{[['
']]}

காலத்தை கடந்த வேகம்
13-05-2007 ஹாசன் பெங்களூரு இன்டர்நேசனல் சையின்டிஸ்ட் கான்பரன்ஸ்,
"தி நெக்ஸ்ட் சையின்டிஸ்ட் மீனாட்சி வில் எக்ஸ்ப்ளைன் எபோட் ஸ்பீட் மெக்கானிஷம்"
டெக்னிகலாக அவளுடைய ஒவ்வொரு கருத்துக்களும் தன்னுடன் ஒத்துப்போவதாக இருந்தது அதையும் மீறி அவளுடைய ஒவ்வொரு பாவனையும் சொல்லாற்றலையும் மிகவும் ரசித்துக்கொண்டிருந்தான் டாக்டர் ஆறுமுகம்.
டாக்டர் ஆறுமுகம் மனித ஜீன்களை ஆராய்ச்சி செய்பவன் ,எக்ஸ் ஒய் குரோமோசோம்கள் தாண்டி எப்படி ஒவ்வொரு ஜீனும் உருவாகின்றன எப்படி முதுமை அடைகின்றன ஏன் முதுமை அடையும் ஜீன்களை இளமையாக்க முடியாதா அல்லது தேவைப்படும் ஜீன்களை ஏன் முதுமை படுத்திகொள்ள முடியாதா என்ற தனது கேள்விகளுக்கு பதிலை ஆராய்ச்சியின் வழியே தேடிக்கொண்டிருப்பவன்.
அந்த ஏசி அறையிலும் வியர்வை வடிய பேசி முடித்து ஆசுவாசமாக தனது இருக்கையில் வந்து அமர்ந்தாள் மீனாட்சி.
"ஹாய்! மைசெல்ஃப் ஆறுமுகம்..! யுவர் ஸ்பீச் இஸ் வொண்டர்புல்" அறிமுகப்படுத்தி கொண்டான் ஆறுமுகம்.
"தேங்ஸ்! உங்கள பத்தி கேள்வி பட்டிருக்கிறேன் மிஸ்டர் ஆறுமுகம், பட் இப்போதான் உங்களை பார்க்கிறேன்" முகத்தையும் கண்களையும் கவனித்த இருவருக்குள்ளும் சிறு தடுமாற்றம் மின்னல் வெட்டிய சந்தோசத்துடன் புன்னகைத்தபடியே பேச ஆரம்பித்தார்கள்.
"ஓஹ் அப்டியா.. உங்களோட புராஜெக்ட் நிச்சயம் சக்சஸ் ஆகும்"
"நன்றி! உங்க புராஜெக்ட் மட்டும் என்ன சும்மாவா? ரியல் லைப்ல உங்க ஆராய்ச்சி சக்சஸா வந்தா உலகத்தையே புரட்டி போட்டிருமே!"
"யா பாக்கலாம்! கடவுள் ஆசிர்வதித்தால் இரண்டு பேருமே சக்சஸ் ஆகலாம்!" இருவருக்கும் அர்த்தம் புரிந்ததோ இல்லையோ அரும்பிய சிறு புன்னகையை பரிமாறிக்கொண்டு விடைபெற்றனர்.
கான்பரன்ஸ் முடிந்து வீட்டுக்கு வந்தவள் அனைத்தையும் மறந்து போனாள் தனது சென்னை ஆராய்ச்சி மையத்திலேயே புதிய கண்டுபிடிப்புக்காக கண்ணும் கருத்துமாக ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தாள்.
"என்னம்மா கொஞ்ச நாளா ஆராய்ச்சியே கதினு இங்கேயே இருக்கிற கொஞ்சம் இந்த அப்பாவையும் கவனிச்சுக்கம்மா!"
"உங்கள விட்டா எனக்கு யாரு டாடி இருக்கா?"
"இப்ப அப்டிதான் சொல்வீங்க எல்லா பொண்ணுகளும்!"
"கொஞ்ச நாளைக்குதான் டாடி!, மெசினை ரெடி பண்ணிட்டு சொல்றேன் அப்புறம் பாருங்க உங்க பொண்ண!"
"ம்ம் சரி.. சரி.. எனக்கும் கொஞ்சம் சொல்லேன் என்ன பன்றேனு?"
"அப்பா! இப்போ பேருந்தின் வேகம் மணிக்கு 60 முதல் 120 கி.மீ, ரயிலின் வேகம் மணிக்கு 60 முதல் 450 கி.மீ, வானூர்தியின் வேகம் மணிக்கு 50 லிருந்து 1500 கி.மீ,ராக்கெட் வேகம் மணிக்கு 9,000-லிருந்து 16,000 கி.மீ, நாம் இதையெல்லாம் கடந்து ஒளியின் வேகத்தை தொட வேண்டும், அதையும் தாண்டி ஒளியின் வேகமான விநாடிக்கு 299,792,458 மீட்டர் பயணத்துல ஒரு ஊர்தியை அல்லது இயந்திரத்தை உருவாக்க வேண்டும்.
"ஆமா மீனுகுட்டி! ஒளியோட வேகத்தில பயணப்பட முடியுமா ? உன்னோட முயற்சி சாத்தியமாகுமா?.”
"ஏன் இப்படி ஒரு கேள்வி?"
"காரணம் இருக்கு, சூரியனின் ஒளி பூமிய அடைய 8 நிமிடம் 19 விநாடி ஆகிறது அப்படியானால் உன்னுடைய இயந்திர வேகம் நிச்சயம் அதைவிட அதிகமா இருக்கனும் இல்லையா?"
"ஆமா டாடி சரிதான், ஒரு கிலோமீட்டர் தொலைவை கடக்க 3.3 மைக்ரோ செகண்ட் ஆகிறது அதேபோல ஒரு மைல் தொலைவை கடக்க 5.4 மைக்ரோ செகண்ட் ஆகிறது.நான் அதைவிட குறைக்க வேண்டும் மேலும் திசைவேகம் ஒளியின் திசைவேகத்தைவிட அதிகமாக இருந்தாக வேண்டும்"
"மீனுகுட்டி வேகத்திற்கு உச்ச வரம்பு உண்டு அது ஒளியின் வேகமான வினாடிக்கு 299,792,458 கி.மீ. என்கிறதை தாண்ட முடியாது அத நீ உணர்ந்திருப்பாய்னு நினைக்கிறேன்."
"தெரியும் டாடி! ஐன்ஸ்டீனின் ஆற்றல் பொருண்மை விதியான E=MC^2 அதைத்தான் சொல்லுது ஆனா முயற்சி பன்றேன், பொருண்மையே ஒரு தடைதான் அதையும் தாண்டி என்னை பொருத்தவரை ஒளியின் திசைவேகத்தை அடைந்தாலே சாதிச்சிருவேன். "
" எஸ் யு ஆர் ரைட்"
"நிச்சயம் ஒரு கிலோமீட்டருக்கு ஒரு மைக்ரோ செகண்ட் என்பது முறியடிக்க முடியாத சாதனையா இருக்கும் டாடி, அதே நேரத்தில எனக்கு மைனஸ் வாலுயுவில் கூட செட் செய்யும்படி உருவாக்கவேண்டும் அப்போதுதான் இன்று கிளம்பி நேற்று போய்விடும் சாத்தியம் இருக்கிறது."
"எனது கணிப்பு சரியானால் உன்னுடைய கண்டுபிடிப்பு பழைய காலத்திற்கு செல்லும் சரியா?"
"எக்ஜாக்ட்லி... அதைத்தான் உருவாக்கணும் டாடி!"
"எப்படி? உனது மெசினின் வேகம் தொலைவைத்தான் கடக்கிறதே தவிற காலத்தை இல்லையே?"
"சரிதான் ஆனால் தொலைவை செட் செய்யும்போது அது நேற்றைய காலத்திற்கு செல்லும்"
"எப்படி?"
"இப்போ ஒரு நிமிடத்திற்கு சென்னை டு கோயம்புத்தூர் செட் செய்தோம் என்று வைத்துக்கொள்வோம் அடுத்த நிமிடத்தில் கோவையில் இருப்போம், அதுவே ஒளியின் வேகத்தை விட அதிகமாகும் போது நாம் புறப்பட்ட நிமிடத்திற்கு முன்னமே சென்று விடுவோம் அது கடந்த காலம், என்னுடைய கண்டு பிடிப்பு நிச்சயம் கடந்த காலத்தை தொடும்"
"சரி நீ பயணப்பட போவது நிலத்திலா? நீரிலா? ஆகாயத்திலா?"
"சரியான கேள்வி டாடி! பதில் ஆகாயம்தான், நாம இருக்கிற பூமியே ஒரு வினாடிக்கு முப்பது கிலோமீட்டர் வேகத்துல ஓடிகிட்டுத்தான் இருக்கு அது சரியான வேகத்தில ஈர்ப்புகளுக்கு இடையில சூரியமண்டலத்தில ஒடுறதுனாலதான் பயணபட முடியுது. பூமி மாதிரி ஒரு வெளி அடுக்கு உள்ள மெசினும் கடப்பதற்கு மீடியமும் இருந்தா கண்டிப்பா மனிதன் பயணிப்பது சாத்தியம்தான்.”
"வாவ் சரிதான்... அடுத்து என்ன செய்வதாய் உத்தேசம்?"
"பிறகென்ன சோதனை முயற்சிகள்தான்."
தேதி அட்டையை பார்த்தாள் 21 ஆகஸ்டு 2007.இன்றோடு இந்த ஆராய்ச்சியை தொடங்கி மூன்று ஆண்டுகள் நான்கு மாதங்கள் பதினேழு நாட்கள் ஆகிறது.ஏதோ ஒரு ஆர்வத்தில் தொடங்கி ஒரு இயந்திரத்தை கண்டுபிடித்து, இன்று சோதனை செய்யபோகிறோம் என்கிற குறுகுறுப்பு பயம் ஆர்வம் எல்லாம் சேர்ந்து அவள் அவளாக இல்லை.
"என்னம்மா மீனு குட்டி ராஜ குமாரனை பார்த்திட்டியா ரொம்ப படபடப்பா இருக்க?"
"ஆமாம்ப்பா அவன கண்டு பிடிக்கிறது மட்டும்தான் பாக்கி , இன்றைக்கு சோதனை செய்ய போறேன்!"
"என்னது உன்னோட ஆராய்ச்சி முடிஞ்சுதா?"
"அப்டித்தான் நெனக்கிறேன்!"
"யாரவெச்சு சோதனை செய்ய போற?, என்ன சேர்த்துக்க மீனு குட்டி எனக்கு பழைய காலத்த பார்க்கனும் போல இருக்கு அப்படியே தப்பானாலும் நான் கிழவன் தானே போனா போகுதுனு விட்டுரு"
"அப்பா! இது நான் தயாரிச்சது , எதுவானாலும் நானே சோதனை செஞ்சுக்கிறேன்."
"வேணாம்மா ரிஸ்க்!"
"அதெல்லம் ஒன்னும் இல்ல டாடி, நேற்றே இரண்டு எலிய வெச்சு சின்ன சோதனை பன்னியாச்சு!, ஒரு சின்ன காயத்த உண்டு பண்ணி மெஷின்ல போட்டு ஸ்பீட் டார்கெட் வெச்சு அனுப்பிச்சேன், 1 நிமிசத்துல 24 மணி நேர பயணம், அதுவே மைனஸ்ல முந்தையநாள், பார்த்தா ஒரு எலியோட காயம் இல்லை சோ அது நேற்றைய நிலைக்கு போயிறுச்சு."
"என்ன சக்சஸா?"
"உங்க பொண்ணாச்சே!, ஆனா ஒரு சிக்கல் இருக்கு அந்த பழைய நிலையில இருந்து எலி திரும்பி வரல, அதுதான் ஒரு சின்ன மாற்றம் செஞ்சுருக்கேன் அதோட இல்லாம ஒரு மைக்ரோ செகண்ட்ல ஒரு நாள் பயணப்பட டார்கெட் பண்ண போறேன் அதையும் நானே பண்ணபோறேன்."
"எல்லாம் ஓகே, ஏன் எலிய வெச்சே டெஸ்ட் செஞ்சா என்ன?"
"என்னோட டார்கெட் மனிதன் பயணம் செய்யனும், உலகத்தை நிமிசத்துல கடந்து போகனும், அதே சமயத்தில பழைய மோசமான விளைவுகளை திருத்திக்கவும் நல்லது நடக்கிறதுக்கு உதவியானதாக மாற்ற பின்னோக்கி செல்லவும் கண்டுபிடிப்பு உதவனும், அதனால... நான் செய்றதுதான் நல்லது!"
"என்னவோ, எனக்கு பயமா இருக்கு மீனுகுட்டி"
"டோன்ட் வொரி டாடி, நல்லதாவே நடக்கும்"
"ம்ம்ம்ம்.. சரிம்மா!" என்றவாறே அவளோட பிடிவாதம் தெரிந்து அவளை ஆர்வத்துடன் கவணிக்க ஆரம்பித்தார்.
பிறக்கும்போது நான் எப்படி இருந்தேன் என்பதெல்லாம் தெரியாது, ஆனால் அப்பாவிற்கு என்னை மிகவும் பிடிக்கும் அதுவும் என் பதின்ம வயதில் அம்மா இறந்த பிறகு கோழிகுஞ்சு போல் தன் இறக்கைக்குள்ளே வைத்திருப்பார். ஐந்து பெண்களில் கடைகுட்டியாய் பிறந்து அம்மாவைப்போல் இருந்ததும் ஒரு காரணமாயிருக்கலாம்.என் வாழ்க்கையில் இதுவரை அப்பாவிற்கு தெரியாமல் எதுவும் நடந்ததில்லை, முப்பது வயதிற்குள் இளம் விஞ்ஞானி ஆவதெல்லாம் அவ்வளவு சாத்தியமில்லாத ஒன்றுதான் ஆனால் என்னை உருவாக்கி இருந்தார், என் ஒவ்வொரு வெற்றிப்படிக்கும் முன் எனக்கு அவர் படியின் கைபிடியாய் இருந்தார்.
அப்பா சொன்னார், நாம் இந்த நிலைக்கு வந்ததெல்லாம் பெரிய ஆச்சர்யம், வேலையே இல்லாமல் ஐந்து பெண்களை பெற்றது.அதன் பிறகு கிடைத்த வேலையின் வருமானம் போதாதால் வந்த வறுமை, நோயின் பிடிகளில் மருத்துவமும் பொய்த்து போய் இறந்த உன் இரண்டு சகோதரிகள்.எதிர் பாராத விபத்தில் இறந்த உன் தாயார் என பல இடற்பாடுகளுக்கு பிறகுதான் எனக்கு ஏற்றம் கிடைத்தது.இப்போது படித்து வெளிநாடுகளில் கணவன்களோடு தஞ்சமான உன் சகோதரிகள், இளம் விஞ்ஞானியாக நீ என நிறைவாக இருக்கிறேன்.ஆனாலும் இன்னும் ஒரு குறை இருக்கிறது என கண்ணீர் விட்டார்.
"அப்பா என்ன சொல்ல வருகிறீர்கள் என்று எனக்கு தெரியும், அந்த ராஜகுமாரனை நான் இன்னும் பார்க்கவில்லை பார்த்தால் நானே சொல்கிறேன்"
"என் மீனாட்சிக்கு வாளேந்தும் ராஜகுமாரனோ , வைகையை தந்த சொக்கநாதனோ , உன்னைப்போல் ஆராய்ச்சி செய்யும் அதிசய பிறவியோ வேண்டாம். ஒரு சாதரண இளைஞன் அன்பை நிரப்பும் நம்பிக்கையானவனாய் இருந்தால் போதும்"
"இன்னும் கொஞ்சநாள் பொறுங்க டாடி!, ஆராய்ச்சி முடிஞ்ச பிறகு எனது இயந்திரத்திலேயே போய் கண்டு பிடிச்சுட்டு வாறேன்"
"சீக்கிறம் சொல்லு , நான் அதிகநாள் தாங்கமாட்டேன்"
"இவ்வளவு நாளா என்னோட தொல்லையை தாங்குன என் செல்ல அப்பா இன்னும் கொஞ்ச நாள் தாங்கித்தானே ஆகனும்" என தோளை இறுக்கி கட்டிக்கொண்டேன்.
"இப்படியே ஐஸ் வெச்சு என்ன ஏமாத்திரு..." என்றவாறே அவர் தன்னுடைய வேலையை கவனிக்க ஆரம்பித்தார்.
ஒருவித பயம் அவளை தொற்றிக்கொண்டது, மெசினுள் ஏறி அமர்ந்து கொண்டாள், 500 கி மீ தொலைவை மேற்கு திசை நோக்கி செட் செய்துவிட்டு கைகள் நடுங்கியபடியே மைனஸ் வேலுயுவில் 100 மைக்ரோ செகெண்ட் என்று தன்னுடைய மெசினின் தட்டச்சை தட்டினாள்.
உள்ளீடு ஏற்றுக்கொள்ளப்பட்டது. கிர்ர்ர்ர்ர்...பீபீபீபீ...
வண்ணதிரையில் ...
"உங்களின் உள்ளீட்டின் படி 10,000 நாட்கள் பின்னோக்கி செல்லபோகிறீர்கள்"
"இல்லை..இல்லை.. நான் செட் செய்தது 100 மைக்ரோ செகென்ட் எப்படி பத்தாயிரத்திற்கு போனது? அய்யோ எனது கணக்குபடி 100 நாட்கள்தானே போக வேண்டும்" தலையில் கை வைத்தாள் புரியாதபடி.
சிறிது நேரம் கடந்து அவளுக்கு புரிந்து போனது எப்படியோ மல்டிபில்(பெருக்கம்) ஆகிவிட்டது, அதற்குள் மெசின் தனது எல்லையை எட்டியதற்கான சமிக்கையை காட்டியது. சரி நாம் திரும்புவதற்கான பட்டனை அழுத்தலாம் என நினைத்துக்கொண்டே திரையை கவனித்தாள், கவனித்தவள் திகைத்தாள் தொலைவும் 45 டிகிரி அளவிற்கு தெற்கு நோக்கி திரும்பி இருந்தது, அதுவும் தனது சொந்த ஊருக்கு,
"எப்படி? ஒருவேளை திசையை குறித்த நாம் பூமி சுழலும் வேகத்தையும் கணக்கிட்டிருக்க வேண்டுமோ? " குழம்பிக் கொண்டிருந்தாள்.
திரையில் கீழ் பகுதியில்...
"27 வருடங்கள் 4 மாதங்கள் 17 நாட்கள் கடந்து நீங்கள் அடைந்த நாள், 4 ஏப்ரல் 1980 வெள்ளிக்கிழமை.
"ஆ! எனது பிறந்த நாள்..." என்னை அறியாமலேயே மெசினை விட்டு வெளி உலகை கவனிக்க ஆரம்பித்தேன்.
அம்மா பேரழகி என்று அப்பா அடிக்கடி சொல்வார், ஆனால் அது எனக்கு புரியும் முன்னரே அம்மா போய் சேர்ந்து விட்டார், இப்பொழுதுதான் அவளை கூர்ந்து கவனிக்கிறேன், என்னைப்போலவே இருக்கிறாள் என்ன ஒரு அழகு! ஆனாலும் நிச்சயம் என்னை விட அம்மா பல படிகள் மேல்தான். சோகமாய் படுத்திருந்தாள் உடலின் களைப்பு அவளது தேகத்தில் தெரிந்தது, ஏதோ முனங்கிக்கொண்டிருந்தார்.
"என்னவாய் இருக்கும்...!" கூர்ந்து கவணிக்க ஆரம்பித்தேன்.
"என் பிள்ளை... என் பிள்ளை..."
"ஆ!... நான் பிறந்து விட்டேனா! எங்கே நான்? அப்பா எங்கே?" கண்கள் நாளா பக்கமும் துளாவியது.
"ஆஹா! அப்பா அடுத்த ரூமில் இருக்கிறார்!"
'அப்பா ஏன் சோகமாய் இருக்கிறீர்கள், நான் பிறந்ததில் சந்தோசம் இல்லையா உங்களுக்கு?' கேள்விகளை கேட்டுக்கொண்டேன்.
"அந்த கிளவியிடம் துண்டினுள் வைத்து அவள் கைகளை பிடித்து.. கெஞ்சி.. அப்பா ஏதோ கொடுத்து அனுப்புகிறாரே என்ன அது?"
"ஐ!... நானா இப்படி? குட்டி முயல் போல் கை கால்களை ஆட்டிக்கொண்டு... முட்டை கண்களை மூடிக்கொண்டு சிரிக்கிறேனே..."
"சாமிய பாத்து சிரிக்கிறியா?" கிளவி கேட்டாள்.
மாற்றுக்குறள் கேட்டதும் கை கால்கள் ஆட்டுவதை நிறுத்தியிருந்தேன். அப்படியே துணியோடு அள்ளி எடுத்துக்கொண்டவள் தனது கரகரத்த குரலில் ஏதோ பாட ஆரம்பித்தாள்.
" சாமிய பாத்து சிரிச்சவளே
சாதிக்க வேணுமுனு பொறந்தவளே
வம்சத்த வளக்க ஆளில்ல
வந்த இடம் போயிறு தாய் மகளே!"
- என்றவாறு பாடிக்கொண்டே குவளையில் இருந்த கள்ளிப் பாலையும், கையில் இருந்த நெல் மணிகளையும் மிகச்சரியாக எந்த படபடப்பும் இன்றி இந்த முறை சரியாக வாயில் தினித்தாள்.
"அப்பா! நீங்களா! என்னால் நம்ப முடியவில்லை, இவ்வளவு பாசம் காட்டிய நீங்களா என்னை கொலை செய்ய சொன்னீர்கள்?. அய்யோ வாய் கசக்கிறதே,நிகழ்கால வாழ்க்கைக்கு போவதற்கான பட்டன் எங்கே, அய்யோ! கண்கள் மங்குகிறது, கைகள் நகர மறுக்கிறது, ஆஆஆ... மயக்கம் வருவதுபோல் இருக்கிறதே. பட்டன்... ப.. ப.. பட்டன் எங்கே?”
"டா... டாடீ..! அப்பா...! அப்பா...! நீங்களா?" மயங்கி மெசினுள்ளே சரிந்தாள்.