Thursday, 16 June 2016

தந்தை போட்டிச் சிறுகதை - 48

Rate this posting:
{[['']]}
கருக்கலைப்பு

வந்தது தனலட்சுமி என்று அடையாளம் தெரிந்து கொள்ளவே எனக்கு இரண்டு நிமிடம் பிடித்தது. பதிமூன்று வருடங்களுக்குப் பிறகு நிகழ்ந்த எதிர்பாராத சந்திப்பு இது. கன்னங்கள் ஒட்டிப்போய், கண்கள் ஆழத்தில் விழித்துக் கிடந்தன. அவளை நான் மறந்தே போயிருந்தேன் என்றாலும் இப்படியான ஒரு நிலையில் அவளைப் பார்ப்பேனென்று நினைத்ததில்லை. நானும் அவளும் ஒன்றாம் வகுப்பிலிருந்து எட்டு ஆண்டுகள் ஒரே பள்ளியில் படித்தோம். எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும்போது எனது அம்மா ஒரு விபத்தில் உயிரிழந்துவிட்டாள். எட்டாம் வகுப்பு முடிக்கும் வரையிலுமான ஆறுமாதங்கள் மட்டும் நானும் என் அப்பாவும் அந்த ஊரில் இருந்தோம். தொடர்ந்து அங்கேயே இருந்தால் அம்மாவின் நினைவுகள் எங்களை நிம்மதியிழக்கச் செய்துவிடுமென்று முடிவெடுத்து எங்கள் ஊரிலிருந்து நானூறு கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் ஒரு நகரத்திற்குக் குடி பெயர்ந்துவிட்டோம். எனது அப்பா அரசுப் பேருந்தில் நடத்துனராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். அதனால் ஒரு வாடகை வீட்டில் நானும் அப்பாவும் மட்டும் தனியாக வாழ்ந்துவந்தோம். சொந்த ஊருக்குப் போக வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்குள் எழாதவாறு பார்த்துக் கொண்டோம். நாங்கள் புது ஊருக்கு வந்துவிட்ட இந்த எட்டு ஆண்டுகளில் இரண்டு முறை மட்டும் சொந்த ஊருக்குப் போய் வந்தோம். அப்பொழுதும் கூட நெருங்கியவர்களின் வீடுகளுக்கு மட்டுமே போய் வந்ததால் தனலட்சுமியைப் பற்றி எந்தத் தகவலும் எனக்குத் தெரிந்திருக்கவில்லை.

எனது அப்பாவும் தனலட்சுமியின் அப்பாவும் ஒரே பிராஞ்சில் வேலை பார்த்துவந்தார்கள். அப்பொழுதெல்லாம் தனலட்சுமி அப்பா புராணம் பாடிக்கொண்டே இருப்பாள்.  ஊரே தனலட்சுமியின் அப்பாவைப் பெருமையாகப் பேசிக் கொண்டிருந்தகாலம் அது. மகளை வளர்த்தால் அப்படி வளர்க்க வேண்டும் என்று பேசிக் கொள்வார்கள். அவள் என்ன கேட்டாலும் வாங்கிக் கொடுத்துவிடுவார். போவோர் வருவோரிடத்தெல்லாம் என் மகளுக்கு அதைச் செய்தேன் இதைச் செய்தேன் என்று பெருமையாகப் பேசிக் கொண்டே இருப்பார். என் நட்பு வட்டத்தில் இருந்த எல்லோருக்குமே தனலட்சுமியின் அப்பாவைப் போல ஒரு அப்பா இருந்தால் நன்றாக இருக்குமே என்ற ஆசை இருந்தது. என் அப்பா அத்தனை செல்லமெல்லாம் கொடுக்கவில்லை. ஐந்து வயதிற்கும் மேலாக என் வேலைகளை நானே செய்து கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தார். ஐந்தாம் வகுப்பினைத் தாண்டியபிறகு என் துணிகளை நானே துவைத்துக் கொள்ள வேண்டும் என்று கூட அறிவுறுத்தி அதை ஒரு சட்டமாகவே எங்கள் வீட்டில் போட்டிருந்தார். யார் வீட்டிலும் இப்படி நடக்காது. பள்ளிக்கூடம் போகும் பிள்ளைகளைப் படிக்கச் சொல்லித்தான் நச்சரிப்பார்கள். தலைவாரிவிடுவதில் இருந்து எத்தனையோ வேலைகளை அம்மாக்கள் செய்வது உண்டு. எங்கள் வீட்டின் சட்டம் அவரவர் செய்யமுடிகின்ற வேலையை அடுத்தவர் தலையில் கட்டக் கூடாது என்பதுதான். ஆறாம் வகுப்புப் படிக்கும் போதிருந்தே நானே தலைவாரிக் கொள்வேன். என் துணிகளை நானே துவைத்து, அயர்ன் செய்து வைத்துக் கொள்வேன். மதிய உணவினைக் கூட நானேதான் போட்டுக் கொள்வேன். எட்டாம் வகுப்பு முடியும்போது யார் உதவியும் இன்றி சமைக்கவோ, பாத்திரம் கழுவவோ, துவைக்கவோ நான் கற்றுக் கொண்டிருந்தேன். இல்லை, கற்றுக் கொடுக்கப்பட்டிருந்தேன்.  வீட்டில் என்னைக் கொடுமைப்படுத்தினார்கள் என்று சொல்லமுடியாது. என்னைக் கண்டிக்கமாட்டார்கள். அதிக செல்லமும் கிடையாது. நான் விரும்பிக் கேட்ட எதையும் மறு கேள்வி கேட்காமல் வாங்கித் தர மாட்டார்கள். நான் கேட்கிற பொருள் எனக்கு எந்த விதத்திலெல்லாம் தேவைப்படும் என்று விளக்கிச் சொன்னால்தான் கிடைக்கும். தனலட்சுமியின் அப்பாவுடன் ஒப்பிட்டு எனக்கு என் அப்பாவின் மீது கோபம் வந்ததுண்டு. ஆனால், இப்பொழுது நினைத்துப் பார்த்தால் அதெல்லாம் என் வாழ்க்கைக்கான வழிகாட்டல் என்று என் அப்பாவின் மீது பெரும் மரியாதை வந்துவிடுகிறது. அவருக்கு மரியாதை என்று சொன்னால் பிடிக்காது. அவரைப் பார்த்துப் பயந்தாலோ, எதையாவது மறைத்தாலோ கூட பிடிக்காது. பெற்றோர்கள் மேல் இருக்கும் அன்பிற்கு மரியாதை என்றெல்லாம் பெயர் சூட்டக்கூடாது என்பார். எதிர்த்துப் பேசலாம்; கேள்வி கேட்கலாம்; சண்டை போடலாம்; இதற்கெல்லாம் அவர் கோபப்பட்டு நான் பார்த்ததே இல்லை. ஆனால் எனக்கு அப்பொழுது இதெல்லாம் தேவைப்படவும் இல்லை. எனக்கு அப்பொழுது தேவைப்பட்டதெல்லாம் தனலட்சுமியின் அப்பாவைப் போல கேட்டதைக் கேட்ட நேரத்தில் வாங்கிக் கொடுக்கிற அப்பாவைத்தான். தினமும் சாக்லேட் வாங்கவும், தின்பண்டங்கள் வாங்கவும் நிறைய காசு கொடுக்கும் அப்பாவைத்தான். இவரைப் போல ஒவ்வொன்றிற்கும் காரணம் கேட்கும் அப்பாவையல்ல.

எங்கள் வகுப்பில் இருந்த மாணவிகளிலேயே தனலட்சுமி சூட்டிகையான பெண்ணாகத்தான் இருந்தாள். எல்லோருக்குமே அவளைப் பிடித்திருந்தது. படிப்பிலும் முதல் மூன்று இடங்களுக்குள் அவள் பெயர் இருக்கும். அப்பொழுதெல்லாம் நான் அவ்வளவாகப் படிக்க மாட்டேன். பார்டர் பாஸ் அளவிற்கு மோசமில்லை என்றாலும் சுமாராகப் படிப்பேன். என் பள்ளிப்பருவ தோழிகளைப் பற்றி அவ்வப்போது நினைத்துக் கொள்ளும்போது தனலட்சுமி அவள் ஆசைப்பட்டதைப் போலவே டாக்டராகவோ அல்லது குறைந்தபட்சம் எஞ்சினியராகவோ ஆகியிருப்பாள் என்று நான் நினைத்துக் கொள்வேன். அவள் அப்பாவும் இவள் விரும்பியதைப் எப்படியேனும் இவளுக்குப் பெற்றுத் தந்துவிடுவார் என்று நினைத்து சில சமயம் பொறாமைப்பட்டது கூட உண்டு. அவளை நினைத்துப் பொறாமைப்படக் காரணம் என் அப்பா என்னிடம் எத்தனை அன்பாக இருந்தாலும் அடிக்கடி சொல்லுகிற வசனம்தான். “ இது உன்னோட வாழ்க்கை, நீதான் அதுக்குப் பொறுப்பேத்துக்கனும். நான் உனக்கு பெருசா எதையும் செஞ்சுதர மாட்டேன். உனக்கு வழி காட்டுறதோட என்னோட கடமை முடிஞ்சிடும். எது உனக்கு வேணுமோ அதுக்கான உழைப்ப நீதான் கொடுக்கனும்”

என் கிராமத்தைப் பற்றியோ, அங்கே நான் வாழ்ந்த வாழ்க்கையைப் பற்றியோ நான் கிட்டத்தட்ட மறந்தே போயிருந்தேன். அதனால் அங்கே என்னுடன் படித்த மற்ற பெண்களைப் பற்றியெல்லாம் பெரிய அக்கரை இருக்கவில்லை. இப்பொழுது திடீரென தனலட்சுமியை இந்தக் கோலத்தில் பார்த்ததும்தான் அதிர்ச்சியாக இருந்தது. இவள் எப்படி இந்த நிலைமையில்? என்னைவிட நன்றாகப் படித்தவள்; அவள் குடும்பமும் எங்கள் குடும்பத்தை விடவும் ஓரளவு வசதியான குடும்பம்தான். என்னைப் போலவே அவளும் வீட்டிற்கு ஒரே பெண். அப்பொழுது நான் படித்த அரை வேக்காட்டுப் படிப்பிற்கு இப்பொழுது டாக்டராக இருக்கிறேன். அதாவது அந்த வயதில் நான் மோசமாகப் படித்தாலும் அதற்கடுத்து பதினொன்று பனிரண்டாம் வகுப்புக்களில் நன்றாகப் படித்துவிட்டேன். சுமாராகப் படித்த நானே இப்படியென்றால் என்னை விட நன்றாகப் படித்த தனலட்சுமி என்னைவிடப் பெரிய அளவில் வாழ்ந்து கொண்டிருப்பதாகத் தெரிய வந்திருந்தால் இத்தனை அதிர்ச்சியாகி இருக்காது. ஆனால், இத்தனை அலங்கோலமாக அவளைப் பார்த்ததுதான் என்னை இம்சித்தது. அவளுக்காக உயிரைக் கூடக் கொடுக்கும் அத்தனை அன்பான அப்பா என்ன ஆனார் எனத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அதிகரித்துக் கொண்டே இருந்தது.

அவளுக்கு அவளோடு படித்த, அவளது மிக நெருங்கிய தோழியான நான் டாக்டராக இருந்ததைக் கண்டு அழுகை வந்ததாகத் தெரிந்தது. மகிழ்ச்சியாகவோ பொறாமையாகவோ இயலாமையாகவோ இருந்திருக்கலாம். அவளும் இங்கே என்னை எதிர்பார்த்திருக்க மாட்டாள். பெண்கள் நல மருத்துவத்தில் ஸ்பெஷலிட்டாகத் தேறி அரசு வேலை கிடைத்து எங்கள் கிராமத்தை உள்ளடக்கிய நகராட்சியில் இருந்த அரசுப் பொது மருத்துவமனையில் போஸ்டிங் போட்டிருந்தார்கள். இங்கே வேலையில் இணைந்து இரண்டு வாரம்தான் ஆகியிருந்தது. இந்த இரண்டு வார காலத்தில் கிராமத்திற்குப் போகவும் முடியவில்லை. அப்பா பணி ஓய்வு பெற்றதும் கிராமத்திற்குச் சென்று அம்மாவின் நினைவாக ஒரு வீடு கட்டலாம் என்று மட்டும் ஒரு எண்ணம் எங்கள் இருவருக்குமே இருந்துவருகிறது. பணி ஓய்விற்கு இன்னும் ஒரு ஆண்டு மட்டுமே இருப்பதால் வி.ஆர்.எஸ் வாங்குவதில் அப்பாவிற்கு விருப்பமில்லை. அதனால் என்னை மட்டும் இங்கே அனுப்பிவிட்டு அங்கே அவர் தனியாக இருக்கிறார். இதனால் எங்கள் கிராமத்தைப் பற்றிய செய்திகள் எதுவுமே எங்களுக்கு எட்டுவதில்லை.

பதினைந்து நாட்களாக நிற்காமல் போய்க்கொண்டிருக்கும் உதிரப் போக்கினைப் பற்றிய மருத்துவ ஆலோசனைக்கும், ஆய்விற்காகவும்தான் தனலட்சுமி அங்கே வந்திருந்தாள். வந்த இடத்தில் என்னைப் பார்த்ததும் அவளது கண்களில் பெரும் நம்பிக்கை தெரிந்தது. கூட்டமாக இருந்ததால் அப்போது எதுவும் பேச முடியவில்லை. என் பணி நேரம் முடிய இன்னும் அரை மணிதான் இருந்தது. இருவருக்குமே நிறையப் பேச வேண்டும் என்று தோன்றியதால் அவளது கைகளைப் பிடித்து அழுத்தி என் அருகில் இருந்த இன்னொரு நாற்காலியைக் காட்டி காத்திருக்கச் சொன்னேன். ”வெளிய நிக்கிறேனே?” என்று கூறிவிட்டு பதிலுக்குக் காத்திருக்காமல் வெளியே இருந்த திண்ணையில் போய் உட்கார்ந்து கொண்டாள்.

மருத்துவமனையில் இருந்து நான் தங்கியிருக்கும் அறைக்கு வரும் வரையிலும் கிராமத்தில் நடந்த நிகழ்ச்சிகளை விவரித்துக் கொண்டே வந்தாள். எத்தனையோ பிரயத்தனங்களுக்குப் பிறகுதான் அவளது சொந்த வாழ்க்கையில் நிகழ்ந்த துயரங்களைச் சொல்ல ஆரம்பித்தாள். கிட்டத்தட்ட நான்கு மணி நேரங்கள் அழுகையும், கண்ணீருமாக அவளது வாழ்க்கையைக் கேட்டேன். என் வாழ்க்கையில் நான் எதிர்கொண்ட அதே பிரச்சினை அவள் வாழ்க்கையிலும் நடந்திருந்தது. அது கருக்கலைப்பு.

பத்தாம் வகுப்பு விடுமுறையில்தான் அவள் கருவுற்றிருந்தது வீட்டில் தெரியவந்தது. பதினைந்து வயதான திருமணமாகாத ஒரு பெண் கருவுற்றிருக்கிறாள் என்ற செய்தி அவளது குடும்பத்தை எத்தனை வேதனைப்படுத்தும் என்று சொல்ல வேண்டியிருக்காது. ஊரில் யாருக்கும் தெரியாமல் கருக்கலைப்புச் செய்துவிட்டார்கள். அன்றிலிருந்து அவளது குடும்பம் அவளுக்கு எதிராகத் திரும்பிவிட்டது. கடவுள் என்பவர் எல்லாம் தன் அப்பாவிற்கு அடுத்த ஒன்றுதான் என்று நம்பியிருந்த அவளது அப்பா இப்பொழுது முழு எதிரியாகியிருந்தார்.  இத்தனை நாளும் தேவதை என்று கொஞ்சியவர் அதற்குப் பிறகு குடும்பத்தைக் கெடுக்க வந்த மூதேவி என்று திட்ட ஆரம்பித்தார். குடும்ப நிம்மதியைக் கெடுக்க வந்தவள் என்றும், ஒழுக்கம் கெட்ட ஜென்மம் உருப்படாமல்தான் போகுமென்றும் நேராகவும், அடிக்கடி குத்திக் காட்டியும் பேசினார்கள். அதற்குக் காரணம் யாரென்றும் ,எங்கே எப்போது அது நடந்தது என்று கேட்டு திட்டியும், அடித்தும் மிரட்டினார்கள். அதைச் சொல்லவே இவளுக்கு கேவலமாக இருந்தது. பள்ளியில் படிக்கும் ஒரு மாணவனுடன் இணைந்ததில்தான் அவள் கருவுற்றாள் என்று தெரிந்ததும் அந்த மாணவனை அடையாளம் காட்டச் சொல்லி மிரட்டி, அவனை அடையாளம் காட்டினபிறகு அவனைக் கொல்லாமல் விடப்போவதில்லை அவளது அப்பா நான்கைந்து வாரங்கள் கையில் அரிவாளுடன் சுற்றித் திரிந்ததும் இவளை மேலும் மேலும் பயமுறுத்தியது. அவனை அடித்தாலோ, மிரட்டினாலோ விசயம் வெளியே கசிந்துவிடுமென்று அவளது அம்மா மன்றாடி அப்பாவின் கோபத்தினைக் கட்டுப்படுத்தியிருந்தாள். 

“ நம்ம புள்ளைக்குப் புத்தி கெட்டுப் போனதுக்கு அடுத்தவன அடிச்சு என்னாகப்போவுது? உன்ற புள்ள ஒழுக்கமான்னு கேட்டா என்ன சொல்லமுடியும்?” என்பதோடு அப்பாவும் அமைதியாகியிருந்தார். அதற்குப் பிறகு அப்பாவை இவளோ, இவளை அப்பாவோ நேராகப் பார்ப்பதே இல்லையாம். பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகி பள்ளியிலேயே முதல் மதிப்பெண் வாங்கியிருந்தாள். ஆனால், அந்தச் சந்தோசமெல்லாம் அவளது குடும்பத்தை எட்டிப் பார்க்கவே இல்லை. மேற்கொண்டு படிப்பதைப் பற்றி யாருமே எதுவுமே பேசிக் கொள்ளவில்லை. இவளாக தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அப்பாவிடம் கேட்டதற்கு “ அதான் இப்பவே பெரிய படிப்பு படிச்சுட்டு வந்துட்டீல? இனி எதுக்கு படிப்பு?” என்று பதில் வந்திருக்கிறது.

அதன்பிறகு நான்கைந்து மாதத்தில் தூரத்து உறவினர் ஒருவருக்கு திருமணம் செய்துவைத்துவிட்டார்களாம். மாப்பிள்ளைக்கும் இவளுக்கும் 20 வருடங்கள் வயது வித்தியாசம். கல்யாணம் வேண்டாமென்று சொல்லிப் பார்த்திருக்கிறாள். “இன்னும் பேரக் கெடுக்கனும்னு எதாச்சும் எண்ணமா?” என்று கேட்டு கிட்டத்தட்ட அவளது மனதை முழுதாக ஊனமாக்கித்தான் அந்தக் கல்யாணமே நடந்திருக்கிறது. பிறகு ஒரே ஆண்டில் கருவுற்று, அதுவும் தங்காமல் அபார்சன் ஆகியிருக்கிறது. பதினேழு வயதில் உடலிலும் வலுவில்லாமல், மனதிலும் வலுவில்லாமல் வயிற்றில் மட்டும் எங்கிருந்து கரு தங்கும் என்று கூட யாரும் அவளுக்குக் கூறவில்லை. அவளுக்கும் அதையெல்லாம் புரிந்துகொள்ளவோ, தெரிந்துகொள்ளவோ எந்த வசதியும் இருக்கவில்லை. ஊருக்கு வந்தபோது “ கொழந்தையெல்லாம் சாமி குடுக்குறது. அதுக்கெல்லாம் ஒழுக்கமா இருந்திருக்கனும் “ என்று அப்பா குத்திக் காட்டியிருக்கிறார். அவளுக்கே தான் ஒழுக்கம் கெட்டவள் என்கிற எண்ணம் வந்துவிட்டது. கண்ணாடியில் தன் முகத்தைப் பார்க்கிறபோதெல்லாம் காறித் துப்ப வேண்டும் போலிருந்தது. பின் மீண்டும் ஒரு குழந்தை இறந்து பிறந்த பிறகு, மூன்றாவது முயற்சியில் ஒரு குழந்தைக்குத் தாயாகியிருந்தாள். உண்மையில் எதற்குக் குழந்தை பெற்றுக் கொள்கிறோம் என்றெல்லாம் அவளுக்குத் தெரிந்திருக்கவோ, அதைப் பற்றிச் சிந்தித்திருக்கவோ இல்லை. கிட்டத்தட்ட அவளது அப்பா வயதிலிருந்த கணவனுக்கும் அடிக்கடி மருத்துவச் செலவுகள் ஏற்பட்டு, இவளுக்கும் தொடர் மருத்துவச் செலவுகள் ஏற்பட்டு குடும்பம் வறுமைக் கோட்டிற்குக் கீழே போயிருந்தது. ஒரே மகளென்பதால் அவளது அப்பாவின் சொத்துக்களை வைத்துத்தான் இப்பொழுது குடும்பம் நடந்துவருவதாகச் சொன்னாள். இந்த வறுமைக்கும், மருத்துவச் செலவுகளுக்கும் கூட அவள் திருமணத்திற்கும் முன்பே கருவுற்றதால் ஏற்பட்ட பாவம்தான் என்று அவளது அப்பாவும் அம்மாவும் அடிக்கடி புலம்புவதுண்டு என்று சொன்னாள்.

இப்படி எல்லாவற்றையும் சொல்லிவிட்டு கடைசியாகச் சொன்னாள் “ எல்லாத்துக்கும் நான் ஒருத்திதான காரணம்; நான் மட்டும் ஒழுக்கமா இருந்திருந்தா நல்லா இருந்திருப்பேன்ல?” என்றாள். எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. அவள் அதீத மன அழுத்தத்தில் இருந்தாள் என்பது மட்டும் எனக்குத் தெரிந்தது. 

அவளது கதையைக் கேட்டதும் என் அப்பாவைப் பார்க்க வேண்டும் போலவும், அவரைக் கட்டிக் கொண்டு, அவர் என் நெற்றியில் தரும் முத்தத்தைப் பெற வேண்டும் என்று தோன்றியது.

நானும் பதினொன்றாவது படித்துக் கொண்டிருந்தபோது கருவுற்றேன். பதினொன்றாம் வகுப்பிற்குப் புதிய பள்ளியில் சேர்ந்திருந்தேன். பரஸ்பரம் இருக்கும் எதிர்பாலின ஈர்ப்பில் கவரப்பட்டு, அதில் ஒருவன் என்னைக் காதலிப்பதாகச் சொல்லி, நான் ஒப்புக் கொண்டு, ஒன்றிரண்டு மாதத்தில் நாங்கள் எதிர்பாலின ஈர்ப்பின் இறுதிக் கட்டத்தினை எட்டியிருந்தோம். 

ஒழுங்கற்ற மாதவிலக்குப் பிரச்சினைக்காக மருத்துவமனைக்குச் சென்றபோதுதான் நான் கருவுற்றிருக்கிறேன் என்று தெரியவந்தது. மருத்துவமனையில் அது என்னுடைய ரிசல்ட் தானா என்று என் அப்பா அழுத்தமாகக் கேட்டு, அது உறுதியானதும் “ஓ, ஓகே. நாங்க வீட்டுக்குப் போயிட்டு மறுபடி வர்றோமே” என்றார்.

பின் வீடு வந்து சேரும் வரையிலும் அவர் இதைப் பற்றி எதுவுமே பேசவில்லை. ஆனால், என்னுடன் பேசாமலும் வரவில்லை. வேறெதோ தொடர்பில்லாத விசயங்களைப் பேசிக் கொண்டுவந்தார். வீட்டில் தரையிரங்கியதும் என்னைப் பெரும் கோபம் கொண்டு அடிக்கப்போகிறார் என்று பயந்து ஆட்டோவில் வரும்போதே தொண்டையில் கட்டியிருந்த அழுகையை வீட்டிற்குள் காலடி எடுத்து வைத்ததும் பெரும் சப்தமிட்டு அழத் தொடங்கினேன். அப்பா என்ன கேட்கப்போகிறார் என்று ஒரு பக்கம் பயமாகவும், அவரது கோபத்தை எப்படி எதிர்கொள்ளப் போகிறேன் என்று நடுக்கமாகவும் இருந்தது. 

அப்பாவும் கிட்டத்தட்ட அழுதார். நான் சத்தமாக அழுவதைப் பார்த்ததும் என்னை மிக மிருதுவாக அவரது மார்போடு அணைத்துக் கொண்டு என் நெற்றியில் முத்தமிட்டு “ஏன் அழுற?” என்றார்.

எனக்கு என்ன பதில் சொல்லுவதென்றெல்லாம் அப்பொழுது தெரிந்திருக்கவில்லை. நான் ஏதோ ஒரு பெரிய தவறினைச் செய்துவிட்டதாகவே நினைத்து இன்னும் சத்தமாக அழ ஆரம்பித்திருந்தேன். கண்களில் தாரையாய் வழிந்த கண்ணீரைத் துடைத்துவிட்டு “ நீ ஒரு தப்பும் பண்ணலடா, எதுக்கு அழுற? இதெல்லாம் இந்த வயசுல இயல்பானதுதான். இதுல இருந்து எப்டி வெளில வர்றதுன்னு யோசிக்கலாம். பயப்படாத, நான் கூடத்தான இருக்கேன்” என்று மறுபடியும் முத்தமிட்டார். இதற்கான காரணம் யாரென்றோ, ஏன் இப்படிச் செய்தேன் என்றோ ஒரு வார்த்தை கூட அவர் கேட்டிருக்கவில்லை. தன் ஒரே மகள் இந்த வயதில் கருவுற்றிருக்கிறாள் என்ற அதிர்ச்சியை வெளிக்காட்டாமல் எப்படி என்னை ஆறுதல்படுத்தினார் என்று இப்பொழுதும் கூட ஆச்சர்யமாக இருக்கிறது.

பின் அபார்ஷன் செய்துகொண்டு இரண்டு வாரங்களுக்குப் பிறகு பள்ளிக்குப் போனேன். அந்த இரண்டு வாரங்களும் அப்பாவும் வேலைக்குப் போகவில்லை. ஆனால், இதைப் பற்றி அவர் என்னிடம் எதுவுமே கேட்டிருக்கவோ, பேசவோ இல்லை. வேறென்னென்னவோ பேசிப் பேசி என் கவனத்தைத் திசை திருப்பிக் கொண்டே இருந்தார். வலி தாங்காமல் நான் அழும் நேரங்களில் அவரும் அழுதார். ஆனால், அவரது கண்களில் இருந்த கருணையும், அன்பும் என்னை தேவதையாக உணரவைத்தது. சினிமாவே பிடிக்காத அவர் அந்த நாட்களில் நான்கைந்து முறை என்னை திரையரங்கத்திற்குக் கூட்டிச் சென்றார். நான் அதற்கு முன்பு கேட்டு நச்சரித்து அவர் தேவையில்லை என்று நிராகரித்த சில பொருட்களையும் வாங்கிவந்து நான் சிரிக்கிறேனா என்று பார்த்தார். அவருக்காகவே எனக்குச் சிரிக்க வேண்டும் என்று தோன்றியது. ஒரு மாதத்தில் நான் கிட்டத்தட்ட எனது நார்மலான நிலையை அடைந்திருந்தேன்.

இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஒருநாள் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது அப்பா என்னிடம் கேட்டார். “ அது உனக்குத் தெரிஞ்சுதான நடந்துச்சு? ஐ மீன், உன்னோட விருப்பத்தோட? அப்படின்னா அதப் பத்தி எதுவும் எனக்குச் சொல்ல வேண்டாம். அப்படியில்லாம உன்னை யாராச்சும் மிரட்டியிருந்தாலோ, உனக்குத் தெரியாம நடந்திருந்தாலோ யார்னு சொல்லு, நாம இதுக்கு எதாச்சும் செஞ்சாகனும்”

அந்தக் கருக்கலைப்பு நிகழ்ச்சிக்குப் பிறகு என் அப்பா எனது மிக நெருங்கிய ஒரே நண்பனாக மாறியிருந்தார். இப்பொழுது அவரிடம் எனக்கு எந்தப் பயமும் இல்லை. அதனால் காலை ஆட்டிக் கொண்டே, “ என் விருப்பத்தோடத்தான்பா நடந்துச்சு. எங்க ஸ்கூல்ல ஒரு...”

“ஓகே. அந்தப் பையன்கிட்ட இதப் பத்தி சொன்னியா?”

” எதப்பத்தி?”

“இந்த அபார்ஷன். அதனால நீ அனுபவிச்ச அந்த வலி, வேதனை. இதெல்லாம்”

“இல்லப்பா, அவன்கூட நான் பேசுறதே இல்லை. அவன் பேச ட்ரை பண்ணான். நான் இக்னோர் பண்ணிட்டேன். இப்ப பசங்களோட பேசுறதே இல்லை.”

“ அதான் பிரச்சினையே. அவன்கிட்ட இதப் பத்தி சொன்னாத்தானே அவனுக்குப் புரியும். இன்னொரு முறை அப்படி எதும் செய்யும்போது அடுத்த மனுசனுக்கு நம்மால இத்தனை கஷ்டம் வருதான்னு யோசிப்பான்? நல்ல பையனா இருந்தா உனக்கு ஒரு நல்ல ஃப்ரண்டா இருப்பான். அவன் உன்னை இப்படி கஷ்டப்படுத்திப் பார்க்கனும்னு மனசுல நெனச்சுட்டா செஞ்சிருப்பான்? ஒரு குறுகுறுப்பு, அப்படி என்ன இருக்குன்னு பார்க்கிற எதிர்பார்ப்பு. இதானே காரணம். அட்லீஸ்ட் சேஃப்டியா இருக்கிறது பத்தியாச்சும் யோசிப்பான்ல?”

“ பசங்களோட பேசலாமாப்பா?”

“ பசங்களோடதான் நிறையப் பேசனும். அப்படிப் பேசினாத்தான் உன்னால ஆப்போசிட் செக்ஸ் பத்தி புரிஞ்சுக்க முடியும். அவுங்க மேல இருக்கிற ஈர்ப்பு கொறையும். பயம் போகும். இதெல்லாம் நாம கடந்து போக வேண்டிய விசயங்கள். இங்கயே நின்னுட்டா எப்படி?”

“ நான் பண்ணது தப்பில்லையாப்பா?”

“ நிஜமாவே நீ ஒரு தப்பும் பண்ணல. பதிமூனு வயசுல உடம்பு சிக்னல் அனுப்பிடுது. உனக்கே தெரிஞ்சிருந்தாலும் வெளிப்படையா இங்க யாருக்கும் அத தெளிவா சொல்லித்தரனும்னு அக்கறையில்லை. இப்படி எதாச்சும் நடந்துட்டா ஒழுக்கம் கெட்டுப்போயிட்டான்னு குதிக்கிறானுங்க. பசி வந்தா சாப்பிடுறோம், தூக்கம் வந்தா தூங்குறோம். அதே மாதிரிதான் இதுவும் இயற்கை. இதை எப்படிக் கையாளனும்னு சொல்லித்தரனும். பசி வந்தவுடனே எதிர்ல யாராச்சும் சாப்பிட்டுட்டு இருக்கிறத புடுங்கித் தின்னுடறதில்லை. அதே மாதிரித்தான் இதுவும்.  ஆனா, அதப் பத்தி பேசுறது தப்பு; தெரிஞ்சுக்கிறது தப்புன்னு சொல்லிக்கிறோம்; நம்ம ஒடம்பப் பத்தி நாம தெரிஞ்சுக்காம வேற யார் தெரிஞ்சுக்குவா? நம்ம கொழந்தைங்களுக்கு நாம சொல்லித்தராம வேற யார் சொல்லித்தருவா?. உண்மைல நான் தான் தப்புப் பண்ணிட்டேன்”

”நீங்க என்னப்பா தப்புப் பண்ணுனீங்க?”

“ உன் வாழ்க்கைல ஒரு விசயம் நடந்திருக்கு. அது ஒரு பிரச்சனையாகி முனு மாசத்துக்கு அப்புறமாத்தான் எனக்கே தெரியவருது. அந்த மூனு மாசமும் நீ எத்தனை பயந்திருப்ப? எப்படியெல்லாம் அழுதிருப்ப? இதப் பத்தி எங்கிட்ட பேசுற அளவுக்கு நான் உன்னை வளர்க்கலைன்றதுதான் நான் பண்ணின தப்பு. ஏன் இதப் பத்தி பேசக்கூடாதுன்னு உனக்குத் தோனுச்சு? எதுக்காக மறைக்கனும்னு நினைச்ச? பயம்? அப்படிப் பயத்தோட ஒரு அப்பாகிட்டா வாழ்ற அளவுக்குத்தான் இங்க வாழ்க்கை இருக்கு. அதுதான் தப்பு”

இப்படித்தான் அவர் என் வாழ்க்கையை மிகத் தெளிவாக வழிநடத்தினார். என் எதிர்காலம் பற்றி நிறையப் பேசினார். பொழுதுபோக்காகப் படித்துக் கொண்டிருந்த நான் யோசிக்க ஆரம்பித்து நன்றாகப் படித்து இப்பொழுது மருத்துவராக மாறினதுவரையிலுமான என் வாழ்க்கையின் ஒவ்வொரு அங்குலத்திலும் என் அப்பாவின் அன்பும் வழிகாட்டுதலும் இருக்கிறது. என் மகள் மீது கொள்ளைப் பிரியம் இருப்பதாக அவர் எப்பொழுதுமே யாரிடமுமே சொன்னதில்லை. அதைச் சொல்ல வேண்டிய அவசியமும் அவருக்கு இல்லை.
Read more...

தந்தை போட்டிச் சிறுகதை - 47

Rate this posting:
{[['']]}

‘ஹேப்பி பர்த்டே டாடி!’



அதிகாலையில் குயில் கூவுகிறதோ இல்லையோ,வீட்டு குக்கர் சத்தத்தில் தான் அகில் எழுவதே,கண்ணை திறக்காமல் கொஞ்ச நேரம், அப்புறம் திரும்பி புரண்டு பின் புறத்தை மட்டும் தூக்கி முகத்தை கீழேவைத்து கோயிலில் கும்பிடு போடுவது மாதிரி கொஞ்ச நேரம், அப்புறம்சடனே முதுகு பிடித்த சதிலீலாவதி ரமேஷ் மாதிரி சைடு வாக்கில்

லேன்ட் ஆகி கொஞ்ச நேரம் என மணி ஏழை தொட்டு விடும் ,

பிறகு பல் தேய்த்து,குளித்து யுனிபார்ம் மாட்டி,பிரேக்வாஸ்ட் ஊட்டி,

டாமி யிடம் இருந்து ஷூ வை பிடுங்கி,இரவோடு இரவாய் காணாமல் போன சாக்ஸை கண்டு பிடித்து, இரண்டையும் மாட்டி ,ஸ்கூல் பையை அகில் தூக்க அவனை இவள் தூக்கி மூச்சிரைக்க போய் ஸ்கூல் வேனில் ஏற்றி அனுப்புவதற்குள் லீலாவிற்கு10 கிலோமீட்டர் ஓடி கரைய வேண்டி கலோரி அனைத்தும் ஓடாமலே கரைந்து விடும்.

ஆனால் இன்னைக்கு என்ன அதிசயம் , அழகர் அவரா ஆத்தில இறங்கின மாதிரி, அகிலே பாத்ரூமில் பல் துலக்கி கொண்டு இருந்தான்.

சோம்பல் முகத்துடன் எழுந்து வந்த கணவன் விஸ்வா தேதியை கிழித்த வாறே திரும்பி பார்த்து கேட்டான்..

“என்னடா இன்னிக்கு நீயே எழுந்துட்ட , என்ன ஸ்பெஷல் ?”

அகில் எதுவும் பேசாமல் சிரித்தான் !.

"அடங்கப்பா, காலையில ஆறு மணிக்கு சிரிக்கிறியே !என்ன அதிசயம்!'

என்று கேட்ட விஸ்வாவிடம்

"ஹ்ம்ம், வேறன்ன அதிசயம் , உங்க பிறந்த நாளன்னிக்கு உங்களை கண் கலங்க வைக்க வேண்டாமே நினைச்சுருப்பான்..இல்லையா!”

சொல்லி கொண்டே கையை நீட்டினாள் லீலா ..

"ஹேப்பி பர்த்டே ன்க"

"தேன்க் யு டியர் !"

“அப்பாக்கு இன்னிக்கு பர்த் டே தங்கம் ..விஷ் பண்லாமா ?”,லீலாவின் கேள்விக்கு அமைதியாக சிரித்தான் அகில்.

“என்னடா சிரிக்கிற ...விஷ் பண்லாம் வா ?!”

இப்பொழுது மொத்தமாக முதுகு காட்டி பல் துலக்க ஆரம்பித்தான்,

லீலா விற்கு குழப்பமாக இருந்தது.

“அட., அவனுக்கு இப்ப மூடு இல்ல விடு”, விஸ்வா வின் சமாளிப்பை கேட்டு கொண்டே மீண்டும் சமையில் அறையில் நுழைந்தாள்.

இருந்தாலும் அவமானத்தை களைவது தானே அப்பனுக்கு அழகு , மீண்டும் ஒரு முறை விஸ்வா முயற்சித்தான்.

"அகில் குட்டி ,அப்பாவும் நீயும் சேர்ந்து பல் விளக்கலாமா ?"

“நோ !!” என்று அகில் கத்தியதில் தூங்கி கொண்டு இருந்த டாமி

தெறித்து எழுந்து, வாலை ஆட்டியது!.

"என்ன இவன் பிரச்சனை , என்று குழம்பியவாறே நின்றவனிடம் ,

லீலாவின் கேள்வி மேலும் எரிச்சலூட்டியது.

"இன்னிக்கு உங்க ராசிக்கு என்னன்னு போட்ருக்கு ?"

"ஹ்ம்ம்ம்ம் .. சம்திங் ராங் னு போட்ருக்கு”, சொல்லி கொண்டே தீப்பெட்டியை எடுத்து கொண்டு மாடிப்படி ஏறினான்.

“சரி, சாயங்காலம் பார்டிக்கு உங்க ஆபிஸ் பிரண்ட்ஸ் எத்தனை பேர்

வராங்க ?”

“எப்படியும் 20 பேராவது வருவாங்க லீலா ,சாப்பாடு வெளிய ஆர்டர் பண்ணிட்டேன் “என்றான் விஸ்வா.

அகிலின் முகம் பிரகாசித்தது..இது தான் திட்டத்தை செயல் படுத்த

சரியான நாள் என்று மனது சொல்லியது!.

இடம் : தெரு முனை மளிகை கடை , மாலை 5 மணி

"அது ஒரு பாக்கட் கொடுங்க!" ,

வெறும் சத்தம் மட்டும் வருவதை கேட்ட மளிகை கடைகாரர் , குழப்பத்துடன் எட்டி கீழே பார்த்தார் .

அங்கே அகில் தன நண்பன் பரத் தோடு நின்று கொண்டு இருந்தான்,.

ஆச்சர்யப்பட்ட கடைகாரர் ,

“என்ன கேட்டே?” என மறுபடி வினவினார்.

"அதோ , அது ஒரு பாக்கட் கொடுங்க? "

“எது”..என்று கை நீட்டிய திசையில் திரும்பி பார்த்த கடைகாரர் , அதிர்ச்சியில் உறைந்தே போனார்.

“ஏன்டா கண்ணுகளா , முளைச்சு மூணு இலை விடுல ,அதுக்குள்ள அது கேக்குதா , அடி ..ஓடுங்கடா வூட்டுக்கு”என்று விரட்டினார் .

“இல்லை , பிளிஸ் , அது வேணும் பிளிஸ்” என்று அடம் பிடித்தான்

அகில்.

“யேய்,பாருங்கடா..காலைலேயே கடுப்பேதாதீங்க.,ஓடிடுங்க!”

என்றவரிடம்,அங்கிள் ,

“ஒரு நிமிஷம் இங்க வாங்க” என்று கூப்பிட்டு அவர் காதில்

கிசுகிசுத்தான் பரத் ,அதை கேட்டு ஆச்சர்ய பட்டவர்! ,

"நல்ல பசங்க டா நீங்க , பாத்த இத்தனூண்டு இருந்துட்டு எத்தனை

பிளான் பண்றீங்க , போற வழில எங்கியும் கீழ போட்டு

மாட்டிக்காதீங்க டா”..என்று சிரித்தவாறே அகில் கேட்டதை எடுத்து

பேக் செய்து கொடுத்தார் .

வீட்டுக்குள் பரத்துடன் அகில் நுழையும் போதே அப்பாவின் அலுவலக நண்பர்கள் எல்லாரும் ஹாலில் நின்று கொண்டு இருந்தார்கள்..

நட்ட நடுவில் ஒரு கேக் ஹாப்பி பர்த்டே விஸ்வா என எழுதப்பட்டு இருந்தது..

“வா பரத் வா ..அம்மா நல்லாருக்காங்களா ?”என்று கேட்டு கொண்டே , “ஏங்க , இது தான் அந்த பையன் ,சொன்னேனே இவங்க அப்பா

போன மாசம் இறந்துட்டார்னு”..என விஸ்வாவிடம் கிசுகிசுத்தாள் லீலா.

“அகில் , பரத்க்கு என்ன வேணுமோ கேட்டு கொடு!,.

பரத் என்ன வேணும்னாலும் கேளு ..சரியா” என வாஞ்சையுடன் சொன்னான் விஸ்வா.

இந்த வயதில் அப்பா இல்லாமல் எவ்வளவு கஷ்டபடுவான் ,

பாவம் என மனதிற்குள் நினைத்து வருந்திய விஸ்வாவை,

"ஹே , கேக் கட் பண்ணலாம் விஸ்வா " என்ற நண்பரின் குரல்

அழைத்தது.

எல்லாரும் ஒரு சேர ஹேப்பி பர்த்டே பாட விஸ்வா கேக்கை கட் செய்தான் , ஆனால் அகில் மட்டும் பாடவில்லை..

இதை விஸ்வாவும் லீலாவும் கவனித்தாலும் , கேக் வெட்டியவுடன்

முதல் துண்டை அகிலுக்கு கொடுத்தனர் ..

வாங்க மறுத்து தலையாட்டிய அகில் , தான் அதுவரை மறைத்து வைத்துஇருந்த , வண்ண காகிதத்தால் சுற்ற பட்டு இருந்த பாக்கட் டை எடுத்து நீட்டினான் ,

“என்னடா அப்பாக்கு கிப்ட் டா ?”என்று சின்ன அதிர்ச்சியும்

ஆச்சர்யமுமாய் கிப்டை வாங்கி பிரித்தான் விஸ்வா ..

பிரித்தவுடன் அதில் இருந்ததை பார்த்து மொத்த நண்பர் கூட்டமும்.

“ஓ மை காட்!” என்று அதிர்ச்சியாக ,

விஸ்வா கோபத்தில் அகிலை பார்க்க , விஸ்வா அவமானபடுவதை

பார்த்து செய்வதறியாது நின்றாள் லீலா ..

“என்ன அகில் இது , எங்க வாங்கின இதை?” என்று விஸ்வா கத்த

ஆரம்பிக்கும் பொழுது ,

“டாடி ,ஒரு நிமிஷம்,பிளிஸ் , நான் சொல்றத கேளுங்க”,என்ற அகிலின் கண்களில் கண்ணீர் .

“பரத்துக்கு அவங்க அப்பா னா உயிர் , அவங்க அப்பா தான் டாடி

அவங்களுக்கு எல்லாம் ,ஆனா அவங்க அப்பாக்கு நீங்க இப்ப கையில் வைச்சிருகிறது தான் பிடிக்கும் ,அதை தினமும் குடிச்சு தான் அவன்

அப்பா நோய்வாய்பட்டு இறந்தார் ,அவர் இறந்ததக்கு அப்புறம் பரத் தாலே முதல் மாதிரி படிக்க முடில ,இன்னும் அவன் ஸ்கூல் பீஸ் கட்டலே ,அவங்க அம்மா பணத்துக்கு ரொம்ப கஷ்டபடுறாங்க ,தினமும் அவங்க வீட்ல யாரோ பணம் கேட்டு சண்டை போடறாங்க பா,கிளாஸ் ல பரத் அழுதுட்டே இருப்பான்”

என கண்களில் கண்ணீர் கர கர வென வழிய தேம்பியவாறே அகில்

மேலும் தொடர்ந்தான்.

“எனக்கும் உங்களை ரொம்ப பிடிக்கும் டாடி ,அம்மாக்கும் நீங்கன்ன

உயிர்,ஆனா இதோ இதால நீங்களும் பரத் அப்பா மாதிரி இறந்துட்டா..பயமா இருக்கு,நானும் அம்மாவும் நீங்க இல்லாம எப்படி டாடி இருப்போம் ,நீங்க எங்களுக்கு வேணும் டாடி,.பிளிஸ்,,.என் டாடி எனக்கு

வேணும் ,இதை விட்டுடங்க” என விஸ்வாவின் கால்களை கட்டி

கொண்டு கதறினான் அகில்.

என்ன செய்வது என தெரியாமல் அதிர்ச்சியில் உறைந்து நின்றனர்

விஸ்வாவும் லீலாவும் ,நண்பர்கள் விஸ்வாவின் தோளை தொட ,

சுதாரித்து கண்ணை துடைத்து கொண்டே விஸ்வா அகிலை தூக்கி நெஞ்சில் கட்டி அணைத்து கொண்டான்.

விஸ்வாவின் கண்களில் கண்ணீர்,அகில் முகத்தில் முத்தமழை பொழிந்து கொண்டே,

“சாரி டா தங்கம் , எனக்கு நீயும் மம்மியும் தான் முக்கியம் , உனக்காக நான் என்ன வேணா பண்ணுவேன் அகில் , இதை விட மாட்டனா ?

இதுக்கு மேலே டாடி இதை தொடமாட்டேன்..இது சத்தியம்”என்று

அகில் கொடுத்த கிப்டை தூக்கி எறிந்தான்.

அழுது கொண்டே சிரித்த அகில் ,“தேன்க் யு அண்ட் ஹேப்பி பர்த் டே டாடி” என விஸ்வாவின் கழுத்தை கட்டி கொண்டான்.

சுவற்றில் பட்டு,கசங்கி கீழே விழுந்த கிப்டில்

இருந்த சிகரட் பெட்டியில் தெளிவாக எழுதி இருந்தது,

‘புகை பிடித்தல் புற்று நோயை உண்டாக்கும் , உயிரை கொல்லும்’.
Read more...

தந்தை போட்டிச் சிறுகதை - 46

Rate this posting:
{[['']]}
எம்.குமரன் S/O மகாதேவன் 

"அம்மா"

"...."

"அம்மா...அம்ம்ம்மாஆஅ ..." என்றான்  பொறுமையிழந்த குரலில் 

"சுகி, குமார் கூப்பிடறான் பாரு" என்ற கணவரின் அழைப்பில் 

"இதோ வரேங்க" என்றபடி வந்தாள் சுகந்தி 

"என்ன கண்ணா? என்ன வேணும்?" என்றவளை முறைத்தான் மைந்தன் 

"ஏண்டா மொறைக்கற?" என புரியாமல் வினவினாள் சுகந்தி 

"நான் கரடியா கத்தறது உன் காதுல விழல, உன் ஹஸ்பண்ட் சுகினதும் ஓடி வரியா?" என அடிக்குரலில் பல்லை கடித்தான் 

"போடா நீ? எப்ப பாத்தாலும் அப்பாகூட போட்டி போட்டுக்கிட்டு" என சிரித்தாள் 

"நான் யார் கூடவும் போட்டி போடல, அதுவும் உன் ஹஸ்பண்ட் கூட நிச்சியமா இல்ல" என்றான் அதே அடக்கிய குரலில் எரிச்சலாய் 

மேலும் ஏதோ சொல்ல  தொடங்கியவன், பெற்றவளின் முகவாட்டத்தில் மௌனமானான் 

"எனக்கு லஞ்ச் வேண்டாம், அத சொல்லத்தான் கூப்ட்டேன்" என்றான் எங்கோ பார்த்தபடி 

"ஏன்ப்பா?"

"என் ப்ரெண்ட் அருணுக்கு கல்யாணம் பிக்ஸ் ஆகி இருக்கு, ட்ரீட் போறோம்" என்றபடி வெளியே செல்ல

"டேய், நீ இன்னும் டிபனே சாப்பிடல" எனவும் 

"எனக்கு வேண்டாம், பசிக்கல" எனவும் 

"குமார், சாப்ட்டுட்டு கெளம்பு" என்ற மகாதேவனின் கண்டிப்பான குரலில், எரிச்சலுடன் முணுமுணுத்தபடி டைனிங்டேபிள் நோக்கி நடந்தான் 

அவசர அவசரமாய் இட்லியை முழுங்கியவனை "டேய் மெதுவாடா, இன்னும் டைம் இருக்கே" என சுகந்தி செல்லமாய் அதட்ட 

"நீயும் ஆரம்பிக்காதம்மா. நான் ஒண்ணும் ஸ்கூல் படிக்கற பையன் இல்ல, வேலைக்கு போய் நாலு வருசமாச்சு. எவ்ளோ சீக்கரம் முடியுமோ அவ்ளோ சீக்கரம் இந்த நரகத்துல இருந்து போறதுக்கு தான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன்" என்றவனின் கோபக்குரல் மனதை வருத்த 

"ஏண்டா இப்படி எல்லாம் பேசற?"என்றாள் வேதனையுடன்  

"இங்க பாரும்மா, மிஸ்டர். மகாதேவன்கிட்ட சொல்லி வெய், இந்த அதட்டற வேலையெல்லாம் என்கிட்ட வேண்டாம், அதெல்லாம் கோர்ட்டோட நிறுத்திக்க சொல்லு. எப்பவும் நான் ஒரே மாதிரி இருக்க மாட்டேன்" என சிறுபிள்ளை போல் தலையை சிலுப்பியபடி கூற 

அதை ரசித்தபடி "அதை நீயே சொல்லவேண்டியது தான" என சிரித்தாள் சுகந்தி 

"அந்த ஆளுகிட்ட என்னால பேச முடியாது" 

"யார்கிட்ட பேச முடியாதுனு சொல்றார் மிஸ்டர்.குமரன்" என்றபடி மகாதேவன் உள்ளே வரவும் குமரன் அவசரமாய் எழுந்தான் 

"குமார், என்ன பழக்கம் இது பாதி சாப்பாட்ல எந்திரிக்கறது, சாப்டு" என வரவழைத்து கொண்ட கண்டிப்புடன் மகாதேவன் கூற, அன்னையை முறைத்தவாறே விரைவாய் உணவை முடித்து சத்தமின்றி வெளியேறினான் 

"ஏங்க இவன் இப்படி இருக்கான், எப்பதான் உங்க பாசத்த புரிஞ்சுக்க போறானோ?" என்ற சுகந்தியின் வேதனை தன்னையும் தாக்க

"விடும்மா, என்னமோ புதுசா அவன் பேசற மாதிரி" என சமாளித்தார் 

"அவன் பேசினத கேட்டீங்களா? வீட்ட நரகங்கறான், மனசே தாங்கலப்பா" எனவும்  

மனைவியின் கவனத்தை மாற்ற எண்ணி "சுகி, போன் அடிக்கற மாதிரி இருக்கு பாரு" என பேச்சை திசை திருப்பினார்  
​​​​​ 


"ஹாய்  சரண் " என்றபடி வந்த குமரனை  

"இதான் நீ நேரத்துல வர்ற லட்சணமா?" என முறைத்தாள் சரண்யா 

"அது..." என்றவனை பேச விடாமல் "அலைபாயுதே படத்துல கல்யாணத்துக்கு அப்புறம் தான் ஷாலினி வெயிட் பண்ணுவா, நான் இப்பவே உனக்கு வெயிட் பண்ணிட்டு  இருக்கேன்" என்றாள் கோபமாய் 

"அப்போ என்னை மாதவன்னு சொல்ற" என கண்சிமிட்டி சிரிக்க 

"இல்ல, என்னை ஷாலினினு சொல்றேன்" 

"அதை நீயே சொன்னா எப்படி?" என வம்பிழுத்தான் 

"ஓஹோ, அப்போ எவ ஷாலினி மாதிரி இருக்காளோ அவளையே லவ் பண்ணு" என எழப்போனவளை கைபற்றி அமர்த்தியவன் 

"ஓகே ஓகே நோ டென்ஷன், என்னமோ முக்கியமான விஷயம் பேசணும்னு சொன்னியே என்ன?" என பேச்சை மாற்றினான் 

"வீட்ல நம்ம மேட்டர் தெரிஞ்சுடுச்சு. எங்க மாமா நம்ம ரெண்டு பேரையும் லாஸ்ட் வீக் மாயாஜால்ல பாத்திருக்காரு"

"போய் போட்டு குடுத்துட்டானா அந்தாளு"

"ப்ச்... விடு. என்னைக்கி இருந்தாலும் தெரிய வேண்டியது தானே, எனக்கு சொல்ற கஷ்டம் மிச்சம்"

"ம்ம்...அதுவும் சரிதான். உங்கப்பா என்ன சொன்னாரு?"

"உன்னை இன்னைக்கி சாயங்காலம் வீட்டுக்கு கூட்டிட்டு வரச்சொன்னாரு"

"இன்னைக்கேவா?"

"ம்"

"அது சரி, போன வாரமே உங்க மாமா நம்மள மாயாஜால்ல பாத்து போட்டு குடுத்துட்டாருனு சொன்ன, ஏன் இவ்ளோ நாள் கழிச்சு உங்கப்பா உன்கிட்ட பேசினாரு. உங்க பேமிலியே டியூப் லைட்டா?" என இன்னொரு சண்டைக்கு வித்திட, அதற்கு சரண்யாவிடமிருந்து சில பல அடிகளை பரிசாய் பெற்றான் 

அந்த ஒரு வார அவகாசதிற்கான காரணம் தன்னை நிலைகுலைய செய்ய போவதை அவன் அப்போது அறிந்திருக்கவில்லை 


"வாங்க ... உக்காருங்க" என்றவர் "சந்திரா " என உள்நோக்கி குரல் கொடுத்தார் சரண்யாவின் தந்தை ரங்கநாதன். சரண்யாவை முறைத்தபடி வந்த அவள் அன்னை, மௌனமாய் கணவன் அருகில் அமர்ந்தார் 

யோசனையுடன் சோபாவில் அமர்ந்த குமரனின் அருகில் சரண்யா அமரப்போக "சரண்யா, நீ போய் காபி எடுத்துட்டு வா" எனவும் 

"இல்ல...." என்ற குமரனை பேசவிடாமல் "சரண்யா..." என்றார் அதட்டலாய், தனக்கே தன் மகளிடம் உரிமை அதிகம் என குமரன் முன் நிரூபிக்க முனைந்தவர் போல். அதற்குப்பின் ஒரு நொடி கூட அவள் அங்கு நிற்கவில்லை 

காபி சம்பிரதாயமெல்லாம் முடிந்தபின் "மிஸ்டர்.குமரன்" என ரங்கநாதன் ஆரம்பிக்க 

"சும்மா குமார்னே சொல்லுங்க, நோ பார்மாலிடிஸ்" என்றான் குமரன் மரியாதையாய் 

அதை சற்றும் மதியாதவராய் "எங்களுக்கு பார்மாலிடிஸ் ரெம்ப முக்கியம்" என்றார் உள்ளர்த்தத்துடன் 

குமரன் புரியாமல் சரண்யாவை பார்க்க "அப்பா..." என சரண்யா ஏதோ சொல்ல வர 

"நான் இவர்கிட்ட பேசணும்னு தான் கூட்டிட்டு வர சொன்னேன், நீயும் நானும் பேசிக்கறதுக்கு இல்ல" என்றார் கோபமாய் 

"மிஸ்டர் குமரன், என்ன படிச்சு இருக்கீங்க?"  சரண்யா எல்லாம் சொல்லி இருந்தபோதும் வேண்டுமென்றே கேட்டார் 

"எம்.டெக்"

"எந்த ப்ராஞ்ச்?"

"ஐ.டி"

"எந்த காலேஜ்?"

"எம்.ஐ.டி"

"எவ்ளோ பெர்சண்டேஜ் வாங்கினீங்க?" எனவும் 

"உங்கப்பா எனக்கு பொண்ணு குடுக்க போறாரா இல்ல வேலை போட்டு குடுக்க போறாரா?" என கண்களாலேயே கேள்வியுடன் சரண்யாவை முறைத்தான் 

அவள் "பதில் சொல்லு" என பார்வையிலேயே கெஞ்சினாள் 

"92%" என்றான் குமரன் பொறுமையை இழுத்து பிடித்தபடி 

"எங்க சரண்யா யூனிவர்சிட்டி கோல்ட் மெடலிஸ்ட், தெரியுமா?" என்றார் பெருமையாய் 

"தெரியும்"

"நீங்க ஏன் கோல்ட் மெடல் வாங்கல?" என்றவரை "லூசாயா நீ?" என்பது போல் பார்த்தான் குமரன் 

"மிஸ்டர் குமரன்..." என ஆரம்பிக்க "ஹ்ம்ம்.. இனி ஹைட் வெயிட் எல்லாம் கேப்பானோ" என பீதியுடன் குமரன் விழிக்க

அவன் நம்பிக்கையை சற்றும் குலைக்காமல் "நீங்க என்ன வெயிட் இருக்கீங்க?" என்றார். அதற்கு குமரன் பதில் சொல்லும் முன்பே "ஏன் கேக்கறேன்னா, இப்பெல்லாம் ஓபிசிட்டினால  தான் சின்ன வயசுல நெறைய பேருக்கு ஹார்ட் அட்டேக் வருது" என்றார் 

"உன்னை மாதிரி நாலு பேர், இல்ல இல்ல ஒரே ஒரு ஆள், ஊருக்கு ஒருத்தன் இருந்தா போதும், எல்லாருக்கும் ஹார்ட் அட்டேக் வந்துரும்" என நினைத்ததை வெளியே சொல்ல இயலாமல் "இல்ல சார், நான் ஹைட்க்கு ஏத்த வெயிட் தான் இருக்கேன்" என்றான் பல்லை கடித்தபடி 

அதே நேரம், திட்டம் போட்டு தன்னை மாட்டி விட்டவளை கண்களாலேயே எரித்தான். சரண்யா அதை காணாத பாவனையில் பெற்றவரை பார்த்தாள். "வெளிய வாடி கவனிச்சுக்கறேன்" என மனதிற்குள் கறுவினான் 

அதை தொடர்ந்து வேலை, சம்பளம், மதம், இனம், மொழி, குலம், கோத்திரம், இரத்த வகை, பிறந்த தேதி, நட்சத்திரம், ராசி, பிறந்த நேரம், பிறந்த ஆஸ்பத்திரி முதல் கொண்டு எல்லாம் கேட்கப்பட்டது. குமரனும் தன் பொறுமையை இழுத்து பிடித்து பதில் சொன்னான், சரண்யாவை பார்வையால் எரித்து கொண்டே, அவளும் கெஞ்சும் பார்வையால் அவன் கோபத்தை தணிக்க முயன்றாள் 

"சொந்த ஊர் எது?"

"திருநெல்வேலி"

"திருநெல்வேலில எங்க?"

"கல்லிடைகுறிச்சி"

"ஓ... இந்த சரவணன் மீனாட்சி வருமே, அந்த ஊரா?" என சரண்யாவின் அன்னை தான் அறிந்த ஒரே ஒரு விசியத்தை பிரதாபிக்க முயல, அவரை எரித்து விடுவது போல் பார்த்தார் ரங்கநாதன். குமரனுக்கு தான் சிரிப்பை அடக்குவது பெரும்பாடாய் இருந்தது 

"உங்க அம்மா பேரு?"

"சுகந்தி... ஹவுஸ் வொய்ப்" என்றான் அடுத்த கேள்வியை யூகித்து 

"அப்பா பேரு?" எனவும், குமரன் சற்றே தயங்கி 

"மகாதேவன்" என்றான்

"ஐ ஸீ, என்ன பண்றார்?" என்றார் யோசனையுடன் 

"லாயர்" எனறான் 

"உங்கப்பா பேரு மகாதேவன்னு தானே சொன்னீங்க?" என ரங்கநாதன் கேள்வியாய் பார்க்க, பெரிய "நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி" ஏங்கர் இவரு, ஆர் யு ஸூர், கான்பிடன்ட்னு மொக்க போட்டுக்கிட்டு என மனதிற்குள் சபித்தபடி 

"ஆமா" என்றான் எரிச்சலாய் 

அதன் பின் ரங்கநாதன் கேட்ட கேள்வியும் சொன்ன வார்த்தைகளும் முற்றுபெறும் முன்னே "ஏய்...." என்ற கர்ஜனையுடன் குமரனின் கைகள் ரங்கநாதனின் சட்டை காலரை கொத்தாக பற்றி இருந்தது 

"ஐயோ..." என சரண்யாவின் தாய் அலற 

"குமார், என்ன இது, பிளஸ் விடுங்க?" என சரண்யா பதறினாள் 

"ஹ்ம்ம்... உண்மைய சொன்னா கோபம் வருதோ? விஷயம் தெரிஞ்ச இந்த ஒரு வாரத்துல உன்னை பத்தி எல்லாமும் விசாரிச்சுட்டேன். நான் சொன்னது பொய்னு ப்ரூவ் பண்ணு, அடுத்த முஹுர்தத்துல என் பொண்ண கல்யாணம் பண்ணி தரேன்" எனவும், அந்த வார்த்தை முற்று பெரும் முன்னே குமரன் வெளியேறியிருந்தான் 

"என்னங்க, எனக்கு ரெம்ப பயமா இருக்கு. இவன இன்னும் காணோமே, மணி பதினொண்ணு ஆச்சு, மறுபடி போன் பண்ணி பாருங்களேன்" என சுகந்தி கண்ணீர் குரலில் புலம்ப 

"போன் ஸ்விட்ச் ஆப்னு வருது சுகி, எதாச்சும் வேலையா இருக்கும், நீ டென்சன் ஆகாத"  என்றார் தன் கலக்கத்தை மறைத்தபடி. அவர் அறிந்த குமரனின் நண்பர்களுக்கு அழைத்து விசாரித்து ஓய்ந்தார். அழுகையும் சமாதானமுமாய் மேலும் இரண்டு மணி நேரம் ஓட, குமரனின் பைக் சத்தம் கேட்க, சுகந்தி ஓட்டமாய் சென்று  கதவை திறந்தார் 

குமரன் வண்டியை நிறுத்தும் முன்னே "கண்ணா..." என ஓடினாள், அவளை இடிப்பது போல் வண்டி அருகில் வர 

"டேய் பாத்து, இத்தனைக்கு உங்கம்மா மேல இடிச்சுருப்ப" என மகாதேவன் பதற 

"ஏன் இவ்ளோ லேட், ஒரு போன் பண்ண மாட்டியா? எங்க போ..." என சுகந்தி பேசிக்கொண்டே போக  "ஸ்டாப் இட், ரெம்ப அக்கறை இருக்கற மாதிரி யாரும் நடிக்க வேண்டாம்" என எரிச்சலாய்  மொழிந்தவன், அதிர்ந்து நின்ற சுகந்தியை தவிர்த்து வேகமாய் உள்ளே சென்றான் 

"உள்ள நட சுகந்தி, போய் தோசை ஊத்து, அவன பாத்தா சாப்ட மாதிரி தெரில" எனவும், சுகந்திக்கு  மற்றது மறந்து பிள்ளையின் பசியே பிரதானமானது 

அதற்குள் குமரன் அறைக்குள் நுழைய "குமார், அம்மா டிபன் ரெடி பண்றா, சாப்டுட்டு படு" எனவும், அதை சட்டை செய்யாமல் அவன் கதவை தாளிட போக "உன்கிட்ட தான் சொல்லிட்டு இருக்கேன்" என மகாதேவன் மறிக்க 

"நான் என்ன பண்ணனும்னு சொல்றதுக்கு நீங்க யாரு?" என முதல் முறையாய் முகத்திற்கு நேராய் எதிர்ப்பு காட்டினான் குமரன். இன்று குமரனின் மனதை பாதிக்கும்படி ஏதோ நடந்திருக்கிறது என யூகித்தார் மகாதேவன்

மகாதேவன் ஏதோ சொல்ல வாயெடுக்க, அதற்குள் சுகந்தி "குமரா, என்ன பேச்சு இது, அப்பாகிட்ட மன்னிப்பு கேளு" என கண்டிப்புடன் கூற, எப்போதும் தன் நலனை மட்டுமே யோசிக்கும் தன்  தாயின் கோபம் குமரனை நிதானம் இழக்க செய்தது 

"அப்பாவா? யாரு யாருக்கு அப்பா?" 

"டேய்..." என சுகந்தி அதிர 

"நான் வீட்டை விட்டு போறேன்" என பொதுவாய் அறிவித்துவிட்டு தன் உடமைகளை சேகரிக்க ஆரம்பிக்க, செயலற்று நின்று விட்டாள் சுகந்தி 

"என்ன நடந்தது?" என்ற மகாதேவனின் கேள்விக்கு பதிலின்றி தன் துணிகளை அடுக்கி கொண்டிருந்தான் குமரன் 

பொறுமையிழந்த மகாதேவன் அவன் கையில் இருந்த பொருளை பிடுங்கியவர் "என்ன நடந்ததுனு கேக்கறேன்ல" எனவும்

"உங்க பொண்ண விரும்பறேன், எனக்கு கல்யாணம் பண்ணி குடுங்கனு கேட்டதுக்கு, ஓடுகாலி பெத்த புள்ளைக்கு பொண்ணு குடுக்க முடியாதுனு கழுத்த புடிச்சு வெளிய தள்ளிட்டாங்க, போதுமா?" எனவும், மற்ற இருவரும் ஒருகணம் திகைத்து நின்றனர் 

முதலில் சுதாரித்த மகாதேவன்  "எவன் அப்படி சொன்னான்? சொன்னவன் கைய கால ஒடைச்சுட்டு வந்திருந்தா என் வளர்ப்பு சோட போகலனு சந்தோசபட்டிருப்பேன்" எனவும் 

"சொன்னது பொய்யா இருந்திருந்தா நானும் அதத்தான் செஞ்சுருப்பேன்" என்றவனின் வார்த்தையில் சுகந்தி உடைந்து போனாள் 

மனைவியின் வேதனை தன்னையும் தாக்க "டேய்... யார்கிட்ட என்ன வார்த்த பேசற?" என மகாதேவன் சீற 

"யார்கிட்டயா? பழைய லவ்வர் கிடைக்கனுங்கரதுக்காக, வக்கீல் பவர யூஸ் பண்ணி, எங்கப்பாவ பொய் கேஸ்ல உள்ள தள்ளி, எங்கம்மாவ ரெண்டாம் கல்யாணம் பண்ணிகிட்ட ஒரு தேர்ட் ரேட் கிரிமினல்  மிஸ்டர். மகாதேவன்கிட்ட பேசறேன்" என குமரன் சொல்லி முடித்த நொடி, சுகந்தியின் கைகள் குமரனின் கன்னத்தில் பதிந்திருந்தது 

பிறந்தது முதல் அன்னையின் அணைப்பை மட்டுமே அறிந்த குமரனுக்கு அந்த அடி பேரிடியாய் இருந்தது. தன் கோபம் மொத்தத்தையும் மகாதேவன் மேல் திருப்பினான்  

"இப்ப உங்களுக்கு திருப்தியா? மொதல்ல எங்கப்பாவ என்கிட்ட இருந்து பிரிச்சீங்க, இப்ப என் அம்மாவை எனக்கு எதிரா திருப்பியாச்சு. இதுக்குதான இவ்ளோ நாள் காத்துட்டு இருந்தீங்க, சந்தோசமா இருங்க. குட் பை" என குமரன் வெளியேற 

"நில்லுடா" என சுகந்தியின் அலறலில், தன்னையும் அறியாமல் குமரனின் கால்கள் நின்றன 

"நீ தாராளமா போ, நான் உன்னை இனி தடுக்க போறதில்ல. அதுக்கு முன்னாடி சில உன்மைகள தெரிஞ்சுக்கோ" 

"என்ன சுகந்தி இது? அவன் தான் ஏதோ கோவத்துல பேசறான்னா, நீயும்..." என்றவரை "இல்லங்க, அவன் இவ்ளோ தூரம் பேசினப்புறம் நானும் பேசி தான் ஆகணும்" என்றவள் 

"உன்னோட ஒம்பது வயசுல நான் இவர ரெண்டாம் கல்யாணம் பண்ணிகிட்டது மட்டும் தான் உனக்கு தெரியும். அதுக்கு காரணம் என்னனு தெரியுமா? அடி ஓத சூடுனு எல்லா கொடுமையையும் பொறுத்துகிட்டு பத்து வருஷம் உங்கப்பாவோட குடும்பம் நடத்தினேன். வேல வெட்டி எதுவும் இல்லாம நான் சம்பாரிச்ச பணத்தையும் சேத்து குடிச்சு அழிச்சுட்டு வந்தான். ஒருநாள் குடிக்க காசு இல்லைனு சொன்னதுக்கு, உன்னை கடத்தி வெச்சுட்டு, பணம் குடுக்கலேனா கொன்னுடுவேன்னு மெரட்டினான் அந்த மிருகம்" என்றவள், அந்த நாள் நினைவின் தாக்கத்தில் தொய்ந்து போய் அமர, குமரன் அதிர்ச்சியில் உறைந்து நின்றான்  

"சுகிம்மா... வேண்டாண்டா. எதுக்கு பழசெல்லாம் பேசி..." என மகாதேவன் தடுக்க

"இல்லைங்க, இவனுக்கு எல்லாம் தெரியனும்" என்றவள் "அன்னைக்கி வேற எந்த வழியும் தெரியாம, நான் போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளைண்ட் குடுக்க போனப்ப தான் ரெம்ப வருசத்துக்கப்புறம் இவர சந்திச்சேன்" என மகாதேவனை கை காட்டினாள் 

"ஆமா, உங்கப்பாவ கல்யாணம் பண்ணிக்கறதுக்கு முன்னாடி இவர நான் விரும்பினது நிஜம் தான். எங்க அண்ணனோட வறட்டு கௌரவத்தால எங்க காதல் செத்து போச்சு. விதிச்சது இதான்னு நானும் ஏத்துகிட்டேன். ஆனா உன்னை பணயம் வெச்சு உங்கப்பா காசு கேட்டப்ப எல்லாமே வெறுத்து போச்சு" என அழுதாள் 

"இவர் தன்னோட வக்கீல் பவர மட்டுமில்ல, தன்னோட உயிர பணயம் வெச்சு உன்னை காப்பாத்தினாரு. உன்மேல படவேண்டிய கத்திய இவர் தாங்கினாரு. கொலை பண்ணிடோமோங்கற பயத்துல உங்கப்பா ஓடிட்டாரு. ஒரு மாசம் ஹாஸ்பிடல்ல இருந்து மறுஜென்மம் எடுத்து வந்தாரு" இதை கேட்ட குமரன், குற்ற உணர்வுடன் மகாதேவனை பார்த்தான் 

"அதுக்கப்புறம் கொஞ்ச நாள் தலைகாட்டாம இருந்த அந்த மிருகம் மறுபடி வந்தது. என்னையும் இவரையும் பத்தி தப்புதப்பா பேசி ஊரார் முன்னாடி கேவலப்படுத்தினான். அதோட நீ அவனுக்கு பொறக்கவே இல்லைனு..." என அதற்கு மேல் பேச இயலாமல் சுகந்தி அழுதாள் 

அதற்குள் அவளை நெருங்கிய மகாதேவன், ஆதரவாய் மனைவியை தோளில் சாய்த்து கொண்டார், சற்று ஆசுவாசப்பட்டவள், மீண்டும் தொடர்ந்தாள் 

"அதே நேரம் இவர் அங்க வந்தாரு. அந்தாளு பேசின வார்த்தைகள தாங்க முடியாம, ஆமா குமரன் எனக்கும் சுகந்திக்கும் பொறந்தவன் தான், இனி என் பிள்ளையா என்கிட்ட தான் வளருவான்னு சொல்லி நம்மள கூட்டிட்டு வந்துட்டாரு. அதோட அந்த பாவி அடங்கல,  என்னை பழி வாங்கறதுக்காக, மறுநாள் தனக்கு தெரிஞ்ச ரௌடிங்க மூலமா உன்னை ஸ்கூல் வாசல்ல வெச்சு கொலை செய்ய பாத்தான்" என அந்த அதிர்ச்சி இன்னும் தன்னை தாக்க பெருமூச்சுடன் நிறுத்தினாள் 

தன்னை மீறிய குமரனின் "ம்மா..." என்ற அழைப்பே காதில் விழாதது போல் தொடர்ந்தாள் 

"அந்தாள் வெளிய இருந்தா உனக்கு ஆபத்துனு, வேற வழியில்லாம, தெரிஞ்ச இன்ஸ்பெக்டர் மூலமா கஞ்சா கேஸ்ல உள்ள தள்ளினோம். அதுக்கப்புறம் தான் நம்ம பாதுகாப்புக்காக மறுகல்யாணம் பண்ணிக்க சொல்லி இவர் கேட்டாரு. நான் ஏத்துக்கல, எனக்கு என் புள்ள போதும்னு சொன்னேன். எனக்கும் இவன் தான் புள்ள, இன்னொரு கொழந்த வேண்டாம்னு மறுநாளே போய் குடும்பக்கட்டுப்பாடு ஆபரேஷன் பண்ணிட்டு வந்து நின்னப்ப, என்னால மறுக்க முடியல. உன்னோட எதிர்காலமும் என்னோட முடிவுக்கு ஒரு காரணம். இப்ப சொல்லுடா? நான் செஞ்சது தப்பா? இவராடா கிரிமினல்?" என சற்றுமுன் இருந்த நெகிழ்வுத்தன்மை மாறி கோபமாய் வினவினாள் 

குமரனுக்கு உலகமே ஸ்தம்பித்து நின்றது போல் ஆனது. எத்தனை பெரிய தியாகம் இது. எந்த ஆணுக்கும் என் வாரிசு, என் ரெத்தம் என கைகாட்டுவது எத்தனை பெருமை அளிக்கும் விஷயம். அதை ஒருவர் விட்டு தருவதென்றால் அவர் எவ்வளவு பெரிய மனம் படைத்தவராய் இருக்க வேண்டும். தாய் பாசம் தான் உலகில் பெரியது என்பதை இங்கு ஒருவர் பொய்யாக்கி விட்டாரே. பெற்றால் தான் பிள்ளையா, இவன் என் பிள்ளை என தன்னை வரித்து கொண்டவரை பார்த்தவன் "அப்பா......" என்ற கதறலுடன் மகாதேவனின் காலில் விழுந்தான் 

சிறுவயது முதலே நடந்ததை சரியாய் அறிந்து கொள்ளாமல் தன்னிடம் ஒரு விலகலுடனே  இருந்த மகன், முதல் முறையாய் மனதார "அப்பா" என்றழைத்ததில் மகாதேவனின் கண்கள் பனித்தது 

"குமார்... எந்திரிப்பா, ப்ச்... அழாத"

"இல்லப்பா, சாரிப்பா... எனக்கு...எனக்கு எப்படி..." 

"ஸ்ஸ் ...சும்மாரு. எனக்கு உன்மேல எந்த கோபமும் இல்ல"

"இதெல்லாம் ஏம்ப்பா என்கிட்டே மொதலே சொல்லல, உங்கள புரிஞ்சுக்காம எவ்ளோ வருசத்த வீணடிச்சுட்டேம்பா" என வருந்தவும்  

"எவ்ளோ மோசமானவனா இருந்தாலும் அவர் உன் அப்பா, அவர பத்தி தப்பா உன்கிட்ட சொல்ல மனசு வரல" என மகாதேவன் கூறவும் 

"யு ஆர் கிரேட் பா. உங்க புள்ளயாவே நான் பொறந்திருக்க கூடாதானு பீல் பண்றேம்ப்பா" என ஏக்கமாய் கூறவும் 

"என்னை பொறுத்த வரைக்கும் நீ எனக்கு பொறந்த புள்ளதான் ராஜா" எனவும் 

"எஸ்...அயம் ப்ரௌட் டு சே அயம் எம்.குமரன் S/O மகாதேவன்" என பெருமையாய் கூறியவன், தந்தையை அணைத்துக்கொண்டான் 

இருவருக்கும் நடந்த பாசப்பரிமாற்றத்தை கண்டு, கண்பனிக்க நின்றிருந்த மனைவியை பார்த்தவர், மகனிடம் ஜாடை காட்டினார் 

"அம்மா...." என அழைத்தபடி குமரன் அருகில் செல்ல, மகன் சற்றுமுன் பேசிய வார்த்தைகளின் நினைவில் முகம் திருப்பினாள் சுகந்தி 

"ம்மா... சாரிமா, நான் ஏதோ கோபத்துல...ப்ளீஸ்மா.." என சிறுபிள்ளையாய் கெஞ்சும் மகனை கண்டதும் சுகந்தியின் மனம் உருகியது, இருந்தும் அதை வெளிக்காட்டாமல்  

"என்னங்க, யாரோ வீட்டை விட்டுபோறேன்னு சொன்னாங்க, சீக்கரம் போகச்சொல்லுங்க, நான் பூட்டிட்டு தூங்கனும்" என பிகுசெய்ய

"சுகி... ஏன் அவன டென்சன் பண்ற" என மகாதேவன் பரிந்து கொண்டு வர 

"அவன் என்னை எவ்ளோ டென்சன் பண்ணினான்" என சுகந்தி பொய் கோபம் காட்ட 

அது புரிந்தவராய் "அப்படியா? என்ன பனிஷ்மெண்ட் தரலாம். ஹ்ம்ம்...இந்த ஐடியா ஓகேவானு பாரு. அவன் லவ் பண்ற பொண்ணையே கல்யாணம் பண்ணி வெச்சு, தினமும் அவன டார்ச்சர் பண்ணனும்னு மருமகளுக்கு ஆர்டர் போட்டுடலாம்" என சிரித்தார் 

"அப்பா..அது... சரண்யா வீட்ல...." என குமரன் இழுக்க

"எல்லாம் நான் பாத்துக்கறேன், டோன்ட் வொர்ரி பீ ஹாப்பி" என மகாதேவன் கட்டை விரலை உயர்த்தி காட்ட 

"டேய்... பேரு சரண்யாவா, போட்டோ காட்டுடா" என சுகந்தி சண்டை மறந்து ஆர்வமாய் கேட்க 

"அப்பா, யாரோ என்னை வீட்டை விட்டு போக சொன்னாங்க, நான் போறேன்" என குமரன் கண்சிமிட்ட "அடிங்க..." என சுகந்தி அவனை அடிக்க துரத்த அங்கே குடும்பம் ஒரு அழகிய கதம்பமாய் அரங்கேறியது 

(முற்றும்)
Read more...

தந்தை போட்டிச் சிறுகதை - 45

Rate this posting:
{[['']]}
அருள்

அதுவரை மாரியோடு பேசிக்கொண்டிருந்த ராதிகா அக்கா கொட்டுச்சத்தம் கேட்டதும் எழுந்து வெளியே போனாள். பறையும் நையாண்டிமேளமும் ஆன வாத்தியங்களின் சத்தம். போகும் வேகத்தில் கதவைச் சரியாக மூடவில்லை. கதவு கொஞ்சமாய்த் திறந்திருந்தது. இடுக்கின் வழியாக சத்தம் ஒரு பாம்பு போல ஊர்ந்து வந்தது. தெருமுனை எல்லையம்மன் கோவிலில் மயானக்கொள்ளை. நேற்றே பந்தல் கட்டி சத்தமாய் பாட்டுப்போட ஆரம்பித்திருந்தனர். கூடவே அவ்வப்போது இந்தக் கொட்டுச்சத்தம்.சாமியோ இல்லை வேறெதுவோ பக்கத்தில் வரவர சத்தமும் அதிகமாகிக்கொண்டே இருந்தது. மாரிக்கு எட்டிப்பார்க்கக் கூட விருப்பம் இல்லை.

மாரிக்குள் அந்த சத்தம் என்னவோ செய்தது.

பக்கத்து அறைக்குள் புகுந்துகொண்டு அதன் கதவுகளையும் மூடிக்கொண்டு விடலாமா… எந்தப் பகலிலும் கதவை மூடித் திரைச்சீலையைப் போட்டதும் ஒளி மறைந்துகொள்வது போல ஒலி ஒளிந்துகொள்வதில்லை. காற்றில் கசிந்து கசிந்து உள்ளுக்குள் உள்ளுக்குள் நுழைந்துகொண்டு தானிருக்கிறது.

மாரி மனதை அந்த இசையில் இருந்து திசை திருப்பப் பார்த்தாள். முடியவில்லை. தாளக்கட்டில் அது தடம் பிடித்துக் கொண்டுவிட்டது. சத்தம் அதிகமானால் கூடப் பரவாயில்லை,  வாசிப்பவனோ போகப்போக தாளத்தின் வேகத்தை அதிகப்படுத்திக் கொண்டிருந்தான்.

அதற்குள் சுவாசம் தாளக்கட்டுக்குப் பழகிவிட்டது. அதன் வேகம் மூச்சிற்குள் புகுந்து உடலுக்குள் சுழலத் தொடங்கியது. இருதயத்தின் ஒலி பறையின் சத்தத்தை விஞ்சி ஒலித்தது. நரம்புகளுக்குள் ஒரு சிறு அசைவுகளும் நெளிவுகளும் உருவானது. மாரி தான் தன் நிலை இழந்துக் கொண்டிருப்பதை உணர்ந்தாள். வெளியில் இருந்து ராதிகா குரல் கொடுத்தாள்.

“ஏடி, சாமி கிட்டவந்திருச்சிடி வெளில வா…”

மாரி பதில் சொல்லாமல் கதவை அறைந்து சாத்தினாள்.
”பெரிய பெரியார் பேத்தி…” என்று சத்தமாகவே கத்தினாள்.

மாரியின் அவஸ்தை அவள் அறியாதது.

“ஏண்டி இன்னைக்கு வெள்ளிக்கிழமைதானே, எங்கூட எல்லம்மன் கோயிலுக்கு வா, வந்து ஆத்தாள ஒரு நிமிசம் பாத்து வேண்டிக்கினு போ, உன் கஷ்டம் எல்லாம் காணாமப் போயிரும்.” எத்தனையோ முறை கெஞ்சியிருக்கிறாள் ராதிகா.
ஆனால் மாரி அதைக் காதில் வாங்குவதேயில்லை.அவள் அறிந்த வரை சாமியும் இல்லை சாத்தானும் இல்லை. அது அவளுக்கு அவள் தந்தை தந்த ஞானம்.

மாரி அப்பாவை நினைத்துக்கொண்டாள். 

மாரிக்கு சொந்த ஊர் தஞ்சாவூர் பக்கம். சில குழி நிலங்கள் சொந்தமாகவும் இன்னும் கொஞ்சம் குத்தகைக்கும் எடுத்து விவசாயம் செய்பவர்தான் மாரியின் அப்பா. குத்தகை நிலம் என்பது யாரோ பிறத்தியாருடையது இல்லை. சொந்த அண்ணன் தம்பிகளின் நிலம் தான். அவர்களில் ஒருவர் கவர்மெண்ட் வேலை கிடைத்து சென்னையிலேயே செட்டிலாகிவிட்டவர். அண்ணன் ஒருவர் சில வருடங்களுக்கு முன்பாக இறந்துபோனார். அவருக்கு அண்ணனும் தம்பியுமாக இரண்டு பிள்ளைகள். அவர்களுக்கு விவசாயத்தில் ஆர்வம் இருக்கவில்லை. கைக்காசு கொஞ்சம் போட்டுத் தஞ்சாவூரிலேயே ஒரு சின்ன மளிகைக் கடை போல ஆரம்பித்து இப்பொழுது பரவாயில்லை. ஆளுக்கு ஒன்றாகக் கடை பிரித்துக்கொண்டார்கள். மாரியின் அப்பாதான் விடாப்பிடியாக விவசாயம் செய்துகொண்டிருக்கிறார்.

சத்தம் அதிகமாகிக்கொண்டே யிருக்கிறது. தன்னையும் அறியாமல் கால் அசைகிறது போல மாரி உணர்ந்தாள். தலைக்குள் ஏதோ சுற்றுகிறது போல இருந்தது. மனதை இறுக்கினாள். விரல்களால் காதுகளைப் பொத்திக்கொண்டாள் இப்பொழுது காதுக்குள் விரல்கள் லேசாக அசைவது போலவும் அதன் ஓசையே மிகப் பெரிதாகவும் கேட்டது.
அம்மா சாமியாடிய ஒருநாள் அவளுக்கு நினைவுக்கு வந்தது. மேளச்சத்தம் கேட்டால் போதும் அம்மாவுக்கு சாமி வந்துவிடும். அன்றைக்கும் அம்மா சாமியாடி சாமியாடி சோர்ந்துபோய் துடைத்தெறியப்பட்ட ஒரு துணியைப்போலக் படிக்கட்டில் கிடந்தாள். அப்பா கண்டபடி வைதுகொண்டு இருந்தார்.

“இதெல்லாம் என்ன கருமம். சாமியாவது சாத்தானாவது. யோவ் பூசாரி, உமக்கு அறிவிருக்கா, எரியிற கற்பூரத்த அவ வாய்ல போடுதயே. இதெல்லாம் நரம்புவியாதி. கொட்ட இந்த அடி அடிச்சா எவனுக்குத்தான் ஆட்டம் வராது. இன்னொரு தடவ இந்த ரோட்டுல எவனாவது கொட்டடிச்சிக்கிட்டு சாமி கீமீ ன்னு வந்தீங்களோ அவ்வளவு தான்.” அன்று அப்பா ரொம்பநேரம் கத்திக்கொண்டு இருந்தார்.

மாரிக்கு அப்பாவை நினைப்பது தற்போது ஆறுதலாகவும் சிந்தனைக்கு மாற்றாகவும் இருந்தது. அப்பாவைப் பற்றி ஊருக்கே தெரியும். அப்பா பெரியார் கட்சி. அவருக்கு சாமி நம்பிக்கை அறவே கிடையாது. ஆனால் அம்மா அப்படியில்லை. வார்த்தைக்கு வார்த்தை மகமாயி மகமாயி என்று சொல்லும் அளவிற்கு நம்பிக்கைக்காரி. அப்பா அடிக்கடி அம்மாவோடு ‘‘இனி சாமி ஆடினையோ தூக்கிப் போட்டு மிதிச்சிருவேன்” என்று சொல்லிச் சண்டை போடுவார். அதெல்லாம் அடுத்தமுறை கொட்டுச்சத்தம் கேட்கும்வரைதான்.

மாரியோடு பிறந்தவர்கள் இரண்டுபேர். மூன்றுமே பெண்ணாய்ப் பிறந்ததில் அம்மாவுக்கு ரொம்பவே வருத்தம். அடுத்து ஒரு ஆண் வேண்டுமென்று ஆசை. இதற்குமேல் தாங்காது என்று அப்பா அம்மாபக்கம் வருவதேயில்லை.அந்த வருஷம் கோவில் கொடையில் அம்மாவுக்கு அருள் வந்தது. அப்பாவை அம்மா பேர் சொல்லி அழைத்தது பார்க்க சிரிப்பை வரவழைத்தது.

“மூணு அக்காக்களுக்கு ஒரு தம்பி, உன் குலம் விளங்க ஒரு ஆண்பிள்ளை, ஆத்தா கண் திறந்திருக்கேண்டா, அடுத்த வருஷம் நீ ஆம்பளப்புள்ளையோட வந்து பொங்க வைக்கணும் சரியா…” அப்பாவுக்கு வந்த ஆத்திரத்துக்கு அப்படியே நாலு சாத்து சாத்தலாம் போலிருந்தது. ஆனாலும் ஊருக்கு பயந்து நடக்கிற மனிதர். தலை ஆட்டிக்கொண்டு அம்மா அள்ளித்தந்த திருநீற்றை வாங்கிக்கொண்டார்.

அடுத்த ஆண்டு கொடைக்கு அம்மா பொங்கல் வைக்கவந்தபோது கடைசி தங்கைபாப்பாவுக்கு ஒரு மாதம். அந்த வருஷம் எட்டையாபுரம் உருமி மேளம். தூரமாய் நின்று கேட்டாலே வயிறு கலக்கும். அம்மா பேசாமல் பொங்கல் வைத்தோமா சாமி கும்பிட்டோமா என்று எந்த ஆட்டமும் இல்லாமல் வீடுவந்து சேர்ந்தாள். அதற்குப்பின் அம்மாவுக்கு சாமி வந்ததாக நினைவில்லை.
அப்பா மாரியிடம் மட்டும் சொல்லிச் சொல்லி வளர்த்தார். மூன்று பேரில் மாரி தான் அச்சு அசல் அம்மா ஜாடை. எங்கே மாரியும் அம்மாவைப்போல மாறிவிடுவாளோ என்கிற கவலை அவருக்கு.

“உலகத்துல சாமின்னு ஒண்ணு கிடையாது புள்ள, சாமி பேரச்சொல்லி ஊர ஏமாத்திக்கிட்டுத் திரியறாங்க. உங்க அம்மாவுக்கு வர்றதெல்லாம் அருளுமில்ல மருளுமில்ல. வெறும் நரம்பு வியாதி. அவளும் தைரியசாலி இல்லை கேட்டியா.” வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அப்பா பேசிக்கொண்டே இருந்தார். அவரைப் பொறுத்தவரை அம்மாவின் சிக்கல் மாரிக்கு வந்துவிடக்கூடாது என்பதுதான்.
உண்மையில் அம்மா சாமியாடுகிற போதெல்லாம் மாரிக்குள்ளும் மெல்ல நடுக்கம் ஏற்படும்.அப்பொழுதெல்லாம் அவள் அப்பாவின் கையைப் பிடித்துக் கொள்வாள். அப்பாவின் சொரசொரப்பான கைகளைப் பற்றியதுமே அந்த நடுக்கம் நின்றுபோகும்.

இப்பொழுது அப்பா பக்கத்தில் இல்லை. அந்த நினைப்பில் கைகள் மெல்ல அசைகிறது. எங்கே சாமியாடித் தொலைத்துவிடுவோமோ என்று அவளுக்குப் பயமாக இருந்தது. தான் மட்டும் சாமியாடி, அதை ராதிகா அக்கா மட்டும்  பார்த்துவிட்டால் அவ்வளவுதான். தேங்காய் உடைத்துப் பூசையே பண்ணிவிடுவாள். சரியான சாமிப் பைத்தியம்.

பிழைப்புக்காகச் சென்னைக்கு வந்து இத்தனை நாட்களில் இப்பொழுது கொஞ்சநாட்களாகத் தான் மீண்டும் இது தொடர்கிறது. ஒரு முறை ஊர் வரை போய் அப்பாவைப் பார்த்துவிட்டு வந்தால் எல்லாம் சரியாகப் போய்விடும் என்றும் தோன்றுகிறது. லீவு கிடைக்கமாட்டேன் என்கிறது. அப்பாவாவது வந்துபோனால் நல்லது. என்ன பெரிய விவசாயம். எப்படியும் இந்த அறுவடைக்குப் பின்னும் இன்னுமொரு பத்தாயிரமாவது கடன் கூடத்தான் போகிறதே யொழிய குறையப் போவதில்லை. இதில் என்ன பெரிய விவசாயி பெருமை.

அப்பா, மாரியின் மனத்துள் இப்பொழுது முழுமையாய் வந்துவிட்டார். கன்னம் ஒடுங்கிய கருத்த தலை கலைந்த கேசத்தோடு அப்பா. மாயமாய் காதுகள் அடைத்துக்கொண்டன. சத்தம் எதுவும் கேட்கவில்லை. ஒருவேளை சாமி கடந்து போய்விட்டதா, அப்படிப் போயிருந்தால் ராதிகா உள்ளே வந்திருப்பாளே. மாரிக்கு மனம் அப்பாவிடம் சரணடைந்துவிட்டது புரிந்தது. அவள் உதடுகள் அவளையறியாமல் அப்பா என்று உச்சரித்தது. கண்களிலிருந்து சில துளிகள் திரண்டு விழுந்தன. இப்பொழுதே அப்பாவைப் பார்க்கவேண்டும் என்ற வெறி எழுந்தது.‘ போங்கடா, நீங்களும் உங்க வேலையும் என்று தூக்கி எறிந்துவிட்டுப் போகவேண்டும்’ என்று தோன்றியது. அடுத்த நிமிடம் அப்படிப் போய்விட்டால் சின்னவள் கல்யாணத்துக்காக வாங்கிய கடனை அப்பா ஒண்டியாக அல்லவா கட்டியாக வேண்டும். பக்கத்தில் இருந்து கொஞ்சிக்கொள்வதை விட இப்படி எட்ட நின்று அவரின் பாரத்தைச் சுமப்பது எவ்வளவு நல்ல விசயம்.

இந்த ஆண்டில் எப்படியும் சின்னவளின் கல்யாணக் கடன் அடைப்பட்டுவிடும். சீட்டு மூடிய இன்னும் மூன்று மாதம் இருக்கிறது. முடிந்தால் சுளையாக லட்ச ரூபாய் கிடைக்கும். இரண்டு வருட சேமிப்பு. அப்படியே கடனை அடைத்துவிட்டால் அப்பாவுக்குக் கொஞ்சம் பாரம் குறையும்.அதுவரைக்குமாவது மனமும் உடலும் இப்படிச் சாமியாடாமல் இருந்தால் சரி.

மாரிக்கு தற்போது காதுகள் திறந்துக்கொண்டது போல இருந்தது. கொட்டுசத்தம் தூரமாய்க் கேட்டது. ராதிகா பக்திப் பரவசமாய் உள்ளே வந்தாள்.
“ஊரே திரண்டு நிக்குது. நீ என்னடான்னா எட்டிக்கூடப் பாக்கமாட்டேங்குற.”
மாரி பதில் சொல்லவில்லை. வேலைக்குப் புறப்படும் நேரமாகியிருந்தது. அவசர அவசரமாய்க் கிளம்பிப்போனார்கள். அந்த நாளில் மாரி மனம் பூராவும் அப்பா பற்றிய நினைவுகளே நிறைந்திருந்தது. 

சூப்பர்வைசரிடம் பேச்சுவாக்கில் அடுத்தமாசம் ஒரு நாலுநாள் லீவு வேண்டும் என்று சொல்லிவைத்தாள். கேட்ட நேரம், அவரும் மறுக்காமல் தலை ஆட்டினார்.

வீட்டுக்குப் புறப்படும் நேரம் ஆனதும் ராதிகா அக்கா வந்து கிளம்ப அவசரப் படுத்தினாள்.
“சீக்கிரம் வா பிள்ள, போற போக்கில கோவில எட்டிப்பாத்துட்டுப் போயிறலாம். “
”நான் வரல. நீங்க போயிட்டு வீட்டுக்கு வாங்க, நான் வீட்டுக்கு நேராப் போறேன்” என்றாள் மாரி.
ராதிகா விடுவதாக இல்லை.“ நீ ஒண்ணும் சாமி கும்பிடவேண்டாம்டி, சும்மா என் கூட வா, அதுக்கென்ன வலிக்குதா. ரொம்பப் பண்ணாத…” ராதிகாவின் குரலின் அழுத்தம் மாரிக்கு என்னவோ போல் இருந்தது. கூட இருப்பவள் அவளிடமும் வருத்தப்பட்டுக்கொண்டு எங்கு போவது.

எனக்காவது அப்பா இருக்கிறார். காசுபணம் இல்லை என்றாலும் ஆளாக என் கூட நிற்பார். அக்காவுக்கு? நம்பியவர்கள் எல்லாம் ஒருவரை ஏமாற்றும் போது கண்காணாத கடவுளிடத்தில்தான் எளிய மனங்கள் சரண் புக வேண்டியிருக்கிறது. வாழ்க்கைக்கு எதாவது ஒரு பிடிமானம் வேண்டாமா என்ன?
“சரிக்கா, நானும் வர்றேன்”
ராதிகாவுக்கு அளவில்லாத மகிழ்ச்சி. துள்ளிக்கொண்டு கிளம்பினாள்.
“நீயும் வேணும்னாலும் ஒரு தடவ அம்மாவ வேண்டிக்கோ, கூடிய சீக்கிரம் உனக்குக் கல்யாணம் ஆயிரும்”

மாரி சிரித்தாள். “ஏண்டி சிரிக்கிற?” “பின்ன சிரிக்காம என்ன பண்றதாம், எனக்கு முன்னால கல்யாணம் பண்ணின எங்க சின்னக்கா, நீ எல்லாம் ரொம்ப நல்லா வாழ்றீங்க பாரு. நானும் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்பட…”

“அடிப்போடி பைத்தியக்காரி, எனக்கு வாய்ச்சவன் ஒரு ஊதாரி, நாந்தான் தூக்கி எறிஞ்சுட்டு வந்தேன். உன் சின்னக்காவுக்கு வாய்ச்சவன் மாமனார் வீட்டுக் காசுக்கு அலையறவன். அதுக்காக எல்லாருமே அப்படியே இருப்பாங்களா என்ன? உன் குணத்துக்கு தங்கமான புருஷன் கிடைப்பான். நீ வேண்ணா எழுதிவச்சுக்கோ.”

மாரி வாக்குவாதம் செய்ய விரும்பவில்லை. வெளியே வருகிறபோது வாசலில் அவன் நின்றான் அவனைப்பார்த்ததும் ராதிகா அக்காவுக்கு வியர்த்தது. அவன் குடி வெறியில் இருக்கிறான் என்பது அவன் கண்களில் தெரிந்தது. அக்கா என் பின்னால் மறைந்து கொள்ள முயன்றாள். வீண்முயற்சி. அவன் ஊரே கேட்கும் அளவிற்கு சத்தமாய் ஒரு கெட்டவார்த்தையை உதிர்த்தான். இத்தனை நாளும் அக்காவேலைபார்க்கும் இடம் தெரியாமல் தேடி அலைந்திருக்கிறான். எப்படியோ கண்டுபிடித்துவிட்டான். பின்னே குடிக்கான காசினை உரிமையாய் பறித்துக்கொண்டு போவதென்றால் இவளிடம் மட்டும் தானே முடியும்.

சத்தம் கேட்டு செக்யூரிட்டி ஓடிவந்தார். ‘எதுபேசுறதுன்னாலும் வெளியே போய் பேசு, கஸ்டமர் வர்ற இடம்ல’ என்று சொல்லி அவனைப் பிடித்துத்தள்ளி தெருவுக்கு அனுப்பினார். அவன் நிறுத்தாமல் சத்தமிட்டுக்கொண்டிருந்தான். அக்கா என் கைகளைப் பற்றிக்கொண்டு அவனைக் கடந்துபோக முயன்றாள். நாராசமான அவன் பேச்சு சகிக்கமுடியாதிருந்தது. வேகமாய்க் கடந்தோம். பின்னாலேயே வந்தான். அக்கா சட் என்று திரும்பி, கைப்பையைத் திறந்து சில நூறு ரூபாய்த் தாள்களை எடுத்து அவன் மேல் வீசி அவனைப் பார்த்து உமிழ்ந்தாள். அதையெல்லாம் அவன் பொருட்படுத்தவில்லை. ரூபாயைப் பொறுக்க ஆரம்பித்தான். நாங்கள் வேகமாக நடக்க ஆரம்பித்தோம். அவன் பின் தொடரவில்லை. வழியெல்லாம் அக்கா அழுதபடியே வந்தாள். பார்க்கப் பாவமாய் இருந்தது.

கோவில் இருக்கும் தெருவுக்குள் திரும்பியாயிற்று. எல்லாம் வல்ல தாயே, எங்கும் நிறைவாயே… என்று பாடல் சத்தமாய் ஒலித்துக் கொண்டிருந்தது. சட் என்று பாடல் நிறுத்தப்பட்டு  யாரோ ஒரு பெரியவர் பாட ஆரம்பித்தார். நடுங்கும் ஒரு குரல். கூடவே அவ்வப்போது கையில் உடுக்கை வைத்து அடித்துக்கொண்டு பாடுகிறார்.

மாரிக்கு திக் என்றிருந்தது. என்ன சோதனை இது. கோவில் அருகே போவதா வேண்டாமா? நல்ல வேளை மேளம் ஏதும் இல்லை. இந்தக் குரல் அடிவயிற்றில் இருக்கும் அமிலங்கள் சிலவற்றை உயிர்ப்பிக்கும் குரல்தான் என்றபோதும் கட்டுப்படுத்திக் கொள்ளமுடியும்.

ராதிகா மாரியின் நடையில் கொஞ்சம் தொய்வு தெரிவதைக் கவனித்து அவள் கைகளை இறுகப் பற்றிக்கொண்டாள். மாரிக்கு வேறு வழியில்லை.
மக்களைப் பிரித்துக்கொண்டு ராதிகா வழி ஏற்படுத்தி சந்நிதிக்குள் நுழைந்தாள். உடுக்கையடிப் பாடல் இப்பொழுது இன்னும் சத்தமாய்க் கேட்டது.
குழந்தை வருந்துறதுன் கோவிலுக்குக் கேட்கிலையோ
மகவு வருந்துறதுன் மாளிகைக்குக் கேட்கிலையோ
பாலகி வருந்துறதும் பார்வதியே கேட்கிலையோ
கோயிற் கடிமையம்மா கொண்டாடும் பாலகண்டி
சந்நிதி மைந்தனம்மா சங்கரியே பெற்றவளே
வருந்தி யழைக்கின்றேன்நான் வண்ணமுகங் காணாமல்
தேடி யழைக்கின்றேன் நான் தேவிமுகங் காணாமல்
ஏழைக் குழந்தையம்மா எடுத்தோர்க்குப் பாலகண்டி
பாலகி குழந்தையம்மா பார்த்தோர்க்குப் பாலகண்டி
மகவு குழந்தையம்மா மகராசி காருமம்மா
மாரிக்குக் கால்கள் நடுங்கியது. ராதிகாவின் கைகளை இறுக்கிப் பிடித்துக்கொண்டாள். மனதைப் பாடலுக்கு விடாமல் இருக்க வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள். நிறையப் பெண்கள் கொஞ்சமாய் ஆண்கள். ஆண்கள் அவசர அவசரமாய்க் கன்னத்தில் போட்டுக்கொண்டு கிறுகிறுவெனச் சுற்றிக்கொண்டு வெளியே போபவர்களாக இருந்தார்கள். ஆனால் பெண்கள்… எல்லா வயதுப்பெண்களும் இருந்தார்கள். ஒரு சிலர் நன்கு உடுத்தி நகை அணிந்து அலங்காரமாக நகைகளை அணிந்து வந்திருந்தனர். பெரும்பாலான பெண்கள் மஞ்சள் உடையிலோ அல்லது சாதாரண சேலையையோ கட்டி இருந்தனர். கழுத்தில் கைகளில் எல்லாம் நகைகள் என்று ஒன்றுமில்லை. வயதான பெண் ஒருத்தி, கழுத்து நிறைய துளசி மாலை போட்டிருந்தாள். விரதம் இருக்கிறாள் போல. நிற்கவும் திராணி இல்லாமல் அமரவும் வழியில்லாமல் கிழவி ஒருத்தி சந்நிதிக்கு எதிரிலிருந்த கம்பியைப் பிடித்துக்கொண்டு நின்றாள். எல்லோரையும் பார்த்துக்கொண்டு எல்லையம்மன் கல்லாக அமர்ந்திருக்கிறது.

ஆண்களைவிடப் பெண்கள் தான் அதிகமாய் சாமி கும்பிடுகிறார்கள். தந்தை, சகோதரன், கணவன், மகன் மற்றும் பிற உறவினர்கள் என்று அவர்கள் வாழ்க்கையில் இருக்கும் எல்லா ஆண்களுக்காகவும் ஆண்களின் சார்பாகவும் அவர்கள் சாமி கும்பிடுகிறார்கள். வீட்டு ஆண்பிள்ளைகளைக் கட்டுப்படுத்துவதோ அல்லது அவர்களின் சிக்கல்களில் இருந்து அவர்களை மீட்பதோ அவர்கள் கையில் இல்லை என்று ஆனபின்பு தெய்வங்களை நாடி வருகிறார்கள்.
ராதிகா மாரியின் கையை விடுவித்துக்கொண்டாள். அவள் கரங்கள் கூப்பியபடி இருந்தது. அவள் கண்களில் இருந்து கண்ணீர் பெருகியபடி இருந்தது. மாலை போட்டிருந்த வயதான பெண்மணி சாமி பக்கத்திலிருந்து கை நிறைய வளையல்களை எடுத்து வந்தாள், அங்கு நின்று கொண்டிருந்த பெண்களுக்கு ஆளுக்கு நாலு வளையல்களாகத் தந்தாள். ராதிகா பயபக்தியோடு வாங்கிக்கொண்டாள். மாரி கைநீட்டாமல் இருந்தாள். அந்தப்பெண் வலுக்கட்டாயமாக அதை அவள் கையில் திணித்தாள். மாரி மூடியிருந்த கைகளைத் திறக்கவேயில்லை. அந்தப்பெண் தன் பிடியை இறுக்கினாள். அந்த அழுத்தத்தில் மாரியின் கைகள் விரிந்தன. அவள் வளையல்களை அவள் கைகளில் தராமல் அவளே மாரிக்கு அணிவித்துவிட்டாள்.
அவள் வளையல் அணிவிக்கவும் எங்கோ போயிருந்த மேளம் திரும்பிவரவும் சரியாக இருந்தது. தெரு முனை வரைக்கும் சாமி ஆடிவந்த பெண் வேக வேகமாக கோவிலுக்குள் வந்தாள். உடுக்கடிப்பாடல் உச்சஸ்தாயியில் இருந்தது. மாரிக்கு அந்த சூழல் சிறு மயக்கத்தை ஏற்படுத்தியது. பூசாரி சாமியாடிக் கொண்டிருந்த பெண்ணுக்கு திருநீறு பூசி மலையேற்றினார்.
அப்பா… அப்பா… நிலைமை கட்டுகடங்காமல் போகிறது. சீக்கிரம் என்னுள் வா அப்பா…
நினைவுகளுக்குள் அப்பாவித்தவிர அம்மா, ராதிகா, அவள் கணவன் என எல்லோரும் அவளைச் சூழ்ந்துக்கொண்டதுபோல இருந்தது. குறிப்பாக அவன்…அவனைக் கடக்கும்போது குடிவாசனை அவனிலிருந்து ஒரு சாக்கடையைப் போலக்கசிந்துக் கொண்டிருந்தது. ராதிகா அக்கா எப்படி இவனைப் பொறுத்துக்கொள்கிறாள். கோபம் வந்தது. ஓங்கி ஒரு அறை. நல்லவர்களின் உள்ளத்தைச் சீண்டிப்பார்ப்பவர்களை என்ன சொல்வது. அவன் மட்டும் இங்கு வந்தால் மாரி அவனை வதம் செய்யக்கூடத் தயங்கமாட்டாதவள் போல வெறிகொண்டாள்.
மேளத்தை நிறுத்தினால் தேவலை என்றிருந்தது ஆனால் அது நின்றபாடியில்லை. திடீர் என்று ஒருவன் வாங்கா எடுத்து ஊதினான். மாரிக்கு நரம்புகளில் எல்லாம் ஊசிகள் ஏற்றினார்போல ஆனது. தனது தலையைச் சிலுப்பிக்கொண்டாள். ராதிகாவைத் திரும்பிப் பார்த்தாள். அவளோ இன்னும் கண்களில் நீர் வழிய சாமியையே பார்த்துக் கொண்டிருந்தாள். வளையல் போட்ட பெண் ஒரு கணம் நின்று மாரியைப் பார்த்தாள். அவளுக்கு என்ன தோன்றியதோ ஓடிப்போய் குங்குமத்தை அள்ளிவந்து ஒரு பெரிய நாணய அளவிற்கு மாரியின் முகத்தில் பூசினாள். மாரியின் சுவாசம் கொஞ்சம் நீளமாக ஆனது. ராதிகா இப்பொழுது மாரியின் பக்கம் திரும்பியதும் திகைத்தாள். “அம்மா தாயே“ என்று கன்னத்தில் போட்டுக்கொண்டாள்.
மாரிக்குத் தான் நிலைகுலைவதை அறிந்துகொள்ளும் அளவிற்கு நிதானம் மிச்சமிருந்தது. உடனடியாகத் தன் நினைவுகளை சீர்படுத்தியாக வேண்டும். அப்பா.. அப்பா.. என்னைக் கைவிட்டு விடாதீர்கள்…அப்பாவின் நினைவு முழுமையாய்க் கூடவில்லை.
உடல் மேலும் துவளத் தொடங்கியது. உடலின் மெல்லிய அசைவை எல்லோரும் கவனிக்கத் தொடக்கிவிட்டார்கள். ஒரு பெண்மணி தான் வாங்கி வந்திருந்த சம்பங்கி மாலையை அவள் கழுத்தில் போட்டாள். மாரியால் தடுக்க முடியவில்லை. ஒரு பெண் ஓடிவந்து அவள் பாதத்தில் விழுந்தாள். ராதிகாவுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. மாரியைத் தாங்கலாகப் பிடித்துக்கொண்டாள்
மேளச்சத்தம் கேட்டதும் இப்படிப் பெண்கள் அருள்வந்து ஆடுவது ஒன்றும் பூசாரிக்குப் புதிதில்லை. அவசர அவசரமாக குங்குமத் தட்டில் கற்பூரம் ஏற்றிக்கொண்டு வந்தார். கற்பூரம் காட்டி திருநீறு இட்டாலே சில பேருக்கு அருள் மலையேறிவிடும். சிலருக்கு கற்பூரத்தை நாக்கில் ஏற்றியாக வேண்டும். அவர் மாரியின் பக்கம் வந்தார்.
மாரியால் தடுப்பதற்கு எதுவுமில்லை என்றிருந்தது. மாரி ராதிகாவைப் பார்த்தாள்.அவள் பக்கவாட்டில் நின்று தாங்கிப் பிடித்தவண்ணம் இருந்தாள். அவள் கண்களில் நீர் வடிவது மட்டும் நின்றபாடில்லை.
பூசாரி அருகே வந்தார். கற்பூரம் காட்டப்போனார். மாரி கைகளை நீட்டி அவரைத் தடுத்தாள். தனது வலது கரத்தை நீட்டி ராதிகாவின் தலைமேல் வைத்தாள். ராதிகாவை தன்முன் வரவைத்தாள். மாரியின் உடல் மெல்ல ஆடியது. பூசாரி மேளக்காரர்களுக்கு கைகாட்டி நிறுத்தச் சொன்னார்.
மாரியின் தொடுதலில் மயிர்க்கால்கள் எல்லாம் சிலிர்த்துக் கிடந்தது. மாரியின் உதடுகள் துடித்தன. அவள் ஏதோ சொல்ல விரும்பினாள். ராதிகா சன்னமான குரலில் “அம்மா…” என்றாள்.
மாரி ஒரு முறை சிலிர்த்துக் கொண்டாள்.
“மகளே, துன்ப நிலை மாறிப்போச்சு உனக்கு, தொல்லை எல்லாம் ஓடிப்போச்சு உனக்கு, நடுக்க நிலை மாறிப் போச்சு உனக்கு நல்ல நிலை கூடிப்போச்சு உனக்கு. வருஷம் ஒன்று போவதற்குள் மகளே உன் வருத்தமெல்லாம் தீருதம்மா மகளே. தரித்திரமும் ஓடப்போது மகளே உன் தைரியமும் பெருகப்போது மகளே. நீ நினைச்சபடி வாழ்வாய் இது சத்தியம் கருமாரி சொல்வாக்கு நிச்சயம்”
ஒரு பாடலைப்போலப் பாடினாள் மாரி. தன் கழுத்தில் கிடந்த மாலையைக் கழற்றி ராதிகாவின் கழுத்தில் போட்டாள். பூசாரி கற்பூரம் காட்டி மாரி நெற்றியில் திருநீறு பூசினார். மாரிக்கு வியர்வை பெருக மெல்லக் கண்களை மூடிச் சரிந்தாள். சுற்றியிருந்த பெண்கள் அவளைத் தாக்கிப் பிடித்தனர்.
மாரி மீண்டும் கண் விழித்தபோது ராதிகாவின் மடியில் இருந்தாள். மாரிக்கு அம்மா மடியில் கிடப்பது போல் இருந்தது. ராதிகாவின் கண்களில் இப்பொழுது கண்ணீர் இல்லை. முகம் பார்க்க அவ்வளவு தெளிவாய் இருந்தது.
சற்றுமுன் நிகழ்ந்தவைகளை அவள் நினைத்துப் பார்த்துக் கொண்டாள். அப்பாவுக்கு மட்டும் தான் சாமியாடியது தெரிந்தால் எவ்வளவு வருத்தப்படுவார். சொல்லிவிடவே கூடாது. மானசீகமாக அப்பாவிடம் மன்னிப்புக் கேட்டாள்.
மாரிக்கு உடல் எல்லாம் வலித்தது. எழுந்துகொள்ள முயன்றாள். ராதிகா மாரி எழுந்துக்கொள்ள உதவினாள். சுற்றியிருந்த பெண்களில் ஒருத்தியும் வந்து தூக்கிவிட்டாள். மேளம் திரும்ப அடிக்க ஆரம்பித்தார்கள். இன்னொரு பெண்ணுக்கு அருள் வந்து ஆட ஆரம்பித்தாள். மாரிக்கு அப்பாவின் நினைப்பு அதிகமாகிக் கொண்டேயிருந்தது.
                          
Read more...