{[['
']]}

என்னோற்றான் கொல்எனும் சொல்
மணியக்காரர் வீடு முன்னாடி உட்காந்திருந்த கூட்டம் செல்போனில் பேசிகிட்டுயிருந்த சரவணனை பார்த்தபடி இருந்தார்கள் .
பேசி முடிந்த சரவணன் “இன்னும் டிக்கெட் கிடைக்கலயாம் ,
கிடைச்சவுடனே கிளம்பி வரேன்னு சொல்றான் ”
“அவன் வரவரைக்கும் உசுரு இருக்கனுமே ” புகையிலைய துப்பியபடி
போஸ்ட் மாஸ்டர் சொன்னார்.
“ காசு பின்னாடியே ஓடிகிட்டுயிருந்த மட்டும் போதுமா, எவ்வளவு
இருந்து என்ன பிரோஜனம்,வெள்ளகாரனுக்கு வைத்தியம் பார்க்க
போய், இப்ப கடைசி நேரத்தில பெத்தவன் கூடயிருக்க முடியலையே”
கூட்டத்திலிருந்த ஒருவர் ஆரம்பித்தார் .
"சும்மா சொல்லனும்னு சொல்லதிங்க , காசு இருந்ததால் தானே
ஆஸ்பத்திரில் வச்சி நல்ல பார்த்திக்க முடிஞ்சிது, நல்லாயிருந்த
மனுஷனுக்கு திடீர்னு இப்படியாகும்னு தெரியுமா?? ”
மணியக்காரர் போன மாசம் வரைக்கும் நல்லதான் இருந்தார், ஒரு நாள்
காலையில் பாத்ரூமில் வழுக்கி விழ ஆஸ்பத்திரிக்கு போய்
சேர்ந்தங்க .
போஸ்ட் மாஸ்டர் அப்பவே சொன்னார் “ பாசத்தை ஏன்டா கக்குஸில்
காட்றிங்க , வயசான காலத்தில் நடந்தவே கால் வழுக்கும், இதில
டைல்ஸ் ரொம்ப முக்கியமா , அப்பன் பக்கதில உக்காந்து பாசமா பேசமா ,
பாத்ரூமை பளபளனும் காட்டிட போதுமா ??”
ஆஸ்பத்திரியில் காலில் முறிவுனு கட்டு போட்டு அனுப்பிட்டாங்க,
அமெரிக்காவில் டாக்டராக இருக்கும் மணியக்காரர் மகன் சண்முகம் ,லீவ்
இல்லாதால் வர முடியாம போக, ரிப்போட்டை மெயிலில்
அனுப்ப சொல்லி பார்த்தார் ,அவருக்கு ஏதோ பொறிதட்ட ,தலைய
ஸ்கென் செஞ்சி பார்க்க சொன்னார். முளையில் ரத்தம் கட்டினது
அப்பதான் தெரிந்தது.
சண்முகம் தனக்கு தெரிந்த பெரிய டாக்டரின் மருத்துவமனையில் வைத்தியம் பார்க்க ஏற்பாடு செய்தான் . ஆனால் வயதானதால் ஆப்ரேஷனுக்கு உடம்பு
தாங்காது, மாத்திரைகள் தான் மூலம் சரி பண்ணனும் என்று சொல்லி பத்து
நாள் பார்த்திட்டு எந்த முன்னேற்றம் இல்லைனு ,எப்ப வேணாலும்
முடிஞ்சிரும்னு வீட்டிற்கு கூட்டிட்டு போக சொல்லிட்டாங்க .
ஆஸ்பத்திரியிருந்து கூட்டிகிட்டு வந்து ரெண்டு நாளா முச்சு
இழுத்துகிட்டு இருக்கு , மகனை பார்க்கிற ஆசை தான் இழுத்து பிடிச்சுகிட்டு
இருக்கிறதா ஊருள்ள பேசிகிட்டாங்க.
“இருக்காத பின்னே , ஒத்த மகனை வைராக்கியாமாக படிக்க வச்சி ,
விருப்பட்ட மாதிரி டாக்டர் ஆக்கினார் , அவன் நல்லாயிருக்கிறதா கடைசிய கண் குளிர பார்த்திட்டு போக ஆசைபடுறார்”
”ஆமாம, அதுக்கு அந்த பையனை கொஞ்ச நஞ்சமா பாடு படுத்தினார்”
”அது இப்ப ரொம்ப முக்கியமா ??” என்றபடி கூட்டத்தை அடக்கினார்
சிவசு வாத்தியார் .
“ உன் கூட்டாளிய சொன்ன பொறுக்கதே ”
மணியக்காரரும், சிவசு வாத்தியாரும் இளவட்ட காலத்திலிருந்து
அவங்க பிள்ளைங்க இளவட்ட காலம் வரைக்கும் ஒண்ணுகுள்ள
ஒண்ணு .
சிவசு வாத்தியார் மகன் சரவணனும் , மணியக்காரர் மகன்
சண்முகமும் ஒரே வகுப்பில் படிக்கவும் நட்பும் இன்னும் வழுவச்சி .
சண்முகம் பிறந்தோன அவனை பெரிய படிப்பு படிக்க வைக்கனும் அப்படினு மணியக்காரர்
முடிவு பண்ணிட்டார்.
சிவசு வாத்தியார் கூட “ ஏண்டா ,அவன் இன்னும் புரண்டே படுக்கலை ,
அதுக்குள்ள புத்தக சுமைய ஏத்த பார்க்கிறா “ என்று சொல்லி பார்த்தார்.
“உனக்கு தெரியாது சிவசு ,இப்பயிருந்தே சொல்லிகிட்டு இருந்த்தான் நல்லா மண்டையில் ஏறும், படிக்காம நான் ஒருத்தன் கஷ்டபடுறது போதும், இவன்
நல்லா படிக்கனும்”
மணியக்காரர் சொன்ன மாதிரி கஷ்டமெல்லாம் ஒன்னும் படலை ,
இருபது ஏக்கரில் விவசாயம் பண்ணும் சம்சாரி தான், என்னா
முன்னாடி அம்பது ஏக்கர் இருந்த்து ,தேவையில்லாம
ஒருத்தனுக்கு ஜாமீன் போட்டு மொத்த சொத்தும் போக
பாத்துச்சி , வெளியூரில் வேலையிலிருந்த அண்ணன்,தம்பிகள் வந்து பைசல்
பேசி இருபது ஏக்கரை காப்பத்தி விட்டாங்க .
அண்ணன் திட்டினதை பொறுத்துகிட்ட மணியாகாரருக்கு ,தம்பிங்க “யாரு ஏதை நீட்டினாலும் ,கையெழுத்து போட்டுருவியா, உனக்கு புரியலைனா , படிச்சவங்க யார் கிட்டயாவது கேட்க வேண்டியது தானே, ஏன் இப்படி தற்குறிய இருக்க??” கேட்டது தலைவாழை இலை போட்டு நடுவில நரகலை வச்ச மாதிரி
இருந்திச்சி. இருந்தாலும் அப்ப அவங்க தயவு தேவையிருந்ததால் எதிர்த்து பேச முடியலை.
அன்னைக்கு தம்பிகளை விட தனக்கு பிறக்க போற பிள்ளைய மேல படிக்க
வைக்க ,நினைச்சதோட மட்டுமில்லாம அதை பத்தின விவரங்களை சேகரிக்க ஆரம்பிச்சிட்டார் .
சண்முகம் வளர வளர அவனை எல்லாத்தையும் நேரம் போட்டு செய்ய
வைச்சார், அந்த ஊரிலயே அப்பாவை “ டாடி”னு கூப்பிட்டா முதல் ஆள்
சண்முகம் தான்.
சம்மர் கேம்புனா என்னனு தெரியாத மணியக்காரர் தான், ஒருவேளை மகனுக்கு வெளியூரில்
படிக்க சீட் கிடைச்சா கஷ்டபட கூடாதுனு சனிக்கிழமை ஹிந்தி
கிளாசுக்கும், ஞாயத்து கிழமை இங்கிலீஷ் கிளாசுக்கும் பக்கத்து
டவுனுக்கு அனுப்பினார் .
தன் மகன் மட்டுமில்ல எல்லாரும் படிக்கானும் நினைச்ச மணியக்காரர் , தன் தோட்டத்தில் வேலை பார்க்கும் சின்னான் மகனையும் கடைசிவரைக்கும் படிக்க வைச்சார்.
ஊரிலிருக்கும் எல்லாருக்கும் பார்த்து பார்த்து உதவி செஞ்சவர்,சண்முகம் விஷயத்தில் மட்டும் சர்வாதிகாரியாக இருந்தார்.
பம்பர விளையாட்டில் ஆக்கர் போடுறதில் சண்முகம் கில்லி, எப்பவது வீட்டிற்கு தெரியாம விளையாடுவன், அப்படி ஒருமுறை அவன் ஆக்கர் போடும் ஆர்வத்தில் தூரத்தில் வந்த மணியக்காரரை பார்க்காம விட்டுடான், மணியக்காரர் அவன் முதுகில் ஆக்கர் போட்டதுக்கு அப்புறம் அவன் ஆக்கர் போட வந்ததில்லை.
நல்ல படிக்கிறவனாக இருந்தாலும்,அவன் கவனம் சிதற கூடாதுனு பால்யத்தின் விளையாட்டு, மகிழ்ச்சி ,குறும்பு போன்ற சிறகுகளை வெட்டினார் , புத்திசாலியான சண்முகமும் அவன் கூண்டுகிளி என்பதை சீக்கரமாக புரிஞ்சுகிட்டான்.சொன்னதை செய்யும் கிளிப்பிள்ளையாக மாறிட்டான்.
சண்முகத்துக்கு அனுமதிக்கபட்ட ஒரே விளையாட்டு சதுரங்கம் மட்டுமே, அதுவும் அது முளையை யோசிக்க வைக்கும்,ஞாபக சக்திய அதிகபடுத்தும் என்று யாரோ சொன்ன யோசனையால்.
மேல் வகுப்புக்கு போக போக, சண்முகத்தின் மதிப்பெண் அதிகரிக்க ஆரம்பிக்க, இருந்த கொஞ்ச சுதந்திரமும் குறைக்கபட்டது. சரவணனை தவிர வேறு நண்பர்கள் யாரும் அனுமதிக்கபடலை,அதுவும் நண்பனின் மகன் என்பதை விட மகனின் அளவிற்கு படிக்கும் மாணவன் என்ற தகுதியால் மட்டுமே .சிம்ரன் என்ற நடிகைய பத்தி சண்முகம் கேள்விபட்டது சரவணன் மூலமாக தான்.
பத்தாவது வகுப்பு தேர்வு விடுமுறையில் “படையப்பா” சினிமா, பக்கத்து ஊர் டீமோட கிரிக்கெட் என்று பசங்க கொண்டாடிகிட்டு இருக்கும் போது சண்முகம் பனிரெண்டாவது பாடத்தின் முதல் ரீவிஷனை முடிந்திருந்தான்.
சரவணனுக்கும் சேர்த்து மருத்துவ நுழைவு தேர்வு ஆப்ளிகேஷன் வாங்கிட்டு வந்த மணியாகாரர், சிவசு மகனின் விருப்பத்திற்கு ஏற்ப திரைபட கல்லூரியில் சேர்க்க இருப்பதாக சொன்னவுடன்
” இந்த வயசில் அவனுக்கு என்ன தெரியும்?? நாம தான் எடுத்து சொல்லனும் “ என்று கோபப்பட்டார்.
சிவசு அமைதியாக “ இந்த வயசில் பசங்க விருப்பட்ட வாழ்க்கைய அமைச்சி கொடுக்காம நம்ம விருப்பதிற்கு அவங்க வாழ்க்கை திருப்பிறது தப்பு, ஒருவேளை நாம அமைச்சி கொடுத்த வாழ்க்கை சரியில்லாம போனா அப்பயும் வருந்த பட போறதும் நாம தான், அதுக்கு இப்பயே சரியான வழிகாட்டுதாலோட அவனுக்கு பிடிச்ச பாதையில் போகட்டுமே”.
சரவணன் திரைபட கல்லூரியிலும்,சண்முகம் மருந்துவ கல்லூரியிலும் சென்னையில் சேர்ந்தங்க.
புதுச சிறகு முளைச்ச கிளி கண்டபடி பறக்கும் என்று பலரும் எதிர்பார்க்க ,பறப்பதையே மறந்திருந்த கிளி வழக்கம் போல் படிக்கும் வேலைய மட்டும் செய்தது.
படிப்பை முடிச்ச சண்முகம் மேற்படிப்பிற்காக அமேரிக்கா செல்ல,சரவணன் யாரிடமாவது அசிஸ்டாண்டாக சேர முயற்சி பண்ணிகிட்டு இருந்தான்.
படிப்பு சொல்லி கொடுத்த பேராசிரியாருக்கு, காரியமே கண்ணாகயிருந்த சண்முகத்தை பிடித்து போய்விட, தன் மகளை கல்யாணம் பண்ணிக்கிட்டு அமெரிக்காவில் தங்கிவிட விருப்பமா என கேட்ட, அதுவரை தன் வாழ்க்கையில் விருப்பமா என்ற வார்த்தையை கேட்டுயிரத சண்முகம் உடனே ஒத்துகிட்டான்.
கல்யாணம் அமெரிக்காவில் நடக்க, போயிட்டு வந்த மணியாகாரர் ,அங்கு எடுத்த போட்டோவை எல்லாருக்கும் காட்டிட்டு இருந்தப்ப சிவசு முதல் படம் பாதியில் நின்றதால் வருத்ததிலிருந்த சரவணனுக்கு ஆறுதல் சொல்லிகிட்டு இருந்தார்.
ஊருக்கு அடிக்கடி வர முடியாத சண்முகம்,அப்பா தொலைச்ச முப்பது ஏக்கரை மனைவி பெயரில் திரும்ப வாங்கினான்.அதுக்கு நடுவே எப்பயாவது வந்து தங்க போற ஒருவாரத்திற்கு வீடு கட்டினான். புது வீட்டிற்கு மணியகாரர் குடி போன அன்னைக்கு தான் சிவசு இரண்டாவது முறையாக ஜானதிபதி விருது வாங்கினார்,முதல் தடவை வாங்கின நல்லாசிரியர் விருது விட, மகன் அவன் படத்திற்கான விருதை தன்னை வாங்க சொன்னப்ப கம்பிரமாக வாங்கினார்.
முதல் முறையாக அட்டாக் வந்தவுடன், சரவணன் வற்புறுத்தி சிவசு வாத்தியாரை சென்னைக்கு தன்னுடன் இருக்க அழைத்து சென்றுவிட்டான் .
இன்னைக்கு தான் மணியகாரரை பார்க்க சரவணனோட வந்தார்.
திடீரினு ஒப்பாரி சத்தம் அதிகமானது, உள்ளேயிருந்து வந்த சரவணனை சிவசு பார்த்தார், ஆமாம் என்று தலையாட்டினான்.அருகில் வந்து அவர் எழுந்திருக்க கை கொடுத்தான்.
”சண்முகம் என்ன சொன்னான்??”
“டிக்கெட் கிடைக்கலையாம், நம்மளையே பார்த்துக்க சொல்றான்,உதவிக்கு ஆள் அனுப்புறதாக சொன்னான்”
“எதுக்கு அவனுக்கு பதில்,இவன் கொள்ளி போடுவனா ?”
கேட்டுட்டு கோபமாக நண்பனை பார்க்க உள்ளே சென்றார்.
சற்று நேரத்தில் டை காட்டின ஒருவன் காரிலிருந்து இறங்கினான், சரவணன் யார் என்று கேட்க ,கூட்டம் வழிகாட்ட ,சரவணன் அருகில் வந்து
“ சார், சண்முகம் சார் போன் பண்ணியிருந்தார்,எங்க ஃப்யூனல் சர்விஸில் முன்னாடியே சொல்லியிருந்தார், மயானத்தில் சொல்லியாச்சு,ஏற்பாட்டை ஆரம்பிச்சியிருப்பங்க, பல்லாக்கு கிராண்டாக இருக்கனும் சொல்லியிருக்கார் , பூவோட இப்ப ஆளுங்க வந்திருவங்க, நூத்தம்பது பேருக்கு சாப்பாடு வந்திரும்,கொள்ளி வைக்க அவங்க பங்காளி குமார் வருவாருனு சொல்லியிருக்கார், அப்படி அவர் வரலைன உங்களால் வேற ஆளை ஏற்பாடு பண்ண முடியுமா??” என்று படபடன்னு கேட்டான்.
ராக்காயி பாட்டி இறந்தப்புறம் சில வருடங்களா ஊர் மறத்து போயிருந்த ஓப்பாரி பாட்டை மணியகாரர் சாவில் தான் திரும்ப கேட்டது, அதுவும் காரில் வந்து ஓப்பாரி பாடிய குழுவை ஆச்சரியாத்தோட பார்த்தது.
“சண்முகம் அப்பனை தடாபுடலாக தான் வழி அனுப்புறான், அவன் வந்திருந்த இன்னும் ஆத்மா சந்தோஷதோட போயிருக்கும்,ஊரும் தப்பா பேசியிருக்கது”
“ஊர் தப்பா பேசுறதை கேட்டு வருத்தபட மணியக்காரர் இல்லை , அவர் மகனும் இனிமேல் ஊர் பக்கம் வரபோவதில்லை ,பேசாம ஆக வேண்டிய காரியத்தை பாருங்க”
சொன்ன மாதிரி எல்லாம் வேலையும் நடந்துவிட ஊர்வலம் புறப்பட்டது,மயானத்தில் சிரித்த முகத்தோட டை கட்டியவன் எல்லா வேலையும் செய்யறது ஊருக்கு புதுச இருந்தது.
சண்முகம் ஸ்கைப்பில் நேரடியாக பார்க்க , பங்காளி கொள்ளி வைத்தவுடன் ,சிவசு வாத்தியார் பக்கத்திலிருந்த அவனிடம்
“ உள்ளுர் ஆத்தில அஸ்திய கரைக்கனும்” என்றார் மெதுவாக
“ மொத்தம் மூணு செட் எடுக்க சொல்லியிருக்கேன், உள்ளூர் ஆத்திலும், கங்கையிலும், ராமேஸ்வரத்திலும் எங்க கம்பெனியே எல்லா சம்பிரதயத்தை பண்ணிரும் , மொத்த பேக்கேஜுக்கு தான் சண்முகம் சார் பணம் காட்டியிருக்கார்”
சிவசு வாத்தியார் எதுவும் பேசமால் திரும்பினார்.
“எங்க கம்பெனியில் நிறைய பேக்கேஜ் இருக்கு,தேவைபட்ட கூப்பிடுங்க சார்” என்றபடி தன் விசிட்டிங் கார்டை நீட்டினான்.
தலையைட்டி மறுத்துவிட்டு சரவணன் கைய பிடித்து அவனின் தோளில் சாய்ந்தபடி நடக்க ஆரம்பித்தார் .