிகமாகி இவனை விரட்டுகிறது... இவனது தந்தையை இவன் வெறுத்ததற்கு காரணம் இவன் இளம் வயதிலேயே பெரிய அளவில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற சிந்தை குடும்பத்தை விட்டு பிரிய வேண்டும் பெரிய பணக்காரன் ஆகவேண்டும் மிராசுதார் பரம்பரையில் பிறந்த நம்மை இப்படி கஷ்டப்பட வைத்து விட்டாரே என்ற கோபம் இவனுக்கு முன்னாள் பிறந்தவர்கள் எல்லோருமே நல்ல வாழ்க்கைதான் வாழ்ந்திருக்கின்றார்கள் இவனையும் நல்லாத்தான் வைத்து வளர்த்தார்கள் இவனது பார்வையில்தான் கோளாறு காரணம் புதுமை, புரட்சி, புண்ணாக்கு, என்ற சித்தாந்தம் இவன் பிறந்த பிறகுதான் தறுத்திணியம் தாண்டவமாடி இருக்கின்றது அதற்கு காரணம் பிறக்கும் பொழுதே சனியனை கக்கத்தில் கட்டிக்கொண்டு வந்தது இதே நந்தகுமார்தான்.

னது தந்தையின் மனதை இவன் எப்படியெல்லாம் காயப்படுத்தினானோ அதில் துளியளவும் மாற்றமின்றி மகன் இன்று இவன் மனதை காயப்படுத்துகின்றான் இதற்காக இவன் கவலைப்படவில்லை காரணம் கவலைப்பட்டால் மனம் வேதனிக்கும், வேதனை மன உலைச்சலைக் கொடுக்கும், உலைச்சல் கோபத்தைக் கொடுக்கும், கோபம் ஆத்திரத்தை உண்டாக்கும், ஆத்திரம் திட்டச்சொல்லும் திட்டல் சாபமாக மாறக்கூடும் சாபம் பலிக்கக்கூடும் காரணம் இவன் நியாயமானவனல்லவா ! இவனது கோபம் உண்மையானதல்லவா !அப்படியானால் ? இவனது மகனின் வாழ்க்கைதானே பாதிக்கும் இதற்காகவா ஆசைப்பட்டாய் நந்தகுமாரா இவன் வழக்கம்போல் தன்னைத்தானே கேட்டுக் கொண்டான். பொதுவாக யாரோ ஒருவன் யாரையோ கொலை செய்து விட்டான் என்றால் கூட மறுநொடியே அவன் ஏன் ? கொலை செய்தான் என்றே இவன் மனம் நினைக்கும் அதற்காக அவன் செய்தது சரி என்று இவன் சொல்வதாக அர்த்தமல்ல ! ஒருவன் பிட்பாக்கெட் அடித்து விட்டான் காரணம் என்னவென்று பின்புலம் தேடுவான் அவனுக்கு பணம் வேண்டும் எதற்கு ? சாப்பிட அவனிடம் பணமில்லையா ? இல்லை. காரணமென்ன ? வேலையில்லை. ஏன் வேலையில்லை ? நாட்டில் எங்கும் ஊழல். ஏன் ஊழல் ? கொள்ளையர்களின் ஆட்சி கொள்ளையர்களை கொண்டு வந்தது யார் ? மக்கள். ஏன் கொண்டு வந்தார்கள் ?பணத்தை வாங்கியதால். இது தவறில்லையா ? அவனது இந்த இழிநிலைக்கு சமூகமும் ஒரு காரணம்தானே அதற்காக அடுத்தவன் பணத்தை எடுத்தது தவறில்லை என்று இவன் சொல்வதாக அர்த்தமல்ல ! இப்படித்தான் தனது மகனையும் நினைத்துப் பார்க்கின்றான் மகனும் நல்லவன்தான் நம்மைப் புரிந்து கொண்டதில் தவறு அன்று இவன் தனது தந்தையை தவறாக புரிந்து கொள்ளவில்லையா ?இன்று சரியாக புரிந்து கொள்ளவில்லையா ? மகன் பிறருடன் பேசுவதில் காட்டும் அன்பு நம்மிடம் பேசுவதில் சிக்கனம் என்ன ? இதை ஏன் ? நாம் அன்று தந்தையிடம் செய்த தவறுக்கு இன்று மகன் மூலமாய் இறைவன் கொடுக்கும் தண்டனையாக நினைத்துக் கொள்ளக்கூடாது ? அப்படியானால் இறைவன் இருக்கின்றாரா ? இனி நமது தந்தை வந்து தண்டனை தரமுடியாதே பிறராலும் தண்டனை தரமுடியாது கொடுத்தாலும் செவுலைப் பெயர்த்து விடுவோம் மகன் என்றால் பாசம் கையைக் கட்டி விடும் இதுதானே நடைமுறை யதார்த்தம் மகனுக்காகத்தானே வாழ்வு முழுவதையுமே இழந்தோம் இன்று கோபப்பட்டால் ? மகனின் வாழ்க்கைதானே பாதிக்கும் அல்லது நமது வாழ்க்கையைத்தான் ரிவர்ஸில் கொண்டு வர முடியுமா ? கறந்த பால் மடு ஏறுமா ? உடைந்த சங்கு ஊற்றுப் பொரியுமா ?கருவாடு மீன் ஆகுமா ? முழுதும் நனைந்த பிறகு முக்காடு எதற்கு ? வாழ்வின் விளிம்பில் நிற்கும் எனக்கு வீம்பு எதற்கு ? எதிர் வரும் முதுமை எனக்கு பரிசு தருமா ? தண்டனை தருமா ?
தனது மகன் நம்மை தவறாக புரிந்து கொண்டதற்கு காரணமென்ன ? சிறிய வயதில் அவனது மூளைக்குள் செலுத்தப்பட்ட தவறான தகவல்கள் யார் ? நமது மனைவியின் வகையறாக்கள் ஏன் ? நாம் இரண்டாம் திருமணம் செய்து கொண்டு குழந்தையை நடுத்தெருவில் விட்டு விடுவோம் என்ற எண்ணங்கள் இன்று என்னவாயிற்று ? தவறு செய்து விட்டோம் என்ற குற்ற உணர்ச்சி இன்று உணர்ந்து விட்டார்கள் இவர்கள் மட்டும்தானா தவறு செய்கின்றார்கள் சமூகத்தின் பெரும் பகுதியாளர்கள் இப்படித்தானே... ஆனால் ? அன்று நமது மகனின் பிஞ்சு மூளையில் செலுத்தப்பட்ட தவறான தகவல் களஞ்சியத்தை வெளியில் எடுப்பது யார் ? உடன் முடியும் செயலா ?தவறை உணர்ந்த அவர்களுக்கு நாம் கொடுக்கும் தண்டனை நமது கடைசி மூச்சுவரை பேசாதது மட்டுமே அதற்காக நமது மகனுக்கும் தண்டனை கொடுக்க முடியுமா ? நமது மனைவியின் மறைவோடு நமது செல்வத்தையும், மற்ற செல்வங்களையும் சுருட்டிக் கொண்ட பிறகு நமது முதல் செல்வத்தை மட்டும் மீட்டு வருவதற்கு ஐந்து ஆண்டுகள் கடந்து விட்டதே இப்பொழுது மற்ற செல்வத்தோடு எங்கள் செல்வமும் உங்களுக்கே என்றால் ? வாயைப் பிழப்பதற்கு நந்தகுமார் சராசரி மானிடன் இல்லையே யாருக்கு வேண்டும் அவர்கள் சொத்து ? மகன் வெறுப்பதற்கு நாமும் ஒரு காரணம்தானே இருபது வருடங்களுக்கும் மேலாக தாயில்லாத பிள்ளையை பிரிந்து வாழ்ந்து விட்டு இப்பொழுது என் மீது பாசமழை பொழி என்றால் எப்படி ? பொருளைத் தேடித்தான் பிரிந்தோம் அது மட்டுமா நாட்டில் எப்படியாவது சொந்த பந்தங்கள் மகனுக்கு ஒரு சித்தியைக் கொண்டு வந்து கொடுத்து விட்டால் ? மகனுக்கு சித்தி அம்மாவாக முடியுமா ? இதுவும் மகனின் வாழ்வாதாரத்துக்கே இதைப் புரிந்து கொள்ள அவனுக்கு காலஅவகாசம் வேண்டுமே இதை நாம் ஏன் புரிந்து கொள்ளவில்லை ? காலம் வரும் காத்திருப்போம் வராமலும் போகலாம் மறந்து விடு மனமே எதையும் எட்டுத் திசையிலும் சிந்தித்து பார்க்கும் உனக்கு இது மட்டும் தெரியாதா ?

னவேதனை வரும் போதெல்லாம் யாரிடமாவது சொல்லி அழ வேண்டும் போல் தோன்றும் யாரிடம் சொல்வது ? யார் நின்று கேட்பார்கள் ? தனது மகனே நின்று கேட்காதபோது... வேறு வழி இவள்தான் ஆம் இவள்தான் தனது மனைவியின் கல்லறைக்கு செல்வான் அருகில் உட்கார்ந்து மனம் விட்டு சொல்லி அழுவான் ஆரம்ப காலத்தில் ஒரு சில வேண்டப்பட்டவர்கள் இவனை அழைத்து வந்து வீட்டில் விட்டுப் போவார்கள் பிறகு இவன் அடிக்கடி போக ஆரம்பித்தான் காரணம் இவனது மகனின் வார்த்தைகள் வாழ்க்கையில் பணமிருந்தும் நிம்மதியில்லாமை, பிடிமானம் இல்லாமை ஊர் மக்கள் வேறு மாதிரியாக பேசத் தொடங்கினார்கள் பிறகு விட்டு விட்டார்கள் சில நேரங்களில் நினைப்பான், நாமும் சராசரி மானிடனாய் வாழ்ந்திருந்தால் இந்த உலக சந்தோஷங்கள் அனைத்தையுமே அனுபவித்து இருக்கலாமோ ? இறைவன் அதற்கான பொருளாதாரத்தை தந்து தாரத்தை மட்டும் தரவில்லையோ... வாழ்வின் மிகப்பெரிய பிடிமானம் என்று நினைத்துக் கொண்டு இருந்தபோது மகன் தன்னை எடுத்தெரிந்து பேசியதும் கடந்த சில வருடமாக கிட்டத்தட்ட நடைபிணமானான் மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறுவது போல் சிறுவயதில் யாருடனும் பேசாமல் வாழ்ந்த அந்த பழைய வாழ்க்கைக்கு திரும்பி விடுவோமா ? அந்த வாழ்க்கையில் ஒர் அமைதியை நாம் அனுபவித்தது உண்மைதானே... வீதியில் சென்றவனின் சிந்தனையைக் கலைத்தது கோயில் மணியின் ஓசை.

கோயில் வாசலில் படி ஏறாதவன் நின்று கோயிலைப் பார்த்தான் அந்தக் கோபுரக் கலசங்களைப் பார்த்தான் ஏனோ தெரியவில்லை கலசங்கள் இவனது கண்களுக்கு இன்று மட்டும் ஏதோவொரு சொல்ல முடியாத, விவரிக்க முடியாத உணர்வைக் கொடுத்தது... தெய்வம் இருப்பது உண்மையா ? நாளை நாம் இறந்து விட்டால் ? யாரிடம் செல்வோம் ? பேயாகி விடுவோமோ ? இல்லை அந்தரத்தில் நின்று கொண்டு நம்மகனை பார்த்துக்கொண்டு நிற்போமோ ? இல்லை என்னவள் எனக்காக காத்திருப்பாளோ ? அவளைக் காண்போமோ ?மீண்டும் அவளுடன் இணைந்து வாழ்வோமோ ? இல்லை அப்பா.. அப்பா... பாசமான அப்பா என்னை அரவணைக்க காத்திருப்பாரோ ?அவரை நாம் கட்டிப்பிடித்து அழுது மன்னிப்பு கேட்போமோ ? இப்படி நடக்க சாத்தியமா ? யாரிடம் கேட்பது சந்தேகத்தை ? இதோ இறைவன் என்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்து இப்படி அமைதியான கோயில்களை கட்டி வைத்து இருக்கின்றார்களே... இது உண்மைதானோ ? உள்ளே செல்வோமா ? இல்லை பிரச்சினை வரும்பொழுது மட்டுமே நம்மைநாடி வருகின்றான் என்று இறைவன் கோபப்படுவாரோ ? அன்பே கடவுள் என்கின்றார்களே... கடவுள் கோபப்பட சாத்தியமில்லையே அப்படியானால் காளி கோயிலில் சூலாயுதம் வைத்துக் கொண்டு ஆக்ரோஷமாக நிற்பதும் கடவுள்தானே... அது மட்டும் எப்படி ? நாம் யாருக்காவது துரோகம் செய்து இருக்கின்றோமா ? மனதறிந்து செய்ததில்லையே... அப்படியானால் மனதறியாமல் செய்திருக்கின்றோமோ ? அப்படித்தானே அர்த்தமாகின்றது அப்படியானால் அதற்கு பரிகாரம் என்ன ? மன்னிப்பா ? யாரிடம் கேட்பது ? இதோ இறைவன் என்கின்றார்களே... இவரிடமா ? தயங்கினான் உள்ளே செல்வோமா ? யாரும் பார்ப்பார்களா ? எவ்வளவு மக்கள் கோயிலுக்குள் சென்று வருகின்றார்கள் உள்ளே போய் என்ன செய்வார்கள் ? சிறு வயதில் அம்மா கையைப் பிடித்து அழைத்துச் சென்ற நினைவலைகள் வந்து போயின உள்ளே சென்றதும் அடுத்த தெரு மகாதேவன் மனைவியோடு வந்தவர் நந்தகுமாரை ஒரு மாதிரியாக பார்த்து விட்டு சற்று விலகிச் சென்றார்கள் உள்ளே சென்று கோயிலின் உள்ளே வீற்றிருந்த தெய்வத்தை பார்த்தான் கைகள் நடுங்கியது மெல்ல உயர்த்தி வணங்கினான் மனதுக்குள் வேண்டினான் இறைவா எனது தவறுகளுக்கு தண்டனையை நான் ஏற்கிறேன் உம்மிடம் ஒரேயொரு கோரிக்கை செவி சாய்ப்பாய் என்ற நம்பிக்கையில்..
அன்று நான் எனது தந்தைக்கு கொடுத்த வேதனையை...
இன்று எனது மகன் எனக்கு கொடுத்த வேதனையை...
நாளை எனது பேரன் எனது மகனுக்கு கொடுக்காதிருப்பானாக...
அப்படியொரு வாழ்க்கையை எனது சந்ததியினருக்கு கொடு.
வணங்கி விட்டு வெளியேறினான் மனம் எதையோ இறக்கி வைத்து இலவம் பஞ்சு பறப்பது போன்ற உணர்வு நந்தகுமாருக்கு...

காலங்கள் உருண்டோடியது அன்று மகன் தன்னை விட்டுப் போகும் பொழுது மகனிடம் சொல்லியது நினைவில் ஓடியது..
//நீ என்னைப் புரிந்து கொள்ளும் பொழுது நான் இருக்க மாட்டேன் காரணம் உனக்கு அவ்வளவு கால அவகாசம் தேவைப்படும் என்பது எனது கணிப்பு அன்று அளவுக்கு அதிகமாக வேதனைப்படுவாய் அன்று நீ வேதனைப் படப்போவதை நினைத்து இன்று நான் வேதனைப்படுகிறேன்//
முதுகில் ஏதோ அழுத்துவதை உணர்ந்து திரும்பிப் பார்க்க.. கையில் கம்புடன் போ... போ.... சாப்பிடப்போ என்று சைகையால் சொன்னவனை பார்த்து நகைத்து விட்டு சமூகம் நம்மை இப்படி முடிவு செய்து விட்டதே என்றாவது ஒருநாள் மகன் நம்மை புரிந்து கொண்டு நம்மை வீட்டுக்கு அழைத்துச் சென்று பேரன், பேத்தியை கொஞ்சி மகிழும் காலம் வராதா ? கண்டிப்பாக வரும்... ஒரு விதமான ஊமையாகிய பெரியவர் நந்தகுமார் எழுந்து போனார் அந்த குணாலயா மனநல காப்பகத்தின் சாப்பாட்டுக் கூடத்துக்கு...

முற்றியது (பெரியவர் நந்தகுமாருக்கு அல்ல) கதை.